அன்பார்ந்த வாசகர்களே,
இந்த வார வாசகர் புகைப்படத் தலைப்பு – பாதையோர உணவகங்கள் !
சென்ற முறை கோடையும் தண்ணீரும் என்ற தலைப்பில் கேட்டிருந்தோம், அத்தலைப்பில் படங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி. இந்த வாரம் பாதையோர உணவகங்கள் குறித்து புகைப்படங்கள் எடுத்து அனுப்புமாறு கோருகிறோம்.
நகரத்து நெரிசலிலும், நேரமின்மையிலும் சாப்பிட்டே ஆக வேண்டிய கடமையை உடன் நிறைவேற்றுவதற்கு பாதையோர உணவகங்கள் உதவுகின்றன. மலிவான விலையில், சட்டென நின்று உண்டு முடித்து விட்டு செல்வதற்கு இந்த உணவகங்கள் உதவுகின்றன. மறுபுறம், சென்னை போன்ற மாநகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்தக் கடைகள் அவர்களுக்கு பிழைப்பை அளிக்கின்றன.
சுயதொழில் தொடங்குவதாக இருந்தால் மக்களுக்கு முதலில் கை கொடுக்கும் தொழிலாக இக்கடைகள் விளங்குகின்றன. காலை உணவுக்காக மட்டும் செயல்படும் கடைகள், மதிய உணவுக்கான கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக இக்கடைகள் செயல்படுகின்றன. மக்களுக்கு வேலையளிக்க வழியற்றுப் போன இந்த அரசமைப்பில் இத்தகைய கடைகளே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன.
உங்கள் பகுதியில் செயல்படும் அத்தகைய கடைகளை நன்கு படெமடுத்து அனுப்புங்கள். கூடவே கடை, கடை உரிமையாளர், தொழிலாளிகள் பற்றிய சிறு குறிப்பையும், அவர்களின் சிறப்பம்சங்களையும் மறவாமல் குறிப்பிட்டு அனுப்புக. வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாதையோர கடைகள் பிரபலமாய் இருக்கின்றன.
ஒவ்வொரு நாட்டின் தேசிய அடையாளமாய் தனித்துவமாய் விளங்கக் கூடிய பாதையோர உணவகங்களுக்கென்றே உலக நாடுகளின் நகரங்களில் தனித்துவமான தெருக்களும், பகுதிகளும் உள்ளன. உங்கள் செல்பேசி அல்லது நவீன கேமராவுடன் வெளியே சென்றால் இத்தகைய கடைகளை ஆங்காங்கே காணலாம். அனுப்புங்கள். காத்திருக்கிறோம்.
படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20.06.2019
மின்னஞ்சல் முகவரி: vinavu@gmail.com
வாட்ஸ்அப் எண்: (91) 97100 82506
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்! தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி!
நட்புடன்
வினவு
புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:
♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.
♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.
♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.
♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.
♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.
♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.
♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.
♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.
♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.
♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.
♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.
♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).
புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.