ந்தியாவில் காவி மதவாதம் “இயல்பாக” மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. மத சிறுபான்மையினரை குறிப்பாக, முசுலீம்களை குறிவைத்து காவிக் கும்பல் தொடர்ச்சியான மதவாத நடவடிக்கைகளில் இறங்கிக் கொண்டிருக்கிறது.

‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கச் சொல்லி முசுலீம்களை மிரட்டுவது, அவர்கள் மீது கும்பல் வன்முறையை ஏவி விடுவது இயல்பாக்கப்பட்டிருக்கிறது. விளைவாக, ஒரு முசுலீம் எம்.எல்.ஏ.-வை ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கச் சொல்லி சட்டப்பேரவைக்கு வெளியே ஒரு இந்து எம்.எல்.ஏ. கட்டாயப்படுத்துகிறார்.

ஒருவரின் மதத்தை இன்னொருவரின் மீது திணிப்பது, அரசியலமைப்பு தந்திருக்கும் உரிமைக்கு எதிரானது என்பதை தகர்க்கும் விதமாக மக்களின் பிரதிநிதியாக உள்ளவர் இப்படி நடந்துகொள்கிறார். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சமூக ஒதுக்குதல் செய்ய காவிகள் புதிது புதிகாக பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள்.

ஜபல்பூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட அமித் சுக்லா, அமாவாசையான நேற்று ஸொமெட்டோ ஆப் மூலம் உணவு வாங்குகிறார். அந்த உணவை எடுத்து வருபவர் ஃபையாஸ் எனக் காட்டுகிறது ஆப். உடனே வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்கும் சுக்லா, அமாவாசை விரத நாளில், முசுலீம் கொண்டுவரும் உணவை உண்ண முடியாது என்கிறார்.

ஸொமெட்டோ நிறுவனம், அப்படி செய்ய முடியாது என்கிறது. வாங்கியதை ரத்து செய்தால், செலுத்திய பணத்தை திரும்பச் செலுத்த முடியாது என்கிறது நிறுவனம். உடனே கொதித்தெழும் சுக்லா, ஸொமெட்டோ வாடிக்கையாளருக்கு விருப்பமில்லாத நபர்கள் மூலம் உணவை விநியோகித்து நம்மை வங்கிக் கொள்ள கட்டாயப்படுத்துகிறது. நான் அந்த ஆப்பை நீக்குகிறேன். என்னுடைய வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து மேற்கொண்டு முடிவு செய்வேன் என ட்விட்டரில் எழுதினார். இந்த நபரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

படிக்க:
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !
♦ சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

முசுலீம் கொண்டுவரும் உணவு வேண்டாம் என சொன்ன அமித் சுக்லாவுக்கு ‘இந்துக்கள்’ பலர் பதிலடி தந்துள்ளனர்.

“முசுலீம் கொண்டுவரும் உணவு வேண்டாம் எனில், அதை சமைத்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என சொல்ல முடியுமா?” எனக் கேட்கிறது ஒரு பதிவு.

“உணவகத்தின் உரிமையாளர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? விவசாயி, அந்த நிலத்துக்கு சொந்தக்காரர், உரங்களை விற்றவர், விதைகளைக் கொடுத்தவர்? இதுதான் பைத்தியக்காரத்தனம்” என்கிறார் சுனில் சச்சின்.

“வழக்கறிஞருடன் கருத்து கேட்பதற்கு பதிலாக, மனசாட்சியிடம் கேளுங்கள்” என்கிறார் வைபவ் ராவுத்.

“ஸொமெட்டோவை பயன்படுத்த வேண்டாம். ஆனால், நீங்கள் உடுத்தும் ஆடை யார் தைத்தது, நீங்கள் பயன்படுத்தும் காய்கறிகளை யார் விளைவித்தவை என்பதை உங்களால் உறுதி படுத்த முடியுமா?” எனக் கேட்கிறார் அஜய்.

அமித் சுக்லாவுக்கு பதில் அளித்திருக்கும் அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி தீபேந்திர கோயல், ‘நாங்கள் இந்தியா என்கிற கருத்தாக்கத்தில் பெருமை கொள்கிறோம். அதுபோல, எங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் இணைந்து பணியாற்றுகிறவர்களின் பன்முகத் தன்மையையும். எங்களுடைய மதிப்புகளை இழக்கும் வகையாக வரும் வர்த்தகத்தை இழப்பதில் நாங்கள் கவலை கொள்வதில்லை” என எழுதினார்.

“உணவுக்கு மதமில்லை. உணவே மதம்தான்” எனவும் அவர் எழுதினார். தீபேந்திர கோயலின் கருத்தை பலர் வரவேற்றனர். வழக்கமாக காவி ட்ரோல்களும் அவரை விட்டுவைக்கவில்லை.

ஸ்வரா பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியா என்கிற கருத்தாக்கத்தில் உறுதியாக இருப்பதற்கு நன்றி, நீங்கள்தான் உண்மையான குடிமகன், தேசபக்தர். இந்த ட்ரோல்களுக்கு எதிராக முன்பு பெரிய நிறுவனங்கள் தைரியமாக நிற்கவில்லை, அவர்கள் கற்கவேண்டும்” என எழுதினார்.

காஷ்மீரில் காவிகளால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு எழுதிய காரணத்தாலும் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக பாஜக ஆதரித்து போராட்டம் நடத்தியதை எதிர்த்து எழுதியதாலும் காவிகளின் வெறுப்புக்கு ஆளானவர் ஸ்வரா. அந்த சமயத்தில் அமேசான் நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றிய இவரை அந்நிறுவனம் காவிகளுக்கு பயந்து கைவிட்டது.

பர்கா தத், அர்ஃபாகானும், ஷெர்வானி உள்ளிட்ட லிபரல் பத்திரிகையாளர் ஸொமெட்டோவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ‘நடுநிலையாளர்’ சுமந்த் ராமன்கூட ஆதரவு தெரிவித்துள்ளார்.

“ஸொமெட்டோவிலிருந்து உணவு வாங்க மாட்டோம் என சொல்கிறவர்கள், முசுலீம் நாடுகளிலிருந்து டீசல், பெட்ரோல் வருகிறது என பைக், கார் பயன்படுத்துவதை விட்டுத்தர முடியுமா? என்ன ஒரு முட்டாள் கூட்டம்” என கடிந்து கொள்கிறார் அவர்.

இன்று (01-08-2019) ஸொமெட்டோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஊபர் ஈட்ஸ் நிறுவனமும் தனது ஆதரவை ஸ்மெட்டோ நிறுவனத்துக்கு அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலையிலிருந்து சங்கிகள் டிவிட்டரில் ஸொமெட்டோவையும் ஊபர் ஈட்ஸ்-ஐயும் புறக்கணிக்குமாறு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இதற்கும் டிவிட்டர் சமூகம் தனது எதிர்ப்பை பதிந்துவருகிறது. ஆக, மொத்தத்தில் ஸொமெட்டோ ஒரு நாளில் லிபரல்களின் செல்லப்பிள்ளை ஆகியிருக்கிறது. அதன் தொழிலாளர் விரோத போக்குகள் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. இன்று இணைய உணவு சப்ளை சந்தையில் முன்னணியில் இருக்கும் இந்த இரு நிறுவனங்களும் காவிகளுக்கு எதிராக வெகுநாட்கள் கம்பு சுழற்றமுடியாது என்றாலும், சந்தர்ப்ப சூழலை ஒட்டி தற்போது காவிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதை வரவேற்கலாம்.


கலைமதி
நன்றி : த வயர், டெலிகிராப் இந்தியா