இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்து

டந்த 2019 அக்டோபர் 17 அன்று தமிழகத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.எம்.)யின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி, “வரும் அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100-ஆவது ஆண்டாகும். இதை ஓராண்டுக் காலத்துக்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது” என்று கடந்த அக்டோபர் 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டதோடு, அக்டோபர் 17 அன்று விழாக்களும் நடந்துள்ளன.

சீதாராம் யெச்சூரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல், அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும்.

***

ந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.

அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.

எஸ்.ஏ. டாங்கே மற்றும் சிங்காரவேலர்

வெளிநாடுகளில் வாழ்ந்த இந்திய அறிவுத்துறையினரில் சிலர் மகத்தான சோசலிசப் புரட்சியால் உந்தப்பட்டு கம்யூனிசப் புரட்சியை இந்தியாவில் சாதிக்க வேண்டுமென்ற உணர்வோடு கம்யூனிசக் கோட்பாடுகளைப் படிப்பதும் பரப்புவதுமாக இருந்தனர். ரஷ்யப் புரட்சிக்கு முன்பிருந்தே, ரஷ்ய போல்ஷ்விக் கட்சித் தோழர்களுடனும் தோழர் லெனினுடனும் சிலர் தொடர்பு கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தங்கியிருந்த எம்.என். ராய், ரஷ்ய போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு மெக்சிகோவில் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்கினார். பின்னர், அவர் லெனின் தலைமையிலான கம்யூனிச அகிலத்தின் கிழக்கத்திய நாடுகளுக்கான பிரிவில் அங்கம் வகித்து, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ முயற்சித்தார்.

கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு, அகிலத்தின் நிர்வாகக் குழுவானது ஒரு துணைக் கமிட்டியை உருவாக்கியது. அது, காலனியாதிக்கத்திலிருந்து கிழக்கத்திய நாடுகளின் விடுதலைக்காக, அப்போதைய சோசலிச சோவியத் ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருந்த அஜர்பெய்ஜானின் தலைநகரான பாகூ நகரில், “கிழக்கத்திய மக்களின் விடுதலை”க்கான முதலாவது மாநாட்டை செப்டம்பர் 1920-ல் நடத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே அக்.17,1920-ல் அப்போதைய சோவியத் சோசலிசக் குடியரசில் சுயாட்சிப் பிரதேசமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தானின்) தலைநகர் தாஷ்கண்ட் நகரில் எம்.என்.ராய் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் –  எம்.என். ராய், அவரது துணைவியார் ஈவ்லின், அபானி முகர்ஜி, அவரது துணைவியார் ரோசா, அகமது ஹசன் எனப்படும் முகம்மது அலி, முகம்மது ஷபீக் சித்திகி, எம்.பி.டி. ஆச்சார்யா ஆகிய 7 பேர் – கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கும் கூட்டத்தை நடத்தினர்.

படிக்க:
மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி (The Indian Communist Party) என்று கட்சிக்குப் பெயரிடப்பட்டது. ஷபீக் செயலாளராகவும், எம்.என். ராய் துருக்கேஸ்தானில் உள்ள கட்சிக் கமிட்டியின் செயலாளராகவும், ஆச்சார்யா தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அகிலத்தின் முடிவுகளைச் செயல்படுத்துவது, கட்சித் திட்டத்தை இந்திய நிலைமைகளுக்கேற்ப தொகுத்து எழுதி முடிப்பது, கட்சி உறுப்பினர் விதிமுறைகளைத் தொகுத்து எழுதுவது, கட்சியை அகிலத்துடன் இணைக்க ஆவன செய்வது – என்று தீர்மானித்த இந்தக் கூட்டம், சர்வதேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

இந்தியாவில் அப்போது “கிலாபத்” இயக்கத்தைச் சேர்ந்த பலர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை முறியடிக்க அகண்ட இஸ்லாம் (Pan-Islam) சித்தாந்தத்துடன், ஆப்கானைக் கடந்து மேற்கு ஆசியாவுக்கும் துருக்கிக்கும் சென்று, அங்கிருந்து படை திரட்டி பிரிட்டிஷாரை வீழ்த்த முற்பட்டனர். “முகாஜிர்”கள் என்றழைக்கப்பட்ட இத்தகையோர் இடைத் தங்கலாக தாஷ்கண்ட் நகரில் இருந்தபோது, அவர்களிடம் அன்றைய சோவியத் சோசலிசக் குடியரசின் அதிகாரிகளும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தினர். இதில் எம்.என். ராயும் அவரது துணைவியாரும் முக்கிய பங்காற்றினர். அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய முஸ்லிம்களிடம் பேசி அவர்களையும் கம்யூனிசத்துக்கு ஆதரவாளராக்கினர்.

