அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 19

பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ?
அ.அனிக்கின்

பெட்டி பிற்காலத்தில் பிரதானமாக மக்கள் தொகை, அதன் வளர்ச்சி, பகிர்ந்தளிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பற்றியே எழுதினார். அவரும் அவருடைய நண்பர் ஜான் கிரெளன்ட்டும் மக்கள் தொகையின் புள்ளியியலை நிறுவியவர்கள் என்ற கௌரவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த முன்னோடிகளின் எளிமையான முயற்சிகளிலிருந்து தான் இந்த விஞ்ஞானத்தின் வன்மையான நவீன நுட்பங்கள் வளர்ச்சியடைந்தன.

ஒவ்வொரு விஞ்ஞானத்திலும் ஏதாவதொன்றை முதலில் கண்டுபிடித்தது யார், அவருடைய முன்னுரிமை என்ன என்ற விவாதங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் இந்த விவாதங்கள் பயனற்றவையாகவும் அந்த விஞ்ஞானத்துக்குக் கேடு விளைவிப்பனவாகவும் இருக்கின்றன. சில சமயங்களில் இவை அந்த விஞ்ஞானத்தின் வரலாற்றைத் தெளிவுபடுத்துபவையாகவும் அதன் காரணமாகப் பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. புள்ளியியலின் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு விவாதம் “பெட்டி-கிரௌன்ட் பிரச்சினையின்” வடிவத்தில் ஏற்பட்டது. அந்த விவாதத்தின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

ஜான் கிரெளன்ட்

1662-ம் வருடத்தில் லண்டனில் மரணச் சட்டத்தைப் பற்றிய… இயற்கை மற்றும் அரசியல் கருத்துக்கள்(1) என்ற தலைப்பில் ஒரு சிறு பிரசுரம் வெளிவந்தது . ஜான் கிரெளன்ட் என்பவர் அதை எழுதியிருந்தார். அதன் தலைப்பு வினோதமாக, இருளடர்ந்ததாக இருந்தாலும் அந்தப் பிரசுரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சில வருடங்களுக்குள்ளாகவே ஐந்து பதிப்புகள் வெளியிடப்பட்டன; இரண்டாவது பதிப்பு முதல் வருடத்திலேயே வெளிவந்தது. அந்தப் பிரசுரத்தைப் பற்றி அரசரும் அக்கறை காட்டினார்; அவருடைய விருப்பத்தின் பேரில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட இராயல் சொஸைட்டியில் கிரௌன்ட் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்தப் பிரசுரத்தில் மக்கள் இயல்பாகவே அக்கறை கொண்ட முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி அன்றைக்குக் கிடைத்த குறைவான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு மதிநுட்பத்தோடு ஆராயப்பட்டிருந்தது. பிறப்பு, இறப்பு வீதங்கள், ஆண்கள் பெண்களுக்கிடையே உள்ள வீதப் பொருத்தம், சராசரியாக உயிரோடிருக்கும் வருடங்கள், மக்கள் தொகை இடம் பெயர்தல், மரணத்துக்கு முக்கியமான காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது.

அவர் புள்ளியியலின் மிக முக்கியமான கோட்பாட்டை நோக்கி முன்னேறுவதற்குரிய முதல் முயற்சிகளை பயந்துகொண்டே செய்தார். தனித்தனியான பொருளாதார நிகழ்வுகளைப் பற்றி – அவை ஒவ்வொன்றும் தற்செயலாகவே நடைபெறுகின்றன – போதுமான அளவுக்கு அதிகமான புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அவற்றை ஆராய்ந்தால், அவை பொது முறையில் அதிகக் கறாரான, முறையான விதிகளுக்கு உட்பட்டவை என்று அறிகிறோம்.

ஒவ்வொரு தனி நபரின் பிறப்பும் இறப்பும் தற்செயலானதே; ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் (அல்லது பிரதேசத்தில், பெரிய நகரத்தில்) பிறப்பு, இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் திட்டவட்டமானதாக இருக்கிறது; மேலும் அது மெதுவாகவே மாறுகிறது. அந்த மாற்றங்கள் ஏற்பட்டது ஏன் என்பதையும் விஞ்ஞான ரீதியாக விளக்க முடியும்; சில சமயங்களில் அதை முன் கூட்டியே சொல்ல முடியும்.

இதற்கு அடுத்து வந்த 18-ம் நூற்றாண்டில் மாபெரும் கணித மேதைகள் நிகழக் கூடியவை பற்றிய தங்களுடைய தத்துவத்தின் மூலம் புள்ளியியலுக்குக் கறாரான, கணித அடிப்படையைக் கொடுத்தனர். ஆனால் அறிமுகமில்லாத ஜான் கிரௌன்ட் எழுதிய இந்தச் சிறிய புத்தகத்தில் புள்ளியியலின் சில ஆரம்பக் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன.

அவர் 1620-ம் வருடத்தில் பிறந்து 1674-ம் வருடத்தில் இறந்தார்; லண்டன் நகரத்தின் வர்த்தகப் பகுதியில் சில்லறைச் சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அவர் சுயமாகக் கல்வி கற்றிருந்ததோடு ”தமது ஓய்வு நேரத்தில்” தமது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். நாற்பதுக்களின் கடைசியில் பெட்டி அவரோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை. இப்பொழுது கிரெளன்ட் பெட்டியின் நெருங்கிய நண்பராகவும், லண்டன் நகரத்தில் அவருடைய பிரதிநிதியாகவும், இராயல் சொஸைட்டிக்கும் அவருக்கும் இணைப்புத்தருகின்ற நபராகவும் இருந்தார்.

படிக்க:
நாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் !
♦ பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11

கிரெளன்டின் பிரசுரம் விரிவான அளவுக்கு அக்கறை ஏற்படுத்திய பொழுது லண்டன் நகரத்தின் விஞ்ஞான வட்டாரங்களில், அந்தப் பிரசுரத்தை உண்மையில் எழுதியவர் சர் வில்லியம் பெட்டி, சில காரணங்களுக்காக அவர் அறிமுகமில்லாத ஒரு நபரின் பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கிறார் என்ற வதந்தி பரவியது. கிரெளன்டின் மரணத்துக்குப் பிறகு இத்தகைய வதந்திகள் பலமடைந்தன. பெட்டியின் எழுத்துக்களிலும் கடிதங்களிலும் காணப்படுகின்ற சில பகுதிகள் இந்த வதந்திக்கு ஆதரவு கொடுப்பது போலத் தோன்றுகின்றன. ஆனால் இதற்கு மாறான வகையில், ”நமது நண்பர் கிரௌன்ட் எழுதிய புத்தகம்” என்று அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறார்.

19-ம் நூற்றாண்டில் இந்தப் பிரசுரத்தின் உண்மையான ஆசிரியர் யார் என்ற பிரச்சினை ஆங்கில விஞ்ஞான உலகத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. “பெட்டி – கிரெளன்ட் பிரச்சினை” என்பது தீர்க்கப்பட்டுவிட்டதாக இன்று நாம் கருதலாம். இப்புத்தகத்தையும் அதிலுள்ள அடிப்படையான புள்ளியியல் கருத்துக்கள், முறைகள் ஆகியவற்றையும் எழுதியது பிரதானமாக ஜான் கிரௌன்ட். ஆனால் சமூக-பொருளாதாரக் கருத்துக்களைப் பொறுத்தவரை அவர் பெட்டியின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தார் என்பது தெளிவாகும். இப்புத்தகத்தின் முன்னுரையையும் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கும் முடிவுரையையும் பெட்டி எழுதியிருக்கக்கூடும். புத்தகத்தின் பொதுவான கருத்து பெட்டிக்கு உரியதாக இருக்கலாம்; அதை எழுதியவர் ஜான் கிரௌன்ட் என்பதில் சந்தேகமில்லை.(2)

1666-ம் வருடத்தில் லண்டன் தீப்பிடித்து எரிந்ததில் கிரெளன்ட் அதிகமாக பாதிக்கப்பட்டார். இதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் கத்தோலிக்கராக மாறினார்; இது அவருடைய சமூக அந்தஸ்தைப் பாதித்தது. இவை எல்லாமே அவர் சீக்கிரமாக மரணமடைவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பெட்டியின் நண்பரும் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய முதல் ஆசிரியருமான ஜான் ஒபிரீ கிரெளன்டின் சவ அடக்கத்தின் போது, “மதிநுட்பம் நிறைந்தவரும் பல்கலைச் செல்வருமான மாபெரும் சர் வில்லியம் பெட்டி, கிரெளன்டின் பழைய நண்பர், அவருக்கு மிக நெருக்கமானவர், அவர் கண்ணீர் வடிய நின்ற காட்சியைப்” பற்றி எழுதியிருக்கிறார்.(3)

அந்த மாபெரும் தீவிபத்து மத்தியகால லண்டன் நகரத்தில் பாதியை அழித்துப் புதிய லண்டனை உருவாக்குவதற்கு தளத்தை சுத்தப்படுத்தியது. பெட்டி, ஒரு துணிச்சலான திட்டத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. சோர்வில்லாமல் திட்டங்களைத் தயாரிக்கும் நிபுணரான பெட்டி லண்டன் நகரத்தைச் சுத்தப்படுத்திப் புனர் நிர்மாணம் செய்வதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கி அரசாங்கத்திடம் கொடுத்தார்.

அதன் முன்னுரையில் “பூமியும் அதன் மீது கிடக்கின்ற இடிபாடுகளும் யாருக்குச் சொந்தமோ அவரிடம் இந்தப் புனர் நிர்மாண வேலையைச் செய்வதற்கு ரொக்கப் பணவசதியும், எல்லா விதமான சிக்கல்களையும் வெட்டியெறியக் கூடிய சட்டமன்ற அதிகாரமும் இருக்கிறது” (4) என்ற அனுமானத்தின் பேரில் இந்தத் திட்டம் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்று அவர் எழுதியிருந்தார், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நகர்ப்புற வளர்ச்சிக்கு அந்தக் காலத்திலேயே தடையாக இருந்த தனிச் சொத்துடைமைக்கு எதிராக, நிலமும் கட்டிடங்களும் அரசுக்கு அல்லது நகராட்சிக்குச் சொந்தம் என்ற கருத்தை அவர் அனுமானித்தார் என்பது தெளிவு.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்தை முழுமையாகப் பாராட்டுவதற்கு, இன்று லண்டன், பாரிஸ், நியூயார்க், டோக்கியோ போன்ற நகரங்களின் வளர்ச்சிக்கு முதலாளித்துவத் தனிச் சொத்துடைமைமுறை எத்தகைய சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்வதே போதுமானதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) அந்த புத்தகத்தின் தலைப்பு மிக நீளமானதால் இங்கே சுருக்கப்பட்டிருக்கிறது.
(2) எம். ப்டுகா, 17, 18ம் நூற்றாண்டுகளின் புள்ளியியல் வரலாற்றில் சில ஆராய்ச்சிகள், மாஸ்கோ , 1945, பக்கம் 45 (ருஷ்ய மொழிப் பதிப்பு).
(3) E. Strauss, Sir William Petty. Portrait of a Genius, London, 1954, p. 160.
(4) The Petty Papers. Some Unpublished Writings of Sir William Petty, ed. by the Marquis of Lansdowne, London, 1927, Vol. 1, p. 28.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க