”Tek fog: வெறுப்பு பிரச்சாரங்களின், இணையவெளி தாக்குதல்களின்,
பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு” – பாகம் 1
“தனது சொந்த இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உள்நாட்டு, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் இலாபங்களை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு மக்கள் கருத்துக்களை ஒடுக்கும், சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் தொழில்நுட்பங்களை  பாசிஸ்டுகளுக்கு கையளிக்கிறார்கள். அந்த அறமற்ற தொழில்நுட்ப சாதனங்கள்  சொல்லிக்கொள்ளபடும் சட்ட வரைமுறைகள் எதையும் மதிக்காமல் மக்கள் மீது பாசிஸ்டுகளால் ஏவப்படுகிறது”.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்த்தி சர்மா என்பவர் @Aarthisharma08 என்ற ட்விட்டர் கணக்கில், “Tekfog என்னும்  ரகசிய செயலியை பயன்படுத்தி ஆளும் கட்சியுடன் (பாஜக) இணைந்திருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் (Operatives) கட்சியின் பிரபலத்தை உயர்த்தி காட்டவும், கட்சியை விமர்ச்சிப்பவர்களை இணையவெளியில் தனிப்பட்டவகையில் அவதூறு செய்து துன்புறுத்தவும், மக்களின் பொது உணர்வுகளை தங்களுக்கு ஏற்றார்போல மடைமாற்றம் செய்யவும் பயன்படுத்தி வருவது குறித்து” பதிவிட்டிருந்தார்.
ஆர்த்தி சர்மா, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் (IT Wing) வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு, பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பாஜக-வின் இளைஞர் பிரிவு)வை சேர்ந்த முன்னாள் தேசிய சமூக ஊடகத்துறை தலைவராக இருந்தவர் தேவாங் டேவ் என்பவர். இவர் தற்போது மகாராட்டிர மாநில பாஜக-வின் தேர்தல் மேலாளராக உள்ளார். இவர் 2018-ம் ஆண்டு பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று வெகுநாட்களான பின்பும் அதை நிறைவேற்றவில்லை. அதுமட்டுமின்றி வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு ட்விட்டுக்கு வெறும் ரூ.2 மட்டுமே கொடுக்கப்படுவதாக ஆர்த்தி சர்மா தெரிவிக்கிறார். அந்த அதிருப்தியில் தான் அங்கே இயக்கப்பட்டு வரும் இரகசிய செயலியான Tekfog பற்றி பொது வெளியில் தெரிவித்திருக்கிறார்.
படிக்க :
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பாட்டாளர்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்த Tekfog செயலியின் சிறப்பு அமசங்களாக சிலவற்றை குறிப்பிடுகிறார், ஆர்த்தி சர்மா. அவற்றில் “டிவிட்டர் ட்ரெண்ட்ங்கில் hashtag-களையும், செய்திகளையும் தானியங்கியாகவே பதிவேற்றம் செய்யும் திறன் கொண்டது” என்ற அம்சம் தகவல் தொழில்நுட்ப துறையில் நிபுணர்களான ஆயுஷ்மான் கவுல், தேவேஷ் குமார் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால் ஊந்தப்பட்டு Tekfog செயலியை பற்றி 20 மாதங்களுக்கு மேலாக புலனாய்வு செய்து The Wire என்னும் இணைய பத்திரிகையில் செய்தி கட்டுரைகளாக வெளியிட்டனர். அந்த செயலி பற்றி பொதுவில் வெளியிட்ட நபர் சொன்ன ஒவ்வொரு தகவலும் புலனாய்வு குழுவால் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்பட்டு தான் அந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
இந்த Tekfog செயலி ஒரு முன்மாதிரி வடிவம் (Prototype) அல்ல. கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஊதியம் பெறும் செயல்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் இந்த புலனாய்வு குழு உறுதிப்படுத்துகிறது.
இந்த செயலியின் மிக முக்கியமான அம்சம் என்பது Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களின் ட்ரெண்ட்ங் பகுதியை கைபற்றுவதாகும் (Hack). இதற்கு Tekfog செயலியிலே உள்ளார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்களை பயன்படுத்தி, தானியங்கியாக  சமூக ஊடகங்களில் உள்ள தனிநபர்கள் அல்லது குழுக்கள் பதிவிடும் செய்தி அல்லது பதிவை மறுட்விட்டு செய்வது அல்லது பகிர்ந்து கொள்வது என அந்த செய்தி அல்லது பதிவுக்கு போலியான முக்கியத்துவத்தை உருவாக்குகிறார்கள். இதை Tekfog செயலியை தகவல் தொழில்நுட்ப பிரிவின் அறையில் இருந்து இயக்கும் செயற்பாட்டாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகள் (Accounts) மூலமாக செய்ய முடிகிறது.