எம்.என். ராய்

தாஷ்கண்ட் நகரில் இந்திய ராணுவப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பலர் இணைந்து பயிற்சி பெற்றனர். முகம்மது ஷபீக், முகம்மது அலி முதலான முன்னாள் இளம் முகாஜிர்கள் எம்.என். ராய் மூலம் கம்யூனிஸ்டுகளாக உயர்ந்தனர். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட முகாஜிர்களில் சிலர் மாஸ்கோவுக்குச் சென்று, “கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக”த்தில் சேர்ந்து கம்யூனிச சித்தாந்தத்தைக் கற்றறிந்தனர். அவர்களில் சிலர் இந்தியாவுக்கு இரகசியமாகத் திரும்பி வந்து, உழைக்கும் மக்களை கட்சிக்கு அணிதிரட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, பெஷாவர் சதி வழக்கிலும் கான்பூர் சதி வழக்கிலும் கைதாகி, சிறை – சித்திரவதைக்கு ஆளாகினர்.

எம்.என். ராய் அப்போது மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் பொறுப்பை ஏற்றிருந்ததால், அவர் அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் பங்கேற்றார். எம்.என். ராய் குழு பிரிட்டிஷ் காலனியாட்சியின் அடக்குமுறை காரணமாக இந்தியாவில் செயல்பட முடியவில்லை. இருப்பினும் கம்யூனிச அகிலமானது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக அல்லாமல், இந்தியாவின் ஒரு கம்யூனிசக் குழுவாக எம்.என். ராய் குழுவை அங்கீகரித்ததோடு, மூன்றாவது காங்கிரசில் இக்குழுவிடம் கலந்தாலோசனைகளையும் நடத்தியது.

இதேபோல, அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரிலுள்ள இந்திய அறிவுத்துறையைச் சேர்ந்த விரேந்திரநாத் சட்டோபாத்தியாயா தலைமையில் பூபேந்திரநாத் தத், முகம்மது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் ஒரு குழுவாக இணைந்து, போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டி நாட்டை விடுதலை செய்ய விழைந்தனர். அமெரிக்காவிலும் கனடாவிலுமுள்ள சீக்கியர்கள் “கெதார் கட்சி”யில் இணைந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியதோடு, சோசலிச ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டு கம்யூனிசப் பாதையில் நாட்டை விடுதலை செய்ய முயற்சித்தனர்.

மேலும், 1921 முதல் 1924 வரையிலான காலத்தில், போல்ஷ்விக் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்த கம்யூனிச குழுக்கள் மீது 3 சதி வழக்குகள் – பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு – ஆகியன தொடுக்கப்பட்டு முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். முசாபர் அகமது, நளினி குப்தா, சௌகத் உஸ்மானி, டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் கம்யூனிச இயக்கம் செயல்பட முடியாமல் பெரும் பின்னடைவுக்குள்ளானது.

படிக்க:
நூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன ? | The ABC of Communism
♦ சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!

இதன் பின்னர், டிசம்பர் 25,1925-ல் கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவரது முயற்சியால் கம்யூனிஸ்டுகளின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில்தான் பல்வேறு கம்யூனிச குழுக்கள் ஒன்றிணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தன. அளவில் சிறியதாக, ஏறத்தாழ 500 பேர் பங்கேற்ற இம்மாநாடுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டதை அறிவிப்பதாக இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.வி. காட்டே 1950-களில் அளித்த விரிவான பேட்டியானது, பின்னர் “ஃபிரண்ட்லைன்” இதழில் மறுபதிப்பாக வெளிவந்தது. அதில் அவர், “தாஷ்கண்ட் நகரிலோ அல்லது வேறிடத்திலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது முறையாக இயங்கவில்லை. இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதனைக் குறிப்பிட முடியும். பல்வேறு கம்யூனிஸ்டு குழுக்களை ஒன்றிணைத்து கான்பூர் நகரில் நடத்தப்பட்ட மாநாடுதான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மையாகத் தொடங்கப்பட்டதை அறிவித்தது.

எஸ்.வி. காட்டே (இடது பக்கம் நிற்பவர்)

“ஒரு கம்யூனிஸ்டு குழு தாஷ்கண்ட் நகரில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கலாம் எனினும், அது நீடித்து நின்று செயல்படவேயில்லை. ஏனெனில், அதன் தொடக்ககால உறுப்பினர்களில் சிலர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்கள். இந்நிலையில் ஒரு கட்சியாக அது செயல்பட்டிருக்க அடிப்படையே இல்லை.

“கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவர்தான் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல கம்யூனிஸ்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் “பிரதாப்” என்ற பத்திரிகையின் உதவியுடன் நாடெங்குமுள்ள கம்யூனிஸ்டுகளை அறைகூவி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதைப் பார்த்து, நாங்கள் அந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.

“அங்கே நாங்கள் சத்யபக்தாவுடன் விவாதித்தோம். அவர் தேசியவாத கம்யூனிசக் கட்சியை – இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டுமென்றார். அகிலத்தின் பொது வழிகாட்டுதலை மட்டும் ஏற்கலாம்; மற்றபடி, இந்திய நிலைமைக்கேற்ப கட்சியின் பெயரும் கொள்கையும் அமைய வேண்டுமென அவர் வாதிட்டதை நாங்கள் நிராகரித்தோம். அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரு அங்கமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) அமைய வேண்டுமென்று எங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்து மாநாட்டில் பெரும்பான்மை முடிவாக்கினோம். சிங்காரவேலர் அன்று நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்” என்று அக்கால நிகழ்வுகளை தனது நினைவிலிருந்து காட்டே விளக்கியுள்ளார். (Frontline , Volume 29 – Issue 09, May 05-18, 2012)

இந்த வரலாற்று ஆதாரங்களின்படி, 1925-ம் ஆண்டு டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும். சி.பி.எம். கட்சி வறட்டுத்தனமாகவும் வீம்புக்காகவும் 1920-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாகக் கூறுவது தவறானதும், அணிகளைக் குழப்புவதுமாகும்.

மறுபுறம், கட்சித் திட்டத்தையும் அமைப்பு விதிகளையும் வகுப்பதாகத் தீர்மானித்த எம்.என். ராய் குழுவானது, இறுதிவரை அதனைச் செயல்படுத்தவேயில்லை. அதற்கு மாறாக, 1921-ல் அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சியின் மாநாட்டின் போது, எம்.என்.ராயும், அபானி முகர்ஜியும் தங்களது கொள்கை விளக்க அறிக்கையை அனுப்பி வைத்து, பிரபல உருது கவிஞர் ஹசரத் மொஹானி மூலமாக முழு விடுதலையுடன் கூடிய சுயராஜ்யத்தை காங்கிரசின் லட்சியமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் காந்தி – காங்கிரசுத் தலைமை இதை நிராகரித்தது.

அதன் பிறகு எம்.என். ராய், ஏகாதிபத்தியமானது காலனிய நீக்கக் (decolonisation) கொள்கையைப் பின்பற்றுவதாகவும் – அதாவது, ஏகாதிபத்தியமானது காலனிய நாடுகளில் தொழில்மயமாக்கத்தைச் செய்வதன் மூலம் காலனிய நாடுகள் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருப்பதை பலவீனப்படுத்தி வருவதாகவும், காலனியாதிக்கத்தை படிப்படியாகக் கைவிடும் சீர்திருத்தப் பாதையில் செல்வதாகவும் மார்க்சிய – லெனினியத்துக்கே எதிரானதொரு கோட்பாட்டை முன்வைத்தார். 1928-ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் இந்தக் கொள்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நவீன காவுத்ஸ்கியாக எம்.என். ராய் மாறிவிட்ட போதிலும், பிற்காலத்தில் அவரது கருத்தை எல்லா வண்ணத் திரிபுவாதிகளும் ஏற்றுக்கொண்டு வெவ்வேறு மொழிகளில் வியாக்கியானம் செய்தனர். பின்னாளில் எம்.என். ராய் கம்யூனிச சித்தாந்தத்தையே கைவிட்டு, முற்போக்கு மனிதநேயம் பற்றி உபதேசிக்கத் தொடங்கினார்.

1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி. அதிகாரி, பி.சி. ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர். 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி, இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சியாக வளரவில்லை.

இந்தியாவில் ‘கம்யூனிஸ்ட்’ கட்சி தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளாகிவிட்டன. இந்திய கம்யூனிச இயக்கமானது, வலது, இடது சந்தர்ப்பவாதங்களில் மாறி மாறி விழுந்து இந்தியப் புரட்சிக்குத் தொடர்ந்து துரோகமிழைத்துள்ளதை இந்த 95 ஆண்டு கால வரலாறு விளக்குவதோடு, எண்ணற்ற படிப்பினைகளையும்  வழங்கியுள்ளது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான எதிர்மறை படிப்பினைகளாக இவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு சரியான, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி உருவாவது காலத்தின் கட்டாயம்.

அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க