லக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆளும் எடப்பாடி அரசு, அமைச்சர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 26.06.2019 அன்று நடத்தினர்.

தமிழகத்தில் டாஸ்மாக் பார் நடத்தி இளைஞர்களை சீரழித்து, பெண்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கி  சமூகத்தையும், பண்பாட்டையும் சிதைத்து “சாராயம் வித்த காசில் சர்கார் நடத்தும் ”  இந்த எடப்பாடி அரசுக்கு போதை ஒழிப்பு பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. சந்துக்கு சந்து டாஸ்மாக்கும், குட்கா, கஞ்சா போதை பொருட்கள் விற்பனை போலீசு கூட்டுடன் அமோகமாக நடக்கிற சமூக விரோத கும்பலின் குற்றம் பெருகி மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

அழுகி நாறும் அரசு கட்டமைப்பு ! மக்களை ஆளும் தகுதியைஇழந்து விட்டதை மீண்டும் நிரூபிக்கிறது திருச்சி  சம்பவம்.

கஞ்சா பார்ட்டியுடன் பாலக்கரை போலீசு !

திருச்சி காஜாபேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள், மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகானந்தம் மீதும் பொய் வழக்கை பொய் வழக்கு பதிந்துள்ளது பாலக்கரை போலீசு!

கஞ்சா விற்பனை கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் பாலக்கரை போலீசார் மற்றும் ஆய்வாளரை கண்டித்து 26.06.2019 காலை 11 மணியளவில் மாநகர காவல் ஆணையர் அவர்களை காஜாபேட்டை இளைஞர்கள் – பெண்களுடன் இணைந்து மாநகர ஆணையாளர் திரு. அமல்ராஜ் அவர்களை சந்தித்து நுற்றுக்கணக்கான மக்களின் கையொப்பங்களுடன் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் காஜாபேட்டையில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பு அண்மையில் பகுதி  மக்களுடன் இணைந்து கஞ்சா போதை  எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இந்நிலையில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் கொளஞ்சி என்ற பெண்ணின் மகள் மலர் கொடி உள்ளிட்ட குடும்பத்தினர் கஞ்சா போதைக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீது கோபமுற்றனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் முருகானந்தம் குடும்பத்தினரை அவதூறு செய்ததுடன் “நாங்க காலம் காலமாக கஞ்சா விற்கிறோம் – இனியும் விற்போம்… எவன்டா புகார் கொடுத்தது, போலீசே எங்களுக்கு பக்கபலமா தான் உள்ளது… ” என மிரட்டியுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரை கட்டையால் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். இப்படி ஒரு அட்டூழியத்தை செய்து விட்டு, தங்களை அடித்து விட்டதாக மருத்துவமனையில் படுத்து கொண்டு; தன்னை இளைஞர்கள் தாக்கியதாகவும்; (மலர் கொடியை) மானபங்கம் செய்ததாக பொய் புகாரும் தந்துள்ளனர். ‘மாதாந்திர மாமூல்’ மூலம் போலீசுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, தட்டி கேட்ட வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் இளைஞர்கள் மீதே பொய் வழக்கும் பதிவு செய்துள்ளது கஞ்சா கும்பல்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கஞ்சா வியாபாரி குடும்பம் இப்படி பயன்படுத்திக் கொண்டது என்பதை விட, இப்பகுதியில் கடந்த காலத்தில் காவல்துறை நடத்திய கட்டுப்பாடற்ற காட்டு தர்பாருக்கு தடையாக செயல்பட்ட வழக்கறிஞர் முருகானந்தத்தை பழி தீர்க்க இந்த சம்பவத்தை பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் பயன்படுத்திக் கொண்டார்.

