பாகம் 1 : Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு
புலனாய்வு குழுவிற்கு முதற்கட்ட செய்தி ஆதாரங்களை வழங்கும் நபர்கள் (Sources), இவர்கள் பாஜகவின் கட்டுபாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்பவர்கள். அந்த நபர்கள் தங்களின் வங்கி கணக்கு அறிக்கைகள் ( Bank Statements), கட்டணச் சீட்டு ( Payslips) ஆகியவற்றை புலனாய்வு குழுவிடம் கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலமாக Tekfog செயலியின் விசயத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களின் தலையீடு இருப்பது தெரியவந்திருக்கிறது. அவையானவை, Persistent Systems, Mohalla Tech Pvt Ltd.
இதில் Persistent Systems என்பது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு வேலைப்பணியை கொடுக்கும் நிறுவனம் என்றும் Mohalla Tech Pvt Ltd என்பது ஒதுக்கப்பட்ட வாடிக்கையாளர் (Assigned Client) நிறுவனம் என்பதும் தெரியவருகிறது.
Persistent Systems என்பது 1990-களில் நிறுவப்பட்ட இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். Mohalla Tech Pvt Ltd என்பது ட்விட்டரால் நிதியளிக்கப்படும், பிரபலமான இந்திய பிராந்திய மொழிகள் சமூக ஊடகதளமான Sharechat  உருவாக்கத்தின் பின்னால் உள்ள நிறுவனமாகும்.
நாக்பூர் நகரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களாகத் தங்களை Persistent Systems நிறுவனம் பணிக்கு அமர்த்தியதாக குறிப்பிடுகிறார்கள்  புலனாய்வு குழுவிற்கு  செய்தி விவரம் தந்த  நபர்கள் (Sources). அவர்களின் தற்போதைய திட்டத்தை (Project) செயல்படுத்த Sharechat உடன் மற்றும் செயற்பாட்டாளர்களின் மேற்பார்வையாளர் என அறியப்படுபவரான தேவாங் தேவ் ( இவர் பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மகாராட்டிர மாநில பாஜகவின் தேர்தல் மேலாளர்) என்பவருடன் நெருங்கிய பிணைப்பு தேவைப்பட்டது என புலனாய்வு குழுவிற்கு செய்தி விவரங்களை வழங்கும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்.
படிக்க :
எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1
தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !
தேவாங் தேவ்-இன் மேற்பார்வையாளர் பணியையும் அதில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதும் இதில் பரந்த பிணைப்பு கொண்டிருப்பதும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலமாக புலனாய்வுக் குழுவால் அறியமுடிகிறது.
Persistent Systems நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் இருந்து அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவதில் மிகப்பெரும் அளவில் முதலீடு செய்து வருகிறது. 2018 ஜீலை மாதத்தில் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், இந்தியாவில் 10 மாநிலங்களில் சுகாதாரம் சம்பந்தமான தகவல்களை சேமிக்க, செயல்முறைபடுத்த ஒரு மின்னணு தகவல் மையம் அமைக்க Persistent Systems நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது.
Persistent Systems இந்த Tekfog செயலியின் பல்வேறு அடுக்குகளை தயாரித்தற்கான ஆதாரங்கள் தொழில்நுட்ப ஆவணங்களில் காணக்கிடக்கிறது.
Mohalla Tech Pvt Ltd நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பான Sharechat செயலி பொய் செய்திகளையும் வலதுசாரி அரசியல் பிரச்சாரங்களையும் வெறுப்பு பேச்சுக்களையும் (Hate Speeches) சேமித்து வைக்கும் இடமாக இருந்திருக்கிறது. அதன் பின்னர் மற்ற சமூக ஊடகங்களான Twitter, Facebook, whatsapp போன்றவற்றிற்கு வெறுப்பு பிரச்சாரங்கள், பொய் செய்திகள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
Sharechat என்பது 14 இந்திய மொழிகளில் செயல்படுகிறது. இது ஆங்கிலம் பேசாத சிறு குறு நகரங்களில் வாழும் மக்களை முதன்மையான பயனாளர்களாக கொண்டு செயல்படுகிறது. Sharechat மீது ஏற்கனவே தனிநபர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான அவர்களின் இருப்பிடம், கைபேசியை பற்றிய தொழில்நுட்ப விவரங்கள், கைபேசியில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்டவற்றை விளம்பரதாரர்களுக்கு திறந்துவிட்டது பற்றியும் , Sharechat செயலியின் சொந்த வழிகாட்டு நெறிமுறைகளையே மதிக்காத வன்முறையை தூண்டும் தவறான பதிவுகள் பெருமளவில் இடம்பெறுவது குறித்தும் குற்றச்சாட்டுகள் வெளிவந்திருக்கிறது.
