அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 22

அத்தியாயம் நான்கு – புவாகில்பேர் : காலமும் பணியும்
அ.அனிக்கின்

“மார்க்ஸ் தன்னுடைய பொருளாதார ஆரய்ச்சிகளைப் பாரிஸ் நகரத்தில் 1843-ம் வருடத்தில் தொடங்கினார்; முதலில் புகழ்பெற்ற ஆங்கில, பிரெஞ்சுப் பொருளியலாளர்களின் ஆராய்ச்சிகளைப் படித்தார்”(1) என்று எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.

18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தைச் சேர்ந்த புவாகில்பேர் என்ற பொருளியலாளரை அப்பொழுது அநேகமாக மறந்து விட்டிருந்தார்கள், எனவே அவருடைய புத்தகங்களைப் படிக்குமாறு மார்க்சைத் தூண்டியது எது என்று சொல்வது கஷ்டமானது. ஒருவேளை இது தற்செயலாகவும் நடைபெற்றிருக்கலாம். ஏனென்றால் 18-ம் நூற்றாண்டின் முதற்பாதியைச் சேர்ந்த பிரெஞ்சுப் பொருளியலாளர்களின் நூல்களின் தொகுப்பு ஒன்று 1843-ம் வருடத்தில் பாரிசில் வெளியிடப்பட்டிருந்தது; நூற்று முப்பது வருடங்களுக்குப் பிறகு புவாகில்பேரின் கட்டுரைகள் முதன்முறையாக அந்தத் தொகுப்பில் மறுபதிப்புச் செய்யப்பட்டிருந்தன.

புவாகில்பேர் (Boisguilbert)

பிரெஞ்சும் ஜெர்மனும் கலந்த நடையில் எழுதப்பட்டிருந்த இந்தக் கட்டுரைகளின் விரிவான பொழிப்பைத் தெரிந்து கொண்ட பிறகு மார்க்ஸ் அவற்றைச் சுருக்கமாகக் குறித்துக் கொண்டார்; பிறகு அவற்றைப் பற்றிச் சிந்தித்தார். பதினான்காம் லுயீயின் ஆட்சிக் காலத்தில் ருவான் நகரத்திலிருந்த ஒரு நீதிபதியின் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் – அவை அந்தக் காலத்துக்கு மிகவும் வளர்ச்சியடைந்தவையாகும் – இந்தச் சிந்தனைகளை நோக்கி மார்க்சை இட்டுச் சென்றன.

இந்த விரிவான பொழிப்பு இதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அநேகமாகப் பயன்பட்டிருக்க வேண்டும். அவர் இந்தப் புத்தகத்தில் “பிரிட்டனில் வில்லியம் பெட்டி மற்றும் பிரான்சில் புவா கில்பேர் ஆகியோரிடமிருந்து தொடங்கி, பிரிட்டனில் ரிக்கார்டோவுடனும், பிரான்சில் ஸிஸ்மான்டியுடனும் முடிவடைகின்ற ஒன்றரை நூற்றாண்டுக் கால மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தை” (2) முதல் தடவையாக ஆழமான மதிப்பீட்டுக்கு உட்படுத்தினார்.

புவாகில்பேர் ஒரு அறிவாளி, ஒரு எழுத்தாளர் என்ற முறையில் மட்டும் மார்க்சைக் கவரவில்லை. அறிவும் நேர்மையும் நிறைந்த இந்த மனிதர் – அவர் சர்வாதிகார முடியாட்சியின் அரசு இயந்திரத்தில் “ஒரு சிறு திருகாணியாக” மட்டுமே இருந்தார் என்ற போதிலும் – ஒடுக்கப்பட்டுக் கிடந்த பெரும்பான்மையினரான பிரெஞ்சு மக்களுக்கு ஆதரவாகப் பேசினார்; அதற்காகத் துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.

