மேகாலயாவின் ஆளுநர் சத்யபால் மாலிக் , சில நாட்களுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் பேசிய போது நடந்த வாக்குவாதம் குறித்து பொதுவெளியில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அரியானா மாநிலம் தாத்ரியில் கடந்த ஜனவரி 2-ம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், தாம் பிரதமர் மோடியிடம் வேளாண் சட்டங்கள் குறித்துப் பேசியபோது அவர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
தனது உரையில், “500-க்கும் மேற்பட்ட நமது விவசாயிகள் (விவசாயிகள் போராட்டத்தில்) இறந்துள்ளனர். ஒரு நாய் இறப்பதற்கெல்லாம் இரங்கல் கடிதம் எழுதுகிறீர்கள்.” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர்கள் எனக்காக செத்தார்களா” என்று கேட்டார். நான் “ஆம், நீங்கள் தான் மன்னனாக இருக்கிறீர்கள்” என்று கூறினேன். அது பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது. என்னை அமித்ஷாவை சந்திக்கும் படி மோடி கூறினார். நானும் அவரை சந்தித்தேன்”
அமித்ஷா-வைச் சந்தித்த போது, பிரதமர் தவறான நபர்களால் வழிகாட்டப்படுகிறார் என்று அமித்ஷா சொன்னதாகவும் தெரிவித்துள்ளார் சத்யபால் மாலிக்
படிக்க :
இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்
இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, பகிரப்பட்டாலும், ‘பொது’ ஊடகங்களில் இது குறித்து மவுனம் சாதிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் கடந்த நவம்பர் மாதத்தில் புதியதாக கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கண்டித்துப் பேசினார் சத்ய பால் மாலிக். நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பதிலாக உலகத் தரம் வாய்ந்த கல்லூரியைக் கட்டலாம் என்று கருத்துத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜ்னவரி 2-ம் தேதி தாம் தெரிவித்த கருத்து குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் இரண்டு நாள் கழித்து பேசிய மாலிக், தாம் அமித்ஷாவிடம் பேசியதாக கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டன என்று தெரிவித்துள்ளார். இரண்டே நாளில் திடீர் பல்டி அடித்துள்ளார் மாலிக்.
பிரதமர் மோடி குறித்து அமித்ஷா எதுவும் சொல்லவில்லை என்றும், மக்களைச் சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறு கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் “ஏன் எப்போது பார்த்தாலும் அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்றுதான் அமித்ஷா கேட்டார். ” என்று கூறினார். விவசாயிகளை நாம் இறக்கவிடக் கூடாது என்று தான் கூறியதை அமித்ஷா புரிந்து கொண்டார். அவருக்கு நல்ல புரிதல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மோடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதை தாம் வரவேற்றதையும் சுட்டிக்காட்டிய மாலிக். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, அவர் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையாதாரத்தை அதிகரிக்க முயற்சி எடுத்தார். தற்போதும் அவர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் விரும்பவில்லை எனத் தெரிந்ததும் அதற்காக மன்னிப்பு கேட்டு திரும்பப் பெற்றுக் கொண்டார். அவர் தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார், என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், சத்யபால் மாலிக்கின் மோடி எதிர்ப்புக் கருத்துக்கள், தேர்தலில் குறிப்பிடத்தகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த பாஜக உடனடியாக சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளில் ஏதோ ஒன்றைப் பயன்படுத்தி சத்யபால் மாலிக்கை வழிக்குக் கொண்டுவந்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள ஜாட் சாதியைச் சேர்ந்த சத்யபால் மாலிக், உத்தரப் பிரதேச பாஜக கட்சிக்குள் பொறுப்பு ஏதும் வழங்கப்படாமல், பல ஆண்டுகளாக தாம் ஆளுநராக மாநிலம் மாநிலமாக தூக்கியடிக்கப்படுவதை அடிப்படையாக வைத்து பாஜக-வை மோடி – அமித்ஷா – யோகி கும்பலை அவ்வபோது சாடி வந்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் பிரிவு 370 ரத்து செய்த சமயத்தில் அதற்குகந்த வகையில் அங்கு பாஜகவின் அனைத்து சட்டவிரோத அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருந்த திருட்டுப் பூனை தான் இந்த சத்யபால் மாலிக். உட்கட்சி விவகாரத்தில் இருக்கும் எதிர்ப்புணர்வை, மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் யோக்கியன் போல பேசி வந்த மாலிக்கிற்கு, மோடி – அமித்ஷா கும்பல் தங்களது பாணியில் ‘பாடம்’ புகட்டியிருக்கலாம். சத்யபால் மாலிக்கின் தற்போதைய சரணாகதிக்குக் காரணம் அதுவாகவும் இருக்கலாம் !
கர்ணன்
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க