பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கடந்த நவம்பர் 2-ம் தேதி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கீழடி அகழ்வாய்வின் முக்கியத்துவம் குறித்து அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் என 130-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை தலைமை தாங்கிய சென்னைப் பல்கலைக்கழக பேரா. கி. கதிரவன் அவர்கள்,

“சிந்துசமவெளி நாகரிகத்திற்கு ஈடாக கீழடியில் பொருட்கள் கிடைத்துள்ளன. சாதி, மதம் சார்ந்த எந்த பொருட்களும் அங்கு கிடைக்கவில்லை. தங்க ஆபரணங்களோடு மக்கள் செல்ல செழிப்பாக வாழ்ந்தாலும், அங்கு இறை நம்பிக்கை என்பது துளிக்கூட இல்லை. இது வெளியில் தெரியவந்தால் இராமாயணம், மகாபாரதம் – இந்து நம்பிக்கை தூக்கியெறியப்படும். இதற்கு அஞ்சிதான் பாஜக அரசு கீழடியை மூடிமறைக்கப் பார்க்கிறது” என்றார்.

படிக்க:
தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி ! ஓசூர் அரங்கக் கூட்டம்
நவீன வேதியியலின் கதை | பாகம் 01

இரண்டாவதாக பேசிய அழகப்பா பல்கலைக்கழக, வரலாற்றுத்துறை பேராசிரியர். சு.ராசவேலு அவர்கள், தமிழக தொல்லியல் அகழாய்வுகளும் கீழடியின் சிறப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர்,

“கீழடி என்பது தமிழக வரலாற்றில் ஓர் புரட்சி. மக்களின் மனதில் கீழடி ஓரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வின்சென்ட் ஸ்மித், இந்திய வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால், முதலில் தமிழக நாகரிகத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பார். அதனடிப்படையில், ஆப்பிரிக்க கண்டத்திற்கு நிகராக தமிழகத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இதேபோல் வட இந்தியாவிலும் தொல்லியல் ஆய்வை நடத்தியுள்ளனர். அவை இராமாயணம், மகாபாரதம் அடிப்படையிலான ஆய்வுகள். அந்த ஆய்விலும் கூட அவர்களுக்கு பழமைவாய்ந்த பொருட்கள் பெருமளவில் கிடைக்கவில்லை. 700 இடங்களில் நடத்திய ஆய்வில் வெறும் நான்கு எழுத்துக்கள் தான் கிடைத்துள்ளது. பிராகிருதம் எழுத்துக்கூட தமிழ் மொழியில் இருந்துதான் வந்தது. ஆக, கீழடி தொல்லியல் ஆய்வு இந்திய வரலாற்றையே மாற்றப்போகிறது” என்றார்.

மேலும் கடந்த பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் நடந்துள்ள தொல்லியல் அகழாய்வுகளை பற்றியும் அவற்றில் கிடைக்கப்பெற்ற பொருள்கள் அதிலிருந்து வரக்கூடிய முடிவுகள் பற்றியும் அறிவியல் ஆதாரங்களோடு விளக்கினார். இதனுடைய தொடர்ச்சியிலிருந்து கீழடியை பார்க்க வேண்டும் என்றார்.

படிக்க:
நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
♦ செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

மூன்றாவதாக பேசிய சென்னைப் பல்கலைக்கழகத்தின், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் CCCE ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர். வீ. அரசு அவர்கள், இந்தியாவில் உள்ள செம்மொழிளும் தொல்லியல் ஆய்வுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர்,

“கி.மு 6-ம் நூற்றாண்டில் மக்களிடம் எழுத்தறிவு பரவலாக இருந்தது என்பதையும், அசோக பிராமி எழுத்துக்களுக்கு முந்தையது தமிழ் பிராமி எழுத்துக்கள் என்பதையும் கீழடி ஆய்வு உறுதி செய்கிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மொழிக்கான வரலாறு ஆதாரங்களோடு நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமஸ்கிருத எழுத்துக்களின்  வரலாறு கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்துதான் தொடங்குகிறது. ஆரிய – வேத நாகரிகம்தான் இந்திய வரலாறு என வரலாற்றை மாற்ற நினைக்கும் மோடி அரசால் கீழடியை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பேசினார். இறுதியாக முனைவர் க.ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

கீழடி அகழாய்வின் முடிவுகள், முக்கியத்துவம், அதனை எந்த வகையில் நாம் புரிந்துக்கொள்வது என்பது குறித்த ஒரு பார்வையை இக்கூட்டம் வழங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, சென்னை.
(Coordination Committee for Common Education)
தொடர்புக்கு : 9444 380211 | 7299 361319

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க