பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 09

விமானப் பயிற்சிப் பள்ளியில் மெரேஸ்யெவ் ஐந்து மாதங்களுக்கு மேல் பயின்றான். விமானத்திடல் வெண்பனியால் மூடப்பட்டுவிட்டது. விமானங்களுக்கு அடியில் சறுகுபட்டைகள் பொருத்தப்பட்டன. பறக்கும்போது அலெக்ஸேய்க்கு இலையுதிர் காலத் தரையின் பளிச்சிடும் பல் வண்ணங்களுக்குப் பதில் வெள்ளை, கறுப்பு என்ற இரண்டு நிறங்கள் மட்டுமே தென்பட்டன. ஸ்தாலின் கிராத் நகருக்கு அருகே ஜெர்மானியர் முறியடிக்கப்பட்டது, ஆறாவது ஜெர்மன் சைனியத்தின் அழிவு, பெளல்யூஸ் சிறை பிடிக்கப்பட்டது ஆகியவை பற்றிய செய்திகள் ஏற்கனவே பெருத்த ஆரவாரம் ஏற்படுத்தி அடங்கிவிட்டிருந்தன. முன் காணாத, கட்டுப்படுத்த முடியாத தாக்குதல் தெற்கே தொடங்கிவிட்டது. ஜெனரல் ரோத்மிஸ்த்ரோவின் டாங்கி வீரர்கள் போர்முனையைப் பிளந்து ஊடுருவி, துணிகரமாகத் தாக்கு நடத்தி எதிரியின் பின்புலத்தில் நெடுந்தூரம் உட்புகுந்து தகர்த்து நொறுக்கினார்கள். போர்முனையில் இத்தகைய செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், போர்முனைக்கு மேலே, வானில் இத்தகைய சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், சின்னஞ் சிறு பயிற்சி விமானங்களில் அமர்ந்து காற்றில் “கிரீச்சிடுவது” சள்ளையாக இருந்தது. மருத்துவமனை ஆளோடியில் ஒவ்வொரு நாளும் கணக்கற்ற தடவைகள் நடை பழகுவதையும் வீங்கிச் சுரீரென்ற வலித்த கால்களுடன் மஸுர்க்கா நடனமும் பாக்ஸ்டிராட் நடனமும் ஆடுவதையும் விட இது அலெக்ஸேய்க்குக் கடினமாக இருந்தது.

ஆனால் விமானப்படைக்குத் திரும்புவதாக அவன் மருத்துவமனையிலேயே சபதம் எடுத்துக் கொண்டிருந்தான். தனக்கு முன்னே ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு, துயரத்தையும் வலியையும் களைப்பையும் ஏமாற்றத்தையும் பொருட்படுத்தாமல் பிடிவாதத்துடன் அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவனுடைய புதிய இராணுவ முகவரிக்குப் பருத்த கடித கட்டு ஒன்று வந்தது. மருத்துவமனைக்கு வந்த கடிதங்களைக் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா இந்த முகவரிக்கு அனுப்பியிருந்தாள். அவன் எப்படியிருக்கிறான், எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறான். தன் கனவுகளை நனவாக்க அவனுக்கு வாய்த்ததா என்றெல்லாம் அவள் கேட்டிருந்தாள். !

“வாய்த்ததா இல்லையா?” என்று தன்னையே கேட்டுக் கொண்டான் அவன். இதற்குப் பதில் அளிக்காமல் கடிதங்களை வகைப் பிரிப்பதில் முனைந்தான். அனேகக் கடிதங்கள் இருந்தன. தாயாரிடமும், ஓல்காவிடமும், க்லோஸ்தியேவிடமும் இருந்து வந்திருந்தன அவை.

