பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்

2003-ம் ஆண்டில் பாபர் மசூதிக்கு அடியில் இராமன் கோயில் இருந்ததற்கு சான்று உள்ளதாக கூறிய இந்திய தொல்லியல் துறையில் (Archaeological Survey of India – ஏ.எஸ்.ஐ) ஆய்வில் ஈடுபட்ட தொல்லியலாளர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இல்லை.

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு கீழே ஒரு பிரமாண்டமான கட்டமைப்பு இருந்ததற்கான சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய தொல்லியல் துறை அதற்கு 574 பக்க அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 2003 ஆகஸ்டில் வழங்கியது. ASI-ன் அறிக்கையை “தெளிவற்ற மற்றும் தன் முரண்பாடானது” என்று வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்ஃபு வாரியம் கூறியது.

தொடர்ந்து, வக்ஃபு வாரியம் தரப்பில் சுப்ரியா வர்மா மற்றும் ஜெயா மேனன் என்ற இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ASI-ன் அகழ்வாராய்ச்சிகளை கவனித்தனர். ஏ.எஸ்.ஐ.யின் ஆய்வு முடிவுகளை, தொடர்ந்து செப்டம்பர் 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்பதை பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (Economic and Political Weekly) அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதன் படி, அகழ்வாராய்ச்சியின் போது, ஏ.எஸ்.ஐ பின்பற்றிய பல்வேறு நடைமுறைகளுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வின் போது, “ஏ.எஸ்.ஐ. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் மனதில் ஏற்கனவே ஒரு முன்முடிவு இருந்தது என்பது உண்மை” என்று அவர்கள் கூறினார்கள்.

இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் மீதான ASI-யின் அதிகாரம் காரணமாக அதன் அறிக்கை கேள்விக்குட்படுத்தப்படவில்லை என்று கட்டுரையாசிரியர்கள் கூறினார்கள். “இந்தியரோ அல்ல வெளிநாட்டவரோ எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் தளங்களை ஆராய அல்லது அகழ்வாராய்ச்சி செய்ய விரும்பினால் ASI-யிடமிருந்து உரிமம் பெற வேண்டும். எனவே எந்தவொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் இந்திய தொல்லியல் துறைக்கு எதிராக அல்லது அதன் காலாவதியான முறைகளுக்கு எதிராக பேச தயாராக இல்லை” என்று கூறினார்கள்.

கர சேவகர்கள், 1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இப்போது 26 ஆண்டுகள் ஆகின்றன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாகவே சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவ பிற்போக்குச்சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

படிக்க:
ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
♦ புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

நடைமுறை குறைபாடுகளுடனான முடிவுகளை ஏ.எஸ்.ஐ வந்தடைந்தது எப்படி என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான வர்மா Huffington Post பத்திரிக்கையிடம் பேசிய போது கூறினார். “பாபர் மசூதியின் கீழ் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு இப்பொழுது கூட தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை” என்று அவர் வாதிடுவதுடன், “பாபர் மசூதிக்கு அடியில், உண்மையில் பழைய மசூதிகளே உள்ளன” என்று மேலும் கூறினார்.

அந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது என்பதற்கு ஏ.எஸ்.ஐ மூன்று சான்றுகளை பயன்படுத்தியது – அனைத்தும் கேள்விக்குரியவை என்று வர்மா Huffington Post-டிடம் கூறியுள்ளார்.

1) ஒரு மேற்கு சுவர் : “மேற்கு சுவர் மசூதிக்குரிய ஒரு அம்சமாகும். அந்த சுவருக்கு முன்பு தான் நமாஸ் என்று நீங்கள் சொல்லுவீர்கள். இது கோவிலுக்குரிய ஒரு அம்சம் அல்ல. கோவில் இதைவிட மிகவும் வேறுபாடான அமைப்பு கொண்டது”.

2) ஐம்பது தூண் தளங்கள் : “இவை முற்றிலும் புனையப்பட்டவை. இது குறித்து பல புகார்களை நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்தோம். தூண் தளங்கள் என்று அவர்கள் கூறுவதுடன் ஒப்பிட்டால், இவை வெறுமனே உடைந்த செங்கற்களின் துண்டுகள் மற்றும் அவற்றுக்கு இடையில் சேறு பூசப்பட்டிருக்கிறது” என்பது தான் எங்கள் வாதம்.

3) கட்டிட துண்டுகள் : “இந்த 12-ல் [மிக முக்கியமான கட்டிடக்கலை துண்டுகள்] ஒன்று கூட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்படவில்லை. மசூதியின் சுண்ணாம்பு தளத்திற்கு மேலே கிடந்த சிதைவுகளிலிருந்து இவை எடுக்கப்பட்டன… ஒரு கோயிலில் அதுவும் ஒரு கல் கோயிலில் (இது ஒரு கல் கோயில் என்று கூறப்படுகிறது) அவர்கள் கண்டுபிடித்ததை விட செதுக்கப்பட்ட பொருள்கள் அதிகம் இருக்கும்.

