நூல் அறிமுகம் : அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்

தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

மெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுக’ இயக்கத்தைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான இச்சிறுநூல், வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் எவ்விதம் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளன, அவை தமது நெருக்கடியை அரசாங்கத்தின் மீது திணித்து, தம்மை மீட்டுக்கொள்ளும் முயற்சியில் எப்படி மக்களைத் தெருவுக்கு விரட்டப்படுகின்றன, மக்களின் வரிப்பணத்தில் பெரும் பகுதியை எப்படி அபகரித்துக் கொண்டு மக்களை ஓட்டாண்டி ஆக்குகின்றன என்பதை விளக்குகிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்சும் எங்கெல்சும் எழுதி 165 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாறுதல் எந்தக் கட்டத்தில் பயணிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மார்க்சியத்தைப் பயில வேண்டியுள்ளது. பயில்வது என்பது பகிர்ந்து கொள்வதிலும் பயிற்றுவிப்பதிலும் அடங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முதலாளிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள முதலாளிய நெருக்கடி மார்க்சை நோக்கி பலரின் பார்வையைத் திருப்பியுள்ளது. இந்த நெருக்கடி வெறும் உற்பத்தித் துறை சார்ந்த, அதிகப்படியான உற்பத்தி தொடர்பான நெருக்கடி மட்டுமில்லை. நிதி மூலதனத்தின் மூர்க்கத்தனமான இலாபவெறியும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உலகமயமாக்கலுமே இதற்கு முக்கியமான காரணமாகும்.  உற்பத்தித் துறையின் மூலதனத்திற்கும் அதன் இலாப விகிதத்திற்கும் (விதிவிலக்காக, இயற்கை வளங்கள் சார்ந்த உற்பத்தித் துறை உள்ளது கவனத்திற்குரியது) இன்று உள்ள இடைவெளி / தொடர்பு நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும். முதலாளிய அமைப்பின் தவிர்க்க முடியாத ‘போட்டி’ முறை என்பது உற்பத்தித் துறையின் இலாபத்தைக் குறைத்துள்ளது. ஆனாலும் மக்களின் உழைப்பின் மூலம் தொடர்ந்து உருவாகும் / இலாபத்தை எந்தத் துறை கைப்பற்றுகிறது என்பது முக்கியமானதாகும்.

பல கோடி மதிப்பிலான நிரந்தர மூலதனத்தை உடைய உற்பத்தித்துறை ஒருபுறம்; சில இலட்சங்கள் மட்டுமே தேவைப்படும் சேவைத் துறைகள் (வங்கிகள், கணிணித்துறை போன்றவை) மற்றொரு புறம், இவை இரண்டிலும் உருவாகும் உபரி இலாப விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது இன்றுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முக்கியமானதாகும்.

அப்படிப்பார்த்தால்தான் கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித் துறை முதலாளிகள் (பெரும்பாலும் சிறு, நடுத்தர, குறுமுதலாளிகள்) – முதல் அனைத்துத் துறை உழைப்பவர்கள் வரை, தங்களின் உபரியை, சேமிப்பை, உழைப்பை இழந்தது எவரிடம் என்பது தெரியவரும். வங்கிகள்தான் அந்தக் கொள்ளையர்கள் என்பதும், நிதி மூலதனத்தின் ஆட்சியே உலகின் ஆட்சி என்பதும் புரிய வரும்.

அத்தகைய கொள்ளையின் அடுத்தகட்டம் இந்தியாவில் இனி கூடுதலாக நடக்க உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள, அமெரிக்காவில் நடந்த வங்கிகளின் வீழ்ச்சி (?) யைப் புரிந்து கொள்வது அவசியம். வால்ஸ்டிரீட் கொள்ளையர்களின் சதியை, ஆட்சியாளர்களின் பங்கை அம்பலப்படுத்தும் Inside Job என்னும் சிறந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சியான நூலாக இந்நூல் அமைந்துள்ளது. ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறினாலும் கொள்ளையடிக்கப் போவது யார் என்பதைப் புரிந்து கொள்ள இச்சிறு நூல் உதவும் என நம்புகிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து)

நிதி மூலதனத்தின் செயல்பாடுகளில் வங்கிகள் செலுத்தும் ஆதிக்கம் மிகப்பெரியதாகும். தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை இங்குள்ள தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளை விழுங்கி ஏப்பம் விட்டு விடும். அதன் விளைவாக இந்தியா அந்நிய வங்கிகளின் வேட்டைக்காடாக மாறும். உலகின் ஆகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவின் மக்களே இந்த வங்கிகளின் செயல்பாடுகளால் தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்றால், ஏற்கனவே பெரும்பான்மை மக்கள் தெருவில் வாழும் நிலையில் உள்ள இந்தியா என்ன ஆகும் என்றே தெரியவில்லை.

