மோடி அரசை வீழ்த்தும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கோ, மக்கள் இயக்கங்களுக்கோ தற்போது இல்லை என்பது உண்மைதான். ஆனால், முற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.

உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முடங்கி, அது முட்டுச்சந்துக்கு வந்திருக்கிறது. 70% உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தமடைந்துவிட்டதாக ஐ.எம்.எஃப். கூறியிருக்கிறது.

“2020-இல் உலகு தழுவிய பொருளாதாரத் தேக்கத்தை (Recession) நோக்கி நிலைமைகள் முற்றி வருகின்றன. ஆனால், 2008 நெருக்கடியின் போது இருந்ததைவிடக் கடன் பன்மடங்கு அதிகரித்து விட்டதால், முன்னர் அரசுத் தலையீட்டின் மூலம் நெருக்கடியைச் சமாளித்ததைப் போல இந்த முறை சமாளிக்க முடியாது. அரசுகளின் கைகள் கட்டப்பட்டிருக்கும். வரவிருக்கும் நெருக்கடி மிகவும் கடுமையானதாக இருக்கும். நெருக்கடி வெகு நாட்கள் நீடிக்கும்” என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் நொரியேல் ரூபினி. இத்தகைய எச்சரிக்கையை உலகப் பொருளாதார மன்றமும் விடுத்திருக்கிறது.

உலகப் பொருளாதாரத்தின் தேக்கநிலை காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து, வளர்ச்சி விகிதமும் குறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் காப்புவாதம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், ஏற்றுமதியைச் சார்ந்து இயங்கும் பொருளாதாரங்களான இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் வளர்ச்சி விகிதம் 4.6% ஆகக் குறையும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

தனியார்மயம் – தாராளமயம் 10 சதவீத மேல்தட்டு வர்க்கத்தினருக்காக உருவாக்கியிருக்கும் நுகர்வுப் பண்பாடு.

ஏற்றுமதி வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனை ஈடுகட்டும் வகையில் உள்நாட்டுச் சந்தை விரிவடையவில்லை. விரிவடைய வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் ஊக்குவித்து வளர்க்கப்பட்டுள்ள சந்தை என்பது மக்கட்தொகையின் மேல் மட்டத்திலுள்ள 10% பேரை மட்டுமே சார்ந்து இயங்கும் நுகர்பொருள் சந்தை. இது தேங்கி விட்டது. கார்கள், இருசக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் விளைவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன. மாருதி நிறுவனம் 30% உற்பத்தியை குறைத்திருக்கிறது.

சோப், பற்பசை போன்ற எளிய நுகர் பொருட்களின் விற்பனையே வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களுடைய வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. கிராமப்புற வறுமை தீவிரமடைந்திருக்கிறது. இதன் விளைவாக ஒரு இந்தியனின் சராசரி உணவு உட்கொள்ளும் அளவு ஆப்பிரிக்க சராசரியை விடவும், மிகவும் பின்தங்கிய நாடுகளின் சராசரியை விடவும் குறைவானதாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

விவசாயத்தின் அழிவு கிராமப்புற வேலையின்மையைத் தோற்றுவித்து, நகரமயமாக்கத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. நகர்ப்புற வேலையின்மையும் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத மோடி, வேலையின்மை குறித்து தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தைத் தேர்தலுக்காக முடக்கி வைத்துவிட்டார்.

படிக்க :
♦ வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

தேர்தல் வெற்றிக்குப் பிறகு வேறு வழியின்றி அது வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% வேலையின்மை நிலவுவதாக அது கூறுகிறது. இது குறைவான மதிப்பீடு. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) கணக்கீட்டின்படி ஏப்ரல் 2019-இல் வேலையின்மையின் அளவு 9.35% ஆகும். அதாவது 4.17 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இவர்களில் 1.1 கோடி பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள். 2.2 கோடிப் பேர் 10 முதல் 12 -ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.

உள்நாட்டுச் சந்தை சார்ந்த தொழில்கள் வளர்ச்சியடைந்தாலொழிய, இவர்களுக்கு வேலை வழங்குவதற்கான வாய்ப்பே இல்லை. இதுதான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முதல் இன்றைய பிரதமரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ரதின்ராய் வரையிலான அனைவரும் கூறும் கருத்து. உள்நாட்டுச் சந்தை விரிவடைந்தால்தான், அதனைச் சார்ந்த தொழில்கள் வளரும். 90% உள்ள பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான் உள்நாட்டுச் சந்தை விரிவடையும். விவசாய வளர்ச்சியை உத்திரவாதப்படுத்துவது, உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிப்பது, சுயசார்புப் பொருளாதாரம் ஆகியவையே இதற்கான தீர்வு.

