துரை மாவட்டம் பாலமேடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் சரவணகுமார். இவர் அலங்காநல்லூர் அருகிலுள்ள மறவப்பட்டியைச் சேர்ந்தவர். சரவணக்குமார் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர். கடந்த 11-ம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளி விட்டதும் சரவணகுமாரின் புத்தக பையை சக மாணவரான மகேஷ்வரன் எடுத்து மறைத்து வைத்துள்ளார். புத்தகப் பையைத் தேடிய சரவணன், மகேஸ்வரனிடம் ஏன் என் பையை மறைத்து வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து சரவணக்குமாரின் சாதிப்பெயரை சொல்லி அசிங்கமாகத் திட்டிய மகேஸ்வரன், “நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா” என்று கூறியபடியே திடீரென்று பென்சில் டப்பாவிலிருந்து பிளேடை எடுத்து சரவணக்குமாரின் முதுகில் கிழித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் வலி தாங்க முடியாமல் சரவணக்குமார் கத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் சரவணக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணக்குமாரின் தந்தை செருப்புத் தைக்கும் தொழிலாளி. தனது மகன் சரவணக்குமாருக்கு இது போல் அவமானங்கள் நேர்வது புதிதில்லை என பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார். உடன் படிக்கும் மாணவர்கள் சரவணக்குமாரை சாதிப்பெயரைச் சொல்லி இழிவாக பேசுவது, நடத்துவது என்பது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி தன்னிடம் வந்து ”அப்பா நாம் என்ன கீழ் சாதியா? கூட படிக்கும் மாணவர்கள் கேலி பேசுறாங்க. எனக்கு வெக்கமாக இருக்குப்பா. வேற பள்ளியில் சேருப்பா” எனக் கேட்டுள்ளார். ஆனால், எங்கு சேர்த்தாலும் இதே நிலைமை தான் என்பதை விளக்கி, இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்றும், கல்விதான் நம்மைக் காப்பாற்றும் என்றும் அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லி வந்துள்ளார்.

பல நாட்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் சரவணக்குமாரின் புத்தகங்களையோ பேனாவையோ சக மாணவர்கள் பறித்திருப்பார்கள். சில நாட்கள், ”உனக்கெல்லாம் சைக்கிளாடா?” என்று டயரை பிளேடால் கிழித்து பஞ்சராக்கி விடுவார்கள். ஆனால், இதையெல்லாம் பள்ளிக்கு போய் புகார் கொடுக்க வேண்டாம் எனத் தன் தந்தையைத் தடுத்துள்ளார் சரவணன். ஏனெனில், புகார் செய்யப் போனால் இன்னும் தன்னை மோசமாக நடத்தி விடுவார்கள் என அஞ்சியுள்ளார். ஆனால், இந்த முறை தன் மகனின் உயிருக்கே ஆபத்து வந்துள்ள நிலையில் போலீசாரிடம் புகாரளித்துள்ளார் சரவணனின் தந்தை. எனினும், இதுவரை போலீசார் தரப்பில் உருப்படியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் இல்லை.

♦♦♦

தென்மாவட்ட பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவர்கள் அமரும் மேசைகள் ஒவ்வொன்றும் சாதிவாரியாக பிரிந்து கிடக்கும். மாணவப் பருவத்திலேயே நஞ்சாக ஊட்டப்படும் சாதி வெறியால் அவர்கள் சாதிவாரியான தனித் தனிக் குழுக்களாக பிரிந்து கிடப்பார்கள். தங்கள் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாணவரும் கைகளில் குறிப்பிட்ட வண்ணங்களில் அடையாளக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

இவையெல்லாம் பழைய / தெரிந்த செய்திகள்தாம். ஆனால், இந்த சாதிவெறி அணைந்து விடாமல் பாதுகாப்பது யார்?

