சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் : உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை

சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த இந்த நூல் முயற்சி, சூழல் ஆர்வலர்களுக்கு சட்டத்தை அறிமுகப்படுத்தும் எளிய முயற்சியே. எனவே, இது முழுமையானதல்ல. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சட்டம் குறித்த ஒரு அறிமுகத்தை கொடுப்பது மட்டுமே இந்த முயற்சியின் நோக்கம். (நூலின் அறிமுகப்பகுதியிலிருந்து…)

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளும், நீர்நிலைகளும், மற்ற இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. மேலும் இயந்திரமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட அனைத்தும் மாசுபடுத்தப்படுகின்றன. அரசு, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரின் பொறுப்பற்ற போக்கால் ரசாயனக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், அணு (உலை)க் கழிவுகள் போன்ற துறை சார்ந்த கழிவுகளும் பெருகி மனிதர்களோடு இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரிகளின் உயிருக்கும், நல்வாழ்வுக்கும் உலை வைத்துக் கொண்டிருக்கின்றன.

அரசு அமைப்புகளோ, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதையும், சூழலை மாசுபடுத்துவதையும் ஆதரிக்கும் போக்கிலேயே தொடர்ந்து செயல்படுகின்றன. இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் அவை போன்ற தவிர்க்க முடியாத சில அமைப்புகளின் நெருக்குதல் காரணமாக சுற்றுச்சூழல் சட்டத்தை பெயரளவில் இயற்றிவிட்டு அவற்றை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளுவதிலேயே அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

சேலம் எட்டுவழிச்சாலைக்காக பறிக்கப்பட்ட பசுமை வயல்கள்.

நீதித்துறையிலும் பெரும்பாலான நீதிபதிகள் பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலை பாதிப்பதில் தவறில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர். ஆனால் இத்தகைய நீதிபதிகளுக்கு இடையிலும்கூட வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி உள்ளிட்ட நீதிபதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.சி. மேத்தா போன்றவர்களும் சுற்றுச்சூழல் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.

இத்தகைய நன்முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முதன்மை பொறுப்பு கொண்ட அரசுத்துறைகள் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற சட்டவிரோத அநீதிகளுக்குத் துணைபோவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் வந்தநிலையில்தான் பாலாறு பாழ்பட்டுபோனது. வேலூர் பகுதியின் நிலம் தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் நஞ்சானது. கரூர், திருப்பூர் போன்ற இடங்களின் நிலத்தடி நீர்கூட மாசுபட்டது. இவை சில உதாரணங்கள்தான். சொல்வதற்கு இன்னும் ஏளாளமிருக்கிறது.

இந்த சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு அரசுத்துறைகளும், தனியார் துறையில் உள்ள பெருவணிக நிறுவனங்களும் முதன்மை காரணமாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கு இதில் பங்கே இல்லை என்று முற்றிலுமாக புறம் தள்ளிவிட முடியாது. சுற்றுச்சூழல் குறித்த புரிதலின்மை, புரிந்திருந்தாலும் சீர்கேடுகள் நடக்கும்போது செயலற்று இருத்தல், சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக போராடுபவர்களை ஏளனமாக பார்த்து அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளும் குற்றச்செயல்களே! இவை மறைமுகமாக அல்ல … நேரடியாகவே சூழலை சீரழிப்பவர்களுக்கு உதவி செய்யும் செயல்களாகும். (நூலிலிருந்து பக்.14-15)

… இந்தியாவில் 1972-ம் ஆண்டில் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும், 1974-ம் ஆண்டில் தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1981-ம் ஆண்டில் காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1986-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டமும் உருவாக்கப்பட்டன.

தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் – 1974

நகர்ப்புற, தொழில்மய உலகில் உருவாகும் மாசுகளை கட்டுப்படுத்த உருவான முதல் சட்டமாக, தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1974ஐக் கூறலாம். இந்த சட்டத்தில்தான் ”மாசுபடுதல்” என்றால் என்னவென்று வரையறை செய்யப்பட்டது.

