எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 இஸ்லாமபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலைநகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்து பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்பட்டேன்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். தாடி வைத்து தொள தொளவென்று நீண்ட மேலங்கி அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருத்தர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹொட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் குறித்து தந்த ‘பேர்ல் கொன்ரினென்ரல்’ என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார்.

எந்த நாட்டுக்குப் போனாலும் முதன்முதல் ஏதாவது ஓர் அதிர்ச்சி கிடைப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த முதல் அதிர்ச்சி மூன்று சக்கர ஒட்டோக்களில். அவற்றின் உருவத்தில் அல்ல, வேகத்திலும் அல்ல, காட்சியில். எனக்கு எதிரிலே வந்த ஒட்டோக்களிலும், என்னைத் தாண்டிப்போன ஒட்டோக்களிலும் பின் படுதாவில் நடிகை சிறீதேவியின் சிரித்த முகப் படம் பெரிதாகக் தொங்கியது. ‘அட எனக்கு முன்பாகவே சிறீதேவி இங்கே வந்து எல்லா ஒட்டோக்களையும் வளைத்து வாங்கிப் போட்டுவிட்டாரே’ என்றுதான் என்னை எண்ண வைத்தது. ஆக பாகிஸ்தானில் வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே எனக்கு பரிச்சயமான இந்த முகம் ரோடுகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்து சிறிது சந்தோசம் ஏற்படவே செய்தது.

என் சந்தோசம் சாரதிக்குத் தெரிந்துவிட்டது. திடீரென்று ‘எந்த பேர்ல் கொன்ரினென்ரல்?’ என்றார். இந்தக் கேள்வியை பாதி தூரம் கடந்து விட்ட பிறகுதான் கேட்டார். நான் ராவல்பிண்டி என்று சொன்னேன். அவர் எரிச்சலுடன் நாங்கள் இஸ்லாமபாத்துக்கு வந்துவிட்டோம். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம் என்றபடி வண்டியைத் திருப்பினார். பயண முடிவில் நான் இரண்டு மடங்கு கட்டணம் அழவேண்டி வந்தது.

பிறகு விசாரித்து இரண்டு ஹொட்டல்கள் இல்லை என்பதைக் கண்டுபிடித்தேன். நான் சுலபமாக ஏமாறக்கூடிய ஆள் என்பதை அந்தச் சாரதி எப்படியோ அறிந்து வைத்திருந்தார். சிரித்தபடியே சிறீதேவி இவ்வளவு பெரியது துரோகம் செய்வார் என்பதை நானும் எதிர் பார்க்கவில்லை.

புராணங்களில் சொல்லப்பட்ட எட்டு நாகங்களில் ஒன்று தட்சன். இந்த நாக அரசனின் வழித்தோன்றல்கள் ஸ்தாபித்த நகரம்தான் ‘தட்சிலா’ (Taxilla) என்பது பாரம்பரியக் கதை. இது ராவல்பிண்டியில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. 2,500 வருடங்களுக்கு முன்னர் இங்கே ஓர் உலகப் புகழ்பெற்ற கல்வி மையம் செழிப்பாக வளர்ந்தது. உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கல்விமான்கள் இங்கே கூடினார்கள். அங்குலிமாலா தன் தாயைக் கொல்லப்போன போது புத்தர் தடுத்து ஆட்கொண்டது இங்கே தான் என்பார்கள். தட்சிலாவுக்கு யேசுவும் வந்திருந்தார் என்று ஹொல்கர் கேர்ஸ்டென் என்பவர் தன் புத்தகத்தில் அழுத்தமாக எழுதுகிறார்.

கி.மு 326 -ல் அலெக்ஸாந்தர் தட்சிலா அரசனான ஒம்பிஃஸின் விருந்தாளியாக மூன்று நாட்கள் தங்கி இருந்திருக்கிறார். தத்துவஞானி கௌடில்யர் இங்கேதான் அலெக்ஸாந்தருக்கு பெரிய பிரசங்கம் செய்தார். பேரரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஞானியின் ஒயாத வாயசைவை எப்படி நிறுத்துவது என்பது தெரியாமல் அவருடைய தலையை கொய்யுங்கள் என்று சேவகர்களுக்கு கட்டளை இட்டாராம். கௌடில்யர் தன் கால்களின் துரிதத்தினால் தன் தலையைக் காப்பாற்றினார் என்று பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி எழுதினார்கள். இந்த விவரங்களை சரித்திரக்காரர்களிடம் விட்டுவிட்டு என்னுடைய சரித்திரத்துக்கு வருவோம்.

படிக்க:
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
♦ காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

நான் சூரியக் கோயிலையும் அங்கே உள்ள பிரபலமான இரட்டைத் தலை கழுகு உருவத்தையும் பார்த்தபடி நின்றேன். எனக்கு சற்று தூரத்தில் இருந்த சிதிலமான 2000 வருடவயதான சுவரில் ஒருத்தர் தன் 40 வயது கால்களை பதித்தபடி குந்தியிருந்தார். மிகப் பெரிய கொட்டாவி ஒன்றை உருவாக்க நினைத்து பாதியிலே அது சரியாகப் போகாததால் நிறுத்திவிட்டு இன்னொரு முயற்சி செய்யும் யோசனையில் இருந்தார். என்னைக் கண்டதும் தன் பின்னங் கால்களை 2000 வருட சுவரில் இருந்து இறக்கி நிலத்தில் வைத்து நிமிர்ந்தார். முரட்டு சால்வை போர்த்தியிருக்கும் ஆறடி உயரம், பச்சைக் கண்கள். என்னிடம் ஏதோ சதிக்கு கூப்பிடுவது போல கிட்ட வந்து தன் உள்ளங்கையில் மறைத்து வைத்த ஒரு நாணயத்தை மெல்லத் திறந்து காட்டினார். நெளிந்த வட்ட நாணயம் மிகப்பழசானது. அலெக்ஸாந்தர் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக தங்கள் குடும்பத்தில் இதைப் பாதுகாத்து வருவதாகவும் வறுமை காரணமாக விற்கவேண்டி இருப்பதாகவும் கூறினார்.

மாதிரிப் படம்

நாணயத்தை வாங்கிப் பார்த்தேன், சந்தேகமே இல்லை. அலெக்ஸாந்தர் தலை போட்ட யானைத்தோல் கவசம் அணிந்த பிரபலமான நாணயம். பேரம் நடந்தது. இருபது டொலருக்கு வாங்கிவிட்டேன். இதன் விலை வெளியே நூறு மடங்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒரு நண்பர் தன்னிடம் அதுபோல் இருப்பதாகக் கூறினார். இன்னொருத்தர் தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாகச் சொன்னார். கடைசியில் பார்த்தால் இஸ்லாமபாத்தில் இந்த நாணயம் இல்லாதவரே ஒன்று இரண்டு பேர்கள்தான் என்று தெரிய வந்தது. நாணயம் விற்க வந்தவரிடம் நாணயம் எதிர்பார்த்தது என் குற்றம் என்று மனைவி உற்சாகத்துடன் சுட்டிக்காட்டினாள்.

அந்த வருடம் நல்ல வருடம். என் நண்பர்களில் ஒருத்தராவது கடத்தப்படவில்லை. ஒருத்தராவது குண்டு வெடிப்பில் இறக்கவில்லை. ஒருத்தராவது சிறையில் அடைக்கப்படவில்லை. லாகூரிலே பார்க்க வேண்டியது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது, இன்னும் ஒரு சில காட்சிகளே எஞ்சி இருந்தன. இந்தக் கடைசிக் கட்டத்துக்கு ஒரு வழி காட்டியை வைத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று மனைவி அபிப்பிராயப்பட்டாள்.

முத்து மசூதிக்கு கிட்ட இரண்டு காட்டு மயில்கள் சனசந்தடியைப் பொருட்படுத்தாமல் எதையோ கொத்திக்கொண்டிருந்தன. ஒரு பெட்டிக் கடையில் சிலர் ‘நாண்’ ரொட்டியை வாங்கி மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்த பந்து இறைச்சிக் குழம்பில் தோய்த்து தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த பஞ்சாபி வழிகாட்டி குஞ்சம் வைத்த தலைப்பா கட்டியிருந்தார். பஸ் நிலையத்தில் சகாயவிலைக் கடையில் வாங்கிய இருபது ரூபா கறுப்புக் கண்ணாடியை மாட்டியபடி, இரண்டு நாள் வயதான பறவை எச்சமோ, அணில் எச்சமோ, வினை எச்சமோ ஏதோ ஒன்றை வெள்ளையாக தன் தோளிலே அவருடைய தகுதிக்கு ஏற்றவாறு தரிக்திருந்தார். அவருடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் கறாராக பேசி முடிவு செய்தோம்.