இந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி கல்வித் துறை  இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் 2018-ம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக தலைமைக் கல்வி அதிகாரிகள் இம்மாதிரிப் பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகுத்த உத்தரவை இடுவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமென அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

உடனே கொதித்தெழுந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார். மேலும், சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வராத காரணத்தால் தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவித்தார். அமைச்சர் பாரதிய ஜனதாவிடம் சரணடைந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் மேலும் சில நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களிடம் இதைக் குறித்து பேசிய செங்கோட்டையன், தமிழக பள்ளிகளில் சாதிப் பிரச்சினையே இல்லை எனவும், இருந்தால் காட்டுங்கள் எனவும் கூறினார்.

ஆனால் உண்மை அதுவல்ல.

தென்மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட கயிறுகளை தங்கள் சாதிக்கு ஏற்றபடி அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு வருகின்றனர். இதன் மூலம் தங்கள் சாதியைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு, விளையாட்டு வகுப்புகளிலும் பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலும் சாதி அடிப்படையில் அணி திரள்கிறார்கள். விளையாட்டுகளில் எழும் சிறு மோதல்கள்கூட, சாதி அடிப்படையிலான பெரிய மோதல்களாக மாறுகின்றன.

“தென் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்ளும் விவகாரங்களில் 60 – 65 வழக்குகள் பதிவாகின்றன” என்கிறார் மதுரை எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர். சாதியை அடையாளம் காட்ட கயிறு அணியும் பழக்கம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் பரவி வருகின்றது.

நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் கைகளில் இருந்து கயிறுகளை அறுத்தெறிவதை மதத்திற்கு எதிரான நடவடிக்கை எனப் பார்க்காத இந்துத்துவ குரங்குகள், சாதிக் கயிறுகளை நீக்கச் சொல்வதை மட்டும் இந்து மதத்திற்கு எதிரானது என பொங்குகின்றன. இதிலிருந்தே இந்து மதம் என்பதன் வேர் சாதிதான் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

♦♦♦

டிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “அசுரன்” திரைப்படத்திலும் இவ்வாறான காட்சி ஒன்று உண்டு. கல்வியின் முக்கியத்துவத்தை தலித்திய செயல்பாட்டாளர்களும், இயக்கங்களும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. காலம் காலமாக, நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வியை தலித்துகள் அடைந்தே தீர வேண்டியுள்ளது.

சரவணக்குமாரின் தந்தை நக்கீரன் பேட்டியில் தன் மகனுக்கு இவ்வாறாக அறிவுறை சொன்னதாக குறிப்பிடுகிறார்,  “கல்வி தான் முக்கியம், அது தான் நம்மைக் காப்பாற்றும். எதையும் பொருட்படுத்தாமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும்”.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்

அவரது வார்த்தைகளில் உள்ள “எதையும் பொருட்படுத்தாமல்” என்பது எந்தளவுக்கு வலி நிறைந்த அனுபவமாக இருக்கும் என்பதையே சரவணக்குமாரின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சாதி வெறி நமக்கு உணர்த்துகின்றது. தலித்துகள் கல்வி பெற வேண்டும் என்பதற்கு முதல் நிபந்தனை அவர்கள் நிம்மதியாக கல்வி பெறுவதற்கும் படிப்பதற்கும் உண்டான சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்கு தடையாக இருக்கும் எவரும் தண்டிக்கப்பட வேண்டும். சரவணக்குமாரின் மேல் சாதிய வன்கொடுமையை நிகழ்த்திய சக மாணவர்களும், இதற்கு இத்தனை நாட்களாக துணை போன பள்ளி நிர்வாகத்தினரும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்.

சட்டப்படியிலான இந்த நடவடிக்கைகள் முறையாக நடந்தேறுவதை உத்திரவாதப்படுத்துவதுடன், இனிமேலும் ஒரு சரவணக்குமாரின் மேல் இதே போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்படுவதைத் தடுப்பதும் நம் எல்லோரின் கடமை.

சாக்கியன்

நன்றி : நக்கீரன்