திருநெல்வேலி :

வம்பர் 07 – ரசிய புரட்சி நாள் விழா திருநெல்வேலியில், ”மனிதகுலத்தின் அழிவா ! சோசலிச புரட்சியா !” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டமாக நடைபெற்றது. புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தை மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவா தலைமையேற்று நடத்தினார். திருவள்ளுவருக்கும் காவி வண்ணம் பூசிய பா.ஜ.க. கும்பலுக்கு பதிலடி தரும்வகையில் திருக்குறளோடு தனது தலைமை உரையைத் தொடங்கினார்.

பல்வேறு அடக்குமுறைகளையும் மீறி, நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திவரும் போராட்டக்களத்தில் நின்று இன்றுவரை அம்மக்களுக்கு சட்ட உதவிகளை செய்துவரும் வழக்குரைஞரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளருமான தோழர் அரிராகவன் ”சுற்றுச்சூழலை நாசமாக்கும் முதலாளித்துவம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது சிறப்புரையில், ”இதே நாளில் நாம் நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்த கூட்டத்தை நடத்தியிந்தால் நாம் முகத்தில் முகமூடி அணிந்துதான் நடத்தியிருக்க வேண்டும். அவ்வளவு காற்றுமாசு உள்ளது.” என்று குறிப்பிட்ட அவர்,  நாடு முழுவதும் இந்த முதலாளித்துவம் எவ்வாறு இயற்கை வளங்களைச் சுரண்டி மாசுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் திணிக்கப்படும் சாகர்மாலா, பாரத்மாலா, நியூட்ரினோ, மீத்தேன், எட்டு வழிச்சாலை போன்ற நாசகாரத்திட்டங்களின் அபாயங்களை எடுத்துரைத்தார். மேலும், ”மக்கள் மீது திணிக்கப்படும் இத்தகைய பேரழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டுமெனில், உள்ளூர் சாக்கடை பிரச்சினைக்குப் போராடுவதைப் போல எதிர்த்துவிட முடியாது; பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்த போராட்டம் என்பதால் மக்கள் அமைப்பாக அணிதிரள வேண்டும்” என்றார். ”நாட்டை காக்கும் மக்களின் இப்போராட்டத்திற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் எப்போதும் துணைநிற்கும்” என்றார்.

இதனைத்தொடர்ந்து, ரசிய புரட்சியின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்பட்ட புரட்சியின் தருணங்கள் ஒளிப்படம் திரையிடப்பட்டது. ரஷ்ய புரட்சியின் வரலாற்றை 35 நிமிடங்களில் ஆவணப்படுத்தியிருந்த அந்தக்காணொளி பார்வையாளர்களை உறையவைத்தது.

அடுத்ததாக, “ பொருளாதார நெருக்கடி – பாதிப்பும் தீர்வும் ” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் மாநில நிர்வாக்குழு உறுப்பினர் தோழர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், ”நமக்கு இன்று மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தையும் ரசிய மக்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டார்கள். நம்நாட்டில், உரிமைகளை பறிப்பதை போல் ரஷ்யாவில் யாரும் மாற்றிவிட முடியாத படி சட்டமாக்கப்பட்டுள்ளது. உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய உரிமைகள் இன்றும் நமக்கு எட்டாக் கனியாக இருக்க காரணம் என்ன என்பது தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்றார்.

மேலும் தொழிலாளர் நலச்சட்டங்கள் எவ்வாறு மாற்றப்படுகிறது; அது நாம் போராடி பெற்ற உரிமைகளை இல்லாநிலை ஆக்குகிறது. அப்படி அவர்கள் மாற்றுவதற்கு காரணம் இன்னமும் தொழிலாளியை சுரண்டி இலாபம் அடையவேண்டும் என்ற வெறி. அது தான் சாதாரன மக்கள் தலையிலும் விலையேற்றம் என்ற பெயரில் இடியாக வந்திறங்குகிறது. நமது சேமிப்புகள் சுரண்டப்படுகிறது. நாட்டின் சேமிப்பும் சுரண்டப்படுகிறது. இனியும் இவர்கள் நீடிக்கமுடியாது என்ற நிலையை எட்டிவிட்டது முதலாளித்துவம். எனவே தான் சரியான ஒரு சர்வாதிகாரியாக பாசிஸ்டு மோடி தேவைப்படுகிறார். நாடெங்கும் நடக்கும் ஜனநாயக மீறல் என்பது தங்களை தக்கவைத்துக்கொள்ளும் பயத்தில் செய்கிறார்கள். நாம் அமைப்பாக இணைந்து இதை முறியடிக்க முடியும்” என்றார்.

படிக்க:
எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி

ரஷ்ய புரட்சியின் நினைவுகளை சாதனைகளை பதியவைத்து, இங்கும் அத்தகையதோர் புரட்சியை நடத்த நாம் பாடுபட வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்திய இந்நிகழ்வு பு.மா.இ.மு. தோழர் கின்சன் அவர்களின் நன்றியுரையோடு நிறைவடைந்தது.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருநெல்வேலி.


