அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 18

அரசியல் கணிதம்
அ.அனிக்கின்

ங்கிலாந்தின் அரசரான இரண்டாம் சார்ல்ஸ் தனது மேதகு உறவினரான பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லுயீயைக் காட்டிலும் ஏதாவதொரு வகையில் சிறந்து விளங்க விரும்பினார். இது அவருடைய வாழ்க்கையின் மாபெரும் ஆசையாகும். அவர் வெர்ஸேய் அரண்மனைக்குப் போட்டியாகக் கேளிக்கை நடனங்களையும் வான வேடிக்கைகளையும் நடத்தினார்.

ஆனால் பிரெஞ்சு மன்னரைக் காட்டிலும் அவரிடம் பணம் குறைவாகவே இருந்தது. அவர் தனக்கு முறைகேடாகப் பிறந்த ஆண் மக்களில் சிலருக்குக் கோமகன் பட்டம் கொடுத்திருந்தார். ஆனால் லுயீ தனது சோரப் பிள்ளைகளைப் பிரான்சின் மார்ஷல்களாக நியமித்திருந்தார். ஸ்டுவர்ட் மரபினரான இரண்டாம் சார்ல்ஸால் அந்த அளவுக்குப் போக முடியவில்லை. அவருடைய முடியாட்சி லுயீயின் முடியாட்சியைப் போல சர்வாதிகாரம் அல்ல.

அவருக்கு விஞ்ஞானம் மட்டுமே மிஞ்சியது. மறுவருகைக்குப் பிறகு அவருடைய தூண்டுதலினாலும் மொத்த அரச குடும்பத்தினரின் ஆதரவோடும் இராயல் சொஸைட்டி நிறுவப்பட்டது. அதைப் பற்றி சார்ல்ஸ் நியாயமாகப் பெருமைப்பட முடியும். ஏனென்றால் லுயீ அப்படி ஒன்றை ஏற்படுத்தவில்லை. அரசரே இரசாயனப் பரிசோதனைகள் செய்தார். கடற்பயணத்தைப் பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது அந்தக் காலத்தின் உணர்ச்சிக்கு ஏற்றதாக இருந்தது. “மகிழ்ச்சியில் திளைத்த மன்னருக்கு” அது ஒரு பொழுதுபோக்கு; இராயல் சொஸைட்டியும் அப்படிப்பட்டதே.

இரண்டாம் சார்ல்ஸ்

இராயல் சொஸைட்டியின் அதிக சுவாரசியமும் நகைச்சுவை உணர்ச்சியும் நிறைந்த உறுப்பினர் சர் வில்லியம் பெட்டி. அரசரும், உயர்ந்த அந்தஸ்துடைய மேன்மக்களும் நண்பர்கள் தங்களோடிருக்கும் நேரங்களில் சுதந்திரமான சிந்தனையாளர்களாக நடந்து கொண்டார்கள்; சமய விதிகளை உறுதியாகப் பின்பற்றிய பலவிதமான மதப் பிரிவுகளையும் வேடிக்கையாகக் கேலி செய்து பேச பெட்டியைப் போல வேறு யாராலும் முடியாது.

ஒரு நாள் அயர்லாந்தின் ஆளுநரான ஓர் மான்ட் கோமகன் – நண்பர்களோடிருந்த பொழுது அவர்கள் எல்லோருமே அதிகமாகக் குடித்திருந்தபடியால் அதிகமான மகிழ்ச்சியோடிருந்தனர் -சர் வில்லியம் பெட்டியிடம் தம்முடைய திறமையைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். பெட்டி அங்கே போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றின் மீது ஏறி நின்று பல மதப்பிரிவுகளையும் சேர்ந்த மதகுருக்களைப் போல வேடிக்கையாகப் பேசினார். அங்கே இருந்தவர்கள் இதை மிகவும் ரசித்துச் சிரித்தார்கள். இதனால் அதிக உற்சாகமடைந்த பெட்டி, ஒரு மத குரு “இளவரசர்களையும் ஆளுநர்களையும்” அவர்களுடைய மோசமான ஆட்சிக்காக, பாரபட்சம் காட்டுவதற்காக, பேராசைக்காகக் கண்டிப்பது, போன்று பேச ஆரம்பித்தார். உடனே சிரிப்பு நின்று விட்டது என்று இதைப் பார்த்த ஒருவர் எழுதியிருக்கிறார். பெட்டியை நிறுத்துமாறு செய்வது கோமகனுக்குப் பெரும்பாடாகிவிட்டது.

