பத்திரிகைச் செய்தி

 நாள் : 06.06.2019

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் தீர்வு என்ன?

னிதா மரணத்தின் துயரமே மறையாத நிலையில் நீட் தேர்வினை எழுதி அதில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் அல்லது தேர்வாகாததால் 3 மாணவிகள் தமிழகத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

தன்னையே தீ வைத்துக்கொண்டு எரித்த பட்டுக்கோட்டை மீன் வியாபாரியின் மகள் வைஸ்யா என்ற மாணவியின் உணர்வுகள் எப்படிப்பட்டவை? அவரின் கனவு, ஆசைகள்  எப்படிப்பட்டதாக இருக்கும்? மருத்துவராக வேண்டும் என்ற கனவு மண்ணாய்ப் போனதே என்ற விரக்தி அவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.  தற்கொலைகளுக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டாமா?

இந்த வருட நீட் பலி : மாணவிகள் ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஸ்யா.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரிகளின் இடங்கள் தமிழ் மாணவர்களுக்குத் தகுதி இல்லை என்று மறுக்கப்பட்டு பணம் படைத்தவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டசபை தீர்மானம்  குடியரசுத்தலைவரின் அலுவலகத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் சட்டசபைக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

12-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் எல்லாம் வீண், நுழைவுத்தேர்வின் அடிப்படையில் எடுக்கும் மதிப்பெண்களே மருத்துவராகும் தகுதியை தீர்மானிக்கும் என்ற, நீட் தேர்வே பெரும்பான்மை மாணவர்களை மருத்துவப்படிப்பில் இருந்து துரத்துவதையே நோக்கமாகக் கொண்டது.

பல லட்சங்கள் இல்லாமல் நுழைவுத்தேர்வில் சேர்வதே சாத்தியமில்லை. சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இனி அறவே வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் திட்டம்.

துப்பட்டா போடக்கூடாது, முழுக்கை சட்டைப்போடக்கூடாது, கம்மல் போடக்கூடாது என்று அனைத்தையும் அவிழ்த்துப்பார்க்கும் கொடூரத்தை ஏற்றுக்கொண்டு “வேறென்ன செய்ய முடியும்?” என்று அமைதியாக நாம் இருக்கும் வரை, இப்படிப்பட்ட படுகொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மொத்தக் கல்வியே இன்றைக்கு கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கப்பட்டு சாதிக்கு ஒரு நீதி, குலக்கல்வித் திட்டம், இந்தித்திணிப்பு என காவிமயமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

படிக்க:
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?
♦ தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி

இது ஏதோ கல்வித்துறையில் மட்டுமல்ல; மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் என திட்டமிட்டு தமிழினத்தை ஒழிப்பதற்கான மோடி அரசின் திட்டங்களில் ஒன்றாகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு மாணவர்களை பலிவாங்கிக் கொண்டு இருக்கிறது.

அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் மருத்துவக்கல்வி பாரபட்சமின்றி கிடைக்க, நீட் தேர்வு இரத்து செய்யப்பட வேண்டும். நீட்-க்காக இனி எந்த உயிர்ப்பலியும் தமிழகத்தில் நிகழக்கூடாது.  நீட் உள்ளிட்ட தமிழகத்தின் மீதான அடக்குமுறைகளை இரண்டில் ஒன்று பார்ப்போம் ! அடக்குமுறைகள் வென்றதாக வரலாறில்லை!


மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க