பிரெஞ்சு ஏழைகள்

பதினான்காம் லுயீயின் ஆட்சியின் முதல் இருபதாண்டுகளின் போது கொல்பேர் என்ற அமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தைக் கவனித்து வந்தார். அவர் தொழில்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தபடியால் அதன் வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டார். கொல்பேர், விவசாயத்தை அரசுக்கு நிதி வருமானத்தைக் கொடுக்கும் ஊற்றுக்கண் என்பதாக மட்டுமே கருதி வந்தார். அதனால் சிற்சில தொழில்துறைப் பிரிவுகளில் ஏற்பட்ட வளர்ச்சி விவசாயத்துக்குக் கேடு விளைவிப்பதாக இருந்தது. கொல்பேரின் கொள்கை நிலப்பிரபுத்துவ உறவுகளை அப்படியே விட்டு வைத்தது அதிலிருந்த முக்கியமான குறைபாடாகும். இந்த நிலப்பிரபுத்துவ உறவுகள் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சியைத் தடுத்து வந்தன.

படிக்க:
பாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது ?
♦ சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

அரசர், கொல்பேருக்கு ஒரு முக்கியமான பொறுப்பைக் கொடுத்திருந்தார். அது மட்டும் இல்லையென்றால் கொல்பேரின் முயற்சிகள் ஒருவேளை அதிகமான வெற்றியடைந்திருக்கும். பெரும்புகழ் அடைய விரும்பிய அரசர் லுயீ ஓயாது நடத்திய யுத்தங்களுக்கும்; முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர் செய்து வந்த ஊதாரித்தனமான செலவுகளுக்கும்; எப்படியாவது பணம் திரட்ட வேண்டிய பொறுப்பு கொல்பேருக்கு இருந்தது – கொல்பேரின் மரணத்துக்குப் பிறகு அவருடைய கொள்கையால் ஏற்பட்ட சிற்சில சாதனைகள் வேகமாக மறைந்தன; அவற்றின் குறைகள் இரண்டு மடங்கு பலத்தோடு வெளிப்பட்டன.

1701-ம் வருடத்தில் பிரான்சுக்கு அதிகமான தோல்வியையும் அழிவையும் ஏற்படுத்திய ஸ்பானிஷ் வாரிசுரிமைப் போர் என்று சொல்லப்படுகிற போர் தொடங்கியது. இந்தப் போரில் இங்கிலாந்து, ஹாலந்து, ஆஸ்திரியா இன்னும் சில சிறிய அரசுகளின் கூட்டணிக்கு எதிராக பிரான்ஸ் போர் புரிந்தது.

பதினான்காம் லுயீக்கு வயது அதிகரித்த பொழுது, அவர் அரசை நடத்திச் செல்வதற்குத் தகுந்த திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் மதி நுட்பத்தை இழந்தார். கொல்பேர் சுறுசுறுப்பானவர், கடுமையாக உழைத்தவர். அவருக்குப் பிறகு அவருடைய பதவியைச் சாதாரணமான நபர்களே வகித்தார்கள்.

பதினான்காம் லுயீ

பதினான்காம் லுயீயின் காலத்திலும் அவருக்குப் பிறகு வந்த இரண்டு புர்போன் அரசர்கள் காலத்திலும் நிதித்துறையின் பொதுப் பொறுப்பாளர்தான் மிக முக்கியமான மந்திரியாக இருந்தார். அவரிடம் அரசாங்க நிதித் துறை, நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு விவகாரங்கள், நீதி இலாகா, சில சமயங்களில் இராணுவ விவகாரங்களும் கூட குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவரை உண்மையில் பிரதம மந்திரி என்றுதான் சொல்ல வேண்டும்; ஆனால் அவர் அரசரின் முடிவைத்தான் நிறைவேற்ற வேண்டும்.