ஆனால், அம்பானிகளையும் அதானிகளையும் கொழுக்க வைத்து, ஏழைகளைப் பரம ஏழைகளாக மாற்றி வரும் புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் ஏழைகளின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதென்பது சாத்தியமற்றது. சர்வதேச நிதிமூலதனத்தின் அடிமையான மோடி அரசு சுயசார்பு பொருளாதாரத்தைக் கனவு காணவும் முடியாது.  90 -களில் அவ்வப்போது சுதேசி சவடால் அடித்து வந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச் இன்று சத்தமில்லாமல் அடங்கிவிட்டது.

மிகவும் பலவீனமான பிரதமர்கள் என்று கருதப்பட்ட சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள்கூட அமெரிக்காவைக் கண்டு இந்த அளவுக்கு தொடை நடுங்கியதில்லை.  வெனிசுவேலாவிலிருந்தும், இரானிலிருந்தும் எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டுமென்று டிரம்ப் உத்தரவிட்டவுடனே, மறுபேச்சின்றி அதற்கு அடிபணிந்தார் மோடி.

வேலைவாய்ப்பை உருவாக்கித் தராத மோடி அரசையும், வேலைவாய்ப்பு குறித்த அவரது திமிர்ப் பேச்சையும் கண்டித்துப் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நடத்தியப் போராட்டம். (கோப்புப் படம்)

இரான் எண்ணெயை விட அதிகமான விலை கொடுத்து சவுதி மற்றும் அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது மோடி அரசு.  இதனைப் புதிய காலனியம் (Neo- Colonism) என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கூறும் அளவுக்கு தேசத்தையும் தேசிய கவுரவத்தையும் அடகு வைக்கும் அடிமையாகவே மோடி அரசு நடந்து கொண்டிருக்கிறது.

டிரம்பின் மிரட்டலுக்குப் பயந்து, ஹார்லே டேவிட்சன் என்ற ஆடம்பர மோட்டார் சைக்கிளின் இறக்குமதி வரியை மோடி அரசு பாதியாகக் குறைத்தது. வாஷிங்டன் ஆப்பிள் முதல் அமெரிக்காவில் கழித்துக் கட்டப்படும் கோழிக்கால்கள் வரை அனைத்துக்கும் இறக்குமதி வரியைத் தள்ளுபடி செய்தது. இத்தனைக்குப் பிறகும் சில இந்தியப் பொருட்களுக்கு (தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள் போன்றவை) அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்குகளை தற்போது டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. இதனால் ஆயத்த ஆடை மற்றும் தோல் தொழில்கள்  பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழப்பர்.

தொழில் உற்பத்தித் துறையில் தானியங்கித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை அறிவு ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக உலகெங்குமே புதிய முதலீடுகள் வேலைவாய்ப்பை உருவாக்காத முதலீடுகளாகவே இருக்கின்றன. இதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. இந்தியத் தரகு முதலாளிகளும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீடு செய்யவில்லை.

பெரும்பாலான இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீளமுடியாத கடனில் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவை விடச் சர்வதேச நிதிநிறுவனங்களில் வட்டி விகிதம் குறைவு என்பதால், இவர்களுடைய கடன்களில் கணிசமான பகுதி அந்நியக்கடன்களாக உள்ளன. உள்நாட்டில் மின்சாரம், சாலை மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு 3 இலட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளனர்.

வங்கி அல்லாத கடன் வழங்கும் நிறுவனமான ஐ.எல். அண்டு எஃப்.எஸ். நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில், சுமார் 61,375 கோடி ரூபாயை 82 நிறுவனங்கள் விழுங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஐ.எல். அண்டு எஃப்.எஸ். நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து அதற்குக் கடன் கொடுத்திருந்த பொதுத்துறை வங்கிகள் நெருக்கடியில் சிக்கிக் கடன் வழங்குவதைச் சுருக்கிவிட்டன. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் முதல் நுகர்பொருள் கடன் வரையிலான அனைத்தும் முடங்கி விட்டன. இதனால் அந்தச் சந்தைகள் தேங்கியிருக்கின்றன. இந்த துறைகளின் வேலைவாய்ப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையின் தேக்கம் காரணமாகவும், அமெரிக்க அரசின் காப்புவாத நடவடிக்கைகள் காரணமாகவும் ஏற்றுமதி சுருங்கி விட்டது. உள்நாட்டுச் சந்தைதான் கதி என்ற போதிலும், அதனை உருவாக்கக்கூடிய முக்கியமான தொழிலான விவசாயம் நலிந்து விட்டது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களின் போது, ம.பி., இராஜஸ்தான், சட்டிஸ்கரில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்போவதாக காங்கிரசு வாக்குறுதி அளித்தவுடன், அதனைக் கடுமையாகச் சாடினார் அன்றைய நிதியமைச்சர் ஜெட்லி.

