சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 15

சி.என்.அண்ணாதுரை
காட்சி : 22

இடம் : ஆஸ்ரமம்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர்

காகப்பட்டர் : காடு, மேடு என்று பாராமல் களத்திலே நின்று போரிட்டான். ஆனால், நமது காலடியில் வீழ்ந்தால் தான் ராஜ்யம் அவனுக்கு… ரங்கு பட்டர், என்னடா சொல்றே இப்போ?

ரங்கு பட்டர் : சொல்றதா? ஆனந்தத் தாண்டவமாடலாமான்னு – தோன்றது, குருதேவா. நினைக்க நினைக்க நேக்கு ஆச்சர்யமாய் இருக்கு. புனா எங்கே இருக்கு ? காசி எங்கே இருக்கு? மண்டலம் அங்கே இருக்கு. ஆனா அதை …

காகப்பட்டர் : பரிசுத்தமாக்க இங்கே நம்மிடமிருக்கும் கமண்டல தீர்த்தம் தேவைப்படுகிறது.

ரங்கு பட்டர் : ஆச்சர்யமா இருக்கு ஸ்வாமி!

காகப்பட்டர் : ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா அசடே

ரங்கு பட்டர் : ராஜ்யம் சம்பாதிக்க அவன் பட்டபாடு எவ்வளவு? கொட்டிய ரத்தம் எவ்வளவு?

காகப்பட்டர் : மாவீரன்! மராட்டியத்தைப் பிழைக்க வைத்த வீரன் என்று மண்டலமெல்லாம் புகழ்கிறதாம் அவனை . அவன், அசட்டு ரங்கு பட்டர், அந்த வெற்றி வீரன் இந்த வேதிய குலத்தினிடம் தஞ்சம் புகுந்தாக வேண்டி வருகிறது. தெரிந்து கொள்ளடா தெளிவற்றவனே.

ரங்கு பட்டர் : ஆமாம் ஸ்வாமி! அவன் வீராதி வீரனாகத் தான் இருக்கிறான். என்றாலும் அவனை நம்முடைய ஆரிய சோதராள் எதிர்க்கிறாளே, தெரியுமா!

காகப்பட்டர் : ஏண்டா தைரியம் வராது? பைத்தியமே! எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், சிவாஜியாகட்டும், வேறே எந்த ஜீயாகட்டும் மனிதன்தானே? நாம் பூதேவாடா ! பூதேவா! மனிதர்களுக்கு மேம்பட்டா . அதுதானே சாஸ்திரம். அந்த சாஸ்திர பலம் இருக்கும் போது எப்படிப்பட்ட சூராதி சூரனையும் ஏன் நாம் எதிர்க்க முடியாது?

ரங்கு பட்டர் : சூட்சம பலம் இருக்கு ஸ்வாமி நம்மிடம்.

காகப்பட்டர் : சந்தேகமென்ன? நால்வகைச் சேனைகள் உண்டு, அவனிடம், சிவாஜியிடம் ; நம்மிடம் நாலு வேதங்கள். அஸ்திர சாஸ்திரம் அவனிடம் ; ஆகம சாஸ்திரம் நம்மிடம் . வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டூ ! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும். பூகரரிடம் ஒலையனுப்பினேன் முதலில்,
சம்மதம் தர முடியாது பட்டாபிஷேகத்திற்கு என்று.

ரங்கு பட்டர் : ஆமாம் நானும் கூட கொஞ்சம் பயந்துதான் போனேன். உம்முடைய சம்மதம் கிடைக்கப் போனா என் தலையிலே கிரீடம் ஏறாமலா போகும்னு கோபமாகப் பேசிவிட்டு, எங்கே அவர் மகுடாபிஷேகம் செய்துண்டுடறாளோன்னு நினைச்சேன்.

காகப்பட்டர் : முடியுமா? அப்படி அவர் துணிஞ்சி செய்றதுன்னு ஆரம்பிச்சா நம்ம படைகள் சும்மா இருக்குமா? ஏண்டா, பேந்தப் பேந்த விழிக்கிறே? நமக்கு ஏது மராட்டியத்தில் படையின்னு விழிக்கிறியா? படைன்னா நான் நம்ம ஆரியச் சோதராளைச் சொல்றேண்டா. அவா சும்மா விட்டு விடுவாளோ? பாவி நீசன் சண்டாளன் அப்படி இப்படின்னு கூச்சலைக் கிளப்பினான்னா, பரத கண்டமே பயத்தாலே கிடுகிடுண்ணு ஆடும்டா ஆடும் !

ரங்கு பட்டர் : அதனாலேதான் மறுபடியும் தூதுவனை அனுப்பினா உம்மிடம்.

