“5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை! கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை பள்ளிப் படிப்பில் இருந்து விரட்டும் நடவடிக்கை!” என்ற முழக்கத்தின் கீழ்,  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கடந்த செப்-19 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

“இந்த தேர்வு முறை தரமான கல்வியை  உருவாக்குவற்காக என சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இது தரமற்ற கல்வியையே உருவாக்கும். ஒட்டு மொத்த கல்வி முறையையும் அழிப்பது தான் இதன் நோக்கம். மேலும் இந்தித் திணிப்பு இவை எல்லாம் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகள்தான்.” என்பதை அம்பலப்படுத்தி உரையாற்றினார், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் மதுரை வீரன்.

தோழர் வவுனியன், தனது கண்டன உரையில், ”திருவள்ளுவர் பல்கலை கழகம் அறிவித்து இருக்கும் தேர்வு கட்டண உயர்வு என்பதும் கூட தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்தான். கட்டண உயர்வுக்கு எதிராக போராடக் கூடிய  மாணவர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு போலீசாரால் அச்சுறுத்தப் படுகிறார்கள். போராடிய 1000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது போலீசு. இந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

படிக்க :
♦ 5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்
♦ ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி

அடுத்து பேசிய, பு.மா.இ.மு.வின் புதுச்சேரி அமைப்பாளர் தோழர் மோகன், இந்தி திணிப்பின் வரலாறு மற்றும் அதில் தமிழகத்தின் வரலாற்று ரீதியான போராட்டம் பற்றி பேசிய அவர் மேலும் ”இந்தியாவில் பல்தேசிய இன மக்கள் வாழ்கிறார்கள், அவர்களுடையை  பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் அழித்து விட்டு ஒரே பண்பாட்டை உருவாக்க விரும்புகிறார்கள் ஆட்சியாளர்கள். நமது பண்பாட்டை காக்க ஒரு அமைப்பாக அணிதிரள்வோம்” என்று பேசினார்.

இறுதியாக விழுப்புரம் பு.மா.இ.மு அமைப்பளர் தோழர் ஞானவேல் அவர்கள் இந்த ”தேசியக் கல்வி கொள்கை என்பது ஒரு மேம்பட்ட சமுகத்தை உருவாக்குவதற்காக என்று சொல்லி கொண்டு, வரைவு அறிக்கையை கொண்டு வந்து ஆகஸ்ட் – 15 வரை மக்கள் மத்தியில் கருத்து கேட்பு நாடகத்தை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அதில் உள்ள அம்சங்களை தற்பொழுது படிபடியாக அமல்படித்திக் கொண்டு வருகிறார்கள் அதன் ஒரு பகுதிதான் 5,8 பொதுத்தேர்வு முறை.

இதை கொண்டு வருவதற்கு இரண்டு நோக்கம் இருக்கிறது. இந்தியாவின்  கல்வி முழுக்க சர்வதேச பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது மற்றும் அதனூடே தனது இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கடந்த 60 வருடங்களில் கண்ட குறைந்த பட்ச முன்னேற்றத்தைக் கூட தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் பின்னோக்கி இழுக்கப் பார்கிறார்கள். இந்த பிரச்சனை என்பது மாணவர் அமைப்பு பிரச்சனை இல்லை. இது சமூக பிரச்சனை அதை உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டும்” என்று பேசி முடித்தார். தோழர் திலீபன் நன்றியுரையோடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

புமாஇமு

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்,
தொடர்புக்கு : 91593 51158.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்