முதலில் தாயாரின் கடிதத்தை பிரித்தான் அலெக்ஸேய். வழக்கமாகத் தாயார் எழுதும் வகையான கடிதம் அது. அவனைப் பற்றிய கவலையும் உளப்பதைப்பும் நிறைந்தது. கிழவியின் அன்பு ததும்பும் சொற்களுக்குப் பிறகு தான் முக்கியமான விஷயம் எழுதப்பட்டிருந்தது: ஜெர்மானியர்கள் ஸ்தாலின்கிராதிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அவர்கள் துரத்தியடிக்கப்பட்ட பின் ஓல்கா கமிஷினுக்கு வந்து ஐந்து நாட்கள் தங்கியிருந்தாள். ஓல்காவின் வீடு வெடி குண்டுகளால் தகர்க்கப்பட்டு விட்டபடியால் அலெக்ஸேயின் வீட்டில் அவனது தாயாருடன் இருந்தாள். இப்போது அவள் ஸேப்பர் பட்டாளத்தில் லெப்டினன்டாக வேலை செய்கிறாள். அவள் தோளில் காயம் பட்டிருந்தது. இப்போது குணமாகிவிட்டது. அவளுக்கு விருது அளிக்கப்பட்டது. என்ன விருது என்று கிழவி தெரிவிக்கவில்லை. தன்னுடன் தங்கியிருக்கையில் ஓல்கா பெரும்பாலான நேரம் உறங்கிக் கொண்டிருந்தாள் என்றும் தூங்காத வேளைகளில் அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் என்றும் தாயார் எழுதியிருந்தாள். இருவரும் சேர்ந்து சீட்டுக்களைக் கொண்டு சோதிடம் பார்த்தார்களாம். கிளாவர் ராஜாவின் இதயத்தில் டயமண்ட் ராணி இருந்தாளாம். இந்த டயமண்ட் ராணியை விட மேலான மாற்றுப் பெண் தனக்கு வேண்டுமென்று தாயார் விரும்பவே இல்லையாம்.

தாயாரின் உள்ளமுருக்கும் ராஜதந்திரத்தை எண்ணி அலெக்ஸேய் புன்னகை செய்தான். அப்புறம் “டயமண்ட் ராணியிடமிருந்து” வந்தக் கடிதத்தைப் படித்தான். கடிதம் சுருக்கமாகவே இருந்தது. ஓல்கா எழுதியிருந்த செய்தி இதுதான்: “காப்பகழ்கள்” தோண்டும் வேலைக்குப் பிறகு தொழிலாளர் பட்டாளத்தின் சிறந்த வீரர்கள் முறையான ஸேப்பர் படைப் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவள் இப்போது எஞ்சினியர் லெப்டினன்ட். இப்போது இவ்வளவு பெயர் பெற்று விளங்கும் மமாயேவ் குன்றின் அருகில் பகைவரின் குண்டு வீச்சைப் பொருட்படுத்தாமல் அரண்காப்பு அமைத்தது அவர்களுடைய படைப்பிரிவுதான். பிறகு டிராக்டர் தொழிற்சாலையின் பக்கத்தில் காப்பரண் வளையம் நிறுவியதும் அதுவே. இந்தத் தொண்டின் பொருட்டு அவர்களது படைப்பிரிவுக்குப் “போர்ச் செங்கொடி” விருது வழங்கப்பட்டது. டப்பியிட்ட உணவுப் பொருள்கள் முதல் மண்வாரிகள் வரை எல்லாச் சாமான்களும் வோல்கா ஆற்றின் மறு புறமிருந்து ஏற்றி வர வேண்டியிருந்ததாகவும் அங்கே பகைவர்களின் மெஷின்கன்கள் குண்டுமாரி பொழிந்த வண்ணமாயிருந்தன என்றும் இதனால் தாங்கள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக நேர்ந்தது என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா. ஸ்தாலின்கிராத் நகர் முழுவதிலும் இப்போது ஒரு கட்டிடம் கூட முழுதாக மிஞ்சவில்லை என்றும், தரை குண்டும் குழியுமாகச் சந்திரனின் நிலக் காட்சிப் புகைப் படலத்தை ஒத்திருப்பதாகவும் அவள் குறிப்பிட்டிருந்தாள்.

மருத்துவமனையில் காயத்துக்குச் சிகிச்சை பெற்றபின் அவர்கள் மோட்டாரில் ஸ்தாலின் கிராத் நகரம் முழுவதையும் கடந்து சென்றார்கள். புதைப்பதற்காக மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்த பாசிஸ்டுகளின் பிணங்களை அவள் கண்டாள். வழி நெடுகக் கிடந்த பிணங்களையோ, எண்ணி மாளாது! இவ்வாறு விவரித்துவிட்டு ஓல்கா மேலே எழுதியிருந்தாள்: “உன் நண்பர் டாங்கி வீரர் ஒருவர் உண்டே, அவர் பெயர் எனக்கு நினைவு வரவில்லை, அவர் தாம் என்கிறேன், அவருடைய குடும்பத்தார் எல்லோரையும் பாசிஸ்டுகள் கொன்று விட்டதாக எழுதியிருந்தாயே. அவர் இங்கே வந்து இந்தக் கோரத்தை நேரில் காணவேண்டும் என்று எனக்கு ஆசையாயிருந்தது. மெய்யாகவே சொல்லுகிறேன் இதையெல்லாம் சினிமாப்படம் பிடித்து அவர் போன்றவர்களுக்குக் காட்ட வேண்டும். அவர்களுக்காக நாங்கள் பகைவர்களை எப்படிப் பழி வாங்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவேண்டும்.” முடிவில் ஓல்கா எழுதியிருந்த வரிகள் அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை. அவன் அவற்றைப் பல முறை படித்தான். ஸ்தாலின் கிராத் போருக்குப் பிறகு, வீரர்களில் வீரனான அலெக்ஸேயுக்குத் தான் தகுந்தவளே எனத்தான் உணர்வதாக எழுதியிருந்தாள் ஓல்கா. ரயில் நின்ற நிலையத்தில் இவற்றையெல்லாம் அவசர அவசரமாக எழுதியிருக்கிறாள். தாங்கள் எங்கே இட்டுச் செல்லப்படும் இடம் பற்றியும், தன் புதிய இராணுவ முகவரி என்னவாயிருக்கும் என்பது பற்றியும் ஓல்காவுக்குத் தெரியவில்லை. உண்மையான வீரர்களில் வீரன் தான் அல்ல, போரின் எரி நரகில் ஆடம்பரமின்றிப் பாடுபட்டு உழைத்த சிறிய, நொய்ந்த பெண்ணான அவளே வீரர்களுக்குள் தலைசிறந்த வீரமாது என்று அவளுக்கு எழுத அலெக்ஸேய் விரும்பினான். ஆனால் அவளிடமிருந்து மறுகடிதம் வரும்வரை இதற்கான வாய்ப்பு அவனுக்கு இல்லாது போயிற்று.

…முடிவில் பயிற்சி ஆசிரியர் நவூமவ், அலெக்ஸேய்க்குப் பரீட்சை வைக்க நாள் குறித்தார். சண்டை விமானத்தின் சிறு மாதிரியான “’ஊத்-2” ரக விமானத்தை அவன் ஓட்ட வேண்டியிருந்தது. சோதனையாளராக இருந்தவர் நவூமவ் அல்ல, அலுவலகத் தலைவரே, அலெக்ஸேய் பள்ளிக்கு வந்த அன்று அவனை அவ்வளவு அதட்டல்கள் கடிந்துரைகளுடன் வரவேற்ற, செம்முகமும் பருத்த உடலும் வாய்ந்த அதே லெப்டினன்ட் கர்னலே.

தரையிலிருந்து எல்லோரும் தன்னை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். தனது விதி இப்போதே முடிவு செய்யப்படும் என்று அறிந்திருந்த அலெக்ஸேய் அன்று தன்னையே விஞ்சிவிட்டான். சின்னஞ்சிறிய, லேசான விமானத்தைக் கொண்டு வானில் அவன் இட்ட ஆபத்து நிறைந்த கோலங்களைக் கண்டு அனுபவம் முதிர்ந்த லெப்டினன்ட் கர்னல் தம் வசமின்றியே ஆகாகா என்று மெச்சினார். மெரேஸ்யெவ் விமானத்திலிருந்து இறங்கி அதிகாரிகள் முன் நிற்கையில் நவூமவினது முகத்தின் ஒவ்வொரு சுருக்கத்திலிருந்தும் சுடர்விட்ட இன்பக் கிளர்ச்சியையும் களிப்பையும் கண்டு காரியம் பழம் என்று தெரிந்து கொண்டான்.

“சிறந்த பறப்பு! ஆம், வரப்பிரசாதம் பெற்ற விமானி” என்று பாராட்டிவிட்டு, “கேள் தம்பீ, இங்கேயே பயிற்சி ஆசிரியனாக இருந்துவிடேன்? உன் போன்றவர்கள் எங்களுக்குத் தேவை” என்றார்.

மெரேஸ்யெவ் முடியாது என்று தீர்மானமாக மறுத்து விட்டான்.

“அப்படியானால் நீ முட்டாள் என்று ஆகிறது! போரிடுவது பெரிய கலை என்றாலும் இங்கே இருந்து ஆட்களுக்கு அதை நீ கற்பிக்கலாம்.”

மெரேஸ்யெவ் ஊன்றியிருந்த கைத்தடியின் மீது லெப்டினன்ட் கர்னலின் பார்வை திடீரென விழுந்தது. கோபத்தால் அவர் முகம் கருஞ்சிவப்பாகிவிட்டது.

“மறுபடியுமா? இப்படிக் கொடு அதை! நீ என்ன, கைத் தடியுடன் உல்லாசப் பயணம் செய்யக் கிளம்பிருக்கிறாயோ? உலாச்சாலையில் இருப்பதாக நினைப்போ? உத்தரவை நிறைவேற்றாததற்காகக் காவல் தண்டனை! இரண்டு நாள்!… தேர்ந்த விமானிகள் தாயத்துக் கட்டிக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டார்கள்…. மந்திரவாதி வேலை செய்கிறீர்களா! இரண்டு நாள் காவல் தண்டனை! கேட்டீர்களா?” என்று இரைந்தார்.

மெரேஸ்யெவின் கையிலிருந்து தடியைப் பிடுங்கி, எதன் மேல் அடித்து அதை முறிப்பது என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

“தோழர் லெப்டினன்ட் கர்னல், அறிக்கை செய்து கொள்ள அனுமதியுங்கள்: இவனுக்குக் கால்கள் இல்லை“ என்று நண்பனுக்குப் பரிந்து பேசினார் பயிற்சி ஆசிரியர் நவூமவ்.

அலுவலகத் தலைவர் முன்னிலும் அதிகமாக முகம் சிவந்தார்.

“அது எப்படி? நீ வேறு என் மூளையைக் குழப்புகிறாயே மெய்தானா அலெக்ஸேய் இது?”

மெரேஸ்யெவ் ஆமாம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்துவிட்டு நிச்சயமான அபாயத்துக்கு உள்ளாகியிருந்த தனது விலைமதிப்பற்ற கைத்தடியைப் பதற்றத்துடன் பார்த்தான். வஸீலிய் வஸீலியெவிச்சின் அந்தப் பரிசுப் பொருளை அவன் சதாகாலமும் தன்னுடன் வைத்திருந்தான்.

படிக்க:
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !

லெப்டினன்ட் கர்னல் நண்பர்களைச் சந்தேகத்துடன் ஓரக் கண்ணால் நோக்கினார்.

“அப்படியானால் அப்பனே… எங்கே, கால்களைக் காட்டு, பார்ப்போம்… ம் – ஆமாம்!…”

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் பயிற்சிப் பள்ளியிலிருந்து சிறந்த பாராட்டுரை பெற்று வெளியேறினான். சிடுசிடுப்புள்ள லெப்டினன்ட் கர்னல், அனுபவம் முதிர்ந்த போர் விமானியான இந்தப் பழங்கால மனிதர், விமானி அலெக்ஸேயின் அருஞ்செயலின் பெருமையை வேறு எவரையும் விடச் சிறப்பாக மதிப்பிட வல்லராயிருந்தார். புகழுரைகளில் அவர் சற்றும் சிக்கனம் பிடிக்கவில்லை. தமது மதிப்புரையில் அவர் மெரேஸ்யெவை “தேர்ச்சியும் அனுபவமும் உளத்திண்மையும் கொண்ட விமானி வகையில் ‘எந்த வித விமானத்திலும்’ பணியாற்றத் தகுதி உள்ளவன்” எனச் சிபாரிசு செய்தார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க