அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 23

ருவான் நகரத்தின் நீதிபதி
அ. அனிக்கின்
அ.அனிக்கின்

பொருளாதாரத் திட்டம் தயாரிப்பவர்கள் மக்களில் ஒரு தனி ரகம். அவர்களை அநேகமாக எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் பார்க்கலாம். அவர்கள் விஞ்ஞானத்தில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கின்ற மற்றொரு குழுவினரைப் போன்றவர்களே; அவர்களுக்கு ஏற்படுகின்ற அதே ஆபத்துக்கள் இவர்களுக்கும் அடிக்கடி ஏற்படும்.

இந்த உலகத்தில் வலிமை மிக்கவர்களின் சுயநல விருப்பங்கள், பழமைவாதம் மற்றும் சாதாரணமான முட்டாள்தனம் ஆகியவையே இந்த ஆபத்தாகும்.

பொருளாதாரத் திட்ட நிபுணர்களில் அதிகமான உணர்ச்சியும், நேர்மையும் கொண்டு தன்னலமில்லாத சிலரில் புவாகில்பேரும் ஒருவர். பதினான்காம் லுயீயின் பிரான்சில் அவர் முயற்சிகள் தோல்வியடைவதைத் தவிர வேறு வழியில்லை; அதிலும் தோல்வி என்பது பெட்டியைக் காட்டிலும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் அதிகமான சோகத்தைக் கொண்டதாகும்.

சர் வில்லியம் பெட்டியைப் போல புவாகில்பேர் பன்முகத் திறமையும் வசீகரமும் அதிகமாக உள்ளவராக இல்லாதிருக்கலாம். ஆனால் இவர் அதிகமான மரியாதைக்கு உரியவராக இருக்கிறார். ருவான் நகரத்தைச் சேர்ந்த துணிச்சலான நீதிபதியின் சமகாலத்தவர்கள், அவரை வர்ணிப்பதற்கு அதே போன்று பொதுநலத்துக்காகப் பாடுபட்டவர்களின் உதாரணங்களைத் தேடி மிகவும் பழங்காலத்துக்குச் சென்றார்கள். இந்த இரண்டு பொருளியலாளர்களையும் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்… புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்”.(1) மார்க்ஸ் புவாகில்பேரைப் பற்றி அவருடைய புத்தகங்களின் மூலமாக மட்டுமே தெரிந்து கொண்டவர்; ஆனால் இந்த வர்ணனையில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார். 19-ம் நூற்றாண்டின் அறுபதுக்களில் புவாகில்பேரின் கடிதங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வெளியான பிறகுதான் அவருடைய குணச் சிறப்பு மேலும் முழுமையாக வெளிப்பட்டது .

Nobless de robe – மாதிரி படம்.

பியேர் லெ பெசான்(2) ட புவாகில்பேர் 1646 -ம் வருடத்தில் ருவான் நகரத்தில் பிறந்தார். அவர் நார்மண்டியில் Nobless de robe என்ற பரம்பரையைச் சேர்ந்தவர். பழைய பிரான்சில் பரம்பரையாக நீதிமன்ற நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வந்த மேன்மக்களுக்கு இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டது. இதைத் தவிர அரசருக்குத் தங்களுடைய வாட்களால் பாடுபட்டவர்களுக்குத் தரப்பட்ட noblesse d ‘épee என்ற பட்டமும் உண்டு . 17, 18 -ம் நூற்றாண்டுகளில் புதுப் பணக்காரர்களான முதலாளிகளின் வரிசையிலிருந்து noblesse de robe பட்டத்தைப் பலரும் வேகமாகப் பெற்றனர். இது புவாகில்பேரின் குடும்பப் பின்னணியாகும்.

