ஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற மோடியின் வாகனம் பாலத்தின் மீது 20 நிமிடம் நிற்கும் சூழல் ஏற்பட்ட விவகாரத்தில், பிரதமரின் ‘பாதுகாப்பு’ குளறுபடியை விசாரிக்க உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கமிட்டியை அமைத்துள்ளது.
பஞ்சாப்பில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்திற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியிருக்கின்றன. வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியதன் காரணமாக பஞ்சாப்பில் டெபாசிட் கூட கிடைக்காது என்ற நிலையில் தான் பாஜக தேர்தல் களம் காண இருக்கிறது.
இந்நிலையில் பஞ்சாபிலும் ’ஒத்த ஓட்டு’ இழிவைப் பெற்றுவிடாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது பாஜக. சுமார் 70,000 இருக்கைகள் ஏற்பாடு செய்து போடப்பட்ட கூட்டத்தில் 700 பேர் கூட கலந்து கொள்ளாத நிலையில், வெறும் இருக்கையை பார்த்துப் பேசும் அவமானத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் ’56 இஞ்ச்’ மோடிக்கு ஏற்பட்டது.
படிக்க :
மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்
மோடி செல்லும் வழித்தடத்தில் இருந்த மேம்பாலத்திற்கு கீழே பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் கைகளில் கொடியுடன் வரவேற்கக் காத்திருந்ததாகவும், அதேபோல விவசாயிகளும் கண்டன முழக்கம் செய்ய காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அச்செய்தியை அறிந்த மோடிக்கு, 700 பேர் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தை தவிர்ப்பதற்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. அதனை ஒட்டி, மேம்பாலத்திலேயே வண்டியை நிறுத்தி 20 நிமிடம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, மீண்டும் விமான நிலையத்திற்கு ஓடிவிட்டார் மோடி.
பஞ்சாபில் இருந்து கிளம்பும்போது, என்னை உயிரோடு திருப்பியனுப்பியதற்கு பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவிக்குமாறு அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதனையே மோடி உயிருக்கு ஆபத்து என்று சங்கப் பரிவாரக் கும்பலும் அதன் ஊடக வாய்களும் ஓலமிடத் துவங்கின. மறுநாள் மோடி போய் குடியரசுத் தலைவரை சந்தித்தார்.
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரான அமரிந்தர் சிங் முதல், ஆட்டுக்குட்டி அண்ணாமலை வரை அனைவரும் ஒரே குரலில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது என ஒப்பாரி வைக்கத் துவங்கினர்.
இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இது குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைப்பதாக தெரிவித்தது.
“சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது” எனக் கூறிய முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான இந்தக் கமிட்டியில், மோடி – அமித்ஷாவின் நேரடியான அடியாள் படையான என்.ஐ.ஏ.-வின் ஐ.ஜி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஏ.டி.ஜி.பி., பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் மற்றும் பஞ்சாப் கூடுதல் டி.ஜி.பி ஆகியோரைக் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது, உச்சநீதிமன்றம்.
இப்படி ஒரு கமிட்டியை அமைத்துவிட்டு, “இதுபோன்ற விவகாரங்களில் ஒருதலைப்பட்ச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது, நீதிமன்றத்துக்கு முறையாக இவ்விவகாரத்தை எடுத்துரைக்கவல்ல நீதித்துறை சார்ந்து பழக்கப்படுத்தப்பட்டுள்ள நபர்களைக் கொண்டுதான் விசாரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
பஞ்சாப்பில் காலி நாற்காலிகளைக் கண்டு அஞ்சி புறமுதுகிட்டு ஓடிய மோடியின் உயிருக்கு ஆபத்து என ஊடகங்களும் சங்க பரிவாரக் கும்பலும் பரப்பிய பொய்யை மையமாக வைத்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அதற்காக கமிட்டியை அக்கறையாக உருவாக்கியிருக்கும் நீதிமன்றம், நாட்டையே மதக்கலவர பூமியாக மாற்ற வேண்டும் எனக் கொக்கரித்த சாமியார் கிரிமினல்களுக்கு எதிராகவோ, அவ்விவகாரத்தை விசாரிக்கவோ ஒரு கமிட்டியோ – அவ்வளவு ஏன் – ஒரு வார்த்தையோ கூட உதிர்க்கவில்லை.
இத்தனைக்கும் பல்வேறு வழக்கறிஞர்களும், செயற்பாட்டாளர்களும் இந்து அகாராக்களின் கூட்டத்தில் முசுலீம் மக்களின் மீதான இன அழிப்புக்கான அறைகூவலை விடுத்த கிரிமினல் சாமியார்கள் மீது தானாக முன்வந்து வழக்கு தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் செவிமடுக்கவில்லை.
படிக்க :
‘தேர்தல் சட்டங்கள் திருத்தம்’ 2021 : இந்துராஷ்டிரத்தின் சட்டப்பூர்வ கண்காணிப்பில் மக்கள்
கங்கை நதியின் படித்துறைகளில் மதவெறி சுவரொட்டிகளை ஒட்டிய சங்க பரிவாரக் கும்பல்
சுல்லி டீல்ஸ், புல்லி பாய், டெக் ஃபோக் போன்ற பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் செயலிகள் மூலம், முசுலீம் வெறுப்பையும், செயற்பாட்டாளர்களை மிரட்டுவதையும் சமூகவலைத்தளங்களில் செய்த கும்பலைப் பற்றி அம்பலமான பின்னும் கூட வாய் திறக்கவில்லை.
இவ்வாறு இந்திய அரசியல் சாசனச் சட்டம் கூறும் கருத்துரிமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றம் அந்த வேலைகளைப் புறந்தள்ளிவிட்டு, மோடியின் பாதுகாப்புக் குளறுபடி குறித்து போலீசுத் துறையோ, மையப் புலனாய்வுத் துறையோ செய்ய வேண்டிய வேலையைதான் முன்னெடுத்துச் செய்கிறது.
இந்திய ஜனநாயகம் பாசிசத்தால் விழுங்கப்படுவதை பகிரங்கமாக விழுங்கப்படுவது சமீப காலங்களில் துலக்கமாக அம்பலப்பட்டு வருகிறது. அதற்கு இச்சம்பவம் ஒரு சான்று.

கர்ணன்
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க