காகப்பட்டர் : நானும் இதற்குள் கொஞ்சம் தீர்க்கமா யோசித்துப் பார்த்தேன். இந்தப் பட்டாபிஷேகத்திற்குச் சம்மதம் தந்து, கூட இருந்து காரியத்தைச் செய்தா விஷேசமான பலன் இருக்கு. பரத கண்டம் முழுவதும் நம்ம கீர்த்தி பரவும். அது சாதாரணம். நம்மவர் எங்கே இருந்தாலும் தலை நிமிர்ந்து நடப்பாளோண்ணோ ? மதிப்பு எவ்வளவு அதிகமாகும். அதைக் கணக்கிட்டுப் பார்த்ததாலே தான் நானும் சரி! பட்டாபிஷேகத்துக்குச் சம்மதிக்கிறேன்னு புதிய தூதுவன் நீலோஜியிடம் சொல்லி அனுப்பினேன். தெரிகிறதா?

ரங்கு பட்டர் : தெரிகிறது ஸ்வாமி தெரிகிறது. ஆனால் திகிலும் பிறக்கிறது.

காகப்பட்டர் : திகிலா? ஏண்டா மண்டு, ஏண்டா திகில் ?

ரங்கு பட்டர் : இந்தச் சூட்சமம் அவாளுக்கும் தெரிந்துவிடுமானால், நம்ம கதி என்னங்கிற திகில்தான்.

காகப்பட்டர் : வீண் பயம்டா உனக்கு நமது புராண, இதிகாசாதிகளை , நீ சாமான்யமானவைன்னு எண்ணிண்டிருக்கே. டே ரங்கு, அவைகளுக்கு ஜீவன் உள்ளமட்டும், நாம் என்ன சொன்னாலும் இவர் கேட்பா என்ன செய்தாலும் தகும். டே, ரங்கு சொன்னா உடனே காதிலே கேட்கப் பிடிக்காத, சகிக்க முடியாத விஷயங்கன்னு சில உண்டோ , இல்லையோ.

ரங்கு பட்டர் : சிலவா? பல உண்டு ஸ்வாமி!

காகப்பட்டர் : உதாரணமாக… பஞ்சமா பாதகம் இருக்கு.

ரங்கு பட்டர் : ஆமாம்! கொலை, களவு, கட்குடி, சூதாட்டம்.

காகப்பட்டர் : ஆமாண்டா என்னடா நேக்குப் பாடம் சொல்ல ஆரம்பிக்கிறே? இவைகளைக் கேட்டாலே பதறுவா. பழிப்பா, இகழுவாளோண்ணோ ?

ரங்கு பட்டர் : ஆமாம் நம்ம சாஸ்திராதிகளும் பஞ்சமா பாதகங்கள் கூடாதுண்ணுதான் சொல்லிண்டு வர்றது.

வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டூ ! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும்.

காகப்பட்டர் : சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. சாமான்யருக்கும் தெரியும். ஆனா டே, ரங்கு பட்டர் குரு பத்தினியைக் கெடுத்த சந்திரன். ரிஷி பத்தினியைக் கெடுத்த இந்திரன், விருந்தையைத் தேடிக் கொடுத்த விஷ்ணு, சப்த ரிஷிகளின் பத்தினிமார் மீது மோகம் கொண்ட அக்கினி, மகளை மனைவியாக்கிக் கொண்ட பிரம்மா, தாரகா வனத்து ரிஷிப் பத்தினிகளைக் கொடுத்த சிவன் – இப்படித் தேவர் மூவரைப் பற்றிக் கூறப்பட்டிருக் கேல்லோ – பஞ்சமா பதாகத்திலே லேசானவைகளா இவை?

ரங்கு பட்டர் : ஆமாம், ஸ்வாமி! சில சமயம் நேக்கு நெசமாகச் சொல்றேன். அதையெல்லாம் நெனைச்சுண்டா, சகிக்க முடியறதில்லே. நாக்கைப் பிடுங்கிண்டு சாகலாமான்னு தோன்றது.

காகப்பட்டர் : உனக்குத் தோன்றதுடா அப்படி. ஆனா மகா ஜனங்க என்ன சொல்றா? ஏதாவது பதைக்கிறாளா? பதற்றாளா? சேச்சோ இப்படிப்பட்ட பஞ்சமா பாதகம் செய்ததாகவா பகவானைப் பத்தின சேதிகள் இருப்பதுண்ணு கேக்கறாளா? கொஞ்சமாவது கூசறாளா?

ரங்கு பட்டர் : இல்லையே ஸ்வாமி அதுதானே ஆச்சர்யமா இருக்கு.

காகப்பட்டர் : எப்படிடா அவா பதற முடியும்? பகவானுடைய லீலா விநோதங்கள்ணு இவைகளைப் பத்தி புராணம் சொல்றது . புராணங்களை சிரவணம் செய்தாலே போற கதிக்கு நல்லதுண்ணா சாஸ்திரம் சொல்றது. அப்படி இருக்கும் போது எப்படிடா மகாஜனங்க இவைகளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பா? பார்த்தாயோ நமது புராணாதிகளுக்கு உள்ள சக்தியை. பஞ்சமா பாதகம் ததும்பும்டா கதைகளிலே ஆனா அவைகளைப் பஞ்சாமிர்தமா எண்ணிப் பருகுறாளோண்ணோ மகாஜனங்க? பார்க்கிறாயோண்ணோ !

