ணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் ஆகியவற்றால் புவியின் மிக நீளமான மூன்றில் இரண்டு பங்கு ஆறுகள் சீரழிந்து போயுள்ளன. புவியின் மிக இன்றியமையாத பகுதிகளின் சுற்றுச் சூழலையும் இவை கடுமையாக சேதப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் கிடைத்த செயற்கைக்கோள் தகவல்கள் மற்றும் கணினி – மாதிரியாக்கல் மென்பொருளைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் உள்ள 1.2 கோடி கிலோமீட்டர் நீளமுடைய ஆறுகள் இணைப்பை சர்வதேசக் குழு ஒன்று கவனித்து வந்தது. இதனடிப்படையில் பூகோளத்தின் நீர்நிலைகளுக்கு மனிதர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முதல் உலகலாவிய ஆய்வறிக்கையை அக்குழு வெளியிடுள்ளது.

1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட 91 ஆறுகளில் வெறும் 21 ஆறுகள் மட்டுமே உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடல் வரை இடையூறு ஏதுமில்லாமல் பயணிக்கின்றன. அது போல மிகப்பெரிய 242 ஆறுகளில் (37 விழுக்காடு) மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தங்களது வழித்தடத்தை தக்க வைத்துள்ளன. இது புவிப்பந்தின் பல்லுயிர் சூழலில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

“நிலம், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டலத்துடன் இன்றியமையா இணைப்புகள் கொண்ட ஒரு சிக்கலான வலையமைப்பை ஆறுகள் உருவாக்குகின்றன” என்கிறார் மெக்-கில் பல்கலைக்கழகத்தின் (McGill University) புவியியல் துறையின் முன்னணி எழுத்தாளர் குந்தர் கிரில்.

“தடைகளற்று ஓடும் ஆறுகள் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இன்றியமையாதவை. ஆனால், உலகெங்கிலும் [முதலாளித்துவ] பொருளாதார வளர்ச்சி அதற்கான வாய்ப்பை அரிதாக்கி வருகிறது” என்று மேலும் கூறினார்.

மீதமுள்ள தடைகளற்ற ஆறுகள் தொலைதூர ஆர்க்டிக் பனிப்பகுதி, அமேசான் மற்றும் காங்கோ ஆற்று வடிநிலங்களில் எஞ்சியுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இயற்கையின் நிலை:

இயற்கையின் தன்நிலைக்கு ஏற்பட்டுள்ள பேரழிவு பற்றிய மதிப்பீட்டின் ஒரு சாராம்சத்தை ஐநாவின் பல்லுயிர் சூழலுக்கான குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதன் விரிவான அறிக்கை இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் மனிதர்களின் நடவடிக்கைகள் காரணமாக 50 விழுக்காடு ஆறுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இதன் சிக்கலான சித்திரத்தை புதன்கிழமையன்று நேச்சர் சஞ்சிகையில் வெளியான இந்த அறிக்கை காட்டுகிறது.

உலகம் முழுவதிலும் குறைந்தது 15 மீட்டர் உயரமுள்ள 60,000 அணைக்கட்டுகள் 28 இலட்சம் கிலோமீட்டர் ஆற்றுப்பாதையை மறித்துள்ளதாக அவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு ஆறுகளே தடைகளற்று கடலில் கலக்கும் இன்றைய நிலையில் முகத்துவாரங்களில் மீன் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதும் வண்டல் மண் சேர்வதும் குறைந்து போகிறது. மீன் மூலம் கிடைக்கும் புரதச்சத்தை நம்பி வாழும் 16 கோடி மக்களின் நிலை இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகும் என்று ஆய்வுக்குழு எச்சரிக்கிறது.

விவசாய நடவடிக்கைகளால் அழிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களை பெறுவதை ஆறுகளை மறிக்கும் இந்நடவடிக்கை தடுக்கிறது. மேலும், நீர்வாழ் உயிரினங்கள் தங்களது வாழ்க்கை சுழற்சியை முடிக்க விடாமல் இது தடுக்கிறது.

