கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !!

2011 -ம் ஆண்டில் ஒரு இரவு. அயோத்தியாவைச் சேர்ந்த நாக வைராகியான ராம் அசாரே தாஸ் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொல்லப் பார்த்தார்கள்.

கிட்டத்தட்ட செத்தே போய்விட்டோம் என்று நினைத்த நேரத்தில், தன் வலுவையெல்லாம் திரட்டி அந்த கொலைகாரனைத் தள்ளிவிட்டார் ராம் அசாரே. தன்னைக் கொல்ல வந்தவன் யாரென அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது தன் சீடனான பிரிஜ்மோகன்தாஸ் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.

ராம் அசாரே தாஸ் அயோத்தியாவில் உள்ள சௌபுர்ஜி கோவிலின் மகாந்த். அதாவது தலைவர். ஒரு நாள், அதையும் ராம் அசாரேவிடமிருந்து எழுதி வாங்கிவிட்டு, அவரைத் தெருவில் விட்டுவிட்டார் பிரிஜ்மோகன் தாஸ்.

மேல் இருப்பது அயோத்தியாவில் கோவில்களை அடைய நடக்கும் போட்டியின் ஒரு சிறு துளி. அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலின் மகந்த்தும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். அதுவும் தனது அடுத்த மடாதிபதியை நியமித்துவிட்டால் உயிர் எப்போது போகுமெனத் தெரியாது.

அதேபோல, சில மடங்களின் தலைவர்கள் இன்னொரு மடத்தையும் அதன் சொத்துகளையும் அபகரிப்பதும் நடக்கும். சீடர்களை நியமிக்காமலேயே சீடர்கள் தோன்றுவார்கள். இது எல்லாம் அயோத்தியில் நடக்க ஆரம்பித்தது 1980-களில்.

இதன் பின்னணியில் இருப்பது வி.எச்.பி என்கிறது தீரேந்திர கே. ஜா எழுதியுள்ள Ascetic Games: Sadhus, Akharas and the making of the Hindu Vote என்ற புத்தகம்.
அயோத்தியில் உள்ள கோவில்களும் மடங்களும் எப்படி முழுமையாக ஒரு அரசியல் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக்கப்பட்டிருக்கின்றன என்பதோடு, அலகாபாத் கும்பமேளா எப்படி ஒரு அரசியல் கருத்துருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சொல்கிறது இந்தப் புத்தகம்.

உத்தரப்பிரதேசத்திற்கு வெளியில் இருப்பவர்கள் ஒரு போதும் கற்பனைகூட செய்திருக்க முடியாத பல தகவல்களை தீரேந்திர ஜா இந்தப் புத்தகத்தில் கொட்டியிருக்கிறார்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

வைணவ, சைவ அகாராக்களுக்கிடையிலான மோதல், மகாமண்டலேஸ்வர் போன்ற அர்த்தமில்லாத பட்டங்களின் விற்பனை, கும்ப மேளாவுக்காக போலியாக நாகா சாதுக்கள் பணத்திற்காக அணிவகுப்பது, அந்த நகரமே கிரிமினல்களின் கூடாரமாகியிருப்பது என திகைக்கவைக்கிறது புத்தகம்.

கோவில்களும் மடங்களும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

புத்தக ஆசிரியரான தீரேந்திர கே. ஜா பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்வுசெய்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதை எழுத ஏன் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. இவர் ஏற்கனவே, Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Ayodhya: The Dark Night ஆகிய நூல்களை எழுதியவர். தி கேரவான், ஓபன், ஸ்க்ரால், தி டெலகிராஃப் ஆகிய பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.

புத்தகத்தை Westland பதிப்பகத்தின் இம்ப்ரிண்டானா Contxt வெளியிட்டிருக்கிறது. 218 பக்கங்கள். விலை ரூ. 599/-

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க