படிக்க:
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

அரசரும் அயர்லாந்தின் ஆளுநரும் பெட்டி அரசியலையும் வர்த்தகத்தையும் பற்றிப் பேச ஆரம்பிக்கும் வரையிலும் அவருடைய பல குரல் திறமையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரால் அந்த விஷயங்களைப் பற்றிப் பேசாமலிருக்க முடியாதே! அவருக்கு எல்லா உரையாடலுமே தன்னுடைய புதுப் பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி விளக்குவதற்கு ஒரு சாக்காக மட்டுமே இருந்தது. ஒவ்வொரு திட்டமும் அதற்கு முந்திய திட்டத்தைக் காட்டிலும் அதிகத் துணிச்சலாகவும் தீவிரமானதாகவும் இருந்தது. இது ஆபத்தானது; சலிப்பூட்டுவது; அவசியமில்லாதது.

அயர்லாந்தின் மற்றொரு ஆளுநரான எஸ்ஸெக்ஸ் பிரபு ”மூன்று இராஜ்யங்களிலுமே” (அதாவது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை) “சர் வில்லியம் பெட்டிதான் அதிகக் கோபமூட்டுகிற நபர்” என்றார். “சிலர் உங்களை மாயவித்தைக்காரர் என்றும், மற்றவர்கள் உங்களைப் பைத்தியம் என்று சொல்லக் கூடிய அளவுக்குக் கற்பனை ஈடுபாடுடையவர், வெறியர் என்றும் சொல்கிறார்கள்” என்று ஓர் மான்ட் பிரபு பெட்டியிடம் வெளிப்படையாகவே சொன்னார்.

அவருடைய வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. அவர் எதிர்காலத்தின் மீது இயல்பான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் சில சமயங்களில் அவர் வெடுவெடுப்பும் கவலையும் கொண்டவராக அல்லது ஒரு பயனுமில்லாமல் ஆத்திரப்படுபவராகத் தோன்றினார்.

இராயல் சொஸைட்டியின் முத்திரை

பெட்டியின் திட்டங்களில் அநேகமாக ஒன்றைக் கூட அரசவை விரும்பாதது ஏன்? அவருடைய ஆலோசனைகளில் சில- துணிச்சலும் மேதாவிலாசமும் கொண்டவையாக இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதத் திட்டங்களே. ஆனால் பல திட்டங்கள் அந்தக் காலத்துக்கு முற்றிலும் அறிவு மிகுந்தவையாகும். அவை துணிச்சலாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை வளர்ப்பதை, நிலப்பிரபுத்துவ உறவுகளோடு அதிகத் தீர்மானமாக முறித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்பதே முக்கியமாகும்.

ஆனால் இரண்டாம் சார்ல்ஸ், அவருடைய தம்பி இரண்டாம் ஜேம்ஸின் முடியாட்சி இந்த மரபெச்சங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அல்லது, முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்ப்பந்தத்தினால் அதிகபட்சமாக சமரச நடவடிக்கைகளை எடுத்தது. அதனால்தான் அது (பெட்டியின் மரணத்துக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு) வீழ்ச்சியடைந்தது – பெட்டி இங்கிலாந்தின் செல்வத்தையும் வளத்தையும் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹாலந்து நாடு அவருக்கு ஒருவகையான அளவுகோலாக இருந்தது; அதன் வெற்றிகரமான வளர்ச்சிக்குக் காரணம் என்ன என்ற சிக்கலான கேள்வியை அவர் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்கள் கழிந்த பிறகு, இங்கிலாந்துக்கு நேரடியான ஆபத்து ஹாலந்தின் மூலம் ஏற்படாது, ஆனால் அதைக் காட்டிலும் பெரிய, சுறுசுறுப்பான நாட்டிலிருந்துதான் வரும், பிரான்சிலிருந்துதான் ஏற்படும் என்று மென்மேலும் அதிகமாக நம்பினார். அவருடைய பொருளாதாரக் கருத்துக்கள் பிரெஞ்சு எதிர்ப்பு அரசியல் தன்மையை மென்மேலும் அதிகமாகப் பெற்றன.

