உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 1

சேனைத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் அலெக்ஸேய் மெரேஸ்யெவும் அவனுக்குத் துணையாக லெப்டினன்ட் குக்கூஷ்கினும் மாஸ்கோவின் தலைசிறந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

போருக்கு முன்பு இது ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவப் பயிற்சிசாலையாக இருந்தது. புகழ் பெற்ற சோவியத் விஞ்ஞானி ஒருவர் நோயும் காயமும் உற்ற பிறகு மனித உடலை விரைவாக மீள்முன் நிலைக்கு கொண்டு வருவதற்குரிய புதிய முறைகளை அங்கே ஆராய்ந்து வந்தார். இந்த நிலையத்துக்கு என உறுதியாக அமைந்த மரபுகளும் உலகப் புகழும் இருந்தன.

போர் தொடங்கியதும் விஞ்ஞானி தமது ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவப் பயிற்சிச்சாலையை இராணுவ அதிகாரிகளுக்குரிய மருத்துவமனையாக மாற்றிவிட்டார். அந்தக் காலத்தில் முன்னணி விஞ்ஞானம் அறிந்திருந்த எல்லா வகை சிகிச்சைகளும் இங்கே நோயாளிகளுக்கு முன் போலவே அளிக்கப்பட்டன. தலைநகருக்கு அருகே சீறிக் கொண்டிருந்த போரின் காரணமாகக் காயமடைந்தவர்கள்

சாரிசாரியாகக் கொண்டுவரப்பட்டமையால் கட்டில்களின் எண்ணிக்கையை மருத்துவமனையில் இருந்த இடவசதியைவிட நான்கு மடங்கு அதிகமாகப் பெருக்க நேர்ந்தது. அக்கம் பக்கத்திலிருந்த அறைகள் எல்லாம் வார்டுகளாக மாற்றப்பட்டன. சோதனைக்கூடத்துடன் இணைந்த தமது வேலை அறையைக் கூட விஞ்ஞானி காயமடைந்தவர்களுக்காகக் காலிசெய்து விட்டு முன்பு பொதுமருத்துவருக்கு உரியதாயிருந்த சிறு அறைக்குத் தம் புத்தகங்களுடனும் வழக்கமான சாமான்களுடனும் சென்றுவிட்டார். அப்படியும் சில வேளைகளில் கட்டில்களை ஆளோடிகளிலும் போட நேர்ந்தது.

மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் – தகுதிமிக்க விஞ்ஞானியும் சுப்ரீம் சோவியத் உறுப்பினருமான தலைமை மருத்துவர் முதல் மருத்துவத் தாதிகள், உடுப்பறைப் பணிப்பெண்கள், வாயிற் காவலாளி மாதர்கள் வரை – களைத்துப் போயிருந்தார்கள். சில வேளைகளில் அரைப் பட்டினியாக இருந்தார்கள். சோர்ந்து தள்ளாடினார்கள். போதிய தூக்கம் கூட இல்லாமல் உழைத்தார்கள். ஆயினும் இவர்கள் எல்லோருமே தங்கள் நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளை நம்பமுடியாத அளவு கண்டிப்புடன் தொடர்ந்து கடைபிடித்து வந்தார்கள். தொடர்ந்தாற்போல இரண்டு அல்லது மூன்று ஷிப்டுகள்கூட வேலை செய்த வார்டு மருத்துவத்தாதிகள் கிடைத்த ஒய்வு நேரத்தை எல்லாம் துப்புரவு செய்வதிலும் கழுவுவதிலும் தரையைச் சுரண்டிப் பெருக்குவதிலும் செலவிட்டார்கள். மெலிந்து, களைப்பினால் தள்ளாடிய நர்ஸ்கள் முன்போலவே வெளுத்துக் கஞ்சிபோட்ட மேலங்கிகள் அணிந்து வேலைக்கு வந்தார்கள். மருத்துவர்கள் இட்ட பணிகளை முன் போலவே கச்சிதமாக, அப்பழுக்கின்றி நிறைவேற்றினார்கள். மருத்துவர்கள் படுக்கைத் துணிகளில் சிறுமாசு மறு இருந்தாலும் குற்றங்கண்டார்கள். சுவர்கள், மாடிப்படி அழிகள், கதவுப் பிடிகள் ஆகியவை துப்புரவாயிருக்கின்றனவா என்று கைக்குட்டையால் துடைத்துப் பார்த்தார்கள்.