இதற்கிடையே புலனாய்வு குழுவிற்கு செய்தி விவரங்களை வழங்கும் நபர்கள், இந்த Tekfog செயலி மூலம் கட்டுப்படுத்தப்படும் Sharechat செயலியுடன் பிணைப்பில் இருக்கும் 14 கணக்குகளின் விவரங்களை கொடுத்திருக்கிறார்கள்.
புலனாய்வு குழு இந்த கணக்குகளையும் அவை தொடர்பான Twitter, Facebook கணக்குகளையும் தொடர்ந்து 30 நாட்கள் கண்காணித்து ஆராய்ந்ததில், 90% பதிவுகள் Sharechat, Twitter, Facebook ஆகிய தளங்களில் பதிவிடப்பட்டிருப்பது ஒத்துப் போகிறது. அதாவது, வெறுப்பு பிரச்சாரங்கள், பொய் செய்திகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் யாவும் முதலில் Sharechat-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் Twitter, Facebook போன்ற பிற தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், Sharechat வன்முறையை தூண்டும் பதிவுகள், பொய் செய்திகள், வெறுப்பு பிரச்சாரங்கள் ஆகியவற்றின் சேமிப்பு கிடங்காக செயல்பட்டிருக்கிறது என்பது தான்.
மைய நீரோட்ட இணையப் பத்திரிகைகளில் ஒர் செய்தியின் முக்கிய வார்த்தைகளை (keywords) மாற்றுவதன் மூலமாக அந்த உண்மை செய்தியை  ஒத்த  பொய் செய்தியை உருவாக்கி அதை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் மத்தியில் உலவவிடுவது இந்த Tekfog செயலியின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
URL Shortener என்ற செயலி மூலமாக ஒரு செய்தியின் இணைய செய்தி இணைப்பில் ஏதாவது ஒரு குறியீட்டு வார்த்தையை (code) சேர்ப்பது அல்லது நீக்குவது மூலமாக பொய் செய்தியை உருவாக்குகிறார்கள். அதன்பிறகு உண்மை செய்தியின் இணைய பக்கத்தில் இருந்து, URL Shortener செயலியால் உருவாக்கப்பட்ட  பொய் செய்தியான வேறொரு இணைய பக்கத்திற்கு திருப்பிவிடுகிறது. அந்த பொய் செய்தியின் இணைய பக்கம் ( web page) உண்மை செய்தியின் இணைய பக்கத்தை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதில், செய்தியின் தலைப்புகள் மாற்றப்பட்டு, செய்தி அல்லது கட்டுரையின் ஆசிரியர் சொல்லாதததை சொல்லி எழுதப்பட்டிருக்கும். அதை வாசகர்கள் உணரவே முடியாத அளவு கட்டுரை அல்லது செய்தியின் கதையாடல், சாயல், எழுத்து நுணுக்கம் என அனைத்தும் கச்சிதமாக போலி செய்யப்பட்டிருக்கும். இவையெல்லாம் தானியங்கியாகவே செய்யப்படுகிறது.
