காராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தாட்கான் (Dhadgaon) கிராம மருத்துவமனையின் ஒரே மருத்துவரான சந்தோஷ் பர்மர் கடந்த திங்கள்கிழமை மட்டும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், கால்-கை வலிப்பு நோயாளி மற்றும் கருக்கலைப்பு செய்த ஒரு பெண் உட்பட 483 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். மேலும் அவர் ஐந்து பிரசவம் பார்த்துள்ளதுடன் பாம்பு கடியால் இறந்த இரண்டு சிறுவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனையும் தனிநபராக செய்துள்ளார்.

Dr Santosh Parmar
மருத்துவர் சந்தோஷ் பர்மர்.

மகாராஷ்டிராவின் வடக்கு பழங்குடி மாவட்டமான நந்தர்பாரில் (Nandurbar) அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள எட்டு இடங்களில் ஏழு மருத்துவருக்கான இடங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. மகளிர் மருத்துவத்தில் எம்.டி பட்டம் பெற்ற ஒரே மருத்துவர் 7/24 மணி நேரமும் பணி புரிகிறார்.

மலைப்பாங்கான நிலப்பரப்பில் பரவியிருக்கும் 150 கிராமங்களுக்கு (அவற்றில் சில 30 கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ளன), சேவை செய்வதற்காக தட்கான் கிராமப்புற மருத்துவமனை அமைந்திருக்கிறது. மருத்துவமனையில் உள்ள 10 செவிலியர்களின் உதவியால் ஒரு மாதத்திற்கு 160 குழந்தை பிறப்புகளை பர்மர் பதிவு செய்கிறார்.

ஒவ்வொரு நாளும் காய்ச்சல், அரிவாள் செல் சோகை, பாம்பு கடி மற்றும் சளியால் பாதிக்கப்படும் சுமார் 350 முதல் 400 நோயாளிகள், 30 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். மருத்துவர்களின் பற்றாக்குறையானது நோயாளிகளை வரிசையில் நிற்கவும், சில நேரங்களில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக, தங்கள் முறைக்கு காத்திருக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளது.

படிக்க:
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?
♦ மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காலியிடங்களை (10,568 பதவிகள்) நிரப்புவதற்காக ஆட்சேர்க்கும் நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. பழங்குடி பகுதிகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையானது மருத்துவர்களின் மாத ஊதியத்தை 2 முதல் 3 இலட்சம் வரை உயர்த்த அறிவிப்பு வெளியிட மாநில அரசை நிர்பந்தித்தது.

மகளிர் மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் தொடக்கத்தில் இதில் ஆர்வம் காட்டினர். “ஆனால் இறுதியில் அந்த ஆர்வம் போய்விட்டது” என்று நந்தூர்பார் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் இரகுநாத் போயே கூறுகிறார்.

ஜூலை 28 முதல், மருத்துவர்கள் பலர் வேலையை விட்டு நின்று விட்ட பின்னர், தட்கான் மருத்துவமனையை பர்மர் தனியாக சமாளித்துக் கொண்டிருக்கிறார். காலை 8.30 மணிக்கு அவர் அனைத்து வார்டுகளிலும் செல்வதிலிருந்து அவரது நாள் தொடங்குகிறது: மகப்பேறுக்கு பிறகு தங்கக் கூடிய வார்டில் 10 பேர் இருக்கின்றனர். அவசர மருத்துவப் பிரிவில் இரண்டு பேர், பொது வார்டில் மூன்று பேர் மற்றும் திங்கள்கிழமை காலை பிரசவம் செய்ய வேண்டிய இரு கர்ப்பிணிகள் உள்ளனர். காலை 9.30 மணியளவில், அவர் வெளி நோயாளி பிரிவிற்கு செல்கிறார். அங்கு பாம்பு போல நீண்ட ஒரு குறுகிய வரிசையில் நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

Queues at Hospitals
அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த இரகசியம் தான் (மாதிரிப் படம்)

பாம்புக் கடியால் இறந்துபோன இரண்டு சிறார்களின் உடல்களை மருத்துவர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவரை சந்திக்க காத்திருந்தனர். பின்னர் கைப்பேசியில் மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனைகள் செய்வதற்காக பிற்பகல் வரை காத்திருந்தாக சேத்தன் சல்வே கூறினார்.

பர்மார், ஏறத்தாழ பிற்பகல் மூன்று மணி அளவில் 483 நோயாளிகளை சந்தித்து ஆலோசனை கூறியிருந்தார். அதில் மூன்று நபர்களுக்கு உள்நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். “சமாளிக்க முடியாத அளவிற்கு கூட்டம் வந்தால், இராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரத்தை (Rashtriya Bal Swasthya Karyakram ) சேர்ந்த மருத்துவர்களை நான் உதவிக்கு அழைக்க வேண்டும்” என்று பர்மார் கூறினார். அதே நேரத்தில் அந்த மருத்துவர்கள் அவர்களது அன்றாட பணியையும் கைவிட வேண்டியிருக்கும்.

