மும்பையை சேர்ந்த பேராசிரியர் ராம் புனியானி அவர்கள் கலந்து கொண்ட ஓர் அரங்கக் கூட்டம் சென்னையில் கடந்த 03-08-2019 அன்று நடைபெற்றது. “மதவாத தேசியம்” என்னும் தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ராம் புனியானி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

பேராசிரியர் ராம் புனியானி அவர்கள் குஜராத் படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இந்துத்துவ கும்பலை அம்பலப்படுத்தியதில் முன்னிலையில் இருந்த ஓர் அறிவுஜீவி. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அவர் தொடர்ச்சியாக எழுதியும், செயல்பட்டும் வந்துள்ளார். அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.

மதவாதத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் communal என்ற வார்த்தையின் வேர்ச்சொல் community (சமுதாயம்) என்பதை நினைவுபடுத்திய பேராசிரியர் அவர்கள், அது communal ஆகும் போது குறிப்பிட்ட சில சமூகங்களை வேறுபடுத்துவது தொடங்குகிறது என்றார். தேசம் என்பது தொழில்மயமாக்கம், தொடர்பாடல் ஆகியவற்றோடு தொடர்புடையது; அந்த வகையில் ஒரு தேச உருவாக்கத்தை பற்றி தலைவர்கள் பேசிய போது ‘நாம் காலகாலமாக ஒரு தேசமாக இருந்து வருகிறோம்’ என்று ஆர்.எஸ்.எஸ் பேசியது. ஆர்.எஸ்.எஸ்.-ன் தேசியம், பழமை வழிபாடு என்றார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற பெயர் ஆண்களை மட்டுமே குறிப்பது; பெண்களுக்கான ராஷ்ட்ரிய சேவிகா சமிதியில் அகம்பாவத்துடன் ஒலிக்கும் ‘தான்’ (ஸ்வயம்)  என்ற வார்த்தை இல்லை. ஆர்.எஸ்.எஸ் உருவாக்க விரும்பும் சமூக அமைப்பில் பெண்களின் அவல நிலையை குறிப்பிட்டார். Lynching என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான இந்தி சொல் இல்லை; நமது கலாச்சாரத்தில் அது ஆர்.எஸ்.எஸ். -ன் பாதிப்புக்கு பிறகு வந்தது. Lynching ஒரு காலத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமை என்றார்.

mob-lynching-sliderஒரு கணக்கெடுப்பின் படி கடந்த பத்து வருட கால அளவில் 2014 -க்கு பிறகுதான் 90 சதவீத கும்பல் வன்முறை நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் 64 சதவீதம் பேர் முஸ்லிம்கள்; 14 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள்; பிற சதவீதத்தினர் தலித்கள் என்று குறிப்பிட்டார். ஜெ.என்.யூ.-வை நிந்திக்கும் இவர்களுக்கு அதன் பெருமை தெரியாது. அங்கு பல நேரங்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர்களால் உடனே பதில் சொல்லிவிட முடியாது. ‘எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; நாளை சொல்கிறேன்’ என்று கூறுமளவுக்கு மாணவர்கள் அறிவில் சிறந்தவர்கள். ஆனால் அது மாசு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. வறுமை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டும் என்ற கன்னையா குமாரின் முழக்கம் இந்தியாவிலிருந்து விடுதலை என்பதாக திரிக்கப்பட்டது.

படிக்க:
பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ் என்ற பார்வை சற்று மேலோட்டமானது தான்; பிறப்பின் அடிப்படையிலான அசமத்துவதை கட்டமைப்பதே அவர்கள் திட்டம். பேராசிரியர் ராம் புனியானி பேசியவை பெரும்பாலும் நாம் ஏற்கனவே அறிந்த தகவல்கள்தான் என்றாலும் ஒரு மெல்லிய பகடி இழையோட, பார்வையாளர்களிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு ஒரு ஆசிரியத்தன்மையில் எளிய ஆங்கிலத்தில் அவர் உரை அமைந்தது சிறப்பு.

