அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 26

புவாகில்பேரும் பிரெஞ்சு அரசியல் பொருளாதாரமும்
அ.அனிக்கின்

புவாகில்பேரின் கருத்துக்களில் இருந்த கவர்ச்சியான, மேன்மையான அம்சம், அவற்றிலடங்கியிருந்த மனிதாபிமானமே. எனினும் பொருளாதாரத் தத்துவக் கோணத்திலிருந்து பார்க்கும் பொழுது, அவருடைய ”விவசாய மோகம்” அதன் மறுபக்கத்தையும் கொண்டிருந்தது.

தொழில்துறை மற்றும் வர்த்தகத்தின் பாத்திரத்தைக் குறைவாக மதிப்பிட்டு விவசாயப் பொருளாதாரத்தை இலட்சியமாகக் காட்டிய பொழுது அவர் பெருமளவுக்குப் பின் திசையில் பார்த்தாரே தவிர முன் திசையில் பார்க்கவில்லை. இது அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களில் ஆதிக்கம் செலுத்தியது .

புவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும். தொழில்துறை, வர்த்தக முதலாளி வர்க்கம் இங்கிலாந்தைக் காட்டிலும் பிரான்சில் ஓப்பிடவும் இயலாத அளவுக்கு பலவீனமானதாக இருந்தது; மேலும் அங்கே முதலாளித்துவ உறவுகள் மெதுவாகவே வளர்ச்சியடைந்தன.

இங்கிலாந்தில் விவசாயத்தில் கூட முதலாளித்துவ உறவுகள் வேரூன்றியிருந்தன. இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் உழைப்புப் பிரிவினையும் போட்டியும் மூலதனம் மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வும் பெருமளவுக்கு இடம் பெற்றிருந்தன. இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம் என்பது கலப்பற்ற முதலாளித்துவக் கருத்துக்களைக் கொண்ட முறையியலாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. ஆனால் பிரான்சில் அது பிரதானமாகக் குட்டி முதலாளித்துவத் தன்மையைக் கொண்டிருந்தது.

ஆங்கில மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரம் – அதன் பிறப்பிடத்தில் நிற்பவர் பெட்டி – இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகளை, ஒன்றோடொன்று இணைந்துள்ள பிரச்சினைகளை விஞ்ஞான ஆராய்ச்சியின் மையத்தில் வைத்தது, பண்ட விலைகளின் இறுதியான அடிப்படை என்ன, முதலாளியின் லாபம் எங்கேயிருந்து வருகிறது என்பவையே அவை. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு மதிப்பின் இயல்பை ஆராய்வது அவசியமாயிற்று. உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஆங்கிலப் பொருளியலாளர்களுடைய சிந்தனையின் தர்க்கரீதியான அடிப்படையாயிற்று.

இந்தத் தத்துவத்தை வளர்க்கும் பொழுது, பல்வேறு பயன் மதிப்புக்களை உருவாக்குகின்ற ஸ்தூலமான உழைப்புக்கும் குணரீதியான தன்மையைக் கொண்டிராமல் நீளம், அளவு என்ற ஒரு அளவுருவை மட்டுமே பெற்றிருக்கும் சூக்குமமான உழைப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வதை நோக்கி அவர்கள் படிப்படியாக முன்னே வந்தார்கள். இந்த வேறுபாடு மார்க்சுக்கு முன்பு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை, முறையாக எடுத்துக் கூறப்படவுமில்லை. ஆனால் அதை அணுகுவதற்குச் செய்யப்பட்ட முயற்சியே பெட்டி முதல் ரிக்கார்டோ வரை ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வரலாறாக ஓரளவுக்காவது இருக்கிறது.

அதன் ஆராய்ச்சிகள் உண்மையில் மதிப்பு விதியைப் பற்றியே இருந்தன. ஆனால் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, ”மதிப்பு விதி முழு வளர்ச்சி அடைவதற்கு, பெரும் அளவில் தொழிலுற்பத்தியும், சுதந்திரமான போட்டியும் நிலவுகின்ற சமூகத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நவீன முதலாளித்துவ சமூகத்தை முன்னூகிக்கிறது”. (1) இந்தச் சமூகம் இங்கிலாந்துக்கு வெகு காலத்துக்குப் பிறகுதான் பிரான்சில் ஏற்பட்டது. எனவே தத்துவாசிரியர்கள் மதிப்பு விதியின் இயக்கத்தைப் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் கஷ்டமானதாக இருந்தது – புவாகில்பேர் தனது “அளவு விகித விலைகள்” என்ற கருதுகோளின் மூலமாகப் “பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பை உழைப்பு நேரத்துக்கு நடைமுறையில் வகைப்படுத்தினார்…. ஆனால் அவருக்கே அது தெரியாது” (2) என்பது உண்மையே. ஆனால் உழைப்பின் இரட்டை அம்சத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. எனவே செல்வத்தின் மதிப்பு அம்சத்தை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். இந்த மதிப்பு அம்சம் எக்காலத்துக்கும் உரிய சூக்குமமான உழைப்பைக் கொண்டிருக்கிறது. அவர் செல்வத்தின் பொருளாயத அம்சத்தை மட்டுமே பார்த்தார்; அதைப் பயனுள்ள பொருள்களின், பயன் மதிப்புக்களின் குவியல் என்பதாக மட்டுமே கருதினார்.