மாலை நேரத்தில், பர்மர் ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள குழந்தைகளை கவனிக்கும் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு செல்கிறார். திங்கட்கிழமை இரவு, அவரது வேலை முடிந்துவிடவில்லை. முதல் நெருக்கடி அழைப்பு நள்ளிரவில் வந்தது – ஒரு பெண் பாம்புக் கடியின் காரணமாக மூச்சு விட முடியாமல் ஆபத்தான நிலையில் இருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து, மூக்கில் அடைப்பட்ட ஒரு பொருளுடன் ஒரு குழந்தை கொண்டு வரப்பட்டது. அதை அறுவை சிகிச்சை மூலமே அகற்ற வேண்டியிருந்தது. அதிகாலை 4 மணிக்கு கருச்சிதைவினால் ஏற்பட்ட கடுமையான குருதிக்கசிவுடன் ஒரு பெண் வந்திருந்தார்.

படிக்க:
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
♦ மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

“எங்களது கண் முன்னால் ஒரு நோயாளி இறப்பதை பார்ப்பது கொடுமையானது. ஒவ்வொருவரையும் காப்பற்ற நான் முயற்சி செய்ய வேண்டும். ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் நாங்கள்தான் பொறுப்பு” என்று அவர் கூறினார். அப்போது அவர் தொடர்ச்சியாக 50 மணி நேரம் பணியில் இருந்தார்.

இது போன்ற தொலைவான பழங்குடி பகுதிகளில் பணிப்புரிவதற்கு மருத்துவர்கள் விரும்புவதில்லை. “நாங்கள் தற்காலிகமான மருத்துவர்களை அமர்த்தி இருந்தோம். ஆனால் ஒரு மாததிற்கு முன்பு நிரந்தரமான மருத்துவர்களுக்காக அரசாங்கம் விளம்பரம் கொடுத்தது. எங்களது மருத்துவமனையில் பணிப்புரியும் யாரும் அதற்கு விண்ணப்பிக்கவில்லை” என்று போயே கூறினார். விரைவில் நந்தூர்பார் மாவட்ட நிர்வாகம் தற்காலிக மருத்துவர்களுக்காக விளம்பரம் கொடுக்க இருக்கிறது.

doctor-service-in-rural-india-1
தொலைவான பழங்குடி பகுதிகளில் பணிப்புரிவதற்கு மருத்துவர்கள் விரும்புவதில்லை.

அம்மருத்துவமனையில் மகளிர் பிரிவில் வெறும் 10 படுக்கை வசதியே உள்ளது. பெண்களுக்கான 60 படுக்கை வசதியும் குழந்தைகள் மருத்துவமனையும் கட்டுவதற்கான திட்டம் இன்னும் காலதாமதமாகி கொண்டே இருக்கிறது. மகப்பேறுக்கு பின்பு மூன்று நாட்கள் மருத்துவமனையில் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் படுக்கை வசதி பற்றாக்குறையால் மற்ற கர்ப்பிணிகளுக்கு இடம் கொடுப்பதற்காக அவர்கள் உடனடியாக மருத்துவமனையை காலி செய்ய வேண்டும்.

உடனடியாக மருத்துவர்களை நியமிக்க பல கடிதங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதப்பட்டுள்ளன. மயக்க மருந்து நிபுணர் இல்லாமல் சிசேரியன் செய்வது கடும் சிக்கலாகிவிடும்.

குழந்தை மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை இரண்டு மணி நேர பயணத் தொலைவில் உள்ள நந்தூர்பார் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் இம்மருத்துவமனையில் நிரந்தர மருத்துவ கண்காணிப்பாளர், தொற்றுநோயல்லாத பிற நோய்களுக்கான மருத்துவர் அல்லது தேசிய சுகாதார திட்ட (National Health Mission) மருத்துவரோ யாரும் இல்லை.

மருத்துவமனை பொது சிகிச்சை நிபுணரிடம் பேசிய ஒரு வாரத்தில் ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர் இன்னும் பணிக்கு வரவில்லை. மேலும் மயக்க மருத்துவ நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் விடுப்பிலேயே உள்ளதாக அவர் கூறினார்.

இந்த மறுகாலனியாக்கச் சூழலில், மருத்துவத் தொழிலின் அடிப்படையே சேவை என்பதிலிருந்து இலாபநோக்கம் என்பதாக மாற்றப்பட்டுவிட்டது. பணமிருப்பவனுக்குத் தான் மருத்துவப் படிப்பு என்பதை நீட் தேர்வுகள் உறுதிசெய்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படித்து வந்த மருத்துவர்கள், ஏழை மக்கள் மிகுதியாக வாழும் கிராமப்புறங்களிலும் பழங்குடி கிராமங்களிலும் பணியாற்ற முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?


சுகுமார்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க