ங்கள் தெருவைச் சேர்ந்த நண்பன் ஒருவன்தான் அந்த வாட்சப் குழுமத்தின் நிர்வாகி. எங்கள் தெருவைச் சேர்ந்த நண்பர்கள், தெரிந்தவர்கள் என நூற்றுச் சொச்சம் பேரைக் கொண்டு அந்த குழுமத்தை அவனும், எங்களுக்குப் பொதுவான நண்பர்கள் சிலருமாக துவங்கி சுமார் ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. ஆரம்பத்தில் தண்ணீர் வரும் நாள் நேரத்தை பகிர்வது, தெரு விளக்கு எரியாமல் இருப்பது, வெவ்வேறு ஊர்களில் இருக்கும் நண்பர்களை குசலம் விசாரித்துக் கொள்வது என சென்று கொண்டிருந்த குழுமத்தின் செயல்பாடுகள், ஒரு கட்டத்தில் மெல்ல மாறத் துவங்கியது.

எப்போதென்று சரியாக நினைவில்லை.. ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் “கும்மியடிப்பதால் உடல் நலனுக்கு உண்டாகும் நன்மைகள்”, “கோலம் போடுவதைக் கண்டுபிடித்ததன் மூலம் சிறு உயிர்களுக்கும் உணவிட்ட நம் முன்னோர்களின் தயாள குணம்”, “வெள்ளிக் கிழமை விரதம் இருப்பது எப்படி கேன்சர் குணமாகும்” என்பன போன்ற தகவல்கள் வரத் துவங்கின. அதே குழுமத்தில் சில திமுக, பெரியாரிய நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்; போலவே எனக்குத் தெரிந்த பா.ஜ.க ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

“அதெப்படி கும்மியடிப்பது நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் ஊட்டும், சுத்த கேணத்தனமாக இருக்கிறதே”, “எறும்புக்கு சோறு போட்டீங்க சரி, எலிக்கு என்ன போட்டீங்க” என பெரியாரிய நண்பர்கள் மெல்ல முணுமுணுக்கத் துவங்கினர். தெருவைச் சேர்ந்த பழைய பஞ்சாங்கங்கள் பதிலுக்கு களத்தில் இறங்கினர். “என்ன தம்பி, எல்லாத்திலேயும் விதண்டாவாதமா பேசனுமா? நம்ம பெரியவங்க எதுனா சொன்னா அதில ஒரு அர்த்தம் இருக்கும். நல்லத எடுத்துக்கிட்டு கெட்டத தள்ளிட்டு போயிட்டே இரு. இங்கே வந்தும் கட்சி சார்பா பேசாதீங்க” என அறிவுரைகள் வரத் துவங்கின.

கொஞ்சம் வாதாடிப் பார்த்து விட்டு ”இந்தப் பெரிசுங்களோட மல்லுக்கட்டுவது வேலைக்கு ஆகாது” என முடிவு செய்து நாங்கள் அடங்கிக் கொண்டோம். அதன் பின் “திருநள்ளாறு – சனீஸ்வரன் – செயற்கைக்கோள்” பாணியிலான புருடாக்கள் வருவது மெல்ல அதிகரித்தது. அந்தந்த சூழலுக்கு தகுந்தபடியான அரசியல் பதிவுகளும் வருவதுண்டு. எட்டு வழிச் சாலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு… இப்படி. இதன் அக்கம் பக்கமாகவே – “எட்டு வழிச் சாலை காண்டிராக்டால் பலன் பெற்ற மு.க ஸ்டாலின்”, “ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஊடுருவிய நக்சலைட்டு தீவிரவாதிகள்”, “மீத்தேன் எடுப்பதைத் தடுப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு என்ன ஆதாயம்” என்பன போன்ற பதிவுகளும் வரும் – இது பா.ஜ.க ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து.

பாஜக ஆதரவு பதிவு போடும் ஒருவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி ஸ்டெர்லைட்டை எதிர்ப்பார், மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பார், எட்டுவழிச்சாலையையும் எதிர்ப்பார்.. அந்த எதிர்ப்போடு சேர்த்து குறிப்பிட்ட மக்கள் விரோத வளர்ச்சித் திட்டங்களோடு அதை எதிர்த்துப் போராடும் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்டவர்களை இணைக்கும் விதமான பதிவுகளையும் போடுவார். நேரடியாக மோடி எதிர்ப்பு சூழல் நிலவும் போது அந்த எதிர்ப்பு எப்படி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கு ஆதரவான சக்திகளின் தூண்டுதல் என்பதை விளக்கும் சதிக்கோட்பாடுகளையும் பகிர்வார்.

