”பார் நடத்துவதற்கு மாமூல் வாங்கிய மாமல்லபுரம் டிஎஸ்பி, திருப்போரூர் ஆய்வாளர் மற்றும் அதிமுக பிரமுகர் மீது புகார் வாங்க மறுத்ததால் டிஎஸ்பி அலுவலகம் முன் தீக்குளித்த பார் உரிமையாளர் நெல்லையப்பன் மரணமடைந்தார்” – கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகைகளில் அடிபட்ட செய்தி இது. மோடி பதவியேற்பு பில்டப்புகளின் சந்தடியில் கடந்து செல்லப்பட்ட நிகழ்வு இது.

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த 37 வயதான நெல்லையப்பன் கடந்த 8 ஆண்டுகளாக திருப்போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, திருப்போரூர், கேளம்பாக்கம், கல்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம், சிங்கபெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் அதிமுக பிரமுகர்களின் டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்துள்ளார்.

கடந்த 28.05.2019 அன்று காலை 11 மணியளவில் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று திருப்போரூர் ஒன்றிய அதிமுக இளைஞர் அணிச் செயலாளர் ஆனந்தன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜூ ஆகியோர் அளவுக்கு அதிகமாக மாமூல் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தார். புகாரை வாங்க மறுத்த போலிசார் அவரை மோசமாக திட்டி வெளியே அனுப்பினர்.

நெல்லையப்பன்

ஏற்கெனவே போலிசின் டார்ச்சரால் மனமுடைந்த நெல்லையப்பன், தனது பைக்கில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்த பொதுமக்களும், டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்த போலீசும் அவரை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்த செங்கல்பட்டு நீதிமன்ற மாஜிஸ்திரேட் காயத்ரிதேவி, செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் ஆகியோர் மருத்துவமனை வந்து, நெல்லையப்பனிடம் பெற்ற வாக்குமூலத்தில் “நான், முதலில் பல்லாவரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தேன். தற்போது திருப்போரூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் டாஸ்மாக் பார்களை கவனித்து வருகிறேன்.

மொத்தம் 25-க்கும் மேற்பட்ட பார்களில் கிடைத்த வருமானத்தில் அதிக குத்தகைத் தொகை தரும்படி கேட்டு ஆனந்தன் நெருக்கடி கொடுத்தார்.
அதேபோல், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜூ, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோருக்கு லஞ்சமாகப் பல கோடிகளை கொடுத்துள்ளேன். ஒரு கட்டத்தில் வருமானத்தை விட செலவு அதிகமானது. அதனால் போலீசாரையும், ஆனந்தனையும் சந்தித்து மாத மாமூல் தொகையை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டேன்.

ஆனால், 24 மணி நேரமும் மது விற்றுக் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் போலி மது; புதுச்சேரி மது ஆகியவற்றையும் விற்றுக் கொள்ளும்படியும் அவர்கள் கூறினர். அவர்களை என்னால் சமாளிக்க முடியவில்லை. இவர்களுக்கு மாமூல் பணம் கட்டியே தற்போது எனக்கு பல லட்சம் கடன் உள்ளது. இதிலிருந்து மீள முடியாது என்பதால், இந்த தொழிலை விட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்தத் தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்” எனக் கூறியதாக தெரிவிக்கிறது போலிசு.

இதற்கிடையில், டிஎஸ்பி அலுவலகத்துக்கு செல்லும் முன் நெல்லையப்பன் 3 வீடியோக்களில் பேசி அதை, தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களில், “கடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்தி வருகிறேன்.  திருப்போரூர் ஒன்றிய அதிமுக இளைஞர் அணிச் செயலாளரான தண்டலம் ஆனந்தனுக்கு மட்டும் மாதம் ரூ.23 லட்சம் வீதம் ரூ.20 கோடி சம்பாதித்துக் கொடுத்துள்ளேன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் நன்றியும், மனசாட்சியும் இல்லாத மனிதர்தான் ஆனந்தன். திருப்போரூர் காவல் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக கண்ணன் வந்து 8 மாதம் ஆகிறது. அவருக்கு மாதம் ரூ.1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளேன்.

