காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, மோடி – அமித்ஷா கும்பலை அம்பலப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டிருந்த கேலிச்சித்திரம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினரான போடியைச் சேர்ந்த தோழர் ஜோதிபாசு.

தோழர் ஜோதிபாசு.

அவர் பகிர்ந்திருந்த கேலிச்சித்திரப் பதிவை, முகநூலில் பார்வையுற்ற பி.ஜே.பி. போடி நகர செயலாளர் தண்டபாணி போலீசில் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆகஸ்டு 10 அன்று, மாலை தோழர் ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர். பி.ஜே.பி. கும்பலுக்கு ஆதரவாக தோழரை தரைக்குறைவாக பேசியும் கீழ்த்தரமான முறையிலும் நடந்துகொண்டார் போலீசு துணைக் காணிப்பாளர்.

போலீசு மற்றும் பி.ஜே.பி. கும்பலின் மிரட்டலைக் கண்டு பின்வாங்காமல், உறுதியோடு எதிர்கொண்டார் தோழர் ஜோதிபாசு. அவசரம் அவசரமாக ஐ.பி.சி.504, 505 (IB), IPC 2 OF, 66F-ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ரிமாண்ட் செய்வதற்காக அன்று இரவே தேனியில் உள்ள நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேற்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்படவில்லை என்று கூறி ரிமாண்டு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டார் நீதிபதி. அன்று இரவு முழுவதும் போலீசு நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டார் தோழர் ஜோதிபாசு. பின்னர், நீதிபதி ஏற்கத்தக்க வகையில் போதுமான காரணங்களை புனைந்து எடுத்துக்கொண்டு மீண்டும் ரிமாண்ட் செய்யக்கோரி ஆக-11 அன்று காலை 11 மணிக்கு நீதிபதியின் முன் நிறுத்தினர் போலீசார். இம்முறை, தோழர் ஜோதிபாசுவை சிறையிலடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதனைத் தொடர்ந்து, கண்டமனூர் துணை சிறைக்கூடத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் தோழர் ஜோதிபாசு.

படிக்க:
காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?
♦ அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

 கேலிச்சித்திரத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக ஒருவரை சைபர் பயங்கரவாதி என்று முத்திரைக்குத்தி சிறையிலடைக்க முடிந்திருக்கிறதென்றால், எந்த நிலையில் இருக்கிறது தமிழக அரசு ? எவ்வகையில் எதிர்வினையாற்றப்போகிறது, தமிழகம்?

தகவல்:
மக்கள் அதிகாரம்,
போடி.