
உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 7
இதற்கிடையில் வெளியே வசந்தம் கும்மாளி போடலாயிற்று.
எப்போதும் போலவே வசந்தம் உள்ளங்களைக் கனிவித்தது, கனவுகளை எழுப்பியது.
“ஆகா, இப்போது துப்பாக்கியும் கையுமாக எங்கேனும் காட்டுக்குப் போனால், எவ்வளவு நன்றாயிருக்கும்! எப்படி, ஸ்தெபான் இவானவிச், சரிதானே? பொழுது புலரும் வேளையில் குடிசையில் பதிபோட்டுக் காத்திருந்தால்… அற்புதமாயிருக்கும்!
காலை நேரம் ரோஜா நிறம் பொலியும், உற்சாகமூட்டும், இளங்குளிர் அடிக்கும். நாம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம். திடீரென்று கல, கல, கல என்ற ஒலி. இறக்கைகள் ஷ்ஷ, ஷ்ஷ, ஷ்ஷ என வீசும் சத்தம். நமக்கு மேலே வால் விசிறி போல விரித்தவாறு இறங்கிவரும் ஒரு பறவை, இன்னொன்று, மூன்றாவது…”
ஸ்தெபான் இவானவிச் ஓசையுடன் மூச்சு இழுத்தார். அவர் நாவில் நீர் ஊறியது போலும். கமிஸாரோ, விடாது பேசிக் கொண்டு போனார்.
“அப்புறம் நெருப்புக்குப் பக்கத்தில் நீர்சுவறாக் கோட்டை விரித்துக் கொண்டு, புகை மணம் வீசும். தேநீரும் கொஞ்சம் வோத்காவும் பருகுவோம். ஒவ்வொரு தசையும் கதகதப்பு அடையும்படி, ஊம்? உழைப்புக்குப் பிறகு..
“ஆஹ்ஹா! ஒன்றும் சொல்லாதீர்கள், தோழர் கமிஸார்..”
இவ்வாறு வேட்டை அனுபவங்களின் வர்ணனைகள் தொடங்கின. ஒருவரும் கவனிக்காத முறையில் பேச்சு போர்முனை நிலவரங்களுக்குத் திரும்பியது. தங்கள் டிவிஷனில், படைப் பகுதியில் இப்போது என்ன நடக்கிறது, பனிக்காலத்தில் கட்டப்பட்ட நிலவறைக் காப்பிடங்கள் நீர் கசிகின்றனவா இல்லையா, அரண்கள் சிதைந்து விட்டனவா இல்லையா, மேற்கே தார் ரோடுகளில் நடந்து பழகிய பாசிஸ்டுகளுக்கு இந்த வசந்தகால நீர்க்குட்டங்களும் சேறும் எப்படியிருக்கும் என்றெல்லாம் அனுமானிக்கலானார்கள் நோயாளிகள்.
பகல் உணவு வேளைக்குப் பிறகு சிட்டுக் குருவிகளுக்கு இரை கொடுப்பது தொடங்கிற்று. சாப்பாட்டுக்குப்பின் எஞ்சிய துணுக்குகளைத் திரட்டி, ஜன்னலின் மேல் திறப்பு வழியே அவற்றைப் பறவைகளுக்காக வெளிக்குறட்டில் போடும் யோசனை ஸ்தெபான் இவானவிச்சுக்கு உதித்தது. இது பொது வழக்கம் ஆகிவிட்டது. இப்போது வெறுமே எஞ்சிய துணுக்குகள் மட்டுமே போடப்படவில்லை. நோயாளிகள் பெரிய துண்டுகளை வேண்டுமென்றே மிச்சம் வைத்து அவற்றைத் துணுக்குகளாக நொறுக்கினார்கள்.
இவ்வாறு, ஸ்தெபான் இவானவிச்சின் யோசனையால் சிட்டுக் குருவிக் கூட்டம் முழுவதும் இரை கொள்ள வகை செய்யப்பட்டது. இரைச்சலிடும் இந்தச் சின்னஞ்சிறு பறவைகள் சற்றுப் பெரிதான ஒவ்வொரு துணுக்குகளையும் கொத்தித் தின்னப்பாடுபடுவதையும் கீச்சிடுவதையும் சச்சரவு செய்வதையும், வெளிக்குறட்டைச் சுத்தம் செய்ததும் பாப்ளார் மரக்கிளைகளில் இளைப்பாறுவதையும் இறகுகளைக் கோதிக்கொள்வதையும் பிறகு ஒன்றாகச் சிவ்வென்று பறந்து தங்கள் சிட்டுக்குருவி அலுவல்களுக்காக எங்கோ செல்வதையும் அவதானிப்பதில் வார்டு முழுவதற்கும் பெருத்த இன்பம் உண்டாயிற்று.