முந்தைய அகழ்வாராய்ச்சிகள் :

பாபர் மசூதியைச் சுற்றி நடத்தப்பட்ட பழைய அகழ்வாராய்ச்சிகள் குறித்தும் வர்மா பேசினார். முதலாவது, ஏ.எஸ்.ஐ.யின் முதல் தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) 1861-ம் ஆண்டில் நடத்தியது. அயோத்தியில் மூன்று குன்றுகளில், இரண்டு புத்த ஸ்தூபிகள் மற்றும் ஒரு விஹாரம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதை வர்மா கோடிட்டு கட்டுகிறார். அப்பகுதியில் உள்ள சில கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் செவிவழி கதைகளைப் பற்றி அவரது அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வர்மா கூறுகிறார்.

இரண்டாவது அகழ்வாராய்ச்சி 1969-ம் ஆண்டில் பாபர் மசூதி அருகே பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்பொருள் துறையால் (Department of Archaeology of the Banaras Hindu University) நடத்தப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியின் சில பதிவுகள் இன்றுவரை தப்பிப் பிழைத்திருந்தாலும், வரலாற்றின் தொடக்ககாலத்தில் மற்றும் இடைக்காலத்தில் இப்பகுதியில் குடியேற்றம் நடந்ததாக அவர்கள் முடிவு செய்தனர்.

1975 மற்றும் 1980-க்கு இடையில், ஏ.எஸ்.ஐ.யின் அப்போதைய தலைமை இயக்குனராக இருந்த பி.பி.லால் இந்த திட்டத்தை புதுப்பித்தார். இப்பகுதி குறித்த வரலாற்றில் லாலின் பணிகள் குறிப்பிடத்தக்கவை.

எனவே லாலின் வேலைத்திட்டம் தனித்து நிற்பதன் பின்னனி என்ன? வர்மாவின் கூற்றுப்படி (தெளிவுக்காக திருத்தப்பட்டது),

அயோத்தி, மதுரா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று தளங்களில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோயில்களின் முழு சிக்கலையும் 1988 வாக்கில் (விஸ்வ இந்து பரிஷத்) கையில் எடுத்தது. 1975 மற்றும் 1978 -க்கு இடையில் அயோத்தியில் எடுக்கப்பட்டு, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதாகக் கூறிய தூண் தளங்களின் புகைப்படத்தை மாந்தன் (Manthan – இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) இதழில் (அதே ஆண்டில்) பி.பி.லால் வெளியிட்டார். மேலும் குரோஷியாவில் (Croatia) நடந்த உலக தொல்பொருள் மாநாட்டிலும் அந்த புகைப்படத்தை முன் வைத்ததுடன், அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டால் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி
♦ பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன்

பாபர் மசூதி நினைவுச் சின்னத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான அரசியல் இயக்கத்தை உருவாக்க பாஜக-வுக்கு லாலின் கூற்றுக்கள் உதவியதுடன் 1992-ல் மசூதி இடிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தபின், அகழ்வாராய்ச்சி மீண்டும் பெரிய நிகழ்ச்சி நிரலாக மாறியது. வர்மாவின் கூற்றுப்படி, 2002-ல் அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏ.எஸ்.ஐ க்கு கட்டளையிட்டது.

கேள்விக்குரிய ASIன் அறிக்கை:

தனது இறுதி அறிக்கையில் விரும்பத்தக்க பல விடயங்களை ஏ.எஸ்.ஐ விட்டுவிட்டது என்கிறார் வர்மா. அறிக்கையின் தொடக்கம் சாதாரணமாக இருந்தாலும் முடிவு தனித்து நிற்கிறது என்று அவர் ஹஃபிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

முழு அறிக்கையையும் நீங்கள் படித்தால், கோவில் பற்றி எதையும் அவர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும். இது ஒரு தரமான அறிக்கை. … மனித எலும்பு எச்சங்கள் பற்றிய ஒரு தலைப்பு மட்டும் அதில் காணாமல் போய்விட்டது. அதை தான் அவர்களும் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் வெளியிடவில்லை.

நீங்கள் மேலும் காண்பது என்னவென்றால், அந்த [பிற] தலைப்புகளை எழுதியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் கடைசியில், எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அறிக்கையின் கடைசி பத்தியில், மேற்கு சுவர், தூண் தளங்கள் மற்றும் சில கட்டட துண்டுகள் ஆகியவற்றின் சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையில் மூன்று வரிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இல்லையெனில், விவாதத்தில் எங்கும், ஒரு கோயில் இருப்பதாக ஒரு பேச்சும் இல்லை. அதே சான்றுகளுடன், பாபர் மசூதியின் கீழே இரண்டு அல்லது மூன்று சிறிய மசூதிகள் இருந்தன என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம்.

[ இந்த கட்டுரை முதலில் டிசம்பர் 6, 2018 அன்று தி வயர் தளத்தில் வெளியிடப்பட்டது. நவம்பர் 8, 2019 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது வாசகர்களுக்காக இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ]


சுகுமார்
நன்றிதி வயர்.