1676-ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை. பிரான்சோடு கூட்டணியில் சேர்வது , இரண்டாம் சார்ல்சின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையாகும். மேலும் இங்கிலாந்தின் அரசர் பிரெஞ்சு மன்னரிடமிருந்து இரகசியமாகப் பண உதவி பெற்றுக் கொண்டிருந்தார். இங்கிலாந்தில் வரிகள் அரசருக்கு வந்து சேருவதில்லை; நாடாளுமன்றம் பணத்தை இறுக்கி வைத்துக் கொண்டிருந்தது. எனவே அரசர் தன்னுடைய செலவுகளைச் சமாளிப்பதற்காக வேறு வழியைக் கண்டுபிடித்திருந்தார். சர் வில்லியம் பெட்டி கோழையல்ல; எனினும் அரசவையின் அதிருப்திக்கு ஆளாக அவர் விரும்பவில்லை .

அரசியல் கணிதம் கையெழுத்துப் பிரதியாகவே சுற்றி வந்தது. 1683 -ம் வருடத்தில் பெட்டிக்குத் தெரியாமல், ஆசிரியருடைய பெயர் இல்லாமல், வேறு தலைப்போடு அது வெளியிடப்பட்டது. 1688 – 89-ம் வருடங்களில் ‘மகத்தான புரட்சி’ நடைபெற்று அதனையொட்டி இங்கிலாந்தின் கொள்கையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு தான் பெட்டியின் மகன் (ஷெல்பர்ன் பிரபு) அந்தப் புத்தகத்தை முழுமையாகவும் தன் தகப்பனார் பெயரிலும் வெளியிட்டார். ”இந்தப் புத்தகத்திலுள்ள கருத்துக்கள் பிரான்சுக்கு விரோதமாக இருந்ததனால் ” காலஞ்சென்ற தன் தகப்பனார் எழுதிய புத்தகத்தை முன்பு வெளியிடுவதற்கு இயலவில்லை என்று அவர் தமது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பெட்டியின் பிரெஞ்சு எதிர்ப்புக் கருத்துக்கள் ஆங்கில முதலாளி வர்க்கத்தின் நலன்களினால் உந்தப்பட்டவையாகும். அடுத்த நூற்றாண்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை-இங்கிலாந்து பிரான்சை எதிர்த்துத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தது; கடைசியில் உலகத்திலுள்ள தொழில்துறை வல்லரசுகளுக்கிடையே தனக்கு முதல் நிலையை உறுதிப்படுத்தியது. அரசியல் கணிதத்தில் தன்னுடைய வாதங்களை நிரூபிப்பதற்குப் பெட்டி பின்பற்றிய முறைகள் மிக முக்கியமானவையாகும். சமூக விஞ்ஞானங்களின் வரலாற்றில் பொருளாதாரப் புள்ளியியல் முறையை ஆதாரமாகக் கொண்ட முதல் புத்தகம் இதுவே.

இன்று புள்ளிவிவரம் இல்லாத நவீன அரசை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. புள்ளியியல் இல்லாத நவீன பொருளாதார ஆராய்ச்சியை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா? கற்பனை செய்யலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. ஒரு ஆராய்ச்சியாளர் “கலப்பற்ற தத்துவத்தை” இலக்கிய அல்லது கணித வடிவத்தில் உபயோகித்து எவ்விதமான புள்ளி விவரங்களையும் பயன்படுத்தாவிட்டாலும், அவை கோட்பாட்டளவில் இருப்பதாகவும், வாசகர் அதைத் தெரிந்திருப்பதாகவும் அவர் ஒரே மாதிரியாக அனுமானித்துக் கொள்கிறார்.