இந்த இளைஞர் அவர் காலத்தோடு ஒப்பிடும் பொழுது சிறப்பான கல்வியைப் பெற்றார். பிறகு அவர் பாரிசுக்குச் சென்று இலக்கியம் படித்தார். அதன் பிறகு அவர் குடும்பத் தொழிலான சட்டத்துறையில் ஈடுபட்டார்; 1677-ம் வருடத்தில் தன்னுடைய சமூக வட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்; நார்மண்டியில் நீதி நிர்வாகப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். ஏதோ சில காரணங்களால் அவர் தகப்பனாரை விரோதித்துக் கொண்டபடியால் குடும்பச் சொத்தை இழக்க நேர்ந்தது; அவருடைய பங்கு அவரது தம்பிக்குக் கொடுக்கப்பட்டது – அவர் பணம் சேர்ப்பதற்காகக் குடும்பத்திலிருந்து வெளியேறிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதை அவர் வெற்றிகரமாகச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் 1689-ம் வருடத்திலேயே ருவான் நீதி இலாகாவில் அதிகச் சம்பளமும் செல்வாக்கும் உள்ள லெப்டினென்ட்- ஜெனரல் பதவியை அதிகமான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்க அவரால் முடிந்தது. அன்று நிலவிய விசித்திரமான நிர்வாக முறையில் இந்தப் பதவிக்கு நகரத்தின் தலைமை நீதிபதி பொறுப்போடு போலீஸ் இலாகாவையும் பொதுவான நகராட்சிப் பணிகளையும் நிர்வாகம் செய்வதும் சேர்ந்திருந்தது. புவாகில்பேர் இந்தப் பதவியைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வகித்த பிறகு, தன்னுடைய மரணத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் மூத்த மகனுக்கு மாற்றிக் கொடுத்தார்.

படிக்க:
ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு
♦ மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

புர்போன் முடியாட்சி செய்த சமூக அநீதிகளில் மிக மோசமானது இப்படிப் பதவிகளை விற்பனை செய்த முறையாகும். இந்த முறையின் மூலம் அரசாங்கம் முதலாளிகளிடமிருந்து பணத்தைப் பிடுங்கியது; அதன் மூலம் அவர்கள் உற்பத்தியில் மற்றும் வர்த்தகத்தில் முதலீடு செய்ய முடியாதவாறு செய்தது. புதிய பதவிகள் திடீரென்று உருவாக்கப்பட்டன அல்லது பழைய பதவிகள் பிரிக்கப்பட்டு மறுபடியும் விற்பனை செய்யப்பட்டன. மாட்சிமை பொருந்திய அரசர் புதிய பதவிகளை அறிவித்த உடனே அவற்றை வாங்குவதற்கு முட்டாள்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள் என்று பதினான்காம் லுயீயின் அமைச்சர்களில் ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார்.

புவாகில்பேர் பொருளாதாரப் பிரச்சினைகளை 1670-க்களின் கடைசியில்தான் ஆராயத் தொடங்கினார் என்று தெரிகிறது. நார்மண்டியில் விவசாயிகள் மத்தியில் வாழ்ந்ததனாலும் மற்ற மாநிலங்களில் அடிக்கடி சுற்றுப் பயணம் செய்ததாலும் விவசாயிகளின் மிகப் பரிதாபகரமான நிலையை அவர் நேரில் கண்டார்; நாட்டின் பொதுவான பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவே காரணம் என்ற முடிவுக்கு வந்தார். அரசரும் பிரபுக்களும் விவசாயி பட்டினியால் செத்துப் போய்விடாமல் இருக்கின்ற அளவுக்கு மட்டும்தான் அவனிடம் ஏதாவது விட்டு வைத்தார்கள்; சில சமயங்களில் அதையும் விட்டு வைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் உற்பத்தியைப் பெருக்குவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும் விவசாயிகளிடம் நிலவிய பயங்கரமான வறுமை தொழில்துறை நலிந்து போவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. ஏனென்றால் அதற்குப் பெரிய சந்தை இல்லாமற் போய்விட்டது.

புவாகில்பேர் (Boisguilbert)

இந்தக் கருத்துக்கள் நீதிபதியின் மனதில் படிப்படியாக முதிர்ச்சியடைந்தன. 1691-ம் வருடத்திலேயே அவர் தன்னுடைய “முறையைப்” பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார், அவற்றை எழுத ஆரம்பித்து விட்டார் என்று தெரிகிறது . அவர் ”முறை” என்று குறிப்பிட்டது அவர் செய்ய உத்தேசித்த சீர்திருத்தங்களையே. நாம் இன்று அவற்றை முதலாளித்துவ ஜனநாயகத்தன்மை கொண்டவை என்று வர்ணிப்போம். மேலும் புவாகில்பேர் நகர முதலாளிகளின் நலன்களுக்காகப் பேசுவதைக் காட்டிலும் விவசாயிகளின் நலன்களுக்காகவே அதிகமாகப் பாடுபடுவதாகத் தோற்றமளிக்கிறார். யுத்தத்தில் தோல்வியடைந்த நாட்டைப் போல பிரான்சை நடத்துகிறார்களே என்ற பல்லவி அவருடைய புத்தகங்கள் எல்லாவற்றிலும் கேட்கிறது.

புவாகில்பேரின் “முறை”-அதன் ஆரம்ப வடிவம், 1707-ம் வருடத்தில் அதனுடைய முடிவான வடிவம் ஆகிய இரண்டிலுமே – மூன்று – முக்கியமான கூறுகளைக் கொண் டிருந்தது – முதலாவதாக, வரிவிதிப்பு முறையில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம் என்று அவர் கருதினார். விவரங்களை ஒதுக்கிப் பார்க்கும் பொழுது பழைய படிப்படியாகக் குறைகின்ற வரிவிதிப்பு முறைக்குப் பதிலாக விகிதாச்சார வரிவிதிப்பை அல்லது சற்றுக் கூடுதலான முன்னோக்கிச் செல்லும் வரிவிதிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இந்த வரிவிதிப்புக் கோட்பாடுகளைப் பற்றி இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றபடியால் இவற்றை விளக்கி எழுதுவது பொருத்தமாகும்.

படிப்படியாகக் குறையும் வரிவிதிப்பு முறையில் ஒரு நபரின் வருமானம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான சதவிகிதத்தில் அவரிடமிருந்து வரி வசூலிக்கப்படும். விகிதாச்சார வரிவிதிப்பு முறையில் வரி விதிக்கப்படுகின்ற சதவிகிதம் ஒரே மாதிரியானது; முன்னோக்கிச் செல்லும் வரிவிதிப்பு முறையில் வருமானம் அதிகரிக்கும் பொழுது வரிவிதிப்பும் அதிகரிக்கிறது. புவாகில்பேரின் ஆலோசனை அவர் காலத்தில் அதிகத் துணிச்சலானதாகும். ஏனென்றால் அப்பொழுது பிரபுக்களுக்கும் திருச்சபையினருக்கும் அநேகமாக எந்த வரியும் கிடையாது; அவர்களிடம் குறைந்த பட்சமாக ஏழைகளுக்கு விதிக்கப்படும் அதே சதவிகிதத்திலாவது வரிவிதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இரண்டாவதாக, உள்நாட்டு வர்த்தகத்தின் மீதிருந்த எல்லாத் தடைகளையும் அகற்ற வேண்டுமென்று அவர் விரும்பினார். அவ்வாறு செய்வதன் மூலம் உள்நாட்டுச் சந்தை விரிவடையும், வேலைப் பிரிவினை அதிகரித்து பண்டங்கள், பணச் செலாவணி ஊக்குவிக்கப்படும் என்று அவர் கருதினார்.

மூன்றாவதாக, தானிய வியாபாரத்தில் சுதந்திரமான வர்த்தகம் ஏற்பட வேண்டுமென்றும் அதன் இயற்கையான விலையைக் கீழே குறைத்து விடுவது கூடாது என்றும் கோரினார். தானிய விலைகளைக் குறைவான மட்டத்தில் செயற்கையாக வைத்திருக்கும் கொள்கை மிகவும் தீங்கானது என்று அவர் கருதினார். ஏனென்றால் இந்தக் குறைவான விலைகள் உற்பத்திச் செலவுகளுக்குக் கூடப் போதியதாக இல்லாதிருப்பதோடு விவசாய வளர்ச்சியைத் தடுத்தன.

சுதந்திரமான போட்டி முறையில்தான் பொருளாதாரம் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடையும்; ஏனென்றால் அப்பொழுதுதான் சந்தையில் பண்டங்களுக்கு “உண்மையான விலை” கிடைக்கும் என்று அவர் நம்பினார். பொருளாதாரப் புனரமைப்புக்கும் நாட்டிலும் மக்களிடமும் சுபிட்சம் பெருகுவதற்கும் இந்தச் சீர்திருத்தங்கள் மிகவும் தேவையானவை என்று அவர் கருதினார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு இது ஒன்றே வழி என்று ஆட்சியிலிருப்பவர்களை நம்பவைப்பதற்கு அவர் எல்லா முயற்சிகளையும் செய்தார். தன்னுடைய கருத்துக்களைப் பொது மக்களுக்குத் தெரிவிப்பதற்காக அவர் 1695 – 56-ம் வருடங்களில் தன்னுடைய முதல் புத்தகத்தை ஆசிரியர் பெயர் இல்லாமல் வெளியிட்டார்.

பிரான்சின் விரிவான வர்ணனையும் அதன் வளப்பெருக்கத்தில் ஏற்பட்ட நலிவுக்குக் காரணமும், ஒரே மாதத்தில் அரசருக்குத் தேவையான எல்லாப் பணத்தையும் கொடுப்பதற்கும் மக்கள் தொகை முழுவதையும் பணக்காரர்களாக்குவதற்கும் தகுந்த எளிமையான சீர்திருத்தம் என்ற பொருத்தமான தலைப்போடு அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது, தலைப்பில் எளிமையான சீர்திருத்தம் என்றும் எல்லாவற்றையும் ஒரே மாதத்தில் அடைவது சாத்தியம் என்றும் காணப்பட்டது, பொது மக்களின் கவனத்தைக் கவர்வதற்காகவே. ஆனால் சில சட்டங்களை நிறைவேற்றிவிட்டால் பொருளாதாரம் மறு வினாடியே குணமடைந்துவிடும் என்று உண்மையிலேயே புவாகில்பேர் நினைத்ததையும் இது பிரதிபலிக்கிறது.

படிக்க:
ஏன் ? விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா ?
♦ பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

ஆனால் அவருடைய ஏமாற்றங்களின் தொடர்வரிசை இப்பொழுதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தை யாருமே கவனிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 1699-ம் வருடத்தில் போன் ஷர்ட்ரேன் வகித்த பதவிக்கு ஷமில்லார் நியமிக்கப்பட்டார். இவருக்கு புவாகில்பேரை நன்றாகத் தெரியும்; மேலும் அவருடைய கருத்துக்களை இவர் ஆதரிக்கக் கூடியவர் என்றும் தோன்றியது.

ருவான் நீதிபதிக்கு மறுபடியும் நம்பிக்கை ஏற்பட்டது; புது உற்சாகத்தோடு புதிய புத்தகங்களை எழுதினார். ஆனால் அடுத்த ஐந்து வருடங்களில் அவருடைய முக்கியமான சாதனை அமைச்சருக்கு அவர் எழுதிய நீண்ட கடிதங்கள், அறிக்கைகளின் தொடர் வரிசையே. இந்த ஆவணங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை இதயத்திலிருந்து எழுகின்ற வேதனைக் குரலை வெளிப்படுத்துகின்ற கடிதங்களாகவும் அறிக்கைக் குறிப்புகளாகவும் இருக்கின்றன.

புவாகில்பேர் வாதாடுகிறார்; பிறகு புகழ்ந்து பேசி வசப்படுத்தப் பார்க்கிறார்; பொருளாதார அழிவு ஏற்படப் போகிறது என்று பயமுறுத்துகிறார்; பிறகு கெஞ்சுகிறார். அவர் முயற்சிகளை யாருமே சிறிது கூடப் புரிந்து கொள்ளவில்லை; சில சமயங்களில் அவரை அவமதிக்கவும் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தன்னுடைய சொந்த கெளரவத்தை நினைத்துப் பார்த்து மௌனத்தில் ஆழ்ந்து விடுகிறார். வெகு சீக்கிரத்தில் தாய் நாட்டின் நன்மைக்காக சொந்த கௌரவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, பதவியில் இருப்பவர்களிடம் மறுபடியும் மன்றாடுகிறார்: புறப்படுங்கள், செயலாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy.4, Moscow , 1970, p. 55.

(2) இந்தப் பொருளியலாளரின் உண்மையான பெயர் இதுவே. புவாகில்பேர் என்பது அவரது முன்னோர்களுடைய பண்ணையின் பெயர். அரசர் ஒரு முதலாளிக்குப் பட்டமளிக்கும் பொழுது அவர் பெயரோடு அவருடைய பண்ணையின் பெயரையும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது வழக்கம். எனினும் பியேர் லெ பெசான் என்ற பெயரைக் காட்டிலும் புவாகில்பேர் என்ற பெயரில்தான் அவர் நன்கு அறிமுகமாயிருந்தார்.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க