சிட்டுக் குருவிகளுக்கு இரை போடுவது விருப்பப் பொழுதுபோக்கு ஆகிவிட்டது. சில பறவைகளை நோயாளிகள் இனங்கண்டு கொண்டு அவற்றிற்குப் புனைப் பெயர்களும் சூட்டினார்கள். வார்டுக்காரர்களைச் சிறப்பாகக் கவர்ந்தது வாலறுந்த, துடுக்கும் சுறுசுறுப்பும் மிக்க ஒரு சிட்டுக்குருவி. சச்சரவிடும் கெட்ட சுபாவம் காரணமாகவே அது வாலைப் பறிகொடுத்தது போலும். ஸ்தெபான் இவானவிச் அதற்கு “இயந்திரத் துப்பாக்கிவீரன்” என்று பெயரிட்டார்.
இரைச்சலிடும் இந்தப் பறவைகளுடன் நடந்த அமளியே டாங்கிவீரனை அவனது வாய்மூடித்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்தது என்பது அக்கறைக்குரிய சேதி. ஸ்தெபான் இவானவிச் உடம்பை இரண்டாக மடித்து வளைத்து, கவைக் கோல்களை ஆதாரமாகப் பற்றியவாறு வெப்பநீராவிக் குழாய் மீது நெடுநேரம் தம்மைச் சமன்படுத்திக் கொண்டு ஜன்னல் குறட்டின் மேல் ஏறி ஜன்னல் மேல்திறப்பை எட்டுவதற்கு முயற்சிப்பதை உற்சாகமின்றி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால், மறுநாள் சிட்டுக் குருவிகள் பறந்து வந்ததும் டாங்கி வீரன் அவற்றின் பரபரப்பு மிக்க அமளியை நன்றாகப் பார்க்கும் பொருட்டு, வலியினால் முகத்தைச் சுளித்தவாறு கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். மூன்றாம் நாளோ அவன் இனிய கேக்கின் பெரிய துண்டு ஒன்றைப் பகல் சாப்பாட்டின் போது மறைத்து வைத்துக் கொண்டான் – மருத்துவ மனையின் இந்த விசேஷத் தின்பண்டம் இலவசத் தீனிக்காரக் கீச்சுமூச்சுக் கும்பலுக்குச் சிறப்பாகப் பிடித்தாக வேண்டும் என்பதுபோல. ஒரு தடவை “இயந்திரத் துப்பாக்கி வீரன்” வரவில்லை. அதைப் பூனை பிடித்து விழுங்கியிருக்கும் என்றும் அதற்கு நன்றாக வேண்டும் என்றும் சொன்னான் குக்கூஷ்கின். மறுநாள் வாலறுந்த குருவி ஜன்னல் வெளிக்குறட்டில் கண்கள் துடுக்குடன் பளிச்சிடத் தலையை வெற்றிப் பெருமிதத்துடன் திருப்பியவாறு மறுபடி கீச்சிடவும் சண்டை போடவும் தொடங்கியபோது டாங்கிவீரன் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். நீண்ட பல மாதங்களுக்குப் பின் முதல் தடவையாக வாய்விட்டுச் சிரித்தான் அவன்…
படிக்க:
♦ பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
♦ பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?
க்ளாவ்தியா மிஹாய்லவ்னா முதுகுக்குப் பின் கையை மறைத்தவாறு மர்மத் தோற்றத்துடன் கதவருகே நின்று, பளிச்சிடும் விழிகளால் எல்லோரையும் பார்வையிட்டுவிட்டு, “ஆமாம், இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள்?” என்று கேட்கும் நேரம் நாற்பத்து இரண்டாம் வார்டில் மிக மகிழ்ச்சி பொங்கும் நேரம் ஆக விளங்கியது.
கடிதங்கள் வந்திருக்கின்றன என்று இதற்கு அர்த்தம். கடிதம் பெறுபவன் நடனமாடும் பாவனையில் கட்டில் மேல் கொஞ்சமாவது துள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட அடிக்கடி இப்படிச் செய்ய நேர்வது கமிஸாருக்குத்தான். சில தடவைகளில் அவருக்கு மொத்தமாகப் பத்துப் பன்னிரண்டு கடிதங்கள் கிடைப்பது உண்டு. அவருக்கு டிவிஷனிலிருந்தும் பின்புறத்திலிருந்தும் கடிதங்கள் வரும். உடனுழைப்பாளர்களும் கமாண்டர்களும் அரசியல் அலுவலர்களும் எழுதுவார்கள். அதே போலப் படைவீரர்களும், பழைய ஞாபகத்தை வைத்துக் கொண்டு கமாண்டர்களின் மனைவிகளும் (கட்டுக்கு அடங்காத கணவன்மாரை வழிக்குக் கொண்டுவரும்படி இவர்கள் கேட்பார்கள்), போரில் கொல்லப்பட்ட தோழர்களின் விதவைகளும் எழுதுவார்கள். அவர்கள் ஏதேனும் யோசனை கேட்பார்கள், அல்லது உதவி கோருவார்கள்.