இன்று புள்ளிவிவரம் இல்லாத நவீன அரசை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா?

17 -ம் நூற்றாண்டில் இந்த நிலை கிடையாது. புள்ளியியல் என்பதே அந்தக் காலத்தில் இல்லை (அந்த வார்த்தையும் 18-ம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஏற்படவில்லை). நாட்டிலுள்ள மக்கள் தொகையின் அளவு, வகை, வயது , தொழில்கள் ஆகியவற்றைப் பற்றி அன்று எந்த விவரமும் தெரியாதிருந்தனர். மேலும், அடிப்படையான பண்டங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு, வருமானங்கள், செல்வம் வகைப்படுத்தப்பட்டிருக்கும் முறை ஆகிய ஆதாரமான பொருளாதார விவரங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது. வரி விதிப்பு, வெளி நாட்டு வர்த்தகம் ஆகியவற்றைப் பற்றிய சில புள்ளிவிவரங்களும் தகவல்களும் இருந்தன.

அரசாங்கத்தில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதற்கென்று தனியாக ஒரு துறை இருக்க வேண்டும் என்று பெட்டி முதன்முதலாகக் கூறினார்; தகவல்களைச் சேகரிப்பதற்குரிய முக்கியமான வழிகளையும் அவர் விளக்கினார். அவர் செய்த மாபெரும் சேவை என்று இதைக் கூற வேண்டும். புள்ளியியல் துறையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர் அடிக்கடி எழுதினார், சிறிதும் மாறாமல் எழுதிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த அரசாங்கத்துறையின் தலைவராகவும் தம்மைக் கற்பனை செய்து கொண்டார். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பதவிக்கு அவர் அவ்வப்போது தம்முடைய உற்சாகத்துக்குத் தகுந்தவாறும், அந்தப் பதவி தமக்குத் தரப்படுமா என்ற சந்தேகங்களுக்குத் தகுந்தவாறும் பல பெயர்களைக் கொடுத்தார்; இவை அநேகமாக ஆடம்பரமான பெயர்களாகவே இருந்தன. மேலும் அவர் கணக்குப் போடுவது மட்டுமல்லாமல், ஓரளவுக்குத் திட்டம் தயாரிக்கவும் விரும்பினார்.

உதாரணமாக, அவர் ”உழைப்பு அணியின் சம நிலையைப் பற்றி” சில மதிப்பீடுகளைத் தொகுத்தது அன்றைய சூழ்நிலையில் குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக்குத் தேவைப்படுகின்ற மருத்துவர்கள், வழக்குரைஞர்களின் (17 -ம் நூற்றாண்டில் உயர்கல்வி பெற்ற தொழில் நிபுணர்கள் வேறு யாரும் இல்லை) எண்ணிக்கையைக் கணக்கிட்டார்; அதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வருடந்தோறும் எவ்வளவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

படிக்க:
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !
♦ ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

அவர் புள்ளியியலின் அவசியத்தைப் பற்றி ஓய்வில்லாது பிரச்சாரம் செய்தார். மேலும் அன்றைக்குக் கிடைத்த குறைவான, அதிகம் நம்ப முடியாத விவரங்களைத் தமது பொருளாதார வாதங்களுக்கு மிகவும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். பிரான்சைக் காட்டிலும் இங்கிலாந்து ஏழை நாடு அல்ல, பலவீனமான நாடுமல்ல என்பதைப் புள்ளிவிவரங்களின் மூலம் நிரூபிப்பதை அவர் தம்முடைய முக்கியமான கடமையாகக் கருதினார். இது இன்னும் விரிவான ஒரு கடமையை மேற்கொள்வதற்கு வழிவகுத்தது. அவர் காலத்தில் இங்கிலாந்தின் பொருளாதார நிலைமையைப் பற்றி அளவு ரீதியான மதிப்பீட்டைச் செய்வதே அது..

