அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 11

வாணிப ஊக்கக் கொள்கையின் வளர்ச்சிப் போக்கு

சென்ற பாகத்தில் உலோகத்தின் மீது அதுவும் தங்கம் எனும் “மஞ்சள் பிசாசின்” மேல் இருந்த மோகத்தை விளக்கி இருந்தார் ஆசிரியர். இந்த பாகத்தில் இலண்டனில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் உருவான கதையை விவரிக்கிறார். கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றுவாயும், இங்கிலாந்து உலகம் முழுவதிலும் காலனி நாடுகளை உருவாக்கிய விதமும் பொருளாதாரத் துறையின் கோட்பாடுகளை உருவாக்க காரணமாக இருந்ததை விளக்குகிறார். அதில் தாமஸ் மான் எனும் அறிஞர் வாணிப ஊக்க கொள்கைகள் குறித்து எழுதிய இரண்டு முக்கியமான நூல்களை அறிமுகப்படுத்துகிறார், நூலாசிரியர்.

– வினவு

அ.அனிக்கின்

ங்கிலேயர்கள் லண்டன் நகரத்தை மாபெரும் “வென்” என்று கூறினார்கள்; ”வென்” என்ற சொல்லுக்குக் கட்டி அல்லது வீக்கம் என்று அர்த்தம். உலகத்திலேயே மிகப் பெரிய நகரம் என்று பல நூற்றாண்டுகளாகப் பெருமை பெற்றிருந்த லண்டன் நகரம் நாடாத் துணியைப் போன்று தேம்ஸ் நதியின் மீது ஓங்கி உயர்ந்து நிற்கிறது. கண்ணுக்குப் புலனாகின்ற மற்றும் கண்ணுக்குப் புலனாகாத ஆயிரமாயிரம் இழைகள் அதிலிருந்து வருகின்றன.

அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றில் லண்டன் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. வர்த்தகத்திலும் நிதியிலும் அது உலகத்தின் மையமாக இருந்த காரணத்தால் இந்த விஞ்ஞானத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அது மிகப் பொருத்தமான இடமாக இருந்தது. பெட்டியின் கட்டுரைகள் லண்டனில் தான் அச்சிடப் பட்டன; அவருடைய வாழ்க்கை அயர்லாந்தைப் போலவே லண்டனோடும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் அங்கு தான் வெளியிடப்பட்டது. டேவிட் ரிக்கார்டோ லண்டன் நகரத்தின் அதன் கொந்தளிப்பான வியாபார, அரசியல், விஞ்ஞான வாழ்க்கையின் உண்மையான படைப்பாக இருந்தார். கார்ல் மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கையில் பாதிக்கு மேல் அங்கே தான் கழித்தார்; அவருடைய அரிய புத்தகமான மூலதனம் அங்கேதான் எழுதப்பட்டது.

தாமஸ் மான் (1571-1641) ஆங்கில வாணிப ஊக்கக் கொள்கையின் குறிப்பிடத்தக்க பிரதிநிதி ஆவார். அவர் கைவினைஞர்களையும் வர்த்தகர்களையும் கொண்ட பழமையான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பாட்டனார் லண்டன் நாணயச் சாலையில் அச்சுப்படம் செதுக்குபவராக இருந்தவர்; தகப்பனார் பட்டு, முதலிய உயர்ந்த வகைத் துணிகளை விற்பனை செய்தவர். தாமஸ் மான் தனக்குச் சமகாலத்தில் பிரான்சில் வாழ்ந்த மான் கிரெட்டியேனைப் போல சோக நாடகங்கள் எழுதவில்லை; வாட்சண்டை போடவில்லை; கலகங்களிலும் பங்கெடுக்கவில்லை. அவர் நேர்மையான வியாபாரி, அறிவு நிரம்பியவர் என்ற பெயரோடு அமைதியாக, கண்ணியமாக வாழ்க்கை நடத்தி வந்தார்.

