டந்த ஜனவரி 5-ம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடைபெற இருந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரப் பேரணியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியின் கார், விவசாயிகளின் போராட்டத்தால்  மோகா – ஃபெரோஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த செய்தி வெளியானவுடனேயே காவி கும்பல்களும் ஜால்ரா ஊடகங்களும் “பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு”, “பிரதமர் உயிருக்கு ஆபத்து” என்று ஒன்றுமில்லாத நிகழ்வை ஊதிப் பெருக்கின.
உ.பி. முதல்வர் ரவுடி சாமியார் யோகி, “பாதுகாப்பு குறைபாடு என்பது பிரதமரைக் கொல்ல திட்டமிட்ட சதி” என்று பொங்கினார். மத்தியப் பிரதேசம், அசாம் மாநில முதல்வர்கள் உட்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் மோடியின் ஆயுள் நீடிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்ததன் மூலம் தாங்கள் கட்டமைத்துக் கொண்டிருந்த திரைக்கதைக்கு சுவை சேர்த்தனர்.
70,000 நபர்கள் கலந்துகொள்வதாக இருந்த பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டத்தில் வெறும் 500 நபர்களே வந்திருந்த காரணத்தால்தான் மோடி தனது நிகழ்ச்சியை இரத்துசெய்துவிட்டு கிளம்பினார். தனக்கு நேர்ந்த அவமானத்தை மறைப்பதற்காகவே “பாதுகாப்பு குறைபாடு” என்று நாடகமாடுகிறார் என்று ஆரம்பத்தில் மோடியை விமர்சித்தார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. பா.ஜ.க.வினரின் ஆர்ப்பாட்டங்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்திலும் இந்நிகழ்வை ஊதிப்பெருக்கி நடந்த விவாதங்கள் என ஒருசுற்று முடிந்த பின்பு அதே சரண்ஜித் சிங் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்தார். அந்த அளவிற்கு இந்த நாடகத்தின் வீச்சு இருந்தது.
படிக்க :
மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றமோ இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் ஒன்றிய அரசின் இரு விசாரணைக் குழுக்களையும் களைத்துவிட்டு ‘நடுநிலையாக’ தானே ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மோடிக்கு மகுடி வாசித்த ஊடகங்களும்!
காலிஸ்தானிகளாக்கப்பட்ட பஞ்சாப் விவசாயிகளும்!
புல்வாமா தாக்குதலை ஒட்டிய தேசவெறிப் பிரச்சாரம்; பீமாகொரேகான் நிகழ்ச்சியை ஒட்டி கிளப்பிவிடப்பட்ட “மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி” என்ற பிரச்சாரம் ஆகியவை போன்று தற்போதைய பஞ்சாப் விசயத்திலும் மைய ஊடகங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள், மக்களிடையே எதை கருத்துருவாக்கம் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினார்களோ அதை சிரமேற்கொண்டு செய்து தந்திருக்கின்றன.
“அணு ஆயுத அரசின் தலைவரான பிரதமர் மோடி சாலையில் 15 நிமிடங்கள் காத்திருப்பதும் பாதுகாப்பு ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பதும் மிகப்பெரும் தவறு நடந்திருக்கிறது என்பதையேக் காட்டுகிறது… ஏற்கெனவே இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்களை கொன்றது போல் மீண்டும் ஒரு தவறு நடக்கக் கூடாது” என்று பீதியை உருவாக்குகிறது, தி பிரிண்ட் ஆங்கில இணையப் பத்திரிகை.
“இந்திய ஜனநாயக நிறுவனத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்களில் பிரதமர் அலுவலகமும் ஒன்று. பிரதமர் அலுவலகம் அச்சுறுத்தலுக்குள்ளாவது என்பது இந்திய நாடே அச்சுறுத்தலுக்குள்ளாவதாகும். யார் பிரதமராக இருக்கிறார் என்பதெல்லாம் ஒருபொருட்டல்ல” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.
ஃபெரோஸ்பூரில் மோடி பங்குபெற இருந்த பொதுக்கூட்தத்தில், வெறிச்சோடிக் கிடந்த நாற்காலிகள்.
“தேசத்தில் மிக அதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய பொறுப்பான பதவி பிரதமருடையது. அது தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது… பிரச்சாரத்தைத் தடுக்கும் அமைப்புகளை சட்டரீதியாக அடக்குவதும் ஒடுக்குவதும் அகற்றுவதும் மாநில அரசின் கடமை” என்று தலையங்கம் எழுதியது தினமணி.