ரங்கு பட்டர் : ஆமாம் ஸ்வாமி!

காகப்பட்டர் : அப்படி இருக்க, நம்ம புராணம், இதிகாச சாஸ்திரம் இவைகளெல்லாம் இப்படி இருக்கும் போது மராட்டிய மண்டலத்துக்கு மகாராஜனாக சிவாஜி நம்முடைய சம்மதம் கேட்காமல் இருப்பானோ? ஒவ்வொரு கோட்டையைப் பிடிக்கிற போதும் கொக்கரிச்சிருப்பா ஜெயவிஜீ பவ என்று. ஊர்களைப் பிடிக்கும் போது உற்சவம் நடத்தி இருப்பா. அந்தக் களிப்பினிலே களத்திலே பிணமான மகனைக் கூட தந்தை மறந்திருப்பான். ரத்தத்தை ஆறுபோல் ஓடவிட்டு, பிணங்களை மலை மலையாகப் போட்டு வெற்றி முரசு கொட்டியிருப்பார்; சங்கம் ஊதியிருப்பா, ஜெயம் ஜெயம்ணு. அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை ரங்கு பட்டர், உன் குரு, படை எடுக்காமலே, இருந்த இடத்திலிருந்தே ஜெயித்து விடுகிறதைப் பாருடா. இது தானடா மண்டு ஆரிய யோகம்.

ரங்கு பட்டர் : இந்த அண்ட சராசரங்களிலே இதற்கு ஈடு கிடையாது குருதேவா.

காகப்பட்டர் : ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதியை நான் விரும்பினால் பூபதியாக்க முடியும். எனக்கு இஷ்டமில்லேன்னா அவனையே பாபியாக்க முடியும். நீ இந்த ஆரிய வாழ்வை அற்பமென்று கருதி ராஜயோகம் கேட்டாயோடா ராஜயோகம்! எத்தனை ராஜாக்கள் வேண்டுமடா, உனக்குப் பணிவிடை செய்ய? புறப்படு ரங்கு, மராட்டியத்தின் மீது படையெடுப்போம். கட்டு மூட்டையை ! கொட்டு முரசை ; ஒஹோ இங்கே இல்லையா? அது சரி வா அங்கே போய் அவன் அரண்மனையிலேயே உள்ள முரசையே கொட்டுவோம். நம்ம ஜெயத்தைத் தெரிவிக்க நாம் சிரமப்பட்டுக் கொட்டுவானேன். அவர்களையே விட்டுக் கொட்டச் செய்வோம் புறப்படு.

♦ ♦ ♦

காட்சி : 23
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சிட்னீஸ், வீரர்கள்

சிட்னீஸ் : வீரர்களே! காசிவாசி காகப்பட்டருக்கு அமோகமான வரவேற்பு நடத்த வேண்டும், திருவிழா போல் இருக்க வேண்டும்; எங்கு பார்த்தாலும் மகர தோரணங்கள். கொடிகள் அசைந்தாடியபடி இருக்க வேண்டும் அவரை வரவேற்பு செய்வதைப் போல ஆலயங்களில் எல்லாம் பூசை! சத்திரம், சாவடிகளிலெல்லாம் சமாராதனை நடத்த வேண்டும்.

வீரன் – 1 : தேவேந்திர பட்டணம் போல சிங்காரித்து வைத்திருக்கிறோம் நகரத்தை .

சிட்னீஸ் : காகப்பட்டர்பட்டரின் வரவேற்பு வைபவத்திலே சங்கீத வித்வான்கள் இருக்க வேண்டும். கவிவாணர்கள் – இயற்றும் புதிய கவிதைகளை அவர்கள் இனிய இசையுடன் சேர்த்துப் பாட வேண்டும்.

வீரன் – 2 : குறைவில்லாதபடி ஏற்பாடு செய்துவிடுகிறோம்.

சிட்னீஸ் : முக்கியமான விஷயம். பிராமணர்களிடம் மிகவும் பயபக்தி விசுவாசத்துடன் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மனம் கோணும்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது. வருகிறவன் காகப்பட்டர். ஆரியகுலத் தலைவர். ஆகவே ஆரியர்களிடம் தனியான அக்கறை அவருக்கு இருக்கும். அதை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்

வீரன் – 1 : ஆகட்டும் எங்களால் ஒரு தகராறும் வராது.

சிட்னீஸ் : காகபட்டரின் மனம் மகிழ வேண்டும். மகுடாபிஷேகம் நடைபெற்று மாவீரன் சிவாஜி மகாராஜனானால்தான் மராட்டியமும் மகிழும்; பரதகண்டமும் பூரிப்படையும். ஆகவே, இந்த வரவேற்றைப் பொருத்திருக்கிறது. மராட்டியத்தின் எதிர்கால வாழ்வு. இதையறிந்து காரியங்களைக் கவனியுங்கள். போய்வாருங்கள்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

1 மறுமொழி

  1. இந்த நாடகத்தை ஒலிச்சித்திரமாக தயாரித்து வழங்கினால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.செய்வீர்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க