தாமஸ் மான் தன்னுடைய சிறுவயதிலேயே தகப்பனாரை இழக்க நேரிட்டதால் அவருடைய சித்தப்பா அவரை வளர்த்து வந்தார். அவர் ஒரு பணக்கார வியாபாரி. மத்திய தரைக் கடல் நாடுகளோடு வர்த்தகம் செய்து வந்த பழமையான லெவாண்ட் கம்பெனியின் ஒரு கிளையாக 1600-ம் வருடத்தில் ஏற்பட்ட கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனியை நிறுவியவர்களில் அவரும் ஒருவர். தன்னுடைய சித்தப்பாவின் கடையிலும் அலுவலகத்திலும் பயிற்சி பெற்ற பிறகு மான் தனது பதினெட்டாவது அல்லது இருபதாவது வயதில் லெவாண்ட் கம்பெனியில் வேலை செய்யத் தொடங்கினார். சில வருடங்கள் இத்தாலியில் இருந்த பிறகு துருக்கிக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பயணம் சென்று திரும்பினார்.

படிக்க:
♦ பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

மான் சீக்கிரத்தில் பணக்காரரானார். எல்லோரும் அவருக்கு மரியாதை செய்தனர். 1615-ம் வருடத்தில் அவர் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் குழுவுக்கு முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெகு சீக்கிரத்தில் அவர் பத்திரிகைகளிலும் நாடாளுமன்றத்திலும் கம்பெனியின் நலன்களை ஆதரித்துத் திறமையோடும்     சுறுசுறுப்போடும் வாதாடினார். மான் ஜாக்கிரதையாக நடந்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்; அதிலும் அதிகமான ஆசைகள் அவருக்கு இல்லை. கம்பெனியின் துணைத் தலைவர் பதவி அவருக்குத் தரப்பட்ட பொழுது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் கம்பெனியின் உற்பத்தி நிலையங்களை மேற்பார்வையிடுவதற்காக இந்தியாவுக்குப் போய் வருகின்ற வாய்ப்புத் தரப்பட்ட பொழுது அதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் இந்தியாவுக்குப் போய்ச் சேருவதற்கே மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும். புயற்காற்று, நோய், கடற் கொள்ளைக்காரர்கள்… இப்படி அந்தப் பிரயாணம் மிகவும் ஆபத்தானது.

மான் லண்டன் நகரத்திலும் ஆங்கில நாடாளுமன்றத்திலும் மிகச் சிறப்பான ஒருவராக விளங்கினார். பொருளாதார விஷயங்களைப் பற்றி எழுதுகின்ற கட்டுரையாளரான எட்வர்டு மிஸ்ஸெல் டென் என்பவர் 1623 -ம் வருடத்தில் அவரைப் பின்வருமாறு வர்ணித்தார்.

”… கிழக்கு இந்தியக் கம்பெனியின் வர்த்தகத்தைப் பற்றி அவர் கொண்டிருக்கும் காட்சியறிவு, வர்த்தகத்தைப் பற்றி அவர் செய்கின்ற முடிவுகள், தாய்நாட்டில் அவருடைய சுறுசுறுப்பான உழைப்பு, அவருடைய வெளி நாட்டு அனுபவம் அவருக்குப் பல தகுதிகளைக் கொடுத்திருக்கின்றன. இந்தத் தகுதிகள் எல்லா வியாபாரிகளிடமும் இருக்குமானால் நல்லதே. ஆனால் இந்தக் காலத்தில் பல வியாபாரிகளிடம் இவற்றை சுலபமாகப் பார்க்க முடிவதில்லை.”

இதிலடங்கியிருக்கும் புகழ்ச்சியையும் மிகையுரையையும் ஒதுக்கிவிட்டால் கூட, தாமஸ் மான் நிச்சயமாக சாதாரணமான வியாபாரி அல்ல என்பது தெரியவரும். சமீப கால ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுதியிருப்பதைப் போல, அவர் வர்த்தகப் போர்த்திற வல்லுநர் (”வர்த்தகம்” என்ற சொல் 17, 18-ம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் ”பொருளாதாரம்” என்ற சொல்லுக்குத் தரப்பட்ட அதே அர்த்தத்தைக் கொண்டிருந்தது).

அவருடைய முதிர்ச்சியான வருடங்கள் ஸ்டூவர்ட் அரச மரபின் முதல் இரண்டு அரசர்களின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தியிருந்தது. 1603-ம் வருடத்தில் எலிசபெத் அரசி குழந்தைப் பேறு இல்லாமல், அரியணையில் சுமார் ஐம்பது ஆண்டுகள் இருந்தபிறகு மரணமடைந்தாள். எலிசபெத் அரசியான பொழுது இங்கிலாந்து அரசியல், மதச்சச்சரவுகளினால் ஒற்றுமையிழந்த ஒரு தீவாக இருந்தது. அரசி மரணமடைந்த பொழுது இங்கிலாந்து பிரம்மாண்டமான கடற்படையும் விரிவான வர்த்தகமும் கொண்ட உலகப் பேரரசாக மாறிவிட்டது.