தன் தகப்பனைப் போல ஒளரங்கசீப் கட்டிடக்கலையில் ஆர்வம் காட்டவில்லை. அபூர்வமாக அவர் கட்டிய அலாம்கீர் வாசலை ஏதோ தான்தான் கட்டிமுடித்தது போல வழிகாட்டி பெருமையாகக் காட்டினார். அதன் பிறகு ஷாஜஹான் கட்டிய சீஸ் மஹாலைப் பார்த்தோம். முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதித்துக் கட்டிய மாளிகை. அதன் உட்புறத்தில் வழிகாட்டி நெருப்பு கொழுந்தைப் பற்றவைத்து வீசி வீசிக்காட்டிய போது எங்கும் தீக்கொழுந்து மின்னல்போல பரவி ஒளியடித்தது.

இறுதியாக ‘நவ்லாக்’ என்ற மண்டபம். வளைந்த சலவைக்கல் விமானம் முழுக்க கலாபூர்வமான உள்வண்ண வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அசந்துபோய் சில நிமிடங்கள் பேச்சு வராமல் நின்றோம். ‘நவ்லாக்’ என்றால் ஒன்பது லட்சம். எதற்காக ஒன்பது லட்சம் என்று பேர் வைத்தார்கள் என்று கேட்டேன். ஒன்பது லட்சம் உள் வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். எங்கள் வழிகாட்டி சொன்ன பதில் ஆச்சரியத்தை தந்தது. தாஜ்மஹாலை உலகத்துக்கு தந்த ஷாஜஹானுக்கு கட்டிடங்கள் கட்டுவதே வேலை. அவரிடம் உயர்ந்த கணக்காளர்கள் இருந்தார்கள். வேலை நடக்கும் போதே ஒவ்வொரு செலவுக்கும் நுணுக்கமாக கணக்கு எழுதி வைத்துவிடுவார்கள். இந்த மண்டபம் முடிந்தபோது ஷாஜஹான் செலவு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். கணக்காளர்கள் அவசரமாக கூட்டிப் பார்த்தபோது மிகச் சரியாக ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெயரைக் சூட்டிவிட்டார்கள்.

படிக்க:
கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை
♦ அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

எங்கள் சுற்றுலா ஒருவாறாக முடிவை நெருங்கியது. முழங்கால் தெரிய உடை உடுத்திய வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தி தனியாக, கையிலே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, சுவர்களை ஆராய்ந்தபடி நின்றார். அவரை சிறுவர்கள் சூழ்ந்து, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி ரஸ்ய எழுத்துக்கள் போல ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நின்றார்கள். வழிகாட்டி திடீரென்று அவசரம் காட்டினார். எங்களை சீக்கிரத்தில் முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாடிக்கையை பிடிப்பதற்காக விடை பெற்றுக்கொண்டு அவளை நோக்கி ஒடினார். நாங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தான் வழிகாட்டி மீதி ஒன்பது ரூபாய்க்கு பதில் நாலு ரூபா கொடுத்தது தெரியவந்தது. ஒன்பது லட்சத்துக்கு ஒழுங்காக கணக்கு வைத்த பேரரசன் கதையைச் சொன்னவர் ஒன்பது ரூபாய் கணக்கில் தவறியது எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.

என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது. அவர்கள் என்னிடம் ஏமாறும் சந்தர்ப்பமும் வாய்த்தது.

என்னுடைய இஸ்லமாபாத் வாழ்க்கையில் ஒருமுறை இந்திய தூதரகத்தில் நடந்த ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இங்கே இந்தியர்களுடன் பழகக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தோம். இருந்தும் ஒரு பலமான, பழமையான உந்துதலால் இந்த விருந்துக்குப் போவதென்று நானும் மனைவியும் முடிவு செய்தோம்.

நாங்கள் இங்கே வசித்த காலங்களில் என் மனைவி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாள். கூந்தலில் பூ வைப்பதும், நெற்றியில் பொட்டு வைப்பதும் ஆபத்தான காரியங்கள். உங்களை இந்தியர் என்று நினைத்து தொடரத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர சேலை உடுத்தும் போது இடைதெரியும் அபாயம் இருந்தது. சல்வார் கமிஸ் உடை சகல அங்கங்களையும் மறைக்க வல்லது. ஆகவே எல்லா அங்கங்களையும் சேமமாக எடுத்துக் கொண்டு எங்கேயும் பயமில்லாமல் போகலாம், வரலாம்.

