தேர்தலுக்கு முந்தைய நாளில் போபால் நகரம் முழுக்க முழுக்க காவிமயமாகியிருந்தது. போபால் தொகுதிக்கான பாஜக வேட்பாளரான பயங்கரவாதி சாத்வி பிரக்யா சிங்தான் இதற்குக் காரணமாக இருக்கும் என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திக் விஜய் சிங்கின் ஏற்பாட்டின் பெயரிலேயே போபால் காவிமயமாக காட்சியளிக்கிறது.

மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங், சமீபத்தில்தான் கடந்த 6 மாதமாக பாத யாத்திரையாக 1400 கிமீ நர்மதா பாரிக்கிரம நடைபயணம் மேற்கொண்டார். இது குறித்து கம்ப்யூட்டர் சாமியார் என்று அழைக்கப்படும் நம்தியோ தாஸ் தியாகி என்ற சாமியார் கூறுகையில், “இத்தேர்தல் ‘ஜெயில் யாத்திரை’ சென்றவருக்கும், நர்மதா பாரிக்கிரம நடைபயணம் மேற்கொண்டவருக்கும் இடையிலான சண்டையாகும். நான் நர்மதா பாரிக்கிரம பயணம் மேற்கொண்டவருக்கு ஆதரவாக நிற்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

திக் விஜய் சிங்கிற்கு இந்தச் சாமியார் ஏன் ஆதரவாக நிற்க வேண்டும் என்று யோசிக்கலாம். சாமியாராக இருந்தாலும் கொடுத்த காசிற்கு கூவ வேண்டுமா இல்லையா ? அதுதானே பூலோக தர்மம். திக் விஜய் சிங்கின் மீது கண் வைத்தவர்களின் தீய பார்வைகள் ஒழிய சுமார் 5000 கிலோ மிளகாய்ப் பொடியுடன் யாகம் நடத்தியிருக்கிறார் இந்தச் சாமியார்.

மேலும், திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷும் போபாலில் பாத யாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் போக, துவாரகா மற்றும் பதிர்நாத் பீடத்தின் சங்கராச்சாரியான சுவாமி ஸ்வரூபானந்த், திக் விஜய் சிங்கை ஆசிர்வதித்ததன் மூலம், அவருக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும் சாத்வி பிரக்யா சிங்கை ஒரு மோசடிக்காரி என்றும், “தன்னை சாத்வி என்று சொல்லிக் கொண்டே தமது பெயரில் சிங்கையும் வைத்துள்ளார்” என்று சாடியிருக்கிறார் இந்தச் சாமியார். இவர் திக் விஜயசிங்கின் குருநாதர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது திக் விஜய் சிங்கிற்கு ஆதரவளிக்கும் கம்ப்யூட்டர் சாமியார் ஓராண்டுக்கு முன்னர், பாஜகவின் சிவராஜ் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே சுவாமி அக்னிவேஷ் கடந்த 2013-ம் ஆண்டில் பிரக்யா சிங்கை சிறைச்சாலையில் சந்தித்துவிட்டு, பின்னர் அவரது புற்றுநோயைக் காட்டி அவரது பிணைக்காக பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திக் விஜய் சிங்காலேயே தவிர்க்கவியலாத வகையில் இந்தக் காவிமயமாக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தன் மீது பாஜகவால் கட்டமைக்கப்பட்ட இந்து விரோத கருத்துருவாக்கத்தை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

மறுபுறத்தில், பிரக்யா சிங்கிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமித்ஷா பேரணிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். அந்த பேரணியில் சுமித்ரா மஹாஜன், உமா பாரதி ஆகியோர் சாத்வி பிரக்யா சிங்கிற்கு இருபுறங்களிலும் நடந்து வருகின்றனர்.

தேர்தல் சம்பந்தப்பட்ட எதையும் வாக்காளர்களிடம் பிரக்யா சிங் பேசுவதில்லை. சிறையில் தாம் சித்திரவதை செய்யப்பட்டதையும், தூங்கவிடாமல், உணவருந்த விடாமல் தாம் தடுக்கப்பட்டதைக் குறித்துப் பேசுகிறார். இது சுற்றியுள்ள வாக்காள பெண்களின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் அவரது தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தாம் பொய்யாக மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திக் விஜய் சிங்கிற்கு பதிலாக சிக்க வைக்கப்பட்டதாகவும், தாம் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு வருகிறார். இதைத் தவிர அனைத்தும் , “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் “பாரத் மாதாகி ஜெய்” என்ற முழக்கங்கள் மட்டுமே. நம்புங்கள், இது தேர்தல் விதிமுறை மீறலாகாது.

பாஜகவுக்கு ஒருபடி மேலே போய், காவிமயத்தில் திளைக்கும் திக் விஜய் சிங்கின் இவ்வளவு சேட்டையையும் பார்த்துவிட்டு பாஜகவிற்கு தூக்கம் வருமா என்ன ? உடனடியாக கம்ப்யூட்டர் பாபாவிற்கு தேர்தல் ஆணையம் செலவுக் கணக்கைக் காட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியது. அவரும் வழக்கம் போல தேர்தல் ஆணையத்தை மதியாமல், தமது யாகத்தில் திக்விஜய் சிங் கலந்து கொள்ளவில்லை என்று வெறுமனே பதில் கூறியுள்ளார்.

திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக நிற்கும், இந்தக் காவி சாமியார்கள் யாரும் பயங்கரவாதி பிரக்யா சிங் வெல்வதை விரும்பவில்லை. ஏனெனில் ஒருவேளை அவர் வெற்றி பெற்றால் அது சாமியார்களால் பெற்ற வெற்றியாக இல்லாமல், பிரக்யா சிங் என்ற இந்துத்துவ பயங்கரவாதிக்குக் கிடைத்த வெற்றியாகவே இருக்கும். ஆனால் திக் விஜய் சிங் வெற்றிபெற்றால், சாமியார்களைப் பொறுத்தவரையில் அது தமக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

போபால் நாடாளுமன்றத் தேர்தலில் திக் விஜய் சிங் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ போபாலின் இந்து மனங்களின் மகாராஜாவாக இடம் பிடிப்பதற்கான போட்டியில் பிரக்யா சிங்கையும் மிஞ்சியதன் மூலம், சாமியார் கும்பலை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.


நந்தன்
நன்றி : the wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க