ஆற்றுப்போக்கு கடற்கரை பகுதிகளில் வண்டல் மண்ணை கொண்டு சேர்ப்பதை இந்நடவடிக்கை தடுக்கிறது. வண்டல் மண் கடல் மட்ட உயர்விலிருந்து பல இலட்சக்கணக்கான மக்களை காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றில் ஒரு பங்கு ஆறுகளே தடைகளற்று கடலில் கலக்கும் இன்றைய நிலையில் முகத்துவாரங்களில் மீன் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதும் வண்டல் மண் சேர்வதும் குறைந்து போகிறது. மீன் மூலம் கிடைக்கும் புரதச்சத்தை நம்பி வாழும் 16 கோடி மக்களின் நிலை இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகும் என்று ஆய்வுக்குழு எச்சரிக்கிறது.

முதுகெலும்புள்ள உயிரினங்களில் நன்னீர் உயிரினங்களே அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் 1970-க்கு பிறகு கிட்டத்தட்ட 83 விழுக்காடு கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிட்டதாகவும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature) கடந்த ஆண்டு தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தது.

ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அல்லது கட்ட திட்டமிடப்பட்டுள்ள கிட்டதட்ட 3,700 புனல் மின் (hydropower) திட்டங்களால் அந்த ஆறுகள் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கப்பெற்று வந்த ஆதாரங்கள் தடுக்கப்படுகின்றன.

தூய்மையான ஆற்றல்:

எண்ணெய், எரிவாயு அல்லது நிலக்கரி போன்ற ஆற்றல் மூலங்களை விட புனல் மின் ஆற்றல் மூலங்கள் பாதுகாப்பானது மற்றும் மாசுபாடு குறைந்தது என்பது பொதுவான உண்மைதான். ஆனால், அணைக்கட்டுக்கள், நீர்த்தேக்கங்கள் மூலம் பெறப்படும் அதன் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று அக்குழு அழுத்தமாக கூறுகிறது.

”புதைப்படிவ எரிபொருள்களை ஒப்பிடும் போது புனல் மின் உற்பத்தி அதிக நன்மைகள் கொண்டது என்று அடிக்கடி கூறப்பட்டாலும் அது சிக்கலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகம் கொண்டிருக்கிறது” என்று மெக்-கில்லின் பேராசிரியரான பெர்ன்ஹார்ட் லெஹ்னர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

”ஆற்றல் பயன்பாட்டில் புனல் மின் பயன்பாடு தவிர்க்கவியலாமல் இருந்தாலும் ஆறுகள், மனித சமூகங்கள், நகரங்கள் மற்றும் பல்லுயிர் சூழலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தா சூரிய ஆற்றல், காற்று மூலம் போன்ற நிலையான ஆற்றல் மூலங்களை பயன்படுத்த உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

படிக்க:
ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !
“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

புவியின் தட்பவெப்ப நிலையில் தீவிர மாற்றம் ஏற்பட்டு வரும் சூழலில் அது ஆற்றின் பாதைகளையும் நீரின் தரத்தையும் பாதிப்பது மட்டுமல்லாமல் சூழலுக்கு பொருத்தமில்லா புதிய உயிரினங்களையும் கொண்டு வருகிறது என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

புவிப்பந்தும் பல்லுயிர் சூழலும் பேண வேண்டுமானால் [நவீன] முதலாளித்துவம் மடிய வேண்டும் என்று 2018-ம் ஆண்டில் அறிவியலாளர்கள் குழு ஐக்கிய நாடுகள் அவைக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அவர்கள் ஒன்றை சொல்ல மறந்து போனார்கள்.

அதாவது நம் முன்னே இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று முதலாளித்துவத்துடன் சேர்ந்து வீழ்ந்து போவது. அல்லது முதலாளித்துவத்தை மட்டும் வீழ்த்தி நாம் வாழ்வது.


தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க