படிக்க:
சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் – இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து – அந்த வாட்சப் குழுமம் முழுக்க முழுக்க சங்கி பிரச்சாரத் தளமாக மாறியது. ”மோடி என்கிற தனித்து நிற்கும் தியாகியை சுற்றிலும் வட்டமிடும் வல்லூறுகள்” குறித்தும், நக்சலைட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் திமுகவுக்கும் இருக்கும் “கள்ள உறவு” குறித்த அலசல்களும் வரத் துவங்கியது இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து தான். இது போன்ற பதிவுகள் இடுவது பத்துக்கும் குறைவான பாஜக ஆதரவாளர்கள் தான் என்றாலும், பெரும்பான்மையானோர் பார்வையாளர்களாக அந்தப் பதிவுகளை தங்கள் மூளைக்குள் இறக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். விளைவு? 950 ஓட்டுக்கள் கொண்ட எங்கள் வார்டில் இந்த முறை சிலர் “ரகசியமாக” தாமரை கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் எங்கள் வார்டில் ஒரு ஓட்டு கூட தாமரைக்கு விழுந்ததாக சரித்திரமே இல்லை.

இந்துத்துவம் நமது கற்பனைக்கு எட்டாத அளவுகளில் நம் சமூகத்தின் வேர்மட்ட அளவில் ஊடுருவியுள்ளது. நாம் வெளியே காணும் மோடி எதிர்ப்பு என்பது அப்படியே இந்துத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பாக இல்லை – அது மோடி என்கிற தனிநபரின் மீதான ”கும்பல் மனோபாவ” வெறுப்பின் வெளிப்பாடு தான். நாளை மோடிக்கு பதிலாக அதே கட்சியில் இருந்து வேறொரு மீட்பர் முன்னிறுத்தப்படும் போது அக்கட்சியின் இன்றைய பாவங்கள் கழுவப்பட்டு அந்த மீட்பர் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான ஒரு கருத்தியல்ரீதியிலான ”செயற்களம்” (Eco system) உருவாகியுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்கள் வெகுவாக பயன்பட்டுள்ளது – குறிப்பாக வாட்சப்.

♠ ♠ ♠

லகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பொய் செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரவுவதற்கும், இதன் மூலம் கும்பல் கொலைகள் நடப்பது, தேர்தல் முடிவுகளே கூட மாறுவது போன்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும் நவீன இணையத் தொழில்நுட்பத்தையும் சமூக வலைத்தளங்களையும் காரணங்களாக சுட்டுகின்றன. இதில் ஒரு வெட்கக்கேடான முரண்பாடு உள்ளது. விசயம் என்னவென்றால், அரசாங்க அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சிகளே தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக திட்டமிட்ட ரீதியில் எதிர்கட்சிகளின் மேல் அவதூறு பரப்ப இதே சமூக வலைத்தளங்களைத் தான் நம்பியிருக்கின்றன. இதைப் போலவே எதிர்கட்சிகளும் சமூக வலைத்தளங்களை நம்பியிருக்கின்றன.

இன்னும் ஒருபடி மேலே போய், பல்வேறு நாட்டு ஆளும் கட்சிகளுக்கு பொருளாதார அரங்கில் தாம் சந்தித்த தோல்விகளை மறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்புகள், பெயரளவிலான தொழிலாளர் உரிமைகளும், சமூக நலத் திட்டங்களும் பறிக்கப்படுவது, பணிப் பாதுகாப்பின்மை, பொதுவான ஒரு சந்தைத் தேக்கம், உற்பத்தி தேக்கம் என சர்வதேச அளவில் பொருளாதார கட்டமைப்பு நிலைகுலைந்து போயுள்ளது. இதன் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் வெளிப்படையான தொழிலாளர் போராட்டங்களாகவும், மக்கள் போராட்டங்களாகவும் வெடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நெருக்கடியின் தருணத்திலிருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அதீத தேசிய வெறியை தூண்டி விடுகின்றன. இதன் விளைவாக இந்தியாவில் மோடியைப் போல் பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் வளர்ந்து வருகின்றன. இவர்கள் முன் வைக்கும் அதீத தேசிய வெறி, இனவெறி, மொழி வெறி போன்றவைகளுக்கு அந்தந்த சூழலுக்கும், கலாச்சாரத்திற்கும், அரசியல் வரலாற்றிற்கும் பொருத்தமான “எதிரிகளை” கட்டமைத்துள்ளனர்; இந்தியாவில் சிறுபான்மையினர், கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர ஜனநாயக முற்போக்கு சக்திகள். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட “எதிரிகளுக்கு” எதிரான கிசுகிசுக்களையும் வதந்திகளையும் பரப்புவதற்கு வாட்சப் போன்ற சமூக ஊடகங்களையே ஆளும் வர்க்கங்கள் சார்ந்துள்ளன.