இதன் மூலம் வலதுசாரி அரசியல் பிரச்சார செய்திகளை உருப்பெருக்கி (Amplify) மிகப் பரவலான மக்கள் பகுதிகளிடம் சென்றடையும் விதமாக பரப்பப்படுகிறது. இதன் மூலம் வலதுசாரி தீவிரவாத கதையாடல்கள், கருத்துக்கள், அரசியல் பிரச்சாரங்கள் வழக்கத்தைவிட மிக அதிக பிரபலமானதாக முக்கியத்துவமுடையதாக மாற்றப்படுகிறது.
மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த Tekfog செயலி ” தனிநபர்களின் செயல்பாட்டில் இல்லாத (inactive) whatsapp கணக்குகளை கைப்பற்றி அதன் மூலமாக அந்த கைபேசி எண்ணை பயன்படுத்தி, அந்த எண்ணிலிருந்து அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்ட எண்களுக்கு ( Frequently Contacted) அல்லது தொடர்பில் இருந்த அனைத்து எண்களுக்கும் (All Contacted) தானியங்கியாக செய்திகளை அனுப்புகிறது. அந்த செய்திகள் வலதுசாரி அரசியல் பிரச்சாரங்கள் தான் என்பதை குறிப்படத்தேவையில்லை. தங்களது எண்ணில் இருந்து செய்திகள் அனுப்பப்படுவது குறித்து அறியாத அந்த அப்பாவி நபர்கள் தான் அந்த செய்திகளால் நிகழும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி கைப்பற்றுவதற்கு முதலில் பயன்பாட்டில் இருக்கும் ( Active) WhatsApp கணக்கிற்கு ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ, அதாவது ஏதேனும் ஒரு மின்னணு கோப்பு ( digital file), அநாமதேய எண்ணிலிருந்து அனுப்பப்படுகிறது. அந்த புகைப்படமோ வீடியோவோ ஒரு Spyware என்று சொல்லப்படும் உளவு மென்பொருளை கொண்டிருக்கும். இந்த உளவு மென்பொருள், ஊடுருவப்பட்ட whatsapp கணக்கு உள்ள கைபேசியின் அனைத்து செயல்பாடுகளையும் உளவு பார்க்கும் தன்மையுடையது. அந்த மின்னணு கோப்பான புகைப்படமோ அல்லது வீடியோவோ கைபேசியில் தரவிறக்கம் செய்யப்பட்ட உடன் உளவு மென்பொருள் செயல்பட தொடங்கிவிடும். அதன் மூலம் அந்த whatsapp கணக்கு கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எப்போது அந்த whatsapp கணக்கு பயன்பாட்டில் இல்லாமல் போகிறதோ ( become inactive) அப்போது பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள Tekfog செயற்பாட்டாளர்கள்  அதன் கட்டுப்பாட்டை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். பின்பு அந்த whatsapp கணக்குடன் தொடர்புடைய அனைத்து எண்களுக்கும் (All Contacted) அல்லது அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்ட எண்களுக்கு (Frequently Contacted) செய்திகளை அனுப்பகிறது. இது பயனரின் கவனத்திற்கு தெரியாமல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் அந்தரங்கம் முழுமையாக சுரண்டப்படுகிறது.