படிக்க:
♦ பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன?
♦ கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !

புவாகில்பேரின் சிந்தனையிலடங்கியுள்ள இந்தக் குறையை பணத்தைப் பற்றிய அவருடைய கருத்துக்களில் குறிப்பிடத்தக்க வகையில் தெளிவாகக் காணலாம். மதிப்பின் விதி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தில் பண்டங்களும் பணமும் பிரிக்க முடியாத மொத்தமாக இருக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

ஏனென்றால் பரிவர்த்தனை மதிப்பின் தனி முதலான கொள்கலமாகிய பணத்தில் சூக்குமமான உழைப்பு தனது முழுமையான வெளியீட்டை அடைகிறது. புவாகில்பேர் பணத்தை வெறும் பயனுள்ள பொருள்கள் என்று மட்டுமே கருதிய பண்டங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்த்தார்; பணத்தை எதிர்த்து வெறிகொண்ட வகையில் போராடினார்.

பணம் அதனளவில் நுகர்வுப் பொருள் அல்ல என்பதால் அது அந்நியப் பொருளாக, செயற்கையானதாக அவருக்குத் தோன்றியது. பணம் இயற்கைக்கு மாறான, கொடுமையான ஆட்சியைப் பெற்று விடுகிறது; இதுவே பொருளாதார அழிவுக்குக் காரணம். அவர் பணத்தைப் பற்றிக் கசப்பான கண்டனத்தோடு தம் ஆராய்ச்சியுரையைத் தொடங்குகிறார். ”.. நம்முடைய மனங்கள் கெட்டுப் போயிருப்பதால் தங்கமும் வெள்ளியும் தெய்வ உருவங்களாகி விட்டன.. அவற்றை தெய்வங்களாகவே மாற்றி விட்டோம். பெரும்பாலான மக்களின் மதமாகவும் வழிபடுகின்ற பொருளாகவும் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்ற போலித் தெய்வங்களுக்குக் குருட்டுத்தனமான பண்டைக் காலம் ஒருபோதும் படைத்திராத அளவுக்கு அதிகமான பொருள்களையும் விலைமதிப்பற்ற காணிக்கைகளையும் மக்களையும் கூட இன்னும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.”(3)

முதலாளித்துவ உற்பத்தியைப் பணத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும், அதே சமயத்தில் அதன் அடிப்படைகளை மாற்றிவிடக் கூடாது என்ற கற்பனாவாத ஆசை, மார்க்ஸ் குறிப்பிட்டது போல, புவாகில்பேர் முதல் புரூதோன் வரை பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் ”தேசிய மரபுரிமைக் குறைபாடாகும்”.

புவாகில்பேர் காலத்தில் முதலாளித்துவ சமூகம் அப்பொழுதுதான் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் உருவாகத் தொடங்கியிருந்தது. எனவே அந்த முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க இயல்பை, சுரண்டும் தன்மையை அவரால் வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால் அவர் பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வையும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் ஆத்திரத்தோடு கண்டனம் செய்தார்.

“பழைய அமைப்பு” வீழ்ச்சி அடைவதற்கும் புரட்சி தோன்றுவதற்கும் வழிவகுத்த புத்தகங்களை முதன்முதலாக எழுதிய சிலரில் புவாகில்பேரும் ஒருவர். சர்வாதிகார முடியாட்சியை ஆதரித்தவர்கள் 18-ம் நூற்றாண்டிலேயே இதை உணர்ந்திருந்தார்கள். புவாகில்பேரின் “அருவருப்பான நூல்கள்” அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டின, கொள்ளையடித்தலையும் கலகத்தையும் ஊக்குவித்தன; இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கைகளில் அவை குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தானவையாக இருந்தன என்று அத்தகைய ஆதரவாளர் ஒருவர் அவர் மரணமடைந்து அநேகமாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் எழுதினார். ஆனால் அவருடைய புத்தகங்களும் ஆளுமையும் முக்கியமானவை, சுவாரசியமானவை என்று நாம் கருதுவதற்குரிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, A Contribution to the Critique of Political Econorm, Moscow, 1970, p. 60..

(2) 1bid., p. 54.

(3) Economistes financiers (dit XVIIIe siecte, Paris, 1843, pp. 394-395,

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க