புதுச்சேரி :

ரு மாபெரும் புரட்சியின் மூலம் பெருவாரியான மக்களை ஒட்டச்சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்த முதலாளித்துவத்தை உலகில் ஆறில் ஒரு பங்கு நிலத்தில் தூக்கியெறிந்து, உழைக்கும் மக்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய ரசிய சோஷலிச புரட்சி நாள் தான் நவம்பர் 7, 1917. சோசலிசம் நம் நாட்டிலும் மலராதா என ஏங்கிக் கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவரும் உயர்த்தி பிடிக்க வேண்டிய, கொண்டாட வேண்டிய உண்மையான மக்கள் திருவிழாவாக புதுச்சேரியிலும் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில், நவம்பர் 7 ரசிய சோசலிசப் புரட்சி 102-ம் ஆண்டு விழா, விளையாட்டு போட்டி, ஓவியப் போட்டி, கவிதை, கட்டுரைப் போட்டி மற்றும் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

09.11.2010 அன்று மாலை செம்பியப்பாளையம் பகுதியில் பு.மா.இ.மு. / பு.ஜ.தொ.மு. சார்பாக கபடி போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் நான்கு ஊரை சேர்ந்த கபடி வீரர்கள் விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் போட்டி நடத்தப்பட்ட பகுதியிலிருந்து பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பார்வையாளராக கண்டுகளித்தார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கபடி வீரர்களுக்கும், மற்றும் ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் 10.11.2019 காலையில் நடந்த அரங்க கூட்டத்தில் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த அரங்க கூட்டத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடனும், மாணவர்கள், இளைஞர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அரங்கக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய  தோழர் அனந்த குமார், புதுச்சேரி பு.ஜ.தொ.மு. இணைச்செயலாளர், அவர்கள் ரசிய சோசலிசப் புரட்சியை பற்றியும், அதன் தேவை இன்றைக்கு உலகம் முழுமைக்கும் எந்த அளவுக்கு தேவையாக உள்ளது என்பதையும்   விளக்கிப் பேசினார்.  அடுத்ததாக  பேசிய தோழர் செல்லக்கண்ணு,  புதுச்சேரி பு.ஜ.தொ.மு. பொருளாளர் அவர்கள் அம்பேத்கரை தொடர்ந்து, திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசி வரும் இந்த காவி கும்பல் ஒருபுறமும், சினிமா கழிசடைகளின் ரசிகர் கூட்டங்கள் மற்றொரு புறமும் திருவள்ளுவரை கேளிக்கையாக்கி வருகிறார்கள் எனவும் இன்றைய சூழலில் தொழிலாளர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் சூழ்ந்து வருவதையும்,  உரிமைகள் பறிக்கப்படுவதை பற்றியும் பேசினார்.

அடுத்து தோழர் பழனிசாமி, தமிழ்நாடு மாநில பு.ஜ.தொ.மு. இணைச்செயலாளர் அவர்கள்  அயோத்தி தீர்ப்பு என்பது இந்திய சிவில் சட்டத்திற்கு எதிரானது, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது, எந்த விதமன அறிவியலும் இல்லாமல்  உண்மையும் இல்லாமல் அனுமானத்தின் பெயரால், பார்ப்பன மத நலனில் இருந்து வழங்கப்பட்ட ஒரு அநீதியான தீர்ப்பு என்பதை விளக்கி பதிவு செய்தார்.

அடுத்து தோழர் மோகன், பு.மா.இ.மு. புதுச்சேரி அமைப்பாளர், அவர்கள் பொருளாதார நெருக்கடி என்பது முதலாளிகளின் இலாப வெறியால் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து தேக்கத்தை உருவாக்கி உள்ளது. இதன் விளைவாக கொத்து கொத்தாக தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு வருவதும், மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத நிலை அதிகரித்து 5 ரூபாய் பிஸ்கட் கூட வாங்க வழியில்லை என்ற மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் 27 வங்கிகளை 12 வங்கியாக சுருக்கி இதில் உள்ள மக்கள் சேமிப்பு பணத்தை முதலாளிகளுக்கு தாரைவார்த்து வருகிறது, மற்றொருபுறம் மக்களின் வருங்கால காப்பீட்டுத் திட்டமான LIC யில் உள்ள 30 இலட்சம் கோடியை கொள்ளையடிக்க சதி வேலைகளை அரங்கேற்ற துடிக்கிறது மத்திய பி.ஜே.பி அரசு எனவும், இதிலிருந்து தீர்வு காண மாற்று கட்சியோ, அல்லது மாற்று நபர்களையோ தேர்ந்தெடுப்பது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா? என்றால் முடியாது.

காரணம் இன்றைய போலி ஜனநாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து வரும் அரசியல்வாதிகள் ஹைட்ரோ கார்பன், எட்டுவழி சாலை போன்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு என்று பொய்வேஷம் கட்டி வரும் நாசகார திட்டங்களை, ரத்து செய்ய அதிகாரமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், இந்த நிலையை மாற்றுவதற்கு நிலவுகின்ற இந்த தேர்தல் முறை தீர்வல்ல. மாறாக உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதின் ஊடாக தான் மக்களால் தேர்ந்தெடுப்பவர்களே அதிகாரிகளாகவும், சட்டம் இயற்றுபவர்களாகவும், அதை அமுல்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள், தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்யும் பட்சத்தில் திருப்பியழைக்கும் உரிமையும், தண்டிக்கும் உரிமையும் மக்களுக்கு இருக்கும், நிலமற்ற உழவனுக்கு நிலத்தை சொந்தமாக்குவதுடன் உழவுக்கான வசதிகள் உருவாக்கப்படும், கார்ப்பரேட், அந்நிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் சொத்துக்கள் நாட்டுடமையாக்கப்படும், அனைத்து மக்களுக்கும் கல்வி, மருத்துவம், இலவசமாக்கப்படும் எனவும் இவைகளை   புதிய ஜனநாயக அரசு சாத்தியப்படுத்தும் என்பதை ரசிய, சீனாவின் நடந்தவை அனுபவத்திலிருந்து  இறுதி உரையாற்றினார்.

அரங்க கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மத்தியில் புரட்சிகர உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தின் இறுதியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கி கூட்டம் நிறைவு பெற்றது.


தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க