இதற்காக திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு (Open Artificial Intelligence) என்னும் அதி உயர்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
Tekfog செயலி Tasker என்னும் செயலியை பயன்படுத்துகிறது. அதன் செயல்பாடு என்னவென்றால், ஒரு செய்தியை அட்டவணையிடப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ அல்லது பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கோ ஆளும் கட்சி உருவாக்கி வைத்திருக்கும் whatsapp கணக்குகள் வழியாக அனுப்பமுடியும். இது மிகப்பெரிய வேலையாக தெரிந்தாலும் இதை மிகக்குறைந்த மனித கண்காணிப்பிலே சாதிக்கிறது  Tekfog செயலி. தானியங்கியாக குறித்த நேரத்தில் குறிப்பிட்ட செய்தியை தனிநபர்களுக்கு அனுப்பி அவர்களை முனைவாக்கம் (Polarise) செய்கிறது  Tekfog செயலி.
பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களால்  Tekfog செயலியை பயன்படுத்தி பாஜகவை விமர்ச்சிப்பவர்கள் மீது அவதூறு பரப்புவது, இணையவெளியில் துன்புறுத்தி அவர்களை இணையத்தை விட்டு வெளியேற வைப்பது, பொய் செய்திகளை பரப்புவது மட்டுமல்ல இவற்றையெல்லாம் செய்யவதற்கு ஏற்றாப்போல் புதிய வேலை முறையையும் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு.
Tekfog செயலியை ஒரு குறிப்பிட்ட முடிவை அடைவதற்காக பயன்படுத்தி அதை நிறைவேற்றும் செயற்பாட்டாளர்களுக்கு ஊதிய வெகுமதி கிடைக்கும் படியான வேலைமுறையை அறிமுகப்படுத்திருக்கிறார்கள். இதனால் தேர்தல் மற்றும் பிற‌ முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போது Tekfog செயலியை பயன்படுத்தி இலக்கை அடைவதை ஊக்குவிக்க “surge pricing” என்ற முறையை கடைபிடிக்கிறார்கள். அதாவது எந்த அளவுக்கு பொய் செய்திகள் பரப்பப்படுகிறதோ, எந்த அளவுக்கு வெறுப்பு பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறதோ, எந்த அளவுக்கு இணைய வம்புகள் வளர்க்கப்படுகிறதோ அந்த அளவு ஊழியர்களுக்கு வெகுமானம் கிடைக்கும். ஒரு சில மனிதர்களின் தனிப்பட்ட கூலி அதிகரிப்பிற்காக கருத்து சுதந்திரம், சனநாயக வெளி எப்படி சீரழிக்கப்படுகிறது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
கலவரங்கள் நடத்துவதற்கு இணையத்தின் வழியே எப்படி பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது என்பதற்கு Tekfog செயலியின் மூலம் எப்படி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது டெல்லியில் கலவரம் இணையத்தில் ஒணைங்கிணைத்து நடத்தப்பட்டது என்பது முன்னுதாரணமாக இருக்கிறது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் மக்கள் அமைதியான வழியில் போராடி வந்தனர். அப்போது கபில் மிஸ்ரா என்பவர் வன்முறையை தூண்டும் வகையில் “காவல்துறை போராட்டக்காரர்களை களைக்கவில்லை என்றால் நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க நேரிடும்” என்று மிரட்டல் விடுத்தார். துரோகிகளை (அதாவது முஸ்லிம்களை) சுட்டுத்தள்ளுங்கள் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசினர்.
இந்த டெல்லி கலவரத்தை இணையத்தில் பரப்பியதில் கபில் மிஸ்ராவுக்கு முக்கிய பங்குண்டு. புலனாய்வு குழு ஆய்வு செய்ததில், கபில் மிஸ்ராவின் ட்விட்டர் கணக்கு ஒரு முனையாகவும் (Node), Opindia செய்தித்தளம் மற்றொரு முனையாகவும் செயல்பட்டிருக்கிறது. இந்த முனைகளுடன்  Tekfog  செயலியின் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் நான்கு கணக்குகளும் சேர்த்து ஒரு மையமாக செயல்பட்டிருக்கிறது.