ஒருபக்கம் ஆட்சியதிகாரத்தில் இருப்பதால் ஒரு சமூக ஒழுங்கை நிலைநாட்டுவதான போலித் தோரணையில் சமூக வலைத்தளங்களை கண்டிப்பது, சட்டரீதியான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவதாக மிரட்டுவது, கண்காணிப்பது என செயல்படும் அதே நேரம் இன்னொரு பக்கம் அதே தளங்களைக் கொண்டு நஞ்சை விதைக்கும் வேலையையும் செய்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்தியாவின் மோடி அரசு சமீபத்தில் வாட்சப் / பேஸ்புக் நிறுவனத்தின் முதலாளி மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்பியதையும், டிவிட்டரின் முதலாளி ஜாக்கை பா.ஜ.க அமைச்சர்களே கண்டித்ததையும் நினைவுபடுத்தி பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

எனில், கும்பல் கொலைகளுக்கும் கலவரங்களுக்கும் வித்திடும் வதந்திகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவையா? அந்த செயல்பாடுகளை லிபரல்கள் சொல்லும் “கருத்து சுதந்திரம்” என்கிற போர்வையில் அனுமதித்து விட வேண்டியது தானா?

இல்லை. வதந்திகள் மற்றும் பொய்ச் செய்திகள் பரவுவதற்கான ஊடகம் என்கிற பொறுப்பை அவர்கள் சுமக்க வேண்டும் என்பதும், அவற்றின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதே சரி. எனினும், இது போன்ற வதந்திகளை உருவாக்குபவர்களும் – அப்படி உருவாக்குபவர்களுக்கு உகந்த சூழல் (Eco System) சமூகத்தில் நிலவுவதற்கு காரணமானவர்களும் முதன்மைக் குற்றவாளிகள் என்பதை மறந்து விடக்கூடாது. கத்தியை வில்லனாக காட்டி கொலையாளி தப்பிப்பதைப் போல் வாட்சப்பை காரணமாக காட்டி பசு குண்டர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது.

சமூக வலைத்தளங்களின் வரவு வதந்திகளின் பரவலை எளிதாக்கியிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை வதந்திகள் சமூக வலைத்தளங்களின் வரவுக்கு முன்பே வேறு வேறு வடிவங்களில் பரவி வந்தன என்பதும்தான். இணையம் தற்போது ஒரு பாதுகாப்பான முகமூடியை வழங்கியுள்ளது. யார் எதைச் சொன்னது என்பதை கண்டுபிடிப்பதை சிக்கலாக்கி இருக்கிறது.

♠ ♠ ♠

ந்தியாவில் மட்டும் இன்றைய தேதியில் சுமார் 22 கோடி பேர் வாட்சப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். சில கோடி அளவிலான வாட்சப் குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் ஒருவரது கைபேசியின் தொடர்புப் பட்டியலில் உள்ள – அறிமுகமான – நபர்களிடமிருந்தே செய்திகள் பகிரப்படுகின்றது என்பதால் வாட்சப்பில் உலாவும் பதிவுகளின் நம்பகத்தன்மை மற்ற சமூக ஊடகங்களை விட அதிகம். பாஜக அரசு போலிச் செய்திகளுக்கு எதிராக ”நடவடிக்கை” எடுக்கப் போவதாக பூச்சாண்டி காட்டியதை அடுத்து வாட்சப் தற்போது சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஒருவர் பார்வேர்ட் செய்யும் தகவல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, பார்வேர்ட் செய்யப்பட்ட தகவல்களின் தலைப்பில் அதைக் குறிப்பது போன்ற நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்தாலும் அவை வதந்திகள் பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதில்லை. இந்தியா மற்றும் வேறு சில நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்களின் உள்ளடக்கத்தை அரசின் புலனாய்வு நிறுவனங்கள் கண்காணிக்க வாட்சப் அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அந்நிறுவனம் நிராகரித்துள்ளது. இவ்வாறு தனிநபர்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் மறையாக்கம் (encrypt) செய்யப்பட்டிருப்பதால் தாமே படிக்க முடியாது என்று அந்நிறுவனம் கூறுகின்றது.