எலிசபெத் காலத்தில் கலாச்சாரப் பேரெழுச்சி குறிப்பிடத்தக்க வகையில் ஏற்பட்டது. எலிசபெத்துக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் அரசியான, தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மேரியின் மகன் முதலாம் ஜேம்ஸ் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு லண்டன் நகரத்தின் செல்வம் தேவையாக இருந்தது. அதைக் கண்டு அவருக்கு பயமும் ஏற்பட்டது.

அவர் சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய விரும்பினார். ஆனால் நாடாளுமன்றத்திலும் லண்டன் நகர வர்த்தகர்களின் கைகளிலும் பணப்பை இருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் இருபதுக்களின் ஆரம்பத்தில் நிதித் துறையிலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட நெருக்கடிகள் அரசரையும் அவருடைய அமைச்சர்களையும் லண்டனைச் சேர்ந்த பணக்கார நிபுணர்களிடம் ஆலோசனை கேட்குமாறு செய்தன. வர்த்தகம் பற்றி ஒரு விசேஷமான அரசாங்கக் குழு நியமிக்கப்பட்டது. 1622-ம் வருடத்தில் தாமஸ் மான் அதன் உறுப்பினராகச் சேர்ந்தார்.

இந்த ஆலோசனைக் குழுவில் சுறுசுறுப்பும் செல்வாக்குமுடைய உறுப்பினராக அவர் இருந்தார். – பதினேழாம் நூற்றாண்டின் இருபதுக்களில் வேகமாக வெளிவந்து கொண்டிருந்த பிரசுரங்களிலும் மனுக்களிலும், வர்த்தகத்தைப் பற்றிய குழுவின் விவாதங்களிலும் இங்கிலாந்தில் வாணிப ஊக்கக் கொள்கையின் முக்கியமான பொருளாதாரக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன; அவை அந்த நூற்றாண்டின் இறுதி வரையிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டன. மூலப் பொருள்களை (குறிப்பாகக் கம்பளியை) ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டது; ஆனால் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி, சில சமயங்களில் அரசாங்க உதவியோடு, ஊக்குவிக்கப்பட்டது.

ஆங்கில வாணிப ஊக்கக் கொள்கையின் பிரதிநிதி – தாமஸ் மான் (1571-1641)

இங்கிலாந்து மேலும் மேலும் புதிய காலனிகளைப் பிடித்துக் கொண்டிருந்தது. இவை உற்பத்தியாளர்களுக்கு மலிவான மூலப் பொருள்களைக் கொடுத்தன; சீனி, பட்டு, வாசனைத் திரவியங்கள் மற்றும் புகையிலை ஆகிய பொருள்களைக் கொண்டு வருவதிலும் அவற்றின் இடை நிலை வர்த்தகத்திலும் வியாபாரிகளுக்கு லாபம் கிடைத்தது. அந்நிய நாட்டு உற்பத்திப் பொருள்களுக்கு அதிகமான சுங்க வரி விதித்ததன் மூலம் அவை இங்கிலாந்துக்குள் வருவது கட்டுப்படுத்தப்பட்டது. இது போட்டியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவித்தது (காப்பு வரிக் கொள்கை).

கப்பல் கட்டுவதில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டது. ஏனென்றால் சரக்குகளை உலகம் பூராவும் கொண்டு செல்வதற்கும் ஆங்கில வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கும் கப்பல்கள் தேவைப்பட்டன. நாட்டுக்குள் விலையுயர்ந்த உலோகங்கள் வருவதை அதிகரிக்க வேண்டுமென்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கியமான நோக்கம். ஸ்பெயின் நாடு தங்கத்தையும் வெள்ளியையும் அமெரிக்காவிலுள்ள சுரங்கங்களிலிருந்து நேரடியாக அடைந்து கொண்டிருந்தது. இங்கிலாந்து அத்தகைய நிலையில் இல்லை.

ஆனால் பணத்தைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றியதனால் தொழில் துறை, கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் முதலியவை வளர்ச்சியடைந்து இங்கிலாந்துக்கு நன்மை ஏற்பட்டது.