இதன்படி, ”பொது உடல்நலம் அல்லது பாதுகாப்பு அல்லது வீட்டு, வணிக, தொழில், வேளாண் அல்லது மற்ற சட்டமுறையானச் செயல்களின் பயன்களுக்கு, அல்லது விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது நீரில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் வாழ்க்கைக்கு அல்லது நலத்திற்கு தொல்லை ஏற்படுத்தக்கூடிய அல்லது கேடு அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் தண்ணீரின் தூய்மையைக் கெடுத்தல் அல்லது தண்ணீரின் இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியியல் கூறுகளை மாறச் செய்தல் அல்லது நேரடியாக அல்லது மறைமுகமாக சாக்கடை அல்லது தொழில்கழிவு (trade effulent) பொருள்களை அல்லது ஏதாவது ஒரு திரவ, வாயு அல்லது திடப்பொருளை தண்ணீரில் வெளியேற்றுதல் ‘மாசுபடுதல்’ ஆகும்.

இவ்வாறு தண்ணீர் மாசுபடுதலை தடுக்க மத்திய அளவிலும், மாநில அளவிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை உருவாக்க இந்த சட்டம் வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.30-31)

காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1981

காற்று மாசுபாடு என்பது உண்மையில் நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத சமத்துவத்தை நடைமுறைப்படுத்துகிறது. ஏழை, பணக்காரன் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் அம்சம் காற்று மாசுபாடுதான்.

காற்றில் இயல்பாகவே சல்பர் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் மோனாக்ஸைட் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தும் வாயுக்கள் உள்ளன. இவற்றோடு புறவெளியிலிருந்து வெளியாகும் காஸ்மிக் கதிர்கள் காற்றுவெளியில் புகுகின்றன. நம்மை சுற்றியுள்ள மண்ணிலிருந்து ரேடியம், யுரேனியம், தோரியம் போன்றவை கதிரியக்கத்தை உருவாக்குகின்றன. வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மேலும் பல நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப் பொருட்களை வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகின்றன. எனவே காற்று மாசுபாட்டை நெறிப்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.

இந்த சட்டத்தின்படி, ”மனித உயிர்களுக்கு அல்லது மற்ற உயிரினங்களுக்கு அல்லது தாவரங்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் அடர்த்தியாக காற்று வெளியில் தங்கியிருக்கும் இரைச்சல் உள்ளிட்ட ஏதாவது ஒரு திட, திரவ, அல்லது வாயுப்பொருள் காற்று மாசுக்களை உருவாக்கும் பொருள்” என வரையறை செய்யப்பட்டது. … ஏறத்தாழ தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினை ஒத்த அதிகாரங்களே இந்த காற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் வழங்கப்பட்டன. (நூலிலிருந்து பக்.37-38)

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டம், 1986

தண்ணீர் மற்றும் காற்று ஆகியவற்றில் ஏற்படும் மாசுக்களை கட்டுப்பட்டுத்த வாரியங்கள் உருவாக்கப்பட்டாலும், மீதமிருக்கும் வேறுவகையான மாசுக்களை கண்டறிந்து, அவற்றையும் தடுப்பதற்கான  தேவை இருப்பது உணரப்பட்டது.

படிக்க:
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

இதைத் தொடர்ந்து 1986-ம் ஆண்டில் ”சுற்றுச்சூழல்(பாதுகாப்பு)ச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் தண்ணீர், காற்று உள்ளிட்ட அனைத்து வகையான மாசுக்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைப்பதற்கான வழிவகை கண்டறியப்பட்டது.

மேலும் இந்த சட்டத்தில்தான், ”சுற்றுச்சூழல்” என்ற சொல்லுக்கான வரையறை முதல்முறையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ”தண்ணீர், காற்றும் மற்றும் நிலம் மேலும் மனித உயிர்கள், மற்ற உயிருள்ள படைப்புகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், சொத்து ஆகியவற்றோடு இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே சுற்றுச்சூழல்” ஆகும்.

நூல் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் :
உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை
ஆசிரியர் : வழக்குரைஞர் சுந்தரராஜன்

வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்,
106/1, கனகதுர்கா வணிக வளாகம், கங்கையம்மன் கோயில் தெரு,
வடபழனி, சென்னை – 600 026.
தொலைபேசி எண்: 044 – 4380 9132 | 98416 24006.
மின்னஞ்சல் : info@poovulagu.org

பக்கங்கள்: 96
விலை: ரூ 70.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க