தமிழகம் பாலைவனச்சோலையாக இருப்பதை பேச்சினிடையே குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் பணிகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார். உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் அவரிடம் ஒரு கசப்பு வெளிப்பட்டது. பகத்சிங், மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் என்று அவர் பேசினாலும் அடிநாதமாக ஒரு தோல்வி மனப்பான்மையையும், விட்டுக் கொடுப்பையும் உணர முடிந்தது. அந்த உணர்வு பரவுவது நல்லதல்ல. அவரை தேற்ற கேள்வி — பதில் நிகழ்ச்சியின் போது பார்வையாளர் ஒருவர் பேச வேண்டியதாக இருந்தது. டில்லியில் கும்பல் வன்முறையில் கொல்லப்பட இருந்த ஓர் முஸ்லிம் இளைஞனை ஓர் பெண்மணி தனது காரை நிறுத்தி சத்தம் போட்டு பாசிஸ்ட்களை பின்வாங்க செய்ததை அந்த பார்வையாளர் பதிவு செய்தார். இந்த அணுகுமுறை ஒரு மோசமான சூழலுக்கு முக்கியமானது.

பாசிச ஆபத்தை உள்ளது உள்ளபடியே நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்தான். அதே நேரம் சில பற்றுக்கோடுகளை நாம் — அது கற்பனையாக இருந்தாலும் கூட — ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானது. அது நம்மைச் சோர்ந்து போகாமல் செயல்பட வைக்கும்; நமது படகை செலுத்தும் துடுப்பு போன்றது.

“Enemy at the Gates” திரைப்படத்தில் ஓர் ஆடு மேய்ப்பன் தற்செயலாக ராணுவ வீரனாகி மறைந்து தாக்கும் போர்க்கலையில் திறம்பட செயல்பட்டு நாஜி ராணுவ தளபதிகளை ஒவ்வொருவராக அழித்து ஸ்டாலின்கிராட் வீழ்ச்சியை தடுப்பான். ஒரு கட்டத்தில் அவனை வைத்து ஸ்டாலின் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முனையும் போது தன்னால் அந்த எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்ய முடியாது என்று பின்வாங்க நினைப்பான். ஆனால் தொடர்ந்து கட்சி நம்பிக்கையை அளித்து அவனை செயல்பட தூண்டும். இறுதியில் எதிர்பார்த்த பலனை அது கொடுக்கும்.

எழுத்தாளர் அருந்ததி ராய் ஒரு பேட்டியில் கூறும்போது இந்து மதம் பற்றி அண்ணல் அம்பேத்கர் முன்பு கூறியதை கூட நம்மால் இன்று கூற முடியவில்லை. பொதுவெளியில் சற்று கவனத்துடன் பேச வேண்டிய அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுக்கலாகாது என்று எச்சரிக்கை செய்கிறார். வடஇந்திய சூழல் எந்த வகையிலும் ஆறுதல் அளிக்கக் கூடியதில்லைதான். அதற்காக போராட்ட உணர்வை கைவிடுவது தீர்வாகாது. உளவியலாளர்கள் மொழியில் அச்சம் நாம் பெற வேண்டிய தைரியத்தின் மன உரமாக இருக்க வேண்டும். (Fear should be the father of courage.)

ராஜ்

3 மறுமொழிகள்

  1. கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது திராவிடச் சிறகுகள்.இந்த அழைப்பிதழ் திராவிடச் சிறகுகளின் அழைப்பிதழ்

    • தகவலுக்கு நன்றி கார்த்திகேயன்.. பதிவில் மாற்றம் செய்யப்பட்டது.

  2. தோழர், திராவிட சிறகுகளின் கூட்டத்தில் அவர் பேசியதன் பதிவல்ல இது. இந்திய மாதர் சம்மேளனம் அமைப்பின் கூட்டத்தின் பேசியதன் பதிவு தான் இது. ஒரு வேளை அவர் இரண்டு கூட்டங்களில் அன்று பேசி இருக்க வேண்டும். அழைப்பிதழ் தான் தவறு. அதனை மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க