“நன்கு குறிபார்த்து சுடுபவராலோ, ஆளில்லா டிரான் மூலமோ, கையெறி ஏவுகணை (Grenade-launcher) அல்லது நாட்டு வெடிகுண்டு மூலமோ பிரதமரின் கார் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பிருந்திருக்கிறது…” என்றும் “இந்தியப் பிரதமர் ஒரு தனிமனிதல்ல, நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பூர்வ அலுவலகம் மற்றும் நிறுவனம். அதேபோல் அவரது பாதுகாப்பு என்பது தனிநபரின் பாதுகாப்பல்ல நிறுவனத்தின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு” என்று விசயத்தை தேசவெறிக்கு மடைமாற்றியது இந்தியா டுடே.
மொத்தத்தில், மக்கள் விரோத மோடிக்கு எதிரான சொந்த நாட்டு மக்களின் போராட்டத்தை, “பாதுகாப்பு குறைபாடு”, “பிரதமரைக் கொல்ல சதி” “மீண்டும் 1984 – (இந்திரா கொல்லப்பட்ட ஆண்டு)” என்று கூவியதன் மூலம் போராடிய பஞ்சாப் விவசாயிகள் அனைவரையும் “தீவிரவாதிகள்” என மறைபொருளில் பிரச்சாரம் செய்தன ஊடகங்கள்.
இவையன்றி, மோடியின் பயணத்தில் நடந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு “நீதிக்கான சீக்கியர்கள்” என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஒரு செய்தியும் பரப்பப்பட்டது. இதுதொடர்பாக வெளிநாட்டிலிருந்து அந்த அமைப்பின் தலைவர் பேசியதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
மோடி சென்றதோ தேர்தல் பிரச்சாரத்திற்கு; பயணித்த பாதையில் மறியல் செய்தவர்களோ விவசாயிகள்; அதுவும் முன்னறிவித்து செய்யப்பட்ட போராட்டம் – நடந்தது இதுதான். இவ்வாறிருக்க ஏதோ தீவிரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டதைப் போல இதற்கு ‘பொறுப்பேற்கிறேன்’ என காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் பேசுவதாக காணொலி ஒன்று புறப்படுகிறது எனில், இதன் பின்னணியில் யாரோ ஒரு திருவிளையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது.
‘பாதுகாப்பு குறைபாடு’ எனும் நாடகம்
ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்ற மோடியின் பயணத் திட்டமென்பது பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஃபெரோஸ்பூர் செல்வதாகும். ஆனால் வானிலை சரியில்லாததால் ஹெலிகாப்டர் பயணம் இரத்துசெய்யப்பட்டது. திடீரென்று பயணத் திட்டம் மாற்றப்பட்டு சாலை வழியாக பதிண்டாவிலிருந்து ஃபெரோஸ்பூர் வரை கிட்டத்தட்ட 100 கி.மீ காரில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் போராட்டம்.
ஆனால், ஃபெரோஸ்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றதால் பியரினா என்ற கிராமத்தில் மோடி சென்ற கார் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, 15-20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 70,000 நபர்கள் கலந்து கொள்வதாக இருந்த கூட்டத்தில் வெறும் 700 நபர்களே கலந்து கொண்டதால் மோடியின் தேர்தல் பேரணியும் இரத்து செய்யப்பட்டது.
“என்னை உயிருடன் திருப்பியனுப்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்” என்று தான் திரும்பிச் செல்லும்முன் பஞ்சாப் விமான நிலைய அதிகாரிகளிடம் வசனமொழி பேசினார் மோடி. இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பிரச்சாரத் திட்டத்திற்கு கொடியசைப்பாக அமைந்தது.
பஞ்சாபிற்கு மோடி வரும் நாளில், எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்வோம் – என்று முன்பே அறிவித்திருந்தது விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா. போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து 1 கி.மீ தொலைவிற்கு முன்பே மோடியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
மோடியின் காரை சுற்றி சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இயந்திர துப்பாக்கிகளுடன் நின்றிருப்பதும் காருக்கு அருகாமையில் “நரேந்திர மோடி வாழ்க” என்ற பதாகைகளுடன் பா.ஜ.க.வினர்தான் குழுவாக நின்று முழக்கமிட்டார்கள் என்பதும் சமூக ஊடகங்களில் வெளியான காணொலியில் தெளிவாகத் தெரிகிறது. எனவே போராடிய விவசாயிகளால் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு என்பது வடிகட்டிய பொய்யாகும்.