பொருளாதாரத் துறையில் ஏதாவது சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் நிதித்துறைப் பொதுப் பொறுப்பாளரால்தான் முடியும். புவாகில்பேர் இதை நன்றாக அறிந்திருந்தார். எனவே அவர் 17-ம் நூற்றாண்டின் கடைசிப் பத்து வருடங்களிலும், 18-ம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களிலும் இந்தப் பதவியை வகித்த போன்ஷர்ட்ரேன் மற்றும் ஷமில்லார் ஆகியோரிடம் தன்னுடைய திட்டங்களின் மூலம் ஏற்படக் கூடிய நன்மைகளைப் பற்றி ஓயாது சொல்லிவந்தார். ஆனால் அவர்கள் அதைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

போன்ஷர்ட்ரே-னுடைய பேட்டி கிடைத்த பொழுது புவாகில்பேர், ”அமைச்சர் அவர்கள் முதலில் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்கக்கூடும். ஆனால் என்னுடைய கருத்துக்களைக் கேட்ட பிறகு உங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வீர்கள்” என்று பீடிகையாகச் சொன்னார். அவர் கருத்துக்களைச் சில நிமிடங்கள் கேட்ட பிறகு அமைச்சர் பலமாகச் சிரித்தார். ”நீ முதலில் சொன்னது சரி தான்; பேச்சைத் தொடர வேண்டாம்” என்றார்.

விசேஷமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் (பிரபுக்கள், மதகுருக்கள் ஆகியோர்) அல்லது அரசாங்கத்திடம் பணம் கொடுத்து மக்களிடம் விருப்பம் போல வரிவசூலிப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள், கொடுக்கல் வாங்கல் செய்து வந்த பணக்காரர்கள் ஆகியோரது நலன்களை பாதிக்கக் கூடிய சீர்திருத்தங்களைப் பற்றிக் கேட்பதற்குக் கூட அரசாங்கம் தயாராக இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சீர்திருத்தங்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தைத் தீவிரமான நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும். பிடிவாதம் கொண்ட ருவான் நீதிபதியின் திட்டங்கள் இதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

அந்தக் காலத்தில் பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் ஆபத்தான நிலைமையைப் பற்றியும், 75 சதவிகிதம் விவசாயிகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு புவாகில்பேரின் எழுத்துக்கள் மிக முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன.

ஆனால் இதைப் பற்றி வேறு பலரும் எழுதியிருக்கிறார்கள். சிறப்புமிக்க அரசியல், பொருளாதார எழுத்தாளரான மார்ஷல் வொபான் 1707-ம் வருடத்தில் பின்வரும் மதிப்பீட்டைச் செய்திருந்தார். பிரான்சின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் வகையற்றவர்களாக வறுமையிலும் 50 சதவிகிதத்தினர் வறுமையின் விளிம்பிலும் 30 சதவிகிதத்தினர் நெருக்கடியில் சிக்கியும் வாழ்ந்து கொண்டிருப்பதாக மதிப்பிட்டார். 10 சதவிகிதத்தினரான மேல் வர்க்கத்தினர் மட்டுமே நல்லமுறையில் வாழ்க்கை நடத்தினர்; மிக ஆடம்பரமாக வாழ்க்கை நடத்திய சில ஆயிரம் பேர்களும் இதில் அடங்குவர்.

படிக்க:
குழந்தை வளர்ப்பை முரணின்றி ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவது எப்படி ?
♦ நொறுங்கிய பாதங்களுடன் 18 நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் தப்பிய வீரன் !

புவாகில்பேருக்கும் மற்ற விமரிசகர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் இந்த நிலைமையின் அடிப்படையான காரணங்களை அவர் ஓரளவுக்கு அறிந்திருந்ததே. எனவே அவர் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சிக்கு அதிகமாக உதவி செய்ய முடிந்தது. அவர் கிராமப்புறப் பகுதிகளைப் பற்றி அதிகமாகச் சிந்தித்தது தற்செயலானதல்ல.