அவர் தம்முடைய புத்தகத்தின் முன்னுரையில் அரசியல் கணிதத்தின் முறையைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: “இதற்கு நான் பின்பற்றியிருக்கும் முறை இன்னும் வழக்கத்துக்கு வரவில்லை. ஒப்புமை செய்கிற வார்த்தைகளையும் அறிவுப் பூர்வமான வாதங்களையும் உபயோகிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இந்த முறையில் (நான் நெடுங்காலமாகப் பாடுபட்டிருக்கும் அரசியல் கணிதத்துக்கு ஒரு மாதிரி என்ற வகையில்) எண்கள், எடைகள், அளவுகள் மூலமாக என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறேன்; கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் இயற்கையில் அடிப்படைகளைக் கொண்டவற்றையே ஆராய்ந்திருக்கிறேன்; குறிப்பிட்ட மனிதர்களுடைய மாறக் கூடிய அறிவு, கருத் துக்கள், பசிகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைச் சார்ந்திருப்பனவற்றை மற்றவர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்.” (1)

பெட்டியைப் பின்பற்றியவர்களில் புகழ் மிக்கவரான சார்ல்ஸ் டாவெனான்ட் பின்வரும் எளிமையான வரையறையைக் கூறியிருக்கிறார்; ”அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எண்களை ஆதாரமாகக் கொண்டு வாதிடும் கலையை அரசியல் கணிதம் என்று கூறுகிறோம்…” இந்தக் கலை மிகவும் பழமையானது என்பதில் சந்தேகமில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் பெட்டி ”அதற்குப் பெயரைக் கொடுத்தார்; விதிகளையும் முறைகளையும் வகுத்துக் கொடுத்தார்”.

சர் வில்லியம் பெட்டி

பெட்டியின் அரசியல் கணிதம் புள்ளியியலுக்கு முன் மாதிரியாக இருந்தது. அவர் தன்னுடைய முறையில் பொருளாதார விஞ்ஞானத்தின் முக்கியமான போக்குகளின் மொத்தத் தொடர்வரிசையையுமே முன்னூகித்தார். ஒரு நாட்டின் தேசிய வருமானம், தேசியச் செல்வம் ஆகியவற்றைக் கணக்கிடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் மதிநுட்பத்தோடு எழுதினார். இவை நவீன புள்ளியியலிலும் பொருளாதாரத்திலும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இங்கிலாந்தின் தேசிய செல்வத்தைக் கணக்கிடுவதற்கு முதலில் முயற்சி செய்தவரும், அதைக் கணக்கிட்டவரும் அவர்தான்.

பெட்டியின் ஜனநாயக உணர்வையும் அசாதாரணமான துணிவையும் பின்வரும் பகுதியிலிருந்து நன்கு தெரிந்து கொள்ள முடியும். ”… மக்களின் செல்வத்தையும் சர்வாதிகாரம் செலுத்தும் மன்னரின் செல்வத்தையும் அதிகமான கவனத்தோடு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்; மன்னர் தான் விரும்புவதை எங்கேயும், எப்பொழுதும், எந்த அளவிலும் மக்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். ”(2) அவர் இங்கே குறிப்பிட்டது பதினான்காம் லுயீயை. ஆனால் இந்தச் சொற்றொடரை இரண்டாம் சார்ல்ஸ் தனக்கும் ஒரு கண்டனமாகக் கருதியிருக்கலாம்.

இங்கிலாந்தின் பொருளாயதச் செல்வம் 250 மில்லியன் பவுன் என்று பெட்டி மதிப்பிட்டார்; இதனோடு நாட்டிலுள்ள மக்கள் தொகையின் பணவியல் மதிப்பாக இன்னொரு 417 மில்லியன் பவுனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்தப் புதிர் போன்ற கருத்து முதல் பார்வையில் தோன்றுவதைக் காட்டிலும் மிகவும் ஆழமானதாகும். உற்பத்திச் சக்திகளில் உள்ள மனிதக் கூறை -உழைப்புத் திறன், உத்திகள், ஏற்படக் கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி முதலியனவற்றை- அதன் பரிமாணத்தைக் கணக்கிடுவதற்குப் பெட்டி ஒரு வழியைத் தேடி முயற்சி செய்திருக்கிறார்.