அவ்வாறான கண்காணிப்பை பாஜக போன்ற ஒரு கட்சிக்கு வழங்கினால் திருடனிடமே சாவியைக் கொடுத்தது போல் ஆகி விடும் என்பது வேறு விசயம். இதற்கு மாற்றாக தங்களது செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் – குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் – வாட்சப் செய்திப் பரிமாற்றத்திற்கான ஒரு செயலியாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்புவது, அரசுக்கு ஆதரவாக பொதுக் கருத்தை கட்டமைப்பது, தேசிய வெறியூட்டுவது அந்தச் சமூகங்களில் நடப்பதில்லை.

இந்தியாவைப் பொருத்தவரை பொதுவில் சமூக ஊடகங்களும் – குறிப்பாக வாட்சப் செயலியும் கேடான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் போக்கிற்கு சில காரணங்கள் உள்ளன.

படிக்க:
மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !
பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !

முதலாவதாக, வாட்சப் செயலியைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமாக இருப்பதுடன் அசுரத்தனமான வேகத்தில் வளர்ந்து வருகின்றது. அந்த தளத்தில் எம்மாதிரியான வதந்திகள் பரவுகின்றது, யார் எதற்காக வதந்தியைப் பரப்புகின்றனர், எத்தனை குழுமங்கள் இருக்கின்றன என்பதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ போதுமான தொழில் நுட்ப அறிவு கொண்ட போலீசார் இல்லை. அப்படியே இருந்தாலும், வதந்தி ஆளும் வர்க்கத்திற்கு அல்லது கட்சிக்கு சாதகமான வதந்தியை கட்டுப்படுத்தவோ, அப்படி பரப்புபவர்களை கைது செய்யவோ திராணியற்றதாகவே போலீசு துறை அதன் அஸ்திவாரத்திலிருந்து வரலாற்று ரீதியில் ”வளர்க்கப்பட்டுள்ளது”.

இரண்டாவதாக, வாட்சப் குறிப்பான சிந்தனை கொண்டவர்கள் இயல்பாக ஒன்றிணைந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது. உதாரணமாக ஒரு ஊரின் அல்லது பிராந்தியத்தின் செல்வாக்கான சாதியைச் சேர்ந்த சாதிவெறியர்கள் தங்களுக்குள் ஒரு குழுவாக சேர்ந்து கொள்ள முடியும். அந்தக் குழுமத்திற்குள் தலித்துகளைப் பற்றியோ அல்லது பிற சிறுபான்மையினரைப் பற்றியோ ஒரு வதந்தியை எளிதாக பரிமாறிக் கொள்ள முடியும். அப்படி பகிரப்படும் தகவல்கள் அதே குழுமத்திற்குள் ஒரு சுற்று சுற்றி வரும் போது மேலும் மெருகேறி அதே போன்ற மற்றொரு குழுமத்திற்குச் செல்லும். தகவல்கள் மட்டும் “மெருகேறு”வதில்லை – அதை வாசிப்பவர்களின் சிந்தனைப் போக்கும் மேலும் வன்மமாக மாறுகின்றது.

மூன்றாவதாக, பரப்பப்படும் வதந்திகள் பெரும்பாலும் ஒருவிதமான பொதுபுத்தியில் இருந்து கட்டமைகின்றது. இந்தப் பொதுபுத்தி என்பது பார்ப்பனிய ஆன்மாவினுடையது. ”தலித்துகள் சுத்தமாக இருக்க மாட்டார்கள்”, “குல்லா வைத்து தாடி வைத்த இசுலாமியன் நம்பத் தகுந்தவன் அல்ல” “கிறிஸ்தவர்கள் நயவஞ்சகமானவர்கள்” “பாகிஸ்தான் எதிரி நாடு” “கம்யூனிசம் என்பது சீன சதி” – இது இந்திய பார்ப்பனிய சமூகத்தின் பொது உளவியலில் மிக எளிதில் எடுபடக் கூடிய விசயங்கள். உதாரணமாக – “தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பெட்ரோல் வளம் உள்ளது. அதை எடுக்கத் துவங்கினால் இந்தியா வல்லரசாவதை தடுக்க முடியாது. அப்படி பெட்ரோல் எடுத்தால் சவூதிக்கு மரண அடி நிச்சயம். இந்தியா வல்லரசாவதைத் தடுப்பதில் சீனாவுக்கு அக்கறை. எனவே சவூதி இசுலாமிய ஜிகாதிகளுக்கும், சீனா இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு காசு கொடுத்து பெட்ரோல் எடுப்பதை தடுக்க போராட்டத்தை தூண்டி விடுகின்றன” என்கிற ஒரு வதந்தி பார்ப்பனிய உளவியல் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் பொதுப் புத்திக்கு மிக நெருக்கமானது – உவப்பானது.