பிரான்சில் முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்குத் தேவையான திறவுகோல் இங்கேதான் இருந்தது. அரசரும் பிரபுக்களும் திருச்சபையும் இந்தத் திறவுகோலைப் பிடிவாதமாகப் புதைத்து வைத்திருந்தார்கள். கடைசியில் அந்த நூற்றாண்டின் இறுதியில் புரட்சி வெடித்தது; பூட்டுகள் நொறுங்கின. இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரெஞ்சு விவசாயி சொந்த வாழ்க்கைச் சுதந்திரத்தை அடைந்திருந்தான், ஆனால் நிலம் அவனுக்குச் சொந்தமல்ல; அவன் உழைத்துப் பிழைத்த நிலம் அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. ”நிலப்பிரபு இல்லாமல் நிலம் இல்லை” என்ற மத்தியகாலக் கொள்கை இன்னும் முழு வேகத்தோடு இயங்கிவந்தது ; அதன் வடிவங்கள் மட்டும் மாறியிருந்தன.

அதே சமயத்தில் இங்கிலாந்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளித்துவக் குத்தகை விவசாயிகள் என்ற பலமான புதிய வர்க்கம் பிரான்சில் ஏற்படவில்லை. பிரெஞ்சு விவசாயிகள் மூன்று சுமைகளைத் தாங்கித் துன்பமடைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய நிலவுடைமையாளர்களுக்கு வாரம் கொடுத்ததோடு வேறு பல நிலப்பிரபுத்துவ பாக்கிகளையும் கட்டிக் கொண்டிருந்தார்கள்; தங்களுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை திருச்சபைக்குக் கொடுத்து எண்ணற்ற பாதிரியார்களையும் மதகுருக்களையும் ஆதரித்து வந்தார்கள்: அரசருக்கு வரி கட்டியதும் அவர்கள் மட்டுமே.

கொல்பேர் தன்னுடைய எழுத்துக்களிலும் அறிக்கையிலும் பன்முறை குறிப்பிட்டது போல, இந்தப் பொருளாதார அமைப்பு நிலத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் விவசாயிக்குச் சிறிதும் ஊக்கமளிக்கவில்லை.

மக்களிடமிருந்து அதிகமான வரி வாங்குவது மட்டுமே பொருளாதாரக் கொள்கையின் ஒரே நோக்கமாக இருந்ததனால், அரசு நிலப்பிரபுத்துவ மிச்சங்களை இதற்குப் பயன்படுத்திக் கொண்டது. அவற்றை அழிப்பதைப் தாமதப்படுத்தியது. பிரான்ஸ் முழுவதுமே தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, வெளியே கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு ஒவ்வொரு எல்லையிலும் சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டன. இது உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சியையும் முதலாளித்துவத் தொழில் முயற்சியையும் தடுத்தது.

நகரங்களில் கைவினைஞர்களின் குழுக்கள் இன்னும் நீடித்ததும் இவற்றில் பழைய காலத்துச் சலுகைகளும், கறாரான விதிகளும் குறைவான உற்பத்தியும் பின்பற்றப்பட்டதும் இன்னொரு தடையாக இருந்தது. இது அரசாங்கத்துக்கு லாபகரமானதாக இருந்தது. ஏனென்றால் அது அதே பழைய – சலுகைகளைக் கைவினைஞர்கள் குழுக்களுக்கு விற்பனை செய்து பணம் பெற முடிந்தது. கொல்பேர் ஏற்படுத்திய சிற்சில பெரிய பட்டறைத் தொழில்களும் கூட 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நசிக்கத் தொடங்கின.

1685-ம் வருடத்தில் பதினான்காம் லூயீ ஒரளவுக்கு மத சுதந்திரத்தை அனுமதித்த நான்ட் பிரகடனத்தை ரத்துச் செய்தார். அதன் விளைவாகப் புரோட்டெஸ்டெண்டு மதப்பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஹூகெனோட் குடும்பங்கள் -கைவினைஞர் களும் வர்த்தகர்களும்- தங்கள் பணத்தையும் திறமைகளையும் தொழிலூக்கத்தையும் எடுத்துக் கொண்டு பிரான்சை விட்டு வெளியேறினார்கள்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, Capital, Vol. 2, Moscow, 1967, p. 7.
(2) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, 2, 52.

 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க