ருத்துவ கனவோடு இருந்த அனிதாவை நரபலி வாங்கி, அமலுக்கு வந்த ‘நீட்’, இந்த ஆண்டு மூவரை பலி வாங்கியுள்ளது; எண்ணற்ற மாணவர்களின் கனவுகளை காவு வாங்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகளின் மூலமாகவாவது ‘நீட்’ துயரங்கள் முடிவுக்கு வரும் என காத்திருந்த நிலையில், மீண்டும் ஆரவாரத்துடன் மனுநீதி அரசு அரியணை ஏறியுள்ளது.

மனுநீதியின்படி, யார் கொல்லப்படுவார்களோ அவர்களே தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ (வயது 18) பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்களைப் பெற்றவர். அவருடைய பெற்றோர்  திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்ப்பவர்கள். நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தூக்குமாட்டி ரிதுஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வருட நீட் பலி : மாணவிகள் ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஷ்யா.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா (17) பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததைப் பார்த்து மண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு மாய்ந்திருக்கிறார். இவருடைய அப்பா, பேருந்து நிலையத்தில் வாகனங்களை பாதுகாக்கும் நிலையம் நடத்திவருகிறார்.

மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தில் பிறந்தவர் மோனிஷா (18). “நீட் தேர்வில் நான் மார்க் கம்மி, இனி நான் இருக்கக்கூடாது” என எழுதி வைத்துவிட்டு, தூக்கு மாட்டி இறந்து போனார் மோனிஷா.

இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரின் ‘தமிழகத்துக்கு நீட் விலக்கு நிச்சயம் உண்டு’ என்கிற வாக்குறுதியை நம்பி காத்திருந்த அனிதா, நீட்டின் திடீர் அமலாக்கத்தால் நம்பிக்கை உடைந்து தன்னை மாய்த்துக்கொண்டார்.

அதற்கு பொறுப்பான மாநிலத்தை ஆளும் அதிமுக அரசோ, பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசிய நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களோ குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை. மாறாக, அனிதா நீட்’ஐ எதிர்கொள்ள முடியாமல் இறந்தார் என காரணத்தை கண்டுபிடித்தார்கள்.

படிக்க:
♦ நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்
♦ நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

“அனிதா மரணத்தை நீட் புதிதாக கொண்டு வந்ததால் அதனை பற்றிக் கொள்ளும் தயாரிப்பு, பக்குவம், முனைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்வியின் பலன்” என்றார்கள். ரிதுஸ்ரீ எல்லா தேர்வு தயாரிப்புகளையும், பயிற்சிகளையும் முறையாக கையாண்டு முயன்று, முட்டி, மோதி உயிரை விட்டிருக்கிறார்.

அனிதாவும், ரிதுஸ்ரீயும் முன்னேறத் துடிக்கும் ஒரு இனத்தின் சமூகக் கூட்டு விழைவின் முகங்கள். தேர்வு தோல்வி மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்ளும் சராசரிகள் அல்லர் அவர்கள்.” என்கிறார் ராஜ் தேவ்.

நீட் கொலைகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், அவை யாவும் ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு கேட்பதாக இல்லை.

இந்த நிலை தொடர்ந்தால்,  தமிழினம் அதன் உயரவாவையும், உயர் குறிக்கோளையும் ஒட்டுமொத்தமாக கைவிட்டு எழுத்தர், பணியாளர், கணக்கர், அலுவலர், பியூன் போன்ற வேலைகளுக்கு அதனை தகுதியிறக்கம் செய்து விடுமோ என்கிற கவலையை முகநூலில் பகிர்ந்திருக்கிறார் ராஜ் தேவ்.

நன்றாக படிக்கும், நிறைய மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? தற்கொலைகள் தனிப்பட்டவர்களின் விழைவா, அல்லது ஆளும் அமைப்புகளின் திணிப்பா?

“முன்பெல்லாம் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள்தான் அதிக அளவு தற்கொலை செய்து கொள்வார்கள். இப்போதெல்லாம் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களே அதிகமாக இந்த முடிவை எடுக்கிறார்கள். கல்வியின் நிமித்தம் நமது குழந்தைகளுக்கு மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது…

தேர்வில் தோல்வியடைவதோ அல்லது தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்குவதோ எதுவும் அவர்களுக்கு பொருட்டல்ல. நம்முடைய குழந்தைகள் படிக்கக் கூடாது என்பது மட்டுமே அவர்களின் பிரதான நோக்கம். அதற்காக மிக நுட்பமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன” என நீட் தற்கொலைகளின் பின்னணியைப் பேசுகிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.

இந்தக் காய்களை நகர்த்துகிறவர்கள் யார்? தமிழக மக்களின் கல்வி உரிமையை அதிமுக அரசு டெல்லிக்கு அடகு வைத்துவிட்டதை சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் அருள் எழிலன்.

“இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு 22 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில். ஆனால், அது தமிழக மாணவர்களுக்கு பயன்படவில்லை. நமது கல்வி உரிமையை பொது சொத்தை டெல்லிக்கு அடகு வைத்து விட்டது அதிமுக!” என்கிறார் அவர்.

“தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா தீக்குளித்து உயிர் துறந்திருக்கிறார். 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஜெயிக்க முடியாத ஆதங்கத்தில் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ பலியாகி விட்டார்.

வாழ வேண்டிய இரு பெண் குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பட்டியல் இனம் சார்ந்தவர்களில் 20,009 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63,749 பேரும், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களில் 7,04,335 பேரும் வெல்ல முடிகிறதென்றால், நியாயமான முறையில்தான் நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றது என்பதை எப்படி நம்புவது?” என கேள்வி எழுப்புகிற எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி,  சமூக நீதி நம் கண்ணெதிரில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.

படிக்க:
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?
♦ நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தற்கொலைகள் மூன்றாக உயர்ந்துள்ள இந்நேரத்தில், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைவதெல்லாம் ஒரு விஷயமா? தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம். இதை பெரிய தியாகமாக சித்தரிக்காதீர்கள் என்று எழுதுவோருக்காக வழக்கறிஞர் கிருபா முனுசாமி நீண்ட பதிலை சொல்ல விரும்புகிறார்..

“பொதுவாக, மருத்துவக் கல்வியை பயில முடியாது தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் பின்புலத்தை பார்த்தோமேயானால், இந்திய ஜாதிய சமூகத்தில் சிறப்புரிமை வாய்க்கப்பெறாத, ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும், மனிதத் தன்மையற்ற நடத்தைக்கும் உட்படுத்தப்படும் ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நால்வர்ண முறை

இந்த ஜாதிய கொடுமைகளிலிருந்து வெளியேறி, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், அவர்களுக்கு இருக்கக்கூடிய, இயலக்கூடிய ஒரே வழி ‘கல்வி’ மட்டுமே! ஏனெனில், கல்வி கிடைத்துவிட்டால், அதன் விளைப்பயனாக கிட்டும் உறுதியான வேலைவாய்ப்பும், கௌரவமான ஊதியமும் தன்னியல்பாகவே சுயமரியாதையுடனான கண்ணியமான வாழ்க்கையை சாத்தியப்படுத்தும் என நம்புகிறார்கள். அது உண்மையும் கூட.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அப்படி அவர்கள் பயிலும் கல்வி ஏன் மருத்துவமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் மேலெழுகிறது. அதற்கு முக்கிய காரணம், மனித உயிர்களை காப்பதாலோ என்னவோ மற்ற எந்த தொழில்களை விடவும் மருத்துவத் தொழில் முதன்மையானதாக கருதப்படுகிறது. மருத்துவர் என்றாலே டாக்டர் அம்மா அல்லது டாக்டர் ஐயா என்ற பின்னொட்டும் தானாக சேர்ந்துக்கொள்கிறது.

அதன்காரணமாகவே, நெடுங்காலம் வரையிலும் மருத்துவப் படிப்பையும், அத்தொழிலையும் சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே பயிலமுடியும் என்ற அடிப்படையற்ற தகுதியை விதித்து பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டனர். ஒருவர் தன் வாழ்நாளில் மருத்துவரை அணுகும் அளவிற்கு, தொழில்நுட்ப நிறுவனத்தையோ அல்லது நீதித்துறையையோ அணுகுவாரா என்றால், கண்டிப்பாக இல்லை. ஆகவே தான், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மருத்துவர் என்ற கனவு நிரந்தரமாக குடியேறி விட்டது!

மருத்துவம், பொறியியல், சட்டம் கடந்து வேறு படிப்புகள் அல்லது தொழில்கள் என்று எடுத்துக்கொள்வோம். இந்நாட்டில் ஒருவரின் மீதான மதிப்பென்பது அவரின் வேலையை சார்ந்ததா இல்லையா? இங்கே தொழில் என்பது ஜாதியைப் பொறுத்ததா இல்லையா? ஜாதிய அடுக்கில் மேலிருப்பவர்களுக்கு சேவை செய்யவே மற்ற ஜாதிகள், அந்தந்த ஜாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்வதே கடமை என்ற வரலாறு இன்றும் தொடர்கிறதா இல்லையா?

வெளிநாடுகளில் பார்க்கும் பொழுது, ஒரு பெரும் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கும் ஒருவரின் மகள் முடி திருத்தும் வேலை செய்கிறார், சொந்தமாக உணவகம் வைத்திருப்பவரின் மகன் நடனம் ஆடுகிறான். அங்கிருக்கும் எவரும் குழந்தையை பார்த்துக் கொள்வதிலிருந்து எல்லாவித பகுதிநேர வேலையை செய்கின்றனர், சுயமரியாதையான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஏனெனில், அங்கே எந்த தொழிலும் இழிவில்லை. தொழிலைக்கொண்டு மனிதரை இழிவாகப் பார்க்கும் மனநிலையும் இல்லை. அது நம் நாட்டில் சாத்தியமா?

துணி துவைக்க ஒரு ஜாதி, மலம் அல்ல ஒரு ஜாதி, சுடுகாட்டிற்கு ஒரு ஜாதி, பறை அடிக்க, வியாபாரம் செய்ய, மேளம் அடிக்க, ஏன் கோயிலில் மணி அடிக்க கூட என்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஜாதியை இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இங்கிருந்து உதவித்தொகையில் வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் பணம் பற்றாத நிலையில் பகுதிநேர வேலை செய்து பணம் ஈட்டுவது வழக்கம்.

அதிலும் கூட, பார்ப்பனரல்லாத மாணவர்கள் உணவகங்களில் தட்டு கழுவும் வேலை செய்ய, பார்ப்பன மாணவர்களோ அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் வீடுகளில் சடங்குகள் நடத்தியும், அவர்கள் கட்டியிருக்கும் கோயில்களில் நோகாமல் பூஜை செய்தும் சம்பாதிப்பதை காண முடிகிறது. கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் அவரவர் ஜாதி விதித்திருக்கும் தொழிலை கடமைத் தவறாது செய்ய முடிகிறது என்றால், ஜாதியும், அது வகுத்திருக்கும் தொழிலும் நம் மனங்களில் அந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது.

ஜாதியைப் பொறுத்து தொழிலை திணிக்கும், தொழிலைக் கொண்டு மனிதரை அளவிடும் உங்கள் யாருக்கும்  மருத்துவ நுழைவு தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்டவர்களை விமர்சிக்க அருகதை இல்லை. ஏனெனில் அவர்களை சாவுக்கு தள்ளிக் கொன்றதே நீங்கள்தான்!

கௌரவம், கௌரவம் என்று எல்லாப் பளுவையும் எங்கள் தலைகளில் சுமத்திவிட்டு, திரைத்துறை, ஊடகம், நாட்டியம், வசதியான உடை, நினைத்தால் திருமணம், இல்லையேல் மறுமணம் என்று விரும்பிய வாழ்க்கையை சுதந்திரமாக வாழும் சிறப்புரிமை பெற்ற நீங்கள்தான், அடுத்தவர் வாழ்க்கையை அளக்கிறீர்கள். முதலில்  ஜாதியத் தொழில்களை ஒழியுங்கள், பிறகு பாடம் எடுக்கலாம்!”.

வினவு செய்திப் பிரிவு
தொகுப்பு : கலைமதி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

5 மறுமொழிகள்

 1. காதல் தோல்வி அதனால் தற்கொலை இனி காதலே வேண்டாம்
  பத்தாம் வகுப்பில் தோல்வி அதனால் தற்கொலை இனி தேர்வே வேண்டாம்
  தொழில் பிரச்சனையால் தோல்வி அதனால் இனி தொழில்களே வேண்டாம்

  உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஜாதியை வைத்து அரசியல் செய்வதை பார்க்கும் போது வெறுப்பு தான் வருகிறது. ராமதாஸ் போன்றவர்கள் வன்னியர்களை வைத்து அரசியல் செய்வதற்கும் உங்களை போன்றவர்கள் தலித்துகளை வைத்து அரசியல் செய்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது, இரண்டுமே வெறுப்பை வளர்க்கும் அரசியல் தான்.

 2. ஆமா, தமிழன் எப்போ தற்கொலை பண்ணாம இருந்தான்? மயிர் நீப்பின் உயிர் நீக்கும் மானஸ்த புண்ணாக்குதான தமிழன். மடத்தனமான கலாச்சாரத்த சொல்லாம நீட் கத உட்டுகிட்டு இருக்க

 3. தமிழ் இந்துவில் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலம் மஹாராஷ்டிரா இரண்டாவது தமிழகம் என்று உள்ளது.

 4. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு தியாகி பட்டம் கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள். இது என்ன முதுகெலும்பில்லாத கோழைத்தனம்? தன்னம்பிக்கை இல்லாத ஏட்டு கல்வியால் என்ன பயன்? முதலில் எந்த தடை வந்தாலும் எதிர்த்து எதிர் நீச்சல் போட கற்றுக்கொடுங்கள். தமிழர்கள் சிறுபான்மையாக வசிக்கும் நாடுகளில் இதை விட தடைகளை எல்லாம் தாண்டித்தான் சாதனை செய்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை.

 5. இங்கு பதிவிட்டுள்ள அன்பர்கள் தற்கொலை குறித்து எமிலி தர்க்கம் என்ற பிரஞ்சு அறிஞர் ஆய்வுகளைப் படிக்க வேண்டும்.
  அந்த மனநிலைக்கு சமூகக் காரணிகளே அதிகம்.
  சசிபெருமாள், தினேஷ் நல்லசிவம் ஆகிய இருவரது தற்கொலைகளை நினைத்துப் பாருங்கள்.
  தற்கொலைகள் சமூகச் சீரழிவின் அடையாளம்.
  சிறுவனின் மரணம் என்னை மிகவும் பாதித்த நிகழ்வுகளில் ஒன்று.
  உயிரோடிருப்பர் இறக்க, இவ்வுலக மாந்தர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க