காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 டிசம்பர் 30 அன்று ஓய்வூதிய ஒழுங்காற்று – மேம்பாட்டு ஆணையம் ஒன்றை நிறுவுவதற்கென அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது.

… 2004 ஏப்ரல் முதல் தேதி அன்றும், அதற்குப் பிறகும் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த சட்டப் பாதுகாப்பு ஏதுமற்று இருக்கும் 40,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கும் பொருட்டே ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது என்று விரிவானதொரு விளக்கத்தை நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) அளித்திருந்தார். உண்மையில், நடைமுறையில் இருந்து வந்த ‘வரையறுக்கப்பட்ட’ அல்லது ‘உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது தன்னிச்சையான வகையில் இந்த ஊழியர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்த ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் செல்லும் தொகைக்கு ஏற்பவும், அவர்கள் செலுத்திய தொகைக்கு பணியிலிருந்து அவர்கள் செய்து பெறுகையில், இருக்கும் மதிப்பிற்கு ஏற்பவும் ஓய்வூதியம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், எந்தவொரு ஓய்வூதியத் திட்டத்திலும் இடம்பெறும் சமூகப் பாதுகாப்பு என்ற அடிப்படைக் கோட்பாடு இப்புதிய திட்டத்தில் இல்லாதநிலை எழுந்துள்ளது. இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், 1935-ல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வரையறுக்கப்பட்ட அல்லது உத்திரவாதப்படுத்தப்பட்ட’ செய்வூதியப் பயன்களை தலைகீழாக மாற்றி, அவற்றை சந்தையைச் சார்ந்ததாக மாற்றி அமைத்துள்ள அமெரிக்க அதிபர் புஷ் செல்லும் பாதையை அடியொற்றிச் செல்லவே இந்தியா விழைகிறது எனலாம்.

தனியார்மயமாக்கப்படும் செய்வூதிய நிதி

இது ஓய்வூதிய நிதியை தனியார்மயமாக்கும் முயற்சியே ஆகும். பெருமளவில் உள்ள ஓய்வூதிய நிதியை, ஆழம் காணமுடியாத சூதாட்ட களமாகத் திகழும் பங்குச் சந்தைக்கு திசை திருப்பிவிடும் முரட்டுத்தனமான முயற்சி மட்டுமின்றி, இது நிதிமூலதனம் இடும் கட்டளைக்கு ஏற்ப அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையும் ஆகும். பங்குச் சந்தையில் பொதுவாக நிதி வழங்கி வரும் முறையிலிருந்தே இதில் அடங்கியுள்ள அபாயத்தை எளிதாக உணர முடியும். பங்குச் சார்ந்ததாக செய்வூதியத்தை மாற்றியமைக்க முன்மொழிந்தவர்களின் அசட்டு தைரியத்தைக் கண்டு வியக்கவே வேண்டியுள்ளது. இது ஏகாதிபத்திய புதிய பொருளாதாரக் கொள்கையினை ஏற்றுக் கொண்டதன் விளைவாக அரங்கேற்றப்படும் நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். உலக அளவில் நடைபெற்று வரும் இச்சதியினை நாம் இங்கே மீண்டும் கண்டு வருகிறோம்.

தொழிலாளர்களுக்கு இழப்பினை ஏற்படுத்தும் தனியார்மயமாக்கல்

ஓய்வூதிய நிதி எங்கெல்லாம் தனியாரின் சூறையாடலுக்குத் திறந்து விடப்பட்டதோ அங்கெல்லாம் தொழிலாளர்கள் அளவிட முடியாத இழப்பையே அடைந்தார்கள். சில சமயங்களில் தங்களது சேமிப்பு முழுவதையுமே தொழிலாளர்கள் இழந்திருக்கின்றனர். (நூலிலிருந்து பக்.2-3)

சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, தொழிலாளர்களும் முதலாளிகளும் செலுத்தும் தொகையினை பங்குச் சந்தைக்கு திருப்பி விடவேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய சந்தைச் சார்ந்த நவீன, தாராளமய சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட தொடங்கிய பிறகு இவற்றால் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டன. காலங்காலமாக போற்றப்பட்டு வந்த சமூகப்பாதுகாப்பு, செய்வூதியத் திட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்ததில் கோல்ட்வாட்டா, மில்டர் ப்ரைட்மேன் ஆகியோர் முன்னணியில் நின்றனர். பல தலைமுறைகளாகவே, குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பிரபலமாக இருந்த சமூக பாதுகாப்புத் திட்டமானது உலக முழுவதிலும் உள்ள நவீன தாராளமயவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளது.