இதற்கிடையில் ஸ்டூவர்ட் முடியாட்சியைச் சுற்றி புயல் மேகங்கள் திரண்டன. முதலாம் ஜேம்ஸ் அரசரின் மகனான முதலாம் சார்ல்ஸ் முரட்டுப் பிடிவாதக்காரராக, முன்னறியும் திறமை இல்லாதவராக இருந்தார். அவர் முதலாளிகளை விரோதித்துக் கொண்டார்; அவர்கள் பெருந்திரளான மக்களிடம் நிலவிய அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். 1640-ம் வருடத்தில் தாமஸ் மான் மரண மடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு நாடாளுமன்றம் கூடி அரசரை பகிரங்கமாகக் கண்டனம் செய்தது. பிறகு உள் நாட்டுப் போர் வெடித்தது; ஆங்கில முதலாளித்துவப் புரட்சி ஆரம்பமாயிற்று. இதற்கு ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சார்ல்ஸின் தலை துண்டிக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வயோதிகரான மான் எத்தகைய அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியாது; இந்தப் புரட்சியின் முடிவைத் தெரிந்து கொள்வதற்கு அவர் உயிருடனிருக்கவில்லை. ஆனால் தம் காலத்தில் அவர் முழுமையான சர்வாதிகாரத்தைத் தாக்கியிருக்கிறார்; அரசரின் அதிகாரம் குறிப்பாக வரி விதிப்பதில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரித்திருக்கிறார்.

எனினும் அரசரை சிரச்சேதம் செய்ததை அவர் ஆதரித்திருக்க முடியாது. தம் வாழ்க்கையின் இறுதியில் அவர் பெருஞ் செல்வராக இருந்தார்; ஏராளமான நிலங்களை வாங்கினார்; லண்டன் நகரத்தில் பெருந்தொகைகளை ரொக்கப் பணமாகக் கடன் கொடுக்கக் கூடியவராக அவர் கருதப்பட்டார்.

தாமஸ் மான் எழுதிய A Discourse of Trade, from England into the East Indies Answering to Diverse Objections Which Are Usually Made Against the Same என்ற நூலின் முதல் பக்கம்.

மான் இரண்டு சிறிய புத்தகங்களை எழுதினார்; அவை பொருளாதார இலக்கியக் கருவூலம் என்று கருதப்படுகின்றன. அவை சாதாரணமாக வெளியிடப்படவில்லை என்பதைக் கூற வேண்டும். A Discourse of Trade, from England into the East Indies Answering to Diverse Objections Which Are Usually Made Against the Same என்ற தலைப்புடைய முதல் புத்தகம் 1621-ம் வருடத்தில் டி. எம். என்ற தலைப்பு எழுத்துக்களோடு வெளியிடப்பட்டது .

பழைய, பூர்வீக வாணிப ஊக்கக் கொள்கையை (பணவியல் முறையை) ஆதரித்தவர்கள், கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியப் பொருள்களை வாங்குவதற்காக வெள்ளியை ஏற்றுமதி செய்கிறது, இந்த வெள்ளியை இங்கிலாந்து நிரந்தரமாக இழந்து விடுகிறது, எனவே அந்தக் கம்பெனியின் நடவடிக்கைகள் இங்கிலாந்துக்குக் கேடு விளைவிப்பவை என்று குற்றம் சாட்டினார்கள். தாமஸ் மான் தமது புத்தகத்தில் இவர்களுக்குப் பதில் கொடுத்திருந்தார். அவர் இந்தக் குற்றச்சாட்டைத் தக்க ஆதாரங்களோடு, புள்ளி விவரங்களோடு திறமையாக மறுத்தார். வெள்ளி மறைந்து போய்விடவில்லை; அது பெரிய அளவில் அதிகரித்து இங்கிலாந்துக்கே திரும்ப வருகிறது என்று எடுத்துக் காட்டினார்.

கிழக்கிந்தியக் கம்பெனி தன்னுடைய கப்பல்களில் இந்தப் பொருள்களை இங்கிலாந்துக்குக் கொண்டு வரவில்லையென்றால் இவற்றை மும்மடங்கு அதிக விலை கொடுத்துத் துருக்கியிலிருந்தும் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும் வாங்குகின்ற அவசியம் ஏற்படும். மேலும் இவற்றில் ஒரு கணிசமான பகுதி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வெள்ளிக்கும் தங்கத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று மான் எடுத்துக் காட்டினார். பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றில் – கிழக்கிந்தியக் கம்பெனியின் நலன்களை ஆதரித்ததற்காக இந்தப் பிரசுரம் முக்கியத்துவம் அடையவில்லை; முதிர்ந்த வாணிப ஊக்கக் கொள்கையின் வாதங்கள் இந்தப் பிரசுரத்தில் முதன் முறையாக விளக்கிக் கூறப்பட்டிருப்பதே அதன் முக்கியத்துவ மாகும்.

தாமஸ் மான் புகழ் இன்னும் அதிகமான அளவுக்கு அவருடைய இரண்டாவது புத்தகத்தில் அடங்கியிருக்கிறது.(1) ஆடம் ஸ்மித் எழுதியது போல அதனுடைய தலைப்பே அதன் முக்கியமான கருத்தை எடுத்துரைக்கிறது. England’s Treasure by Forraign Trade, or the Balance of Our Forraign Trade Is the Rule of Our Treasure என்பது அப்புத்தகத்தின் தலைப்பு. இப்புத்தகம் 1664-ம் வருடம் வரையிலும், அதாவது அவர் மரணமடைந்த பிறகு சுமார் கால் நூற்றாண்டுக் காலம் வரையிலும் வெளியிடப்படவில்லை.

தாமஸ் மான் எழுதிய England’s Treasure by Forraign Trade, or the Balance of Our Forraign Trade Is the Rule of Our Treasure என்ற நூலின் முகப்பு.

புரட்சி, உள்நாட்டுப் போர், குடியரசு இப்படிப் பல வருட காலம் இந்தக் கையெழுத்துப் பிரதி மற்ற காகிதங்கள், பத்திரங்களோடு ஒரு பெட்டியில் அடைபட்டிருந்தது. தாமஸ் மானுடைய மகன் கட்டிடங்கள், தட்டுமுட்டுச் சாமான்களோடு இந்தப் பெட்டியையும் அவருடைய வாரிசு என்ற முறையில் அடைந்தார். 1660-ம் வருடத்தில் ஸ்டுவர்ட்டுகளின் ஆட்சி மறுபடியும் ஏற்பட்டது; மறுபடியும் பொருளாதார விவாதங்கள் தொடங்கிய பொழுது அந்த ஐம்பது வயதான வியாபாரி, நில உடமையாளர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு அநேகமாக மறந்து போய் விட்ட தாமஸ் மான் பெயரைப் பொது மக்களுக்கும் ஆட்சியிலிருப்பவர்களுக்கும் நினைவூட்டினார்.

மார்க்ஸ் எழுதியது போல, ”அது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு வாணிப ஊகக் கொள்கையினரின் வேதப் புத்தகமாக இருந்தது. ‘நுழைவாசலில் தொங்கவிடப்படும் அறிவிப்பைப் போல’ (2) வாணிப ஊக்கக் கொள்கையினருக்கு…. வரலாற்றுச் சிறப்புக்குரிய புத்தகம் ஒன்று இருக்கிறதென்றால் அது இந்தப் புத்தகமே.” (3)

படிக்க:
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !
♦ தொழிலாளி வர்க்க அரசியல் எது ?

பல விதமான அத்தியாயங்களைக் கொண்ட இப்புத்தகம் 1625-30 ம் வருடங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது வாணிப ஊக்கக் கொள்கையின் சாராம்சத்தைச் சுருங்கிய அளவில் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது. மான் அணி நலம் மிகுந்த உரை நடையில் எழுதவில்லை. அவர் புகழ்மிக்க புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் கொடுக்கவில்லை; அதற்குப் பதிலாக வெகுஜன வாக்குகளையும், தொழில் கணக்குகளையும் பயன்படுத்துகிறார். ஒரே ஒரு இடத்தில் தான் அவர் ஒரு வரலாற்றுத் தலைவனைக் குறிப்பிடுகிறார் – மசிதோனியாவின் ஃபிலீப்பின் கருத்தை மேற்கோள் காட்டுகிறார். ஆயுதங்களால் பிடிக்க முடியாத நாட்டைப் பிடிப்பதற்குப் பணத்தை உபயோகிக்க வேண்டும் என்பது அந்தக்கருத்தாகும்.

