மசாலா : மோடி அரசு கொண்டு வந்த டீமானிடேஷன் மோசடிகளை மையமாக வைத்து, மோசடி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. ஜே.சி.எஸ் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜூ, பல்லவி டோரா, என்.சி.பி விஜயன், அஜய்குமார் உள்பட பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கே.ஜெகதீசன் இயக்குகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும்புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன், என்கிறார் இயக்குனர் ஜெகதீசன்.

மருந்து: உடனடியாக எச்ச ராஜா, தமிழிசையின் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு சென்றால் மெர்சலே மெர்சலாகும் அளவுக்கு இந்த படத்திற்கு விளம்பரம் கிடைப்பது நிச்சயம்.

♠ ♦ ♣

மசாலா ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம், கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்தது. ஜூகிபா என்ற கதையைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளனர் என்று பிரபல எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கரும், படத்தின் தயாரிப்பாளரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், வழக்கு தொடுத்துள்ள தமிழ் நாடனின் ஜூகிபா கதைக்கும், எந்திரன் படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் காப்புரிமைச் சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்குத் தொடுக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மருந்து : இயக்குநர் ஷங்கர் தம்மாத்துண்டு கதையை சுட்டுத்தான் பிரம்மாண்டமாக எடுக்கிறார் என்பது நீதிமன்றத்தின் மூலம் தெரிய வருகிறது. இனி தமிழ் சினிமாவிற்கு என்று கதைத் திருட்டை கண்டுபிடிக்கும் போலீசு பிரிவை உருவாக்க வேண்டும் போல. நைசா சுடுகிறவர்தான் மாஸ் டைரக்டராக பவுசு காட்ட முடியும் என்பதற்கு ஷங்கரே சாட்சி!

♠ ♦ ♣

மசாலா : நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மூன்று மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நீட் தேர்வோ, பள்ளி இறுதத் தேர்வோ, எந்தத் தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வில் ஒருமுறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று, மீண்டும் முயலவும், வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில், பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

இது போதாது என்று, அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள், உண்மையாகவே கொள்கைரீதியாக நீட்டை எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக் கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அவரைப் போல தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.

  • சினிமா நடிகை கஸ்தூரி

மருந்து : நீட் தற்கொலைகளுக்காக பெற்றோர்களையும், நீட்டை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும் நொட்டை சொல்கிறார் ‘ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு’ கஸ்தூரி. எய்தவனை விடுத்து அம்புகளை குற்றவாளியாக்கும் வம்பு மாமி கஸ்தூரி காற்றடித்தாலும் காவிக் கறைத் துண்டை விட்டுக் கொடுக்க மாட்டார்.

♠ ♦ ♣

மசாலா: பிரேமம் படத்தில் புகழ்பெற்றவர் சாய் பல்லவி. அதன்பிறகு தனுசுடன் நடித்த மாரி-2 படத்தில் அவரது நடனம் பெரிதாக பேசப்பட்டது. சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார் சாய்பல்லவி.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நக்சலைட்டுகள் பற்றிய கதையில் உருவாகும் அப்படத்தில் இளம் நக்சலைட்டாக சாய்பல்லவி நடிக்கிறாராம்.

மருந்து : ரவுடி பேபிகள் நக்சலைட்டாக நடிக்கப் போவதையும் ராணாக்கள் தமது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட நக்சலைட் களத்தையும் எடுத்திருப்பதைப் பார்த்தால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது, பாவம் நக்சலைட்டுகள்!

♠ ♦ ♣

மசாலா: பிரபல மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு தனது சிதம்பர நினைவுகள் என்ற புத்தகத்தில் சிவாஜியை சந்தித்த அனுபவத்தை எழுதியுள்ளார். சிவாஜியின் நடிப்பாற்றல், பேச்சாற்றல், நினைவாற்றல் என பலவற்றை குறிப்பிட்டுள்ளார். தமிழாக்கம் செய்யப்பட்ட இவரது நூலிலிருந்து சிவாஜி பற்றிய தகவல்களை தொகுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைத்துள்ளனர்.

கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், உள்ளிட்ட சிவாஜி நடித்த முக்கிய படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. “என்னைப்போல் சிவாஜியால் நடிக்க முடியும். என்னால் சிவாஜி போல் நடிக்க முடியாது” என்று உலகப் புகழ்பெற்ற நடிகர் மார்லன் பிராண்டோ சொன்னதும் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மருந்து : இருக்கட்டும். தமிழக முன்னேற்ற முன்னணி என்றொரு கட்சி ஆரம்பித்து மண்ணைக் கவ்வியவர் சிவாஜி கணேசன். அந்த வீர வரலாற்றையும் பாடத்தில் சேர்த்தால் சிம்பு முதல் விஷால் வரை அடுத்த முதலமைச்சர் ஆகலாம் எனும் சினிமாக்காரர்களின் அட்ராசிட்டியை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்கலாமே?

♠ ♦ ♣

மசாலா: தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப் போவதாக ஒரே சமயத்தில் இரண்டு அறிவிப்புகள் வெளியாகின. ‘தலைவி’ என ஒரு படமும், ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் மற்றொரு படமும் அறிவிக்கப்பட்டன.