நகர்ப்புறங்களில் தெருவோரங்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் உழைக்கும் மக்கள். தாராளமயம் உருவாக்கியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வின் எடுத்துக்காட்டு.

தற்போது மோடி அரசு, 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் தருவதாக வாக்களித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை மிகக் கடுமையாக எதிர்க்கின்ற இந்திய தரகு முதலாளிகளின் சங்கமான எஃப்.ஐ.சி.சி.ஐ., விவசாயிகளுக்கு ரூ.6000 கொடுக்க வேண்டும் என்பதைத் தனது கோரிக்கையாகவே முன்வைத்திருக்கிறது. ஏனென்றால், அந்த மானியத்தின் உண்மையான நோக்கம் தேங்கிக் கிடக்கும் நுகர்பொருள் சந்தையை உயிர்ப்பிப்பதுதான்.

இந்த 84,000 கோடியை எங்கிருந்து திரட்டுவது? இந்த நிதியைத் திரட்ட கார்ப்பரேட்டுகளுக்கு வரி விதிக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே கார்ப்பரேட் வரியைக் குறைக்க கோரி வருகிறார்கள். அப்படி வரி விதித்தாலும் அதனைச் சர்வதேச நிதிமூலதனம் ஒப்புக்கொள்ளாது.

84,000 கோடியைப் பற்றாக்குறை பட்ஜெட் மூலம் ஈடுகட்ட முயன்றால், பற்றாக்குறையின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% -ஐத் தாண்டும். இதன் விளைவாக கடனைத் திருப்புவதற்கான இந்தியாவின் நம்பகத்தன்மையைச் சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்து விடும். இந்த வழியையும் நிதி மூலதனம் ஏற்றுக் கொள்ளாது. எனவே, மக்களிடமிருந்துதான் இது வரியாக வசூலிக்கப்படும்.

படிக்க :
♦ பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்
♦ மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, இரானிடம் எண்ணெய் வாங்குவது தடுக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கவேண்டியிருப்பது ஆகிய காரணங்களால் அந்நியச் செலாவணி இருப்பு குறையும். இதன் தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகளும் குறையத் தொடங்கும்.

வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமென்றால் நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றின் மீது இருக்கின்ற எஞ்சிய சட்டத் தளைகளை நீக்கவேண்டுமென்றும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டுமென்றும் ஆளும் வர்க்கங்கள் கூறுகின்றன. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமல்படுத்துகிறது மோடி அரசு.

பதவியேற்ற முதல் நூறு நாட்களில், பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்கும் நிலங்களை கையகப்படுத்தி, நில வங்கி ஒன்றை உருவாக்கி பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான நிலத்தை வழங்கப்போவதாகவும், 42 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் சாலை முதலான உள் கட்டுமானங்களுக்கான நிதியைத் திரட்டப்போவதாகவும், ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு இருக்கும் உச்ச வரம்பை அகற்றுவதன் மூலம் அந்நிறுவனத்தை விற்பனை செய்யப்போவதாகவும், தொழிலாளர் நலம் தொடர்பான 44 சட்டங்களை ரத்து செய்துவிட்டு, ஊதியம், தொழிலுறவு, சமூகப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு என்ற நான்கு பிரிவுகளில் அடங்குமாறு அவை அனைத்தையும் மாற்றப்போவதாகவும் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா திட்டம், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிப்பது, நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற அடுத்தடுத்த தாக்குதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆளும் வர்க்கம் வைத்திருந்தவை. அவற்றை இப்போது  தீவிரமாக மோடி அரசு நடைமுறைப்படுத்தும்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கோ, கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கோ மோடி அரசிடம் மட்டுமல்ல, புதிய தாராளவாதக் கொள்கையைப் பின்பற்றும் எந்தக் கட்சியிடமும் தீர்வு இல்லை.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக்கின்ற வாழ்வாதாரங்களையும் ஆளும் வர்க்கம் மக்களிடமிருந்து பறிக்கின்றது. இதனை மக்களிடம் நியாயப்படுத்த முடியாத நிலை வந்து விட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கத்தான் வலதுசாரி பாசிச அரசியல் சக்திகள் உலகெங்கும் அரசியல் அரங்குக்கு வந்திருக்கின்றன. நமது நாட்டில் இது கார்ப்பரேட் பாசிசம்.

தொரட்டி
புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart