திருச்சி காஜாபேட்டை பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் “டெங்கு கொசுவை ஒழிப்போம்!”, “காய்ச்சல் வராமல் மக்களை காப்போம்!” – என்ற முழக்கத்தின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த அக்-13 ஞாயிறு அன்று நடைபெற்றது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதியுற்றுவருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில் காய்ச்சல் அறிகுறியோடு சிகிச்சைக்கு வந்தவண்ணம் உள்ளனர். டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மக்கள் பலர் மடிந்துள்ளனர்.

டெங்கு கொசுவால் ஏற்படும் இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், பொது சுகாதாரத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்வதற்கு உருப்படியான நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத அடிமை எடப்பாடி அரசு, டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மூடிமறைப்பதற்குத்தான் அதிகம் மெனக்கெடுகிறது.

இந்நிலையில்தான், திருச்சியிலுள்ள காஜாபேட்டை பகுதியில் டெங்கு பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் பிரச்சார இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் மேற்கொண்டனர்.

திருச்சி காஜாப்பேட்டை பகுதி, வயிற்றுப்பிழைப்புக்காக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுத் திரும்பும் தினக்கூலிகள் நெருக்கமாக வசிக்கும் பகுதி. குறுக்கும் நெடுக்குமாக ஓடும் திறந்தவெளி சாக்கடைகளும்; முறையாக வாராத நிலையில் சாலையில் சரிந்துகிடக்கும் குப்பைத்தொட்டிகளும் நிறைந்த பகுதி. இவைபோன்ற கொசு உற்பத்திக்கு உகந்த சூழல் காரணமாக சாதாரண நாட்களிலேயே கொசுக்களின் படையெடுப்பிலிருந்து மக்கள் தப்பிப்பதே கடினம்.

பொது சுகாதாரத்தை முறையாக பராமரிக்காத மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக ஏற்கெனவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும், டெங்கு பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

காஜாப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, இருபதுக்கும் மேற்பட்ட தெருக்களில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வயதான மூதாட்டி, சிறுவர், சிறுமிகளிடமும் விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் திறந்தவெளி சாக்கடை கால்வாய் மீது பிளீச்சிங் பவுடர் போட்டனர்.

படிக்க:
திருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !
திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !

பொது சுகாதாரத்தை முறையாகப் பராமரிக்காத மாநகராட்சி நிர்வாகத்தின் மீதான தங்களின் கோபத்தை தோழர்களிடம் வெளிப்படுத்தினர், அப்பகுதி மக்கள். அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதாகட்டும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிப்பதாகட்டும் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம்தான் தீர்வை எட்டமுடியும் என்பதை வலியுறுத்தினர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.

மக்கள் அதிகாரம்
தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி, 9445775157.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க