தலைமை மருத்துவர் சிவந்த முகமும், உயர்ந்த நெற்றிக்கு மேல் நரையோடிய அடர் முடியும், மீசையும் அடர்ந்த வெள்ளித் தாடியும் கொண்டவர். ஆவேசமாகத் திட்டி நொறுக்கும் வழக்கம் உள்ளவர். போருக்கு முன்பு போலவே இப்போதும் அவர் கஞ்சிபோட்ட மேலங்கிகள் அணிந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் புடை சூழ நாள் தோறும் இரண்டு தடவை குறித்த நேரத்தில் வார்டுகளைப் பார்வையிட்டார். புதியவர்களின் நோய் நிர்ணயிப்பைப் பார்த்தார், தீவிர நோயாளிகளின் விஷயத்தில் சிகிச்சைக்குரிய ஆலோசனை கூறினார்.

ஊழியர்களில் யாரையேனும் கவனக் குறைவுக்காக விளாசும் பொழுது அவர் இரைந்து ஆவேசமாகக் கத்துவார். அதுவும் தவறு நிகழ்ந்த இடத்திலேயே, நோயாளிகளின் முன்னிலையில். கலவரம் நிறைந்த, இருட்டடிப்பு செய்யப்பட்ட போர்க்கால மாஸ்கோவில் பணியாற்றும் தமது மருத்துவக்கூடம் முன் போலவே ஆதர்ச மருத்துவமனை என்றும், இந்த ஹிட்லருக்கும் கோயெரிங்குகளுக்கும் எல்லோருக்கும் அவர்கள் அளிக்கும் பதில் இதுவே என்றும் போரினால் ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பற்றிக் கேட்கவே தாம் விரும்பவில்லை என்றும் அவர் இத்தகைய சந்தர்ப்பங்களில் சொல்வது வழக்கம். வேலைக்குச் சோம்புபவர்களும் கதுப்புணிகளும் எங்கு வேண்டுமானாலும் போய்த் தொலையலாம் என்றும், எல்லாம் ஒரே கடினமாக இருக்கும் இந்த சமயத்தில்தான் மருத்துவமனையில் சிறப்பாகக் கண்டிப்பான ஒழுங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அடித்துக் கூறுவார். தமது பார்வையீடுகளை அவர் துல்லியமான நேரக் கண்டிப்புடன் நிறைவேற்றி வந்தார். ஆகையால் மருத்துவத்தாதிகள் வார்டுக் கடிகாரங்களை அவரது வருகையைக் கொண்டு முன் போன்றே சரி பார்ப்பார்கள். விமானத் தாக்குக்கு அபாய அறிவிப்புகள் கூட இந்த மனிதரின் நேரக் கண்டிப்பைக் குலைக்கவில்லை. ஊழியர்கள் அற்புதம் விளைத்ததற்கும் நம்பவே முடியாத நிலைமைகளில் போருக்கு முந்திய ஒழுங்கு முறையைக் கடைபிடித்ததற்கும் இதுவே காரணமாயிருக்க வேண்டும்.

தலைமை மருத்துவரை வஸீலிய் வலீலியேவிச் என்று அழைப்போம். ஒரு நாள் காலை அவர் வார்டுகளைச் சுற்றிப் பார்க்கையில் மூன்றாம் மாடிப்படி மேடையில் இரண்டு கட்டில்கள் அக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்ததைக் கண்டார்.

“இது என்ன கண்காட்சி?” என்று இடிமுழக்கம் செய்து, மயிரடர்ந்த புருவங்களைச் சுளித்து மருத்துவரை அவர் பார்த்த பார்வையில், உயரமான, சற்று கூரிய அந்த நடுத்தர வயதுள்ள மனிதர் – மரியாதைக்குரிய தோற்றம் கொண்டவர் – பள்ளிச் சிறுவன்போல அடக்க ஒடுக்கமாக விடையளித்தார்:

“இரவில் தான் இவர்கள் கொண்டுவரப்பட்டார்கள் …. விமானிகள். இதோ, இவனுக்குத் தொடையும் வலது கையும் முறிந்திருக்கின்றன. நிலைமை சாதாரணமாக இருக்கிறது. அதோ அவன்”- இவ்வாறு கூறி, மூடிய கண்களுடன் அசையாமல் கிடந்த மிக மெலிந்த ஒரு மனிதனைச் சுட்டிக் காட்டினார் அவர். “அந்த மனிதனின் வயதை அவனது தோற்றத்தைக் கொண்டு நிர்ணயிக்க முடியவில்லை. இவனுடைய நிலைமை அபாயமானது. கால் விரல் எலும்புகள் நொறுங்கியிருக்கின்றன. இரண்டு பாதங்களிலும் தசை அழுகல் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் முக்கியமானது அளவுகடந்த சோர்வு. இவன் நொறுங்கிய பாதங்களுடன் பதினெட்டு நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் ஜெர்மானியப் பின்னணியிலிருந்து வெளியேறியதாக இவர்களுடன் வந்த இராணுவ மருத்துவர் எழுதியிருக்கிறார். நான் இதை நம்பவில்லை. கட்டாயமாக இது மிகைக்கூற்று….

