து நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா? ஆங்கிலம் மட்டும் பேசினால் போதுமா? பாடத்திட்டம் மட்டும் போதுமா?… என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை முன்வைத்து மிகச் சுருக்கமான பதிலையும் தந்திருக்கிறார், நூலாசிரியர்.

பள்ளியில் தாய்மொழி வழிக் கல்வி நடைபெற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்வழிக் கல்வி நடைபெற வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதற்கு நாம் இன்னும் ஆராய்ச்சி முடிவுகளைத் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. வளர்ந்த நாடு எதை வேண்டுமானாலும் பாருங்கள். அங்கே தாய்மொழி வழிக் கல்விதான் இருக்கும். நான் அறிந்தவரை எந்த ஐரோப்பிய நாட்டிலும் தாய்மொழி வழிக்கல்வியே பள்ளிகளில் கற்பிக்கப்படுவதுடன் முதல் வகுப்பிலேயே ஆங்கிலம் சொல்லித்தரப்படவும் இல்லை. பொதுவாக நான்காம் வகுப்பில் ஆங்கிலம் அல்லது வேறொரு மொழி கற்பிக்கத் தொடங்கப்படுகிறது. பிறகு ஏழாம் வகுப்பில் மற்றொரு மொழியைக் கற்பிக்கத் தொடங்குகிறார்கள். சில நாடுகளில் விரும்பும் மாணவர்கள் மட்டும் நான்கு மொழிகளைக் கூடக் கற்கிறார்கள். ஆனால், அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு மொழி வழியாகவே கற்கிறார்கள். ஆகவே, ஒரு நல்ல பள்ளிக்கூடம் அடிப்படையில் தமிழ் வழிக் கல்விக்கூடமாக இருக்கவேண்டும்…

கற்பித்தலும் கற்றலும் சிறப்பாக நடைபெறவேண்டுமானால் ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவாக இருக்க வேண்டும். நான் பரிந்துரைக்கும் அளவு இதுதான். மழலையர் வகுப்புகளில் இருபது பேரும் தொடக்கநிலை வகுப்புகளில் முப்பது பேரும் உயர்நிலை வகுப்புகளில் நாற்பது பேரும் மேல்நிலை வகுப்புகளில் ஐம்பது பேரும் இருக்கலாம்… ஆசிரியர் மாணவர் உறவு என்பது கற்றலில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உறவு இருக்கும்போது கற்றல் சிறப்பாக இருக்கும்.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

ஒரு பள்ளி நல்ல பள்ளியா என்பதை முடிவு செய்தலில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு கூறு. அந்தப் பள்ளிக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது. பெற்றோர்கள் இருவரும் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, பணக்கார குழந்தைகளை மட்டும் தேர்வு செய்வது, மிக இளம் வயதிலேயே போட்டித் தேர்வு நடத்தித் தேர்வு செய்வது போன்றவை நல்ல பள்ளிக்குரிய அடையாளங்கள் இல்லை… நூலகமும் ஆய்வுக்கூடமும் இல்லாத பள்ளி, பள்ளியே இல்லை. இவை இருந்தும் மாணவர்களுக்குப் பயன்படாத பள்ளியை என்னவென்று சொல்வது?…

மாணவர்களுக்கு வாழ்வில் பயன்தரப் போவது திறன்களே அல்லாமல் வெறும் தகவல்கள் அல்ல. ஏனென்றால், உலகில் உள்ள எல்லா தகவல்களையும் யாரும் தெரிந்து வைத்திருக்க முடியாது. இதனால் எல்லா நேரங்களிலும் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது. ஆனால், திறன்கள் எப்பொழுதும் உதவும்…

குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதைவிடச் சக குழந்தைகளிடமிருந்து எளிதாகவும் அதிகமாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது பள்ளிக்கு வெளியே மட்டுமல்ல பள்ளியிலும் நடைபெறக்கூடியதே. இந்த இயல்பைப் பயன்படுத்தி மாணவர்கள் நன்கு கற்றுக் கொள்ளப் பள்ளிகள் உதவ வேண்டும்…

பொதுவாக நமது மாணவர்களிடம் லண்டனில் ஓடும் ஆறு எது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள். ஆனால், உள்ளூருக்கு அருகில் ஓடும் ஆறுபற்றிக் கேட்டால் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்குக் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் அத்தகையதாய் இருக்கிறது… (நூலிலிருந்து)

நூல் : எது நல்ல பள்ளி ?
ஆசிரியர் : த. பரசுராமன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க