உண்மையான வாணிப ஊக்கக் கொள்கைவாதி என்ற முறையில் மான் செல்வத்தை அதன் பண வடிவத்தில், குறிப்பாக தங்கம், வெள்ளியின் வடிவத்திலேயே முதன்மையாகப் பார்க்கிறார். அவருடைய சிந்தனையில் வர்த்தக மூலதனக் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற தனிப்பட்ட முதலாளி லாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை முதலீடு செய்வது போல, ஒரு நாடும் இறக்குமதிகளைக் காட்டிலும் ஏற்றுமதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, வர்த்தகத்தின் மூலம் செல்வத்தைத் திரட்ட வேண்டும். உற்பத்தி வளர்ச்சியடைவது வர்த்தகத்தைப் பெருக்குவதற்குரிய வழி மட்டுமே என்ற அளவில் அதை அங்கீகரிக்கிறார்.

பொருளாதார நூல்கள் ஏதாவதொரு செய்முறை நோக்கத்திற்காக ஏதாவதொரு பொருளாதார நடவடிக்கையை, முறையை அல்லது கொள்கையை நியாயப்படுத்துவதற்காக எழுதப்படுகின்றன. ஆனால் வாணிப ஊக்கக் கொள்கையினரைப் பொறுத்த வரையிலும் இத்தகைய செய்முறைக் கடமைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேலோங்கியிருந்தன. வாணிப ஊக்கக் கொள்கையைப் பற்றி எழுதிய பிற எழுத்தாளர்களைப் போல மான் எவ்விதமான பொருளாதார முறையையும் ஏற்படுத்தும் எண்ணம் கொண்டவரல்ல. எனினும் பொருளாதாரச் சிந்தனைக்கென ஒரு தர்க்கவியல் உண்டு. அதனால் அவர் யதார்த்தத்தைப் பிரதிபலித்த கருதுகோள்களையே உபயோகிக்க நேர்ந்தது. பண்டங்கள், பணம், லாபம், மூலதனம்…. இவற்றுக்கிடையே இருக்கும் காரண காரியத் தொடர்பைக் கண்டுபிடிப்பதற்கு அவர் முயற்சி செய்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:

(1) இந்தப் புத்தகம் முதன் முதலாக 1609 ம் வருடத்தில் வெளிவந்ததாக ஆங்கில அறிஞர்கள் நெடுங்காலம் கருதி வந்ததோடு அதன் பிரதியையும் தேடிக் கொண்டிருந்தனர். ஜான் ராம்ஸே மாக்குலோஹ் என்பவர் அரசியல் பொருளாதாரவாதி; பொருளாதார இலக்கியங்களின் பழைய பிரதிகளைச் சேகரிப்பவர். இவர் சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் இப்படி ஒரு பதிப்பு வெளிவந்திருப்பதாகக் கூறியிருந்தார். எனினும் அப்படி ஒரு பதிப்பு வெளிவரவில்லையென்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இத்தாலியரான ஸெர்ரா 1613 ம் வருடத்திலும் பிரெஞ்சுக்காரரான மான் கிரெட்டியேன் 1615ம் வருடத்திலும் வாணிப ஊக்கக் கொள்கையை விளக்கிப் பிரசுரங்கள் வெளியிட்டனர். எனவே இவர்கள் மானுக்கு முந்திச் செயலாற்றியவர்கள். இது அவருடைய புகழை ஒரு சிறிதும் குறைக்காது..

(2) மேற்கோள் குறிகளுக்குள் தரப்பட்டிருக்கும் வார்த் தைகளின் மூலமாக எ. டூரிங்கின் இலக்கிய நடையை மார்க்ஸ் இங்கே கிண்டல் செய்கிறார். மார்க்ஸ் டூரிங்கின் கருத்துக்களை விமரிசனம் செய்தது தெரிந்ததே. –

(3) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 399 பார்க்க

  • கேள்விகள்:
  1. இலண்டம் மாநகரம் பொருளாதார அறிஞர்களின் நகரமாக இருந்ததற்கு காரணம் என்ன?
  2. கிழக்கிந்திய கம்பெனி – சிறு குறிப்பு தருக!
  3. இலண்டனில் கப்பல் கட்டும் தொழில் வளர்ந்தது ஏன்?
  4. தாமஸ் மான் எழுதிய இரண்டு நூல்கள் குறித்து சிறு அறிமுகம் தருக!
  5. செல்வத்தின் வடிவத்தை பணம், தங்கம், வெள்ளியில் தாமஸ் மான் பார்த்ததற்கு காரணம் என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க