மருத்துவரின் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வஸீலிய் வஸீலியெவ் போர்வையைச் சிறிது திறந்தார். கைகளை மார்பின் மேல் இணைத்தவாறு படுத்திருந்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ். புத்தம் புதுச்சட்டை, துப்பட்டி, இவற்றின் வெண்மையின் மீது பளிச்சென வேறுபட்டுத் தெரிந்தன கருந்தோலால் மூடப்பட்டிருந்த அந்தக் கைகள். இவனுடைய எலும்புக் கட்டமைப்பை அந்தக் கைகளைக் கொண்டே ஆராய்ந்தறிய முடிந்தது. தலைமை மருத்துவர் விமானியைக் கம்பளியால் பதபாகமாகப் போர்த்துவிட்டு, சிணுங்கும் பாவனையில் மருத்துவரின் பேச்சை இடை முறித்தார்:

“எதற்காக இவர்கள் இங்கே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்?”

“ஆளோடியில் இடம் இல்லை… நீங்களே…..”

“என்ன ‘நீங்களே’, ‘நீங்களே’! நாற்பத்து இரண்டாவதில்?”

“ஆனால், அது கர்னல்கள் வார்டு ஆயிற்றே.”

“உன் போன்றவர்களை ஏமாற்றுவது பாவம். சதையழுகல் ஏற்பட்டிருப்பது மெய்தான். ஆனால், உளம் சோராதே. தீரா வியாதிகள் உலகிலே கிடையா, வெளியேற வகையற்ற நிலைமைகள் எப்படிக் கிடையாவோ அப்படியே.

“கர்னல்கள் வார்டா?” என்று திடீரென வெடித்துச் சீறினார் தலைமை மருத்துவர்.” “எந்த மடமட்டியின் யோசனை இது? கர்னல்கள் வார்டாம்! மடையர்கள்!”

“சோவியத் யூனியனின் வீரன்’ பட்டம் பெற்றவர்களுக்காக இடங்களைச் சேமிப்பில் வைத்திருக்கும் படி நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறதே.”

“‘வீரர்களாம்’ ‘வீரர்கள்’! இந்தப் போரில் எல்லாருமே வீரர்கள் தாம். நீங்கள் எனக்கென்ன பாடம் படிப்பிக்கிறீர்கள்? இங்கே தலைவன் யார்? என் உத்தரவு பிடிக்காதவர்கள் இந்தக் கணமே வெளியேறி விடலாம். இப்போதே இந்த விமானிகளை நாற்பத்தி இரண்டாம் வார்டுக்கு மாற்றுங்கள். என்னென்னவோ அசட்டுக் கற்பனைகள் செய்து கொள்கிறீர்கள்: ‘கர்னல்கள் வார்டாம்’!”

வாயடைத்துப்போன உதவியாளர்கள் புடை சூழ அப்பால் நகர்ந்தவர் சட்டெனத் திரும்பி, அலெக்ஸேயின் கட்டில் மீது குனிந்து, தொற்று நீக்கிகளால் ஓயாமல் கழுவப்படுவதன் விளைவாக அரிக்கப்பட்டுத் தோலுரிந்து கொண்டிருந்த தமது உப்பிய கையை அவன் தோள்மேல் வைத்து, “நீ இரண்டு வாரங்களுக்கு மேல் ஊர்ந்து ஜெர்மானியப் பின்புலத்திலிருந்து வெளியேறியது உண்மைதானே?” என்று கேட்டார்.

“எனக்குச் சதை அழுகல் ஏற்பட்டுவிட்டதா என்ன?” என்று ஈன சுரத்தில் வினவினான் அலெக்ஸேய்.

படிக்க:
உண்மையில் பாசிசம் என்பது என்ன ?
ஆரியருக்கு அடிப்பணியாதீர் ! அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர் !

தலைமை மருத்துவர் கதவருகே நின்ற உதவியாளர்களைக் குத்திவிடுபவர் போன்று சினந்து நோக்கினார். அலெக்ஸேயின் பெரிய கரு விழிகளை நேரிட்டுப் பார்த்தார். அவற்றில் ஏக்கமும் கலவரமும் குடிகொண்டிருந்தன. திடீரெனத் தலைமை மருத்துவர் சொன்னார்:

“உன் போன்றவர்களை ஏமாற்றுவது பாவம். சதையழுகல் ஏற்பட்டிருப்பது மெய்தான். ஆனால், உளம் சோராதே. தீரா வியாதிகள் உலகிலே கிடையா, வெளியேற வகையற்ற நிலைமைகள் எப்படிக் கிடையாவோ அப்படியே. இதை நினைவில் வைத்துக்கொள், என்ன?”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க