செய்தி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை இவ்வளவு காலம் நடத்தாமல் இழுத்தடிப்பது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் இரண்டு வாரத்தில் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நேற்று 02.07.2019 உத்தரவிட்டுள்ளது.

நீதி: உள்ளபடியே எடப்பாடியின் ஆட்சியை சகித்துக் கொள்ளும் மக்கள் இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஏன் கவலைப்படப் போகிறார்கள்? கமிஷனும், கட்டிங்கும், மாமூலும் உள்ளூர்வரை பாய்வது தடைபடுவதால், இது ரத்தத்தின் ரத்தங்கள் கவலைப்பட வேண்டிய விவகாரமாயிற்றே?

♠ ♠ ♠ 

செய்தி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் திமுக தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கை இன்று (03.07.2019) விசாரிக்க உள்ளது.

நீதி: சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து உச்சநீதிமன்றம் சொல்லும் என்பது மோடி ஆளும் காலத்தில் நடக்குமா என்ன?

♠ ♠ ♠ 

செய்தி: மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள  மாவட்டங்களில் 5-வது நாளாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 47 பேர் பலியாகியிருக்கின்றனர்.

நீதி: மராட்டியத்தின் விதர்பா பகுதியில் மக்கள் குடிநீருக்காக அலைகின்றனர். மும்பையில் கனமழையால் சுவர் இடிந்து மக்கள் சாகின்றனர். இதுதான் இன்றைய இந்தியா!

♠ ♠ ♠ 

செய்தி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நீதி: பாஜக கொண்டு வந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை பாஜக-வின் பினாமி அரசு மறுக்கவா முடியும்?

♠ ♠ ♠ 

செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

(மத்தியப் பிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் பாஜக எம்.எல்.ஏ. தாக்கினார். இவர் பாஜக பொதுச் செயலாளரும் எம்பியுமான விஜய் வர்கியாவின் மகனாவார்.)

நீதி: குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யா சிங் தாகூரே தவறு செய்யவில்லை என எம்.பி-யாக்கப்பட்ட பிறகு மட்டையால் அடிப்பதெல்லாம் ஒரு தவறா என்ன?

♠ ♠ ♠ 

செய்தி: உலகின் மிகப்பெரிய பணக்காரரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ் தனது மனைவி மாக்கென்சியை விவாகரத்து செய்வதற்காக ரூ. 2.62 இலட்சம் கோடி ஜீவனாம்சம் வழங்குகிறார். இவ்வளவு தொகையை மனைவிக்கு வழங்கிய பிறகும் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு ரூ. 8.14 இலட்சம் கோடியாக இருப்பதால் அவர்தான் உலகின் முதல் பணக்காரராவார்.

நீதி: இந்த விவாகரத்து கருணை மற்றும் நிர்ப்பந்தம், ஆங்காங்கே வேலை நிறுத்தம் செய்யும் அமேசான் ஊழியர்களிடம் மட்டும் செல்லுபடியாவதில்லை.

♠ ♠ ♠ 

செய்தி: இஸ்ரேல், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கு நேட்டோ நட்பு நாடு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு, அமெரிக்க செனட் (மேலவை) ஒப்புதல் வழங்கி உள்ளது.

நீதி: அமெரிக்காவின் அடியாள் வேலைக்கு நட்பு நாடு என்று ஒரு பட்டமா?

♠ ♠ ♠ 

செய்தி: தொடக்கம் முதல் இயக்குநர் அமர்த்தப்படாமல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படுகிறது. இப்பதவி ஆறு மாதங்களில் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கல்வி அமைச்சர் உறுதியளித்தும் அதற்கான விளம்பரம் இதுவரை அளிக்கப்படாமல் உள்ளது.

நீதி: கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று உளறிய எடப்பாடிகளின் காலத்தில் செம்மொழி நிறுவனத்திற்கு இயக்குநர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

♠ ♠ ♠ 

செய்தி: “ரேபரேலி மக்களவை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன ரயில்வே பெட்டி தொழிற்சாலையை தனியார்மயமாக்கக் கூடாது” என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

நீதி: நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களில் தனியார்மயத்தை வெள்ளம் போல திறந்து விட்ட கட்சியின் தலைவருக்கு இப்போது தனியார்மயம் வேண்டாமாம்!

♠ ♠ ♠ 

செய்தி: அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை விட அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை எட்டியிருப்பதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் அந்நாடு நெருப்போடு விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதி: அணுகுண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை குவித்து வைத்திருக்கும் அமெரிக்கா ஒரு தீக்குச்சியை வைத்திருக்கும் ஈரானை மிரட்டுகிறது.

♠ ♠ ♠ 

செய்தி: கென்யா நாட்டின் நைரோபியிலிருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு கென்யா ஏர்வேஸ் விமானம் நேற்று முன்தினம் வந்தது. அப்போது விமானத்தில் லேண்டிங் கியரிங் பகுதியில் திருட்டுத்தனமாக நுழைந்து பயணம் செய்த ஒருவர், விமானம் இலண்டன் நகரில் வானில் பறக்கும் போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நீதி: வாழ்விழந்த ஆப்ரிக்க மக்கள் அகதிகளாக படகுகளில் வந்தால் மூழ்கிச் சாகிறார்கள். வானில் பறந்தால் விழுந்து சாகிறார்கள்.

♠ ♠ ♠ 

செய்தி:  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மூடப்பட இருப்பதாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும் என, நிறுவனத்தின் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத் தலைமை பொது மேலாளர் அறிவித்துள்ளார்.

நீதி: தானே சாகப்போகும் ஒன்றை மூடப்போவதாக ஏன் சொல்ல வேண்டும்?

♠ ♠ ♠ 

செய்தி: பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வரும் மோடி, ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

நீதி: கோபேக் மோடி ஹேஷ்டாக்கும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

♠ ♠ ♠ 

செய்தி: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் ரூ. 2.5 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தால் ஆன வில்வமாலையை காணிக்கையாக அளித்துள்ளார்.

நீதி: சிதம்பரம் கோவிலில் உண்டியலே வைத்திராத தீட்சிதர் காட்டில் மழை!

♠ ♠ ♠ 

செய்தி: தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பில் இனி யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளார்.

நீதி: நல்ல சேதி! நம் காதுகள் பாதுகாக்கப்படும் என்று மகிழ்ச்சியடைய முடியாது! பானு கோம்ஸ், கோலாகல சீனிவாஸ், சுமன் சி ராமன், ரவீந்திரன் துரைசாமி போன்ற காவி வண்ண ‘நடுநிலையாளர்கள்’ இனி இரண்டு ஷிப்ட் வேலை பார்ப்பார்கள்.

♠ ♠ ♠ 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க