விருந்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது எங்கள் காரைத் தொடர்ந்து நீண்ட நேரமாக இன்னொரு கார் வந்தது. உளவுத்துறையில் முன் அனுபவம் இல்லை எனக்கு. நான் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை வீட்டுக் காவல்காரர்களும், கார் சாரதியும் உளவுத்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாக சொன்னார்கள்.

அதன் பிறகு நாங்கள் வெளியே புறப்பட்டபோதெல்லாம் தொடரப்பட்டோம். முதலில் பயம் வந்தது. பிறகு ஒரு ஜேம்ஸ்பொண்ட் படம் பார்ப்பது போன்ற திரில்லுடன் இதை அனுபவிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் நாலாவது நாளே இந்த நனைந்த கோழியில் வேலை இல்லை என்று அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வேறு கோழியைப் பார்க்கப் போயிருக்கலாம்.

இந்த நாலு நாட்களும் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத, சந்தோசமான நாட்கள். நான் எங்கு போனாலும் ஒரு கார் என்னைத் தொடர்ந்தது. அடிக்கடி திரும்பிப் பார்த்து அவர்கள் என்னைத் தொடர்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு பயணம் செய்தேன். அவர்கள் என்னைத் தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக வளைவுகளில் நின்றும், இன்னும் சில நேரங்களில் வேகத்தை குறைத்தும் உதவி செய்தேன். சில வேளைகளில் அவர்கள் போதிய சிரத்தை காட்டாமல், தவறான திருப்பங்களை எடுக்கும்போது இவர்கள் தங்கள் தொழிலை தீவிரத்துடன் செய்யவில்லை என்ற முறைப்பாட்டை அவர்கள் மேலதிகாரிகளுக்கு தெரிவிப்போமா என்றுகூட யோசித்தது உண்டு.

ஒர் உலகளாவிய உளவாளி எப்படி இருப்பான் என்று யோசித்து அதற்குத் தக்க மாதிரி உடை அணியவும், பேசவும், நடக்கவும் பழகிக் கொண்டேன். டெலிபோனில் கதைக்கும் போது சில சங்கேத வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன். என் பாதைகளையும், கிளம்பும் நேரங்களையும் அடிக்கடி மாற்றவும், முன்பின் தெரியாத மனிதர்களுடன் ரகஸ்யமான வாய் அசைவுகளுடன் பேசவும் கற்றுக் கொண்டேன்.

இவை ஒன்றும் பெரிய பலனைத் தரவில்லை.

எவ்வளவுதான் நான் உலகத்தர உளவாளியாக இருந்தாலும் வீட்டிலே சாதாரண மனுசன்தானே. ஒரு வெள்ளிக்கிழமை காலை, இது அங்கே விடுமுறை தினம், என் மனைவி ஜும்மா சந்தைக்குப் போக வேண்டும் என்றாள். இது இஸ்லாமபாத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும் பிரம்மாண்டமான சந்தை. பொருட்கள் வாங்க அங்கே சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள். ஒர் உலகப் புகழ் உளவாளி செல்லக்கூடிய சந்தை அல்லதான், ஆனாலும் இதை மனைவிகளுக்குப் புரிய வைப்பது எப்படி.

சரி என்றேன். சில துப்புகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த இடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாதது. கண்களை ஏமாற்றும் வளைவான தெருக்களும் ஒரு வழிப்பாதைகளும் நிறைந்தது. நான் ஒரே மூச்சில் சந்தையை அடைந்துவிட்டேன். அங்கே என் மனைவி ஒரு ‘புக்காரா’ கம்பளத்தை இரண்டு மணி நேரம் பேரம் பேசி வாங்கி முடித்துவிட்டாள்.

ஆனால் திரும்பும் போது வழி மறந்துபோய்விட்டது. ஒரு வழிப் பாதைகள் என்னை தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டு போய் சேர்த்தன. அப்பொழுது நான் என்னை தொடர்ந்து வந்த கார்காரரை அணுகி வழிதவறிவிட்டதைச் சொன்னேன். அவர் நல்ல மனிதர். தான் வழி காட்டுவதாக முன்னே சென்றார். விலாசம் கொடுக்காமலே என் வீட்டு வாசலுக்கு அலுங்காமல் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.

இப்படி என்னை வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்கள் முன்னே செல்ல, நான் பின்னே சென்றேன். உலக உளவுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பெரிய சாதனையாக அமைந்தது.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க