மேலும் மோடியின் பயணத்தில் இடையூறு ஏற்படுவது, அதாவது பா.ஜ.க.வினரின் மொழியில் சொன்னால் ‘பாதுகாப்பு குறைபாடு’ ஏற்படுவதென்பது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் அசோக் நகரில் நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு மக்கள் மோடியை நெருங்கினர். 2018-ம் ஆண்டு, சிறப்பு பாதுகாப்பு குழுவையும் மீறி ஆள்மாறாட்டப் பேர்வழி ஒருவர் மோடி இருந்த மேடைக்கே சென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு, நொய்டாவில் போலீஸ் பாதுகாவலர்களே மோடி சென்ற காரை போக்குவரத்து நெரிசலில் சிக்கும்படி செய்திருக்கின்றனர். அப்போதெல்லாம் ‘பாதுகாப்பு குறைபாடு’ என்று கூச்சலிடாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பரிவாரங்கள் தற்போது மட்டும் “மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லை” என்று கூச்சலெழுப்புவதை சாதாரண விசயமாக நாம் கடந்து சென்றுவிட முடியாது.
ஐந்து மாநிலத் தேர்தலுக்கான நாடகமா, அடக்குமுறைக்கான சாதனமா!
பா.ஜ.க.வை, மோடியைப் பற்றித் தெரிந்த பல்வேறு முற்போக்காளர்களும் முற்போக்கு -லிபரல் ஊடகங்களும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது புல்வாமா தாக்குதலை வைத்து ‘தேசபக்தி’ அலையை எழுப்பி ஓட்டு அறுவடை செய்துகொண்ட உத்தியைப் போன்றதுதான் தற்போதைய ‘பாதுகாப்பு குறைபாடு’ நாடகமும்; இதன் மூலம் தன் மீது ஒரு அனுதாப அலையை உருவாக்கி ஓட்டு அறுவடை செய்யப் பார்க்கிறார் மோடி என்கின்றனர்.
ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எந்த அளவிற்கும் இறங்கி வேலை பார்ப்பார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பஞ்சாப் விசயத்தையொட்டி காவி கும்பல் செய்துவரும் பிரச்சாரம் என்பது தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்ற உண்மையை, சில விசயங்களை தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் மூலம் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
முதலாவதாக, தலைகீழே நின்று தண்ணீர் குடித்தாலும் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறப் போவதில்லை. இது பா.ஜ.க.வினருக்கும் நன்கு தெரியும். ஏனெனில் மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பஞ்சாப் மக்களை மோடி எதிர்ப்பு – பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலுடன் ஐக்கியப்படுத்தியிருக்கிறது. பஞ்சாபில் உள்ள சிறு குழந்தை கூட மோடி என்றால், இழிசொல்லால் வசைபாடும்.
தற்போது மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும் அவை பஞ்சாப் விவசாயிகளை சமாதானப் படுத்திவிடவில்லை. சமாதானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் மோடி அரசு அச்சட்டங்களை திரும்பப் பெறவில்லை. விவசாயிகளுடன் போராட்டத்தை தற்காலிகமாக கலைத்துவிடவும்; தங்களது இந்து முனைவாக்கத்தைக் கடந்து, “விவசாயிகள்” என்ற வர்க்க ஒற்றுமை, இப்போராட்டத்தின் விளைவாக பஞ்சாபைத் தாண்டி மேலும் விரிவடைந்து விடக் கூடாது என்பதற்காகவும்தான் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்தது மோடி அரசு. குறிப்பாக உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது.
கார்ப்பரேட் தாசனான மோடிக்கு வேளாண் சட்டங்களை நிரந்தரமாக திரும்பப் பெறும் நோக்கம் எதுவும் இல்லை. அதனை சட்டங்களைத் திரும்பப் பெற்ற அன்று மோடி ஆற்றிய உரையிலேயே காணலாம். “நாட்டின் பெரும்பான்மை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வேளாண் சட்டங்களை ஒரு சிறுபிரிவினருக்கு புரியவைக்க முடியவில்லை என்பதற்காக திரும்பப் பெறுகிறேன், என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில், “சிலருக்கு பிடிக்காத காரணத்தால்தான் வேளாண் சட்டங்கள் பின்வாங்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. அரசு ஓரடி பின்னோக்கிச் சென்றுள்ளது. ஆனால் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் முன்னோக்கிச் செல்லும்” என்று பேசினார் வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர். ஆக, மீண்டும் இச்சட்டங்களை கொண்டுவருவதற்கான உகந்த சூழ்நிலையை எதிர்நோக்கி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. காத்திருக்கிறது.