நான்காவதாக, பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் தோற்றுப் போயிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள். பொருளாதார அரங்கின் இந்த நெருக்கடி அரசுக் கட்டமைப்பை கடும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது. போலீசு, நீதித்துறை, நிர்வாகத்துறை, இராணுவம் உள்ளிட்ட புனிதப் பசுக்களின் மேல் தோல் உரிந்து அதன் உள் இத்தனை காலமாக மறைந்திருந்த கழுதை அம்பலமாகி நிற்கிறது. மக்களோடான ஒரு நேரடி முரண்பாட்டை தவிர்க்க அவர்களை எந்நேரமும் பதற்றத்தில் வைத்திருக்க வேண்டியது ஆளும் வர்க்கங்களுக்கு தேவையாக இருக்கிறது – அந்த தேவைக்குப் பொருத்தமான வகையில் சமூக வலைத்தள தொழில்நுட்பங்கள் இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு ஏற்படாமல் இருப்பது ஆச்சர்யத்துக்குரியதல்ல.

♠ ♠ ♠

மது காலத்தில் சமூக ஊடகங்களிலேயே கருவாகி, உருவாகி, வாழ்ந்து, வளர்ந்து, கடைசியில் செத்துப் போன “அரசியல் இயக்கங்களை” நாம் அறிவோம். மட்டுமின்றி “ஒரு நபர் கட்சிகள்” “சில நபர் இயக்கங்கள்” “முற்போக்கு செயல்பாட்டாளர்கள்” ஏராளமானோரை பேஸ்புக் பெற்றுப் போட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இவர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றனர். இது போன்ற போலிகள் உருவாகின்றனர் என்பதாலேயே சமூக வலைத்தளங்களை நாம் நிராகரிக்க வேண்டுமா? அல்லது, சமூக வலைத்தளங்களின் மொத்த சாரமும், ஆன்மாவும் இவ்வளவுதானா?

நவீன இணையத் தொழில்நுட்பங்கள் தம்மளவிலேயே சாத்தான்கள் அல்ல. ஆனால், குறிப்பான சமூக -பொருளாதார மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நாம் கத்தியை குறை சொல்வதில் காட்டும் முனைப்பை அதன் பிடி யாரிடம் உள்ளது என்பதைக் கவனிப்பதில் காட்ட மறுக்கிறோம்.

வாட்சப்பையும் பேஸ்புக்கையும் தடை செய்து விட்டால் அவற்றின் இடத்தை வேறு ஒரு செயலி பிடித்துக் கொள்ளும்; தடை செய்யப்பட்டவற்றின் பணிகளை புதிய செயலிகள் மாற்றீடு செய்யும். வால் வீதி ஆக்கிரமிப்புப் போராட்டங்களின் போதும், அப்போது லண்டன் பாரீஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களில் நடந்த தொழிலாளர்களின் ஆக்கிரமிப்புப் போராட்டங்களின் போதும், ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் நடந்த போராட்டத்தின் போதும் இதே சமூக வலைத்தளங்கள் வேறு மாதிரியான பங்காற்றியதை நாம் பார்த்திருக்கிறோம். இதே சமூக வலைத்தளங்களில் நடந்த எதிர்ப்பியக்கங்கள் ஒரு பௌதீக வடிவத்தை எடுத்தபோது சர்வ வல்லமை பொருந்திய ஐம்பத்தாறு இஞ்சி மார்பழகன் ஒரு திருடனைப் போல் சுவற்றை உடைத்துக் கொண்டு ஓடியதையும் பார்த்திருக்கிறோம்.

இப்போதைக்கு கத்தியின் முனை நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது – அதன் பிடியை நாம் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கும்போது நிலைமைகள் முற்றிலுமாக வேறாக இருக்கும். சமூக மாற்றம் என்கிற குறிப்பான நோக்கத்திற்காக மக்களின் பொது உளவியல் ஓர்மையடையும் சூழல் மெய் உலகில் ஏற்படும் போது மெய் நிகர் உலகின் கருவிகள் மக்களுக்கே சேவை செய்யும். அப்படி ஒரு நிலையை உண்டாக்கும் பொறுப்பு நம் முன் உள்ளது.

சாக்கியன்