பெட்டியின் மொத்த பொருளாதாரத் தத்துவமுமே மக்கள் தொகையின் அளவு, அதன் உள்ளமைப்போடு தொடங்குகிறது. பெட்டியைப் பற்றி மார்க்ஸ் பின்வரும் அம்சத்தைக் குறிப்பிட்டார்: “நமது நண்பர் பெட்டி மால்தஸிலிருந்து வேறுபட்ட ‘மக்கள் தொகைத் தத்துவத்தைக்’ கொண்டிருக்கிறார்……. அது மக்கள் – செல்வம் என்பதாகும்…” (3) மக்கள் தொகை வளர்ச்சியைப் பற்றி இத்தகைய நம்பிக்கையான கருத்து மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஆரம்பகர்த்தாக்களுக்கு மாதிரி எடுத்துக்காட்டாகும். 19 -ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மால்தஸ், உழைப்பாளிகளின் ஏழ்மைக்கு முக்கியமான காரணம் அவர்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்ற இயற்கையான காரணமே என்றார் (இதைப் பற்றி இப்புத்தகத்தின் பதினான்காம் அத்தியாயத்தில் விரிவாகச் சொல்லப்படும்). அவர் இதன் மூலம் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் தவறை மழுப்புகின்ற போக்குகளில் ஒன்றைத் தொடங்கி வைத்தார்.

பெட்டி இங்கிலாந்தின் தேசிய வருமானத்தைக் கணக்கிட்டார். இதுதான் இன்றுள்ள தேசியக் கணக்கெடுப்பு என்ற நவீன முறையாக வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் ஒரு நாட்டின் உற்பத்தி அளவு, அதன் உற்பத்திகள் நுகர்வு, சேமிப்பு, ஏற்றுமதிக்கென்று பகிர்ந்து கொடுக்கப்படும் முறை, முக்கியமான சமூக வர்க்கங்கள், கோஷ்டிகளின் வருமானங்கள், இதரவற்றை சுமாராகக் கணக்கிடுவது சாத்தியமாகியிருக்கிறது .

பெட்டியின் கணக்குகளில் முக்கியமான தவறுகள் இருந்தன என்பது உண்மையே. அவர் தேசிய வருமானத்தை மக்கள் தொகையின் நுகர்வுச் செலவின் மொத்தம் என்று கருதி மதிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கட்டிடங்கள், இயந்திரங்கள், நிலச் சீர்திருத்தம் மற்றும் இதர முதலீடுகளில் வருமானம் செலவிடப்படுகிறது (இது பல வருடச் சேமிப்பின் திரட்சியாகும்), இதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்தக் கருத்தும் 17-ம் நூற்றாண்டில் யதார்த்தமான ஒன்றுதான். ஏனென்றால் அன்று மூலதனத் திரட்சி மிகவும் கீழ்நிலையில் இருந்தது; நாட்டின் பொருளாயதச் செல்வம் மிகவும் மெதுவாகவே அதிகரித்து வந்தது. மேலும் அரசியல் கணிதத் துறையில் பெட்டியின் சீடர்கள் -குறிப்பாக கிரேகொரி கிங்- இந்தத் தவறைச் சீக்கிரமாகவே திருத்தினார்கள். 17 -ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் தேசிய வருமானத்தைப் பற்றி கிரே கொரி கிங் செய்த கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முழுமையாகவும் சரியாகவும் இருந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) Petty, Political Arithmetick, London, 1690, p. 244.
(2) W. Petty, The Economic Writings, Cambridge, 1899, Vol. 1, p. 272.

(3) K. Marx, Theories of Surplus-Value, Part 1, pp. 354, 355.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க