இந்த அபாய மணியை ஒலிக்கும் பணியை அமெரிக்காவின் சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி தனது சிறு வெளியீட்டின் மூலம் ஆற்றியுள்ளது. (மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையிலிருந்து)

வங்கிகளைக் கைப்பற்றுவது அல்லது பறிமுதல் செய்வது என்ற நோக்கம் நேர்மையானது. தனி நபரின் வங்கி வைப்பு நிதிகளைப் பறிமுதல் செய்வது அதில் அடங்காது.

அனைத்துப் பெருங்குழுமங்களையும் போல, வங்கிகளும் மனிதர்கள் அல்ல. அவை தாள்களில் இருக்கும் உருப்படிகள். அவை இருப்பதற்குச் சட்டங்களும் சமுதாயமும் அனுமதிக்கிற ஒரே காரணத்தால் தான் அவை இருக்கின்றன. அவற்றுக்கு உள்ளார்ந்த அல்லது அப்புறப்படுத்தப்பட முடியாத உரிமைகள் எவையும் இல்லை, அவை நிலவுவதற்கான உரிமை கூட இல்லை.

நவீனப் பொருளாதாரத்தின் அத்தகைய முக்கியமான நெம்புகோல் ஏன் பெரும் பணக்காரர்களின் கரங்களில் இருக்கவேண்டும்? அளவற்ற லாபங்களையும், வரலாற்றின் மோசமான பேரரசர்களிடமும் மன்னர்களிடமும் இருந்ததை விட மிகப்பெரிய செல்வங்களையும் ஒரே அடியாகக் குவித்துக் கொள்வதற்கு விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில வங்கிகளை அனுமதிக்கிற ஒரு அமைப்பு முறையை நாம் ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்?

இன்று, ஒரு விழுக்காட்டினரின் செல்வங்களை அதிகபட்சமாக்குவதற்கு வங்கிகள் இருந்து வருகின்றன. வங்கிச் செயல்பாட்டு முறை சமுதாயத்தின் 100 விழுக்காடு மக்களின் நல்வாழ்வை அதிகபட்சமாக்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். வங்கிகளுக்கு உரிமை இல்லை என்பதால் தவறொன்றும் இல்லை, உண்மையில், வங்கிச் செயல்பாட்டைக் கைப்பற்றி, அதை மக்களின் ஜனநாயக ரீதியான கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில், பரந்த பெரும்பான்மையினருக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் பயன்கள் இருக்கின்றன.

வங்கியாளர்கள் பெரும் கோடீஸ்வரர்களுக்கான பெரும் லாபங்களைத் திரட்டும் முயற்சியில் தங்களுடைய மோசடி, வாழல், மட்டும் குற்றச் செயல்கள் மூலம் பொருளாதாரத்தை அழித்தனர்.

வங்கிகளின் பேராசை மற்றும் முதலாளித்துவத்தின் நெருக்கடியின் காரணமாகப் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை இழந்தனர். வேலையில்லாதோர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு விழுக்காட்டின் அதிகாரத்தினாலும், வங்கி முறையிலிருந்தும், மொத்தப் பொருளாதாரத்திலிருந்தும் லாபமடைதல் காரணமாக அவர்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள்.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !

இன்று, ஒரு கோடி குடும்பங்களுக்கும் மேலாகத் தங்களுடைய வீடுகளை அடமானக் கைப்பற்றல்களில் இழந்து விட்டார்கள், அல்லது இழந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் வங்கிகளுக்கு அவர்களால் அடமானத் தவணைத் தொகையை வட்டியுடன் முறையாகச் செலுத்த முடியாத போது, அதே வங்கிகளால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

கல்லூரிப் பட்டதாரிகள் பல லட்சக்கணக்கானோர் அவர்களுடைய கல்விக் கடனைக் கட்ட முடியவில்லை, ஏனென்றால் வங்கியாளர்களின் செயல்களால் அவர்கள் நல்ல வேலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வங்கியாளர்கள் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டார்கள். மாணவர் கல்விக் கடன் மொத்தம் ஒரு லட்சம் கோடி டாலர்கள் ஆகும், இது வங்கியாளர்களுக்கு அநீதியான இலாபத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. (நூலிலிருந்து பக்.42-43)

நூல் : அமெரிக்கா ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்
ஆசிரியர் (ஆங்கிலம்) : ரிச்சர்ட் பேக்கர்
தமிழாக்கம் : நிழல்வண்ணன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம்-அஞ்., கோவை – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576772, 9789457941.
மின்னஞ்சல்  : vidiyal@vidiyalpathippagam.org

பக்கங்கள்: 48
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | marina books