டஒதுக்கீட்டை ஒழிக்கும் கொள்கையோடு செயல்பட்டு வரும் மோடி அரசு, அதனை அமல்படுத்தும் செயல்களில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, அண்மையில் மூத்த பேராசிரியர், இணை பேராசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்பும் ஆறுக்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழக விளம்பரங்களில் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இடம் பெறவில்லை.

கடந்த மார்ச் மாதம் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போதும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், முறைப்படுத்துனர் இதுவரை அதற்கான ஆணைகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவில்லை.

கடந்த 15 நாட்களாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம், டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம், மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகம் ஆகியவை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து விளம்பரங்களை வெளியிட்டிருந்தன.

இந்த விளம்பரங்களில் ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீடு குறைந்த மட்டத்திலான துணை பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.

உதாரணத்துக்கு, மணிப்பூர் பல்கலைக்கழகம் பேராசிரியர் பணிக்கு 25 இடங்களிலும், இணை பேராசிரியர் பணிக்கு 51 இடங்களிலும் துணை பேராசிரியர் பணிக்கு 39 இடங்களிலும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவித்திருந்தது. இதில் துணை பேராசிரியர் பணிக்கு மட்டும் 9 ஓபிசி இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அந்த விளம்பரம் தெரிவித்திருந்தது.

உயர் மட்ட இடங்களுக்கான ஓபிசி இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டால் பேராசிரியர் பணியிடங்களில் ஐந்தும் இணை பேராசிரியர் பணியிடங்களில் பத்தும் ஒதுக்க வேண்டியிருக்கும்.

படிக்க:
தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !
♦ இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் ஆறு பேராசிரியர் பணிக்கும், 10 இணை பேராசிரியர் பணிக்கும் 23 துணை பேராசிரியர் பணிக்கும் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்திருந்தது. இதிலும் துணைp பேராசிரியர் பணிக்கு மட்டுமே இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதம் சட்டம் இயற்றப்பட்ட பிறகு கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் அறிவித்த விளம்பரங்களிலும் இந்த நிலையையே காண முடிந்தது.

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி ஆசிரியர்கள் அமைப்பின் தலைவரான ஹன்ஸ்ராஜ் சுமன், இது வெளிப்படையான சட்ட மீறல் என தெரிவிக்கிறார்.

“உயர்கல்வி முறைப்படுத்தகமான பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்கும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் இது குறித்து கடிதம் எழுதியிருக்கிறோம். மேற்படியான விளம்பரங்கள் திருத்தப்படவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்” என தெரிவிக்கிறார் சுமன்.

அரசு பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு 14 வருடங்களுக்குப் பிறகு 1993-ல்  சட்டமாக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பணியிடங்களுக்கு அதை செயல்படுத்தவில்லை. 2007-ம் ஆண்டும் உயர்கல்வி முறைப்படுத்துனர், ஆரம்ப கட்ட பணியிடங்களில் மட்டும் அதை செயல்படுத்தம்படுத்தும்படி கேட்டுக்கொண்டது. எனவே, அதன் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள், துணை பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே ஓபிசி இடஒதுக்கீட்டை அமலாக்கியுள்ளன.

எப்படியாயினும் பழங்குடியினரும் பட்டியல் வகுப்பினரும் ஆசிரியர் பணியிடங்களில் அனைத்து மட்டங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டு நலனை பெற்றிருக்கின்றனர்.

12 ஆண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டுதலை பின்பற்றி மத்திய பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட விளம்பரங்களை நியாயப்படுத்துகின்றன.  உயர்கல்வி செயலாளர் ஆர். சுப்ரமணியம், சமீபத்திய விளம்பரங்களில் உள்ள தவறை ஒப்புக்கொள்கிறார்.

“இந்த விளம்பரங்களில் பிழை இருக்கிறது. நேரடியாக பணியை நிரப்பும் அனைத்து பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தும். அமைச்சரகம் இதுகுறித்து விளக்க அறிக்கை வெளியிடும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்களில் மக்கள் தொகையில் குறைவாக உள்ள உயர்சாதியினர்,  அதிக அளவில் உள்ளனர். மக்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உயர்கல்வி வேலை வாய்ப்பில் சட்டம் இயற்றியும்கூட ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அரியணை ஏறியுள்ள இந்துத்துவ அரசு, மனுதர்ம ஆட்சியைத்தான் அமலாக்கிக் கொண்டிருக்கும் என்கிற அச்சமும் பலமாகவே எழுகிறது.

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க