இதுபோக அடிக்கடி செலவுக்காக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளேன். மாமல்லபுரம் டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளாக மாதம்தோறும் ரூ.1.2 லட்சம் கொடுத்துள்ளேன். கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டருக்கு கோவளத்தில் உள்ள 10 லாட்ஜ்களில் இருந்து தலா ரூ.40 ஆயிரம் வீதம் மாதம் ரூ.4 லட்சம் வாங்கி கொடுத்தேன். விஏஓ, ஆர்ஐ, தாலுகா அலுவலகத்துக்கு வேலை விஷயமாக சென்றாலே என்னிடம் லஞ்சம் கேட்கிறார்கள். தற்போது எனக்கு ரூ.50 லட்சம் கடன் உள்ளது. இந்த தொழிலுக்கு வந்த பிறகுதான் கெட்டு சீரழிந்து விட்டேன்.

தமிழகத்தில் 24 மணி நேரமும் எந்த மதுவும் கிடைக்கிறது. இதை நானே செய்துள்ளேன். அதனால்தான் மதுவை தடை செய்ய வேண்டும் என கூறுகிறேன். பார் தொழிலில் எப்போது அதிகாரிகள் ரெய்டுக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் வரும்போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்.  என்னிடம் பணம் கொடுத்து வைத்தது போல் கேட்பார்கள். ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன் என்று தெரியவில்லை. பெங்களூருவில் ஓட்டலில் வேலை பார்த்தபோது, நிம்மதியாக இருந்தேன். குறித்த நேரத்துக்கு சென்றேன். வந்தேன். இப்போது நிம்மதி இல்லை. ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி ரூ.500 -க்கு குடிக்கிறான். அந்த பணத்தை சேர்த்து வைத்தால் எப்படி சந்தோஷமாக வாழலாம் தெரியுமா?

மதுவை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட கலால் பிரிவு போலீசாரே லஞ்சம் கேட்கின்றனர். தற்போது நான் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மதுவை ஒழிக்க பாடுபட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு உருப்படும். இல்லாவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும்” என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

நெல்லையப்பன் வீடியோ:

நெல்லையப்பன் மரணத்திற்கு காரணமான மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ் விடுமுறையில் இருப்பதால் அவர் வந்தவுடன் விசாரணை செய்யப்படும் என்று கூறுகிறது போலீசு தரப்பு. கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாண்டியனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அதிமுக பிரமுகர் ஆனந்தன் மற்றும் போலிசு மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

மூடு டாஸ்மாக்கை ! என தமிழகமே கொதித்தெழுந்து போராடிய போது, டாஸ்மாக்கை மூடினால், கள்ளச்சாராயம் பெருகிவிடும், போலி மதுவிற்பனை பெருகி விடும் என்று நீலிக்கண்ணீர் வடித்தனர் ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளும், அதிகாரவர்க்கத்தினரும். மதுவுக்கு எதிரானதுதான் தமது அரசு என்று பிரகடனம் செய்தார் ’மிடாஸ்’ மாமி ஜெயா.

”குடிகெடுக்கும் டாஸ்மாக் கடைகள் எங்கள் பகுதியில் வேண்டாம்” என பொதுமக்கள் கடைகளை அடித்து நொறுக்கி போர்க்குணமிக்க போராட்டத்தை முன்னெடுத்த போது தடி கொண்டு கடைகளைப் பாதுகாத்ததும் இதே போலீசுதான்.

இன்று நெல்லையப்பன் விவகாரத்தில் மாமூல் கொடுத்துவிட்டு, போலி சரக்கு, பாண்டிச்சேரி வரி ஏய்ப்புச் சரக்கு எது வேண்டுமானாலும் 24 மணிநேரமும் விற்றுக் கொள் என டாஸ்மாக் தொழிலை ’அடுத்த கட்டத்திற்கு’ நடத்தியதும் இதே போலீசுதான்.

இந்த போலீசும் அரசும்தான் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே இயங்குகிறதாம் ! நம்புங்கள் !

எழில்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க