வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – 10 ரூபாய்க்கு ஆறு ஆப்பம், 5 ரூபாய்க்கு ஆறு இட்லி !

ய்யம்பேட்டை கிராமம் ராஜீவ் காந்தி நகர். அங்கே ஆப்பக்கார ஆயாக் கடை; பொன்னம்மா ஆயா ஆப்பம் சுடுறதுல ஸ்பெஷலிஸ்ட். ரேஷன் அரிசி. கொஞ்சோண்டு வெல்லம். சுள்ளி அடுப்பு. இரும்பு கடாய் இத வெச்சிக்கினு அந்த நகரையே ஆப்பத்துக்கு அடிமையாக்கியது ஆயாவின் கடை. பத்து வருசமா ஒரு ஆப்பத்தோட விலை 2 ரூபா தான். 10 ரூபாய்க்கு ஆப்பம் வாங்குனா 6 ஆப்பம் தரும். இட்லியும் பத்து வருசமா 1 ரூபாதான் 5 ரூபாய்க்கு 6 இட்லி தரும்.

காலை 6 மணியிலருந்தே டிபன் ரெடியாயிடும். 10 மணி வரைக்கும் டிபன் இருக்கும். எந்த நேரமும் சாம்பாரும் இட்லியும் சூடாவே இருக்கும். காரணம் அடுப்பு எரிக்கும்போதே கனக்கும் நெருப்பை வெளியில் தள்ளி அந்த நெருப்பில சாம்பார் சட்டி வைக்கப்பட்டு இருக்கும். ஆப்பத்தை வடை போட்டு முடிச்ச சட்டியிலத்தான் போடும். வெல்ல ஆப்பம் அவ்வளவு சூப்பரா இருக்கும். முட்டை ஆப்பம் வேணும்னா முட்டைய நாமே வாங்கிக் கொடுத்துடணும்.

பாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது. தனக்குன்னு வச்சிருக்கும் மாவில் தோசை ஊத்திக்கொடுத்தாவது பசி போக்கும்.

மதியம் 2 மணிக்கு மேல பக்கத்து ஏரிக்கரைக்கு கிளம்பிடும், தண்ணி வறண்ட ஏரியில சுள்ளி ஒடைச்சிட்டு வரும். அதையும், செம கட்டி தனி ஆளா தூக்கி வரும். எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு வேல செய்துட்டே இருக்கும். 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பும். இப்ப, ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடித்தான் கிரைண்டர் வாங்கிச்சு. அப்பக்கூட உரல்ல அரைக்கிற மாதிரியே கிரைண்டர் பக்கத்துலயே இருக்கும். போட்டுட்டு எட்ட வராது. ஏன்னுக்கேட்டா, மாவு இட்லிக்கும், ஆப்பத்துக்கும் எடுக்கணும், அந்த பதம் வரும்போது டக்கு எடுத்தாத்தான் சரியாயிருக்கும்னு சொல்லும் ஆப்பக்கார ஆயா.

பொன்னம்மா பாட்டியின் கடையில் பசியாறும் மழலைகள்.


காமாட்சி


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

2 மறுமொழிகள்

  1. அய்யம்பேட்டை, கும்பகோணம் தஞ்சாவூர் பஸ் ரூட்டில் இருக்குதே அதுவா ?

    • இந்த அய்யம்பேட்டை காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க