கஸாஃஸ்தானிலிருந்து ஒரு பயனீர் சங்கத்துப் பெண்கூட எழுதுவது உண்டு. கொல்லப்பட்ட ரெஜிமெண்டுக் கமாண்டரின் மகள் அவள். இந்தப் பெண்ணின் பெயர் கமிஸாருக்கு எவ்வளவோ முயன்றும் நினைவுக்கு வருவதில்லை. இந்தக் கடிதங்களை எல்லாம் கமிஸார் அக்கறையுடன் வாசிப்பார். எல்லாக் கடிதங்களுக்கும் கட்டாயமாகப் பதில் அளிப்பார். இன்னின்ன கமாண்டரின் மனைவிக்கு உதவும்படி தேவையான அலுவலகத்துக்கு அதே கையோடு எழுதிவிடுவார். கட்டுமீறிச் சென்றுவிட்ட கணவனைக் கோபத்துடன் விளாசுவார். வீட்டு நிர்வாக அதிகாரிக்கு, எழுதும் கடிதத்தில் போர்முனையில் பணியாற்றும் துடியான கமாண்டர் இன்னாருவடைய இருப்பிடத்தில் அவன் கணப்பு ஏற்பாடு செய்யாவிட்டால் தாமே நேரில் வந்து அவன் தலையை வெட்டி விடுவதாக அச்சுறுத்தி எழுதுவார். நினைவு வைத்துக்கொள்ள முடியாத சிக்கலான பெயர் கொண்ட கஸாஃஸ்தான் சிறுமியை அரையாண்டுத் தேர்வில் ருஷ்ய மொழிப் பாடத்தில் அவள் தேறாததற்காகக் கடிந்து கொள்வார்.
ஸ்தெபான் இவானவிச்சும் முனைமுகத்துடனும் பின்புலத்துடனும் சுறுசுறுப்பாகக் கடிதப் போக்குவரத்து நடத்திக் கொண்டிருந்தார். தம்மைப் போன்ற வெற்றிகரமான ஸ்னைப்பர்-களாயிருந்த புதல்வர்களிடமிருந்தும் கூட்டுப் பண்ணைக் குழுத் தலைவியான பெண்ணிடமிருந்தும் தமக்கு வரும் கடிதங்களை ஸ்தெபான் இவானவிச் பெரு மகிழ்ச்சியுடன் அப்போதைக்கப்போதே உரக்கப் படிப்பார். வார்டு நோயாளிகள் எல்லோருக்கும், அறைத் தாதிகளுக்கும் நர்ஸ்களுக்கும் வறண்ட, சிடுமூஞ்சியான உள்ளுறை மருத்துவருக்குங்கூட அவருடைய குடும்ப விவகாரங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தன.
கலகலப்பின்றி, உலகம் அனைத்துடனும் சச்சரவிடுபவன் போலிருந்த குக்கூஷ்கினுக்கு கூட, பார்நெளல் என்னும் இடத்திலிருந்து அவன் தாயார் கடிதங்கள் எழுதுவாள். அவன் மருத்துவத்தாதியிடமிருந்து கடிதத்தை ஆர்வத்துடன் பிடுங்கிக் கொண்டு, எல்லோரும் உறங்கும்வரை காத்திருந்து, வாய்க் குள்ளாகச் சொற்களை முணுமுணுத்தவாறு படிப்பான். அந்த நேரத்தில் கூரிய, கடுமையான அமைப்புள்ள அவனது சிறு முகத்தில், அவனுடைய இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத, கம்பீரமும் சாந்தமும் திகழும்; சிறப்பான பாவம் தென்படும். முதிய உதவி மருத்துவச்சியான தன் தாய் மீது அவன் பெருத்த பாசம் கொண்டிருந்தான், ஆனால் தனது இந்த அன்பு குறித்து நாணினான், அதை முயன்று மறைத்து வந்தான்.
கிடைத்த செய்திகள் வார்டில் உற்சாகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும். இந்தக் களிபொங்கும் நேரத்தில் டாங்கி வீரன் ஒருவன் மட்டுமே முன்னிலும் அதிக ஏக்கங்கொண்டு முகத்தைச் சுவர்பக்கம் திருப்பிப் போர்வையை இழுத்துத் தலையை மூடிக் கொண்டுவிடுவான். அவனுக்குக் கடிதம் எழுதுவோர் யாரும் இல்லை .
ஆனால், ஒரு நாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா ஏதோ தனிப்பட்ட கிளர்ச்சியுடன் வந்தாள்.
“ஆமாம், இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள்?” என்றாள்.
டாங்கிவீரனின் கட்டில் மேல் அவள் பார்வை சென்றது. நல்லியல்பு திகழும் அவளுடைய முகத்தில் பரந்த புன்னகை சுடர்ந்தது. ஏதோ வழக்கத்துக்கு மாறான விஷயம் நடந்திருக்கிறது என்று எல்லோரும் உணர்ந்தார்கள். வார்டு உன்னிப்பாகக் கவனித்தது.
(தொடரும்)
முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை