ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றைக் கூறினார். பணியிடத்தில் அவருக்கு நடந்த பாலியல் அத்துமீறலை அதற்குரிய சட்டங்களில் வழக்குப் பதிய மறுத்தது இந்திய நீதித்துறை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனக்கெதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைத்தார். அந்த அமர்வு அவசர அவசரமாக வழக்கை விசாரிப்பதாக நடித்து, தலைமை நீதிபதி குற்றமற்றவர் என அறிவித்தது.

ரஞ்சன் கோகாய்

பணியிடத்தில் பாலியல் அத்துமீறல்களின் கொடுமைகளை அனுபவித்து, அதை எதிர்த்ததற்குப் பலனாக தனது வேலையையும் இழந்து தனது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு, கைது, அலைகழிப்பு, அவமானம் என அனைத்து இன்னல்களையும் சந்தித்தார் அந்த தலித் பெண்.

இந்தப் பெண் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளில் ஒன்று, உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 ஆயிரம் வாங்கிக்கொண்டு ஏமாற்றினார் என்பது. இந்தப் புகாரைக் கூறியவர் அரியானாவைச் சேர்ந்த 31 வயதான நவீன் குமார் என்பவர். தன் மீதான இந்த வழக்கு தவறானது; ஆதாரமற்றது என்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறியதால் பழிவாங்கும் நோக்கில் புனையப்பட்டது என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டனர். தற்போது இருவரும் பிணையில் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது புகார் கூறிய நவீன் குமார் என்ற அந்த நபரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என வழக்கு நடக்கும் டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது டெல்லி போலீசு.

நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட முகவரியில் நவீன் குமாரின் இல்லத்துக்குச் சென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் விசாரித்தபோது, அவருடைய தாயார் ஏப்ரல் 20-ம் தேதி பணிக்குத் திரும்பிவிட்டதாகக் கூறியிருக்கிறார். சண்டிகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ. 15 ஆயிரம் ஊதியத்துக்கு காவலர் பணிபுரியச் சென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார். ‘பெரிய மனிதர்கள் தொடர்புள்ளதால் வழக்கு பதிய வேண்டாம்’ எனச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்பின், பத்திரிகையாளர் நவீன் குமாரின் செல்போனை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தபோது, பதிலளிக்கப்படவில்லை.

படிக்க:
மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்
♦ இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்

மே 23-ம் தேதி ஆஜராகும்படி குமாருக்கு ஏப்ரல் 24-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார் நீதிபதி. அதன்பின் ஜூலை 19-ம் தேதியும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இதை விசாரிக்கும் டெல்லி போலீசு, குறிப்பிட்ட முகவரியில் அந்த நபர் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

இதையடுத்து, செப்டம்பர் 6-ம் தேதி, நவீன் குமாரை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். புகார் அளித்த நபரே இல்லாத நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தலித் பெண் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஆட்சேபித்தார்.

உச்சநீதிமன்றத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கடந்த மார்ச் 3-ம் தேதி, டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் நவீன்குமார். அதன்பேரில் நடந்த விசாரணையில் அந்தப் பெண், மார்ச் 10-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மார்ச் 12-ம் தேதி அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

மார்ச் 14-ம் தேதி, இந்த விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. புகாரை அளித்த நபர், அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் அச்சுறுத்துவதாகப் புதிய புகார் ஒன்றையும் தெரிவித்தார்.

அந்தப் பெண் அளித்த உறுதிமொழி வாக்குமூலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்த காரணத்தால் தானும் தன் குடும்பமும் பழிவாங்கப்படுவதாகக் கூறியிருந்தார். புகார் கொடுத்த நபர் ஆதாரம் கொடுக்கவேண்டிய நேரத்தில் தலைமறைவாகி இருப்பது, ரஞ்சன் கோகாய் தன்னைப் பழிவாங்குவதாக கூறிய பெண்ணின் குற்றச்சாட்டை நிரூபிப்பது போல் உள்ளது.


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க