இந்தியாவில் அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுவோர் ஆகியோருக்குப் பென்ஷன் என்பது வரலாற்று ரீதியான தொடர்பையும் அடித்தளத்தையும் கொண்டதாக இருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். சிங்கால் தலைமையிலான 4-வது ஊதியக் கமிஷனின் அறிக்கையின் இரண்டாவது பிரிவில் அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளனவற்றை கவனத்தில் கொள்வது பொருத்தமாக அமையும். வயது மூப்பின் காரணமாக, திறமையுடன் பணியாற்ற முடியாத தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வழக்கம் 19 -ம் நூற்றாண்டியேலே ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்றும், பின்னர் அது உலகின் இதர நாடுகளுக்கும் பரவியது என்றும் 1986-ல் வெளியான ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

ஓய்வூதிம் – நிலையான, அமல்படுத்தப்பட வேண்டியதோர் உரிமை.

‘இந்த ஊழியர்களைப் பொறுத்தவரையில் ஓய்வூதியம் என்பது தாராள மனப்பாங்குடனோ அல்லது கருணையின் அடிப்படையிலோ அல்லது சமூகநலக் கண்ணோட்டத்துடனோ அளிக்கப்படும் தொகையல்ல. மாறாக, சட்டரீதியாக அமல்படுத்தப்பட வேண்டியதோர் உரிமையாகும்’ என முன்னாள் ராணுவத்தினர் மத்திய அரசு உழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் குறித்து மேலே கூறிய அறிக்கை தெளிவாகக் கூறுகின்றது. ‘ஒய்வூதியம் என்பது அரசின் தாராள சிந்தனையோடும் விருப்பத்தோடும் தானமாகத் தரப்படுவதல்ல.

மாறாக ஓய்வூதியம் பெறும் உரிமையானது அரசு ஊழியர்களின் நிலையான உரிமையாகும்’ என தேவகிநந்தன் பிரசாத் -பீகார் மாநில அரசு – இதர தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பையே இந்த அறிக்கை ஆதாரமாகக் கொண்டிருந்தது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை குறித்துக் கூறுகையில், ‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 31 (1), பிரிவு 19 (1) (F) ஆகியவற்றின் படி, ஓய்வூதியம் என்பது சொத்தாகும். பிரிவு 19-ன் உட்பிரிவு (5)-இன் படி பாதுகாக்கப்படவில்லை ‘ என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக தற்போது நடைமுறையில் இல்லாத போதிலும், செய்வூதியம் பெறுவதற்கான உரிமையின் சொல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (நூலிலிருந்து பக்.10-11)

தனியானதொரு பென்ஷன் ஒழுங்காற்று ஆணையத்தை அமைத்ததன் மூலம் பென்ஷன் திட்டங்களையே தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது இந்திய மக்களின் சேமிப்பையும் – ஏன் இந்தியப் பொருளாதாரத்தையும் இதன் மூலம் அன்னிய சக்திகளிடம் ஒப்படைக்கும் வேலையிலேயே தற்போது அரசு ஈடுபட்டுள்ளது. சுதந்திர சந்தை ஆதரவாளர்களான அன்னிய கம்பெனி முதலாளிகள் பென்ஷன் திட்டங்களுக்காக இந்திய மக்கள் செலுத்தக்கூடிய சேமிப்புத்தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கே ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை…

படிக்க:
தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?
கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்

… பென்ஷன் திட்டம் என்பது ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டம். இதனை இந்திய நாட்டின் தனியார் கம்பெனிகளிடமோ அல்லது அன்னிய தனியார் கம்பெனிகளிடமோ ஒப்படைக்கக்கூடாது. பென்ஷன் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்த பல்வேறு நாடுகளின் கசப்பான அனுபவங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் சேமிப்பை தங்கள் இலாப வேட்டைக்காக பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. (நூலிலிருந்து பக்.23)

நூல் : அரசாங்கத்தின் பென்ஷன் சூதாட்டம்
ஆசிரியர் : என்.எம். சுந்தரம்
தமிழில் : கி. இலக்குவன், கிரிஜா, வீ.பா. கணேசன்

வெளியீடு : அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன்
இணைந்து பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 24
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க