உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா

117 நாடுகளைக் கொண்ட தீவிர பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன

1

உலக பட்டினிக் குறியீட்டு அட்டவணை – 2019, “இந்தியாவின் பட்டினி நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது!” என்று தெரிவிக்கிறது. மொத்தம் 117 நாடுகளைக் கொண்ட தீவிர பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. 117-வது இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு உள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பட்டினியின் அளவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குறைபாடு, குழந்தைகளின் உடல்குறைபாடுகள், குழந்தை இறப்பு ஆகிய நான்கின் அடிப்படையில்தான் உலக பட்டினி அட்டவணை குறித்த இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.

உலக அளவிலான பட்டினி அளவு ‘மோசமான’ நிலையிலிருந்து ‘மிதமான மற்றும் தீவிரமான’ என்ற நிலைக்கு குறைந்துள்ளது. மேலும் இந்த முன்னேற்றமானது 1999 முதல் 2015 வரையிலான உலகளாவிய வறுமையின் வீழ்ச்சியுடன் ஒத்துப்போகிறது என்றும், வறுமை மற்றும் பட்டினியுடனும் நெருங்கிய தொடர்புடையவை என்றும் அட்டவணை கூறுகிறது.

உலகளாவிய வறுமை குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் நிலைமை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. “அதிக மக்கள் தொகை காரணமாக இந்தியாவின் உலக பட்டினி அட்டவணை மதிப்பீடு பெரிய அளவிலான தாக்கத்தை, பிராந்திய அளவிலான மதிப்பீட்டில் ஏற்படுத்துகிறது” என்கிறது.

படிக்க :
♦ சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை
♦ காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு, அனைத்து குழந்தைகளையும்விட இந்தியாவில் 20.8 சதவீதமாக உள்ளது. குழந்தைகள் உடல் குறைபாடு 37.9 சதவீதமாக உள்ளது. பட்டினியில் இந்தியாவில் உள்ள அளவு 30.3 சதவீதம். இந்த அளவீடு பட்டினி மிக தீவிரமான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

புது கழிப்பிடங்களைக் கட்டினாலும்கூட திறந்தவெளியில் கழிப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது

இந்த அறிக்கை ‘ஸ்வச் பாரத்’ பரப்புரை குறித்து கூறியுள்ளது. முக்கியமான திட்டம் என்றாலும் அது சரியாக செயல்படுத்தப்படவில்லை என அது தெரிவிக்கிறது. “புது கழிப்பிடங்களைக் கட்டினாலும்கூட திறந்தவெளியில் கழிப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலைமை மக்களின் உடல்நலனை பாதிக்கிறது. இதன் விளைவாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் சமரசம் செய்யப்படுவதால் குழந்தைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது” என்கிறது இந்த அறிக்கை.

பட்டினியில் இந்தியாவின் நிலை கீழறங்கினாலும் இரண்டு அண்டை நாடுகளான வங்க தேசம் மற்றும் நேபாளத்தின் நிலைமை முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இந்தியா பெற்றுள்ள 102-வது இடம், மிக மிக மோசமான சூழலைக் குறிக்கிறது. இந்தியாவிற்கு கீழ் உள்ள மற்ற 15 நாடுகளும் சியாரா லியோன், உகாண்டா, காங்கோ, சூடான், ஜிம்பாபே, ஹைத்தி, சாம்பியா, மடகாஸ்கர் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளே ஆகும்.

வளர்ச்சி, முன்னேற்றம் என்கிற கவர்ச்சிகரமான வார்த்தைகளைப் பேசி ஆட்சிக்கு வந்த பாஜக அரசாங்கத்தின் ஆட்சி காலம், இந்தியாவை இருண்ட காலத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதையே ஒவ்வொரு புள்ளிவிவரமும் தெரிவிக்கிறது.

கலைமதி
நன்றி:
தி வயர்.