whatsapp கணக்கு பயன்பாட்டில் உள்ளபோதே  Tekfog செயலியால் அதை ஊடுருவி கைபற்ற முடியாது என்று  Tekfog செயலியின் தொழில்நுட்ப அம்சம் சார்ந்து இதை பார்க்க முடியாது. பயன்பாட்டில் இருக்கும் whatsapp கணக்கை கைப்பற்றி செய்திகளை அனுப்பினால் பயனரின் சந்தேகத்திற்கு ஆட்பட நேரிடும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அந்த எண்ணை பயன்படுத்தும் நபரைப்பற்றிய விவரங்கள் Tekfog செயலியின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் தரவுதளத்தில் (Database) சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த நபர் வருங்காலத்தில்  பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் (Operatives) இணைய துன்புறுத்தல்களுக்கு ( Online Harrassment) உள்ளாக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
பிறர் whatsapp கணக்குகளை கைப்பற்றுவது, அதிலிருந்து அந்த நபர்களுக்கே தெரியாமல் செய்திகளை அனுப்பவது, தனிநபர் தரவுத்தளத்தில் அவர்களின் விவரங்களை சேமித்து வைப்பது என யாவற்றையும் அந்த நபர்களின் அனுமதியின்றி அவர்களால் அறியமுடியாத படி சந்தேகிக்க முடியாதபடி செய்யும் வகையில் Tekfog செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் குடிமக்கள் பற்றிய தரவுகளை அவர்களின் மொழி, மதம், தொழில், வயது, பாலினம், அரசியல் சார்பு மற்றும் உடல் அம்சங்கள் (Physical Attributes) ஆகியவற்றின் அடிப்படையில் வகை பிரித்து தரவுத்தளத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் இருக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களை இணையவெளியில் துன்புறுத்தவோ இணைய வம்பிற்கு (Trolling) உட்படுத்தவோ இந்த தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தனிநபர் தரவுகளை பயன்படுத்தி கொள்ளமுடியும். இதை பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளின் உதவியோடு தானியங்கியாகவே (Auto Generated)இந்த இணைய துன்புறுத்தல் பதிவுகள் உருவாக்கப்பட முடியும். இதற்காகவே முக்கிய வார்த்தைகள் ( keywords) , சொற்தொடர்கள் ( Phrases) , அவற்றில் பெரும்பாலானவை தவறானவை, இழிவானவை இந்த  செயலியால் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக Google Sheets போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் பயன்படுத்தப்படுகிறது.
Tekfog செயலியை இயக்கும் செயற்பாட்டாளர்கள் இணைய வம்பிற்கு உள்ளாக்கப்போகும் நபர்களை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது அவர்களுக்கு ஏற்கனவே மேலிடத்தில் இருந்து இணைய வெளியில் தாக்குதலுக்கு உள்ளாக்க வேண்டிய நபர்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கும். அந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட போகும் நபர்கள் பற்றிய விவரங்களை Tekfog செயலியுடன் இணைந்த தனியார் தரவுத்தளத்தில் இருந்து எடுத்துக்கொள்வார்கள்.
இணைய வம்பை  (Online Trolling) தொடுப்பதற்காக தரவுத்தளத்தில் வெவ்வேறு வகையீனங்களின் அடிப்படையில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகள் அலசப்படும். மாணவர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பலவற்றுடன் அவர்களின் மதம், மொழி, வயது, பாலினம், அரசியல் சார்பு, சில சமயங்களில் உடல் ரீதியான கூறுகளான நிறம், எடை, மார்பக அளவு என்பன போன்ற வகையீனத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும்.
படிக்க :
இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !
‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம்!
இதன் மூலம் Tekfog செயலி செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட நபரை சில கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். அவற்றின் அடிப்படையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி, அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் முக்கிய வார்த்தைகள், சொற்தொடர்கள் மூலமாக தானியங்கியாகவே பதிவுகள் தயாரிக்கப்பட்டு செயற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகளின் வழியாக பகிரப்படும். அல்லது Twitter Facebook போன்ற சமூக ஊடகங்களின் அந்தரங்கமான உள்பெட்டிக்கு ( Inbox) மோசமான தாக்குதல் தன்மையுள்ள வசவு மொழியில் எழுதப்பட்ட பதிவுகள் அனுப்பப்படும்.  இவை பெரும்பாலும் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் முஸ்லிம் பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது.
இந்த Tekfog செயலியின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த செயலியால் செய்யப்பட்ட வேலைகள், அதை செய்ய செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்பட்ட கணக்குகள் ஆகியவற்றை தடம் தெரியாமல் அழிக்க முடியும் அல்லது வேறு மாதிரியாக மறு வடிவமைப்பு (Remap) செய்ய முடியும். அதனாலே இந்த Tekfog செயலியின் இந்த குறிப்பிட்ட ஒரு அம்சம் குறித்து புலனாய்வு குழுவால் எதையும் கண்டறிய முடியவில்லை.
புலனாய்வு குழு Tekfog செயலிக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பற்றிய ஆய்வையும் செய்திருக்கிறது. இதன் மூலம் ஆளும் பாஜகவிற்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இருக்கும் பரஸ்பர இலாபம் அடிப்படையிலான பிணைப்பு பற்றிய தெளிவை பெறமுடிகிறது.
(தொடரும்…)
மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்
செய்தி ஆதாரம் : த வயர்1, த வயர்2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க