கடந்த 2018 -ல் மனித உரிமை மீறல், சட்ட விரோத கைது நடவடிக்கையை கண்டித்தும் இதே ஆய்வாளர், அடாவடியாக நடந்து கொண்டதை கண்டித்தும் தோழர் முருகானந்தம் அளித்த தனிப்புகார் வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் (CC-441/2018)  நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பெண் கஞ்சா வியாபாரியிடம்; “மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக அவ்வப்போது தோழர் முருகானந்தம் மிரட்டி பணம் வசூலிப் பார் என்றும், இரண்டு நாட்களுக்கு முன் அவ்வாறு பணம் கேட்டபோது தராததால், தண்ணியடித்து விட்டு இளைஞர்களை சேர்த்து கொண்டு தன்னை வம்பிழுத்து தாக்கியதாகவும், ‘பெண்னை இழிவு செய்து துன்புறுத்தும்’ வகையில் நடந்து கொண்டதாகவும், கீழ்த்தரமாக புகார் தரச் செய்து எந்த விசாரணையும் செய்யாமல் வழக்கு பதிவு செய்தார் பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாஸ்.

எமது அமைப்பு குறித்து இதுவரை எந்த எதிரியும் சொல்ல முன்வராத கேவலமான அவதூறை எழுதி அதை செய்தித்தாள் மூலம் பரப்பவும் செய்தார். முருகானந்தத்தை கைது செய்யும் நோக்கில் இரவில் வீட்டிற்கு தேடிச் சென்றதுடன் அவர் இல்லாததால் வேறு இரு இளைஞர்களை வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையிலடைத்துள்ளார் ஆரோக்கியதாஸ்.

படிக்க:
இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

உண்மையில், கஞ்சாவை எதிர்த்ததால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கார்த்திக்கிடம் வாக்குமூலம் பெற்ற உதவி ஆய்வாளர் சட்டநாதன், அவர் கூறியதையெல்லாம் எழுதியதாக படித்துக்காட்டி விட்டு, “ஸ்டேசனில் சென்று தெளிவாக எழுதிக் கொள்வதாக”க்கூறி யோக்கியரைப் போல பேசி, வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியுள்ளார். ஆனால், ஆய்வாளர் ஆரோக்கியதாசின் அறிவுரைப்படி “தான் தண்ணியடித்துவிட்டு வந்து வம்பிழுத்து தாக்கியதாகவும் மானபங்கம் செய்ததாகவும்” கார்த்திக் தானே ஒப்புதல்வாக்கு மூலம் தந்ததாக எழுதி வழக்குப் பதிந்துள்ளார். கஞ்சா கும்பலிடம் வாங்கிய காசுக்கு மேலேயே வாலைக் குழைத்துள்ளது போலிசு. சட்டத்துக்குப்புறம்பாக செயல்படும் இவருக்கு ‘சட்டநாதன்’ என்று பெயர் வேறு!

சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை இப்படிகேடான முறையில் பயன்படுத்தி கற்றறிந்த வழக்கறிஞரையே பாடாய்ப்படுத்த முனையும் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் – சட்டநாதன் கும்பலிடம் சாதாரண மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் மனம் பதைபதைக்கிறது.

கஞ்சா விற்பனையைத் தடுக்கவேண்டிய ‘காவல் ஆய்வாளரே’ கஞ்சா விற்பனைக் கெதிராக போராடுவோரை ஒடுக்கி கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்துவதை வழக்கறிஞர்களும், ஜனநாயகஉள்ளம்கொண்ட அனைத்துப்பிரிவுமக்களும் கண்டிக்க வேண்டும். போலிசின் அராஜக செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாணவர் – இளைஞர் சமுதாயம் கஞ்சாவிற்கு அடிமையாகி எண்ணற்ற குடும்பங்களும், பெண்களும் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாசே !

  • பெண் கஞ்சாவியாபாரியைத் தூண்டிவிட்டு பெண்களுக்கெதிரான வன்கொடுமை (4 of women harassment act) பிரிவில் வழக்குப் போடுவது பேடித்தனம்!
  • கஞ்சா விற்பனையைத் தடுத்து உன்வீரத்தைக் காட்டு!

தமிழக அரசே ! காவல்துறையே !!

  • அதிகாரத் திமிரில் கஞ்சா பார்ட்டிக்கு ஆதரவாக வழக்கறிஞரைப் பழிவாங்கும் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு! பதவியைவிட்டுநீக்கு !
  • டாஸ்மாக், குட்கா, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருட்களையும் தடைசெய் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க