‘தலைவி’ படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக தமிழ் கற்று வரும் கங்கனா கொஞ்சம் குண்டான தோற்றத்தைப் பெறுவதற்காக உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளாராம். படத்தின் பட்ஜெட்டாக 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மருந்து : சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ 1 அக்கியூஸ்டான ஜெயாவிடம் நீதிமன்றம் கட்டச் சொன்ன அபராதமும் நூறு கோடிதான். பட்ஜெட்டும் நூறு கோடிதான். பட்ஜெட் விவகாரம் இருக்கட்டும், படைப்பில் அந்த அபராதம் வருமா? நிச்சயம் வராது. கொள்ளைக்காரி என்று படமெடுக்க வேண்டியவரை தலைவி என்று எடுக்கிறார்கள் கோடம்பாக்கத்து கோமாளிகள்!

♠ ♦ ♣

மசாலா:  ‘பாரத்’ படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் நடைபெற்ற போது சல்மான் காரில் ஏறுவதற்கு வசதியாக அவருடைய செக்யூரிட்டிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

அப்போது சல்மான், திடீரென அவருடைய ஒரு செக்யூரிட்டியை அறைந்தார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

மருந்து : 1998-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் அபூர்வ கருப்பு இன மானை வேட்டையாடினார். 2002-ம் ஆண்டில் முழு போதையில் காரோட்டி ஒருவரைக் கொன்று நால்வரை படுகாயப்படுத்தினார். இரண்டு வழக்குகளிலும் விடுதலையான குற்றவாளி சல்மான் கான் தனது செக்யூரிட்டியை கொல்லாமல் அறைய மட்டும் செய்தார் என்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

♠ ♦ ♣

மசாலா: இந்தி நடிகை  ப்ரியங்கா சோப்ரா அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனசை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், அவர் லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தனக்கும் தன்னுடைய கணவர் நிக் ஜோனசுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

நேர்காணலில், எதிர்காலத்தில் அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. நானும் என்னுடைய கணவரும் அரசியல் ஆர்வம் மிக்கவர்கள். மாற்றத்தையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவர்கள். என்னுடைய கணிப்புப் படி, நானும், அவரும் விரைவில் தீவிர அரசியலில் இறங்குவோம். நான் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமர் ஆவேன். அவர், அமெரிக்க அதிபர் ஆவார். இது உறுதி. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்கள் இருவருக்கும் பெரிய ஆர்வம் உண்டு. என்றாலும், அதில் நேரடியாக தலையிட யோசித்துக் கொண்டிருந்தோம். இனிமேலும் அப்படிப் பொறுமையாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

மருந்து : மோடியை நேருக்கு நேர் சந்தித்து பேசியிருப்பதால் பிரதமர் வேலை எவ்வளவு சுலபம் என்ற இரகசியம் பிரியங்காவிற்கு தெரிந்திருக்கும். மேலும் மோடி, ட்ரம்பின் அறிவு, தகுதி, தராதரத்தை வைத்துப் பார்க்கும் போது ஆச்சியும் ஐயரும் முறையே இந்தியாவையும் அமெரிக்காவையும் ஆள விரும்புவதில் தவறே இல்லை.

♠ ♦ ♣

மசாலா: ஆந்திர முன்னாள் முதல்வரும் இன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை யாத்ரா என்ற பெயரில் தயாரானது. அதில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக போவதாகவும், அதில் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் சூர்யா நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து ஆந்திர பத்திரிகையாளர்கள் சூர்யாவிடம் கேட்டபோது நானும் அந்த செய்திகளை படித்தேன். ஆனால் அதில் உண்மை இல்லை. அப்படி நடிக்க கேட்டு யாரும் என்னை இதுவரை அணுகவில்லை. ஜெகன் அண்ணாவுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் வெற்றி பெற்று முதல்வராகி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஜெகன் அண்ணா வாழ்க்கையை சொல்லும் படம் நல்ல திரைக்கதையுடன் வந்தால் அவர் கேரக்டரில் நடிக்க விரும்பம்தான் என்று கூறியிருக்கிறார் சூர்யா.

மருந்து : அப்போ எடப்பாடி வாழ்க்கை வரலாற்று படத்தில் எடப்பாடியாக சிவக்குமார் நடிப்பாரா? ஓ.பி.எஸ் மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் வாழ்க்கை வரலாற்று படத்தில் கார்த்தி நடிப்பாரா?

♠ ♦ ♣

மசாலா: சூர்யா நடித்து வெளிவந்த ‘என்ஜிகே’ படத்திற்காக திருத்தணியைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சுமார் 6 லட்ச ரூபாய் செலவு செய்து, 215 அடி உயர கட்அவுட் ஒன்றை வைத்தனர். அது பற்றி செய்திகள் வெளிவந்த ஒரு நாளிலேயே நகராட்சி அதிகாரிகளால் அந்த கட்அவுட் அகற்றப்பட்டது.

மருந்து: எப்போதும் பிசி என்று பேச வாய்ப்பில்லாத தொலைபேசி எண்ணைக் கொண்டுள்ள அகரம் பவுண்டேசன் மூலம் ஏழைபாழைகளுக்கு கல்வி உதவி செய்யும் வள்ளலுக்கு ஆறு லட்ச ரூபாயில் கட்அவுட் வைப்பது ஒரு குற்றமா?

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க