அத்தகைய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமானால் பஞ்சாபை அடக்கி ஒடுக்குவது முன்நிபந்தனையாகிறது. ஏனெனில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா விவசாயிகள் மட்டும் போராடவில்லை. அவர்களைப் போல வீச்சு இல்லாவிட்டாலும் நாட்டின் பிற பகுதி விவசாய அமைப்புகளையும் போராட வைத்தார்கள்.
அனைத்து மாநில மக்களிடத்திலும் தங்கள் போராட்டத்தின் நியாய உணர்வை அங்கீகரிக்க – ஆதிரிக்கச் செய்தார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்குள் பொதிந்திருக்கும் கார்ப்பரேட் இலாப வெறியை தங்களின் போராட்ட முறைகளின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் குறிப்பிட்ட அளவிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
சுருக்கமாகவும் சரியாகவும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மதிப்பிட வேண்டுமானால், “இந்திய விவசாயத் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மோடி அரசின் மறுகாலனியத் திட்டத்திற்கெதிரான போராட்டத்திற்கு என்ஜினாக செயல்பட்டார்கள்” என்று சொல்லலாம். நாட்டின் மற்ற மாநிலங்களில் ஏற்கெனவே தனியார் கொள்முதல்தான் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பெருமளவு அரசுக் கொள்முதலை சார்ந்திருப்பது பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்கள் மட்டுமே. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு இம்மாநிலங்கள் முன்னணிப் பாத்திரம் வகிப்பதற்கான காரணம் இதுதான்.
இதை நம்மைவிட காவி பாசிஸ்டுகள் நன்கு மதிப்பிட்டுள்ளார்கள். எனவே பற்றி எரியும் பஞ்சாபை பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி அடக்கி ஒடுக்குவதன் மூலம் வேளாண் துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிரான நாடுதழுவிய கொதிப்பை அடக்கிவிடலாம் என்ற திட்டத்துடன் காய்நகர்த்தி வருகிறார்கள். அதற்கான நியாயவாதங்களை உருவாக்கும் முயற்சிதான் “மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லை” என்ற பிரச்சார இயக்கம்.
படிக்க :
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்
இத்துடன் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டராக அதிகரித்த நடவடிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் விசயத்தைப் புரிந்துகொள்ள முடியும். பஞ்சாபை பொறுத்தவரை கிட்டத்தட்ட பாதி மாநிலம் இந்த விரிவாக்க நடவடிக்கையின் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது. இதுதொடர்பாக, அப்போதே டிசம்பர் 2021 புதிய ஜனநாயகம் இதழில், “எல்லைப் பாதுகாப்பு படைவிரிவாக்கம்: தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் பஞ்சாபை பற்றி மேற்கொண்டுவரும் பிரச்சாரம் என்பது வெறுமனே தேர்தலுக்காக அனுதாபம் தேடும், ஓட்டுப் பொறுக்கும் முயற்சியல்ல. அது ஒரு சதிகார நோக்கம் கொண்டது. இது புல்வாமா மாதிரி அல்ல; பீமாகொரேகான் மாதிரி. அதன் நோக்கம் அடக்குமுறையே. “பாகிஸ்தான் அருகிலுள்ள மாநிலம்”, “காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நிறைந்த மாநிலம்” என பிரச்சாரம் செய்வது, பஞ்சாபின் மீது தான் கட்டவிழ்த்துவிடத் துடிக்கும் அடக்குமுறைக்கு மக்களிடையே நியாயவாதம் தேடும் முயற்சிதான்.
தற்போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் “சதி நாடகம்” முற்போக்கு – ஜனநாயக சக்திகளால் மக்களிடையே புஸ்பானமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், இப்பிரச்சாரம் அடக்குமுறைக்கான சாதனம் என்ற வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை. இவ்வாறு புரிந்துகொள்ளப்படுவது அவசியம். ஏனெனில் பஞ்சாப் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. நகர்த்தும் காய்கள் அடுத்தடுத்து இதை நோக்கித்தான் செல்லும்.
செவ்வந்தி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க