இந்த மையத்தில் இருந்து பொய் செய்திகளும் வன்முறையை தூண்டும் பதிவுகளும் மற்ற கணக்குகளுக்கு பரப்பப்பட்டிருக்கிறது. இந்த கணக்குகளில் பெரும்பாலானவை bots என்று சொல்லக்கூடிய தானியங்கி கணக்குகள். அவையாவும் கலவரங்கள் நடத்துவதற்கு Tekfog செயலியின் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதாகும். இதன் மூலம் குறுகிய நேரத்தில் ஒரு பொய் செய்தியை பரவலான மக்கள் மத்தியில் உலவவிட்டு கலவரத்தை தூண்ட உதவி செய்யப்பட்டிருக்கிறது. இதை புலனாய்வு குழு ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நீண்ட விளக்கங்களில் இருந்து Tekfog செயலியின் அளவு (Scale), நுட்பம் ஆகியவையும் இணையவெளியில் தானியங்கி முறையில் பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுவதும், மக்களின் பொதுக்கருத்தை கட்டமைப்பதில் அதன் தாக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும்.
தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் சமூகத்தில் சந்தேகத்திற்குரிய மின்னணு செயல்பாடுகளில் தங்கள் சொந்த லாபத்திற்காக ஈடுபடுகிறார்கள் என்பதும் அதனை  பயன்படுத்தி  ஆளும்  பாசிச பாஜக அரசு சனநாயக வெளியை வெட்டி சுருக்கி வருகிறது என்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஆதாரங்களுடன் நிருபிக்கப் பட்டிருக்கிறது.
படிக்க :
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
Tekfog செயலி என்பது உலகம் முழுவதும் பொய் செய்திகளை பரப்பி, சமூக ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள ஊதியம் பெறும் லட்சக்கணக்கான செயற்பாட்டாளர்களின்(Operatives) முதுகெலும்பாக உள்ளது.
இந்த ஊதியம் பெறும் லட்சக்கணக்கான செயற்பாட்டாளர்களின் பணி என்னவென்றால், சமூக ஊடகங்களில் செய்திகளின் உண்மைத்தன்மையை சிதைத்து, பொது உரையாடலை சீரழித்து, சனநாயக வெளியை வெட்டிச் சுருக்கி, அதன் மூலம் ஆளும் அரசியல் கட்சிக்கு ஏற்றார்போல கருத்துருவாக்கம் செய்வதுதான். சமூக ஊடகங்கள் பரவலாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தனிநபர்கள் கருத்துகளின் மீதான அதன் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேர்மையற்ற முறையில் ஆளும் பாசிச பாஜகவும், லாப வெறி கொண்ட கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களும் சமூக ஊடகங்களை தங்கள் அறமற்ற தொழில்நுட்பங்களால் கைபற்றி மக்களின் கருத்துகள் மீது நியாயமற்ற முறையில் தாக்கம் செலுத்தும் வகையில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவது, குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தையும், சொல்லிக்கொள்ளப்படும்  அரசியல் அமைப்பு நிறுவனங்களின் இறையாண்மையையும் மிகப் பாரிய அளவில் கேள்விக்குள்ளாக்குவதாகும்.
எந்த சட்டவரையறையையும் மதிக்காமல் மக்களின் அந்தரங்கம் முழுமையாக சுரண்டப்படும் அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த Tekfog செயலி பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை இணையவெளியில் பாசிசத்தின் முன்னேறி தாக்கும் செயல்பாடாக பார்க்கவேண்டும்.
சுதந்திரமாக உண்மையான தகவல்களை பெறுவது என்ற மக்களின் அடிப்படை சனநாயக உரிமை இந்த பாசிச ஆளும் பாஜகவால் கேலிகூத்தாக்கப்பட்டிருகிறது. இதை எந்த முதலாளித்துவ பத்திரிகைகளும் பெரிதாக கண்டிக்கவில்லை.
பொய் செய்திகளையும் வெறுப்பு பிரச்சாரங்களையும் பரப்பி  நாட்டின் தகவல் சூழலை நஞ்சாக்கி, மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் எதிர்த்து போராடவேண்டும். பாசிஸிட்டுகளுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இருக்கும் கள்ளக்கூட்டை அம்பலப்படுத்த வேண்டும். பறிபோய்க்கொண்டிருக்கும் சனநாயக உரிமைகளுக்காக பாசிச பாஜகவை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடவேண்டும்.
முற்றும்
மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்
செய்தி ஆதாரம் : த வயர்1, த வயர்2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க