சிலியில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சிலி தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன

சிலி நாட்டில், அரசின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக சிலியில் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(12-நவம்பர்-2019) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அன்டோபகஸ்டா நகரில், தொழிற்சங்கத் தலைமையிலான அணிவகுப்புக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்காள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பல்துறை, சுரங்கத்துறை, கட்டுமானம், கல்வி, அரசு ஊழியர்கள் மற்றும் பிற தொழிற்சங்க கூட்டமைப்புகளின் கூட்டணி சிலி ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராவுக்கு கடந்த வாரம் ஒரு இறுதி எச்சரிக்கையை அளித்தது. ஐந்து நாட்களில் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறும் தவறினால் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை சமாளிக்கத் தயாராக இருக்குமாறு கூறினர். இதற்கு பினெரா பதிலளிக்கவில்லை.

சிலி அதிபர் பினெரா.

தொழிற்சங்கங்கள் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் தொழிற்சங்க ஏற்பாடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தன. ஆனால், அவர்களின் முதன்மையான கோரிக்கை – சிலி முழுவதும் நடைபெறும் போராட்டங்களை  ஒன்றிணைக்கும் ஒரே கோரிக்கை  : பரந்துபட்ட மக்களின் பங்கேற்போடு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவது.

வடக்கு சிலியில் உள்ள அன்டோபகாஸ்டாவில், கல்விப் பணியாளர்கள் சங்கத்தின் உள்ளூர் தலைவரான பமீலா பாசே இது குறித்துக் கூறுகையில் ” குடிமக்களின் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியலமைப்பை நாங்கள் இதற்கு முன்னர்  கொண்டிருக்கவில்லை” என்றார்.

அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-நவம்பர்-2019), இந்த புதிய அரசியலமைப்பிற்கான தனது ஆதரவை அறிவித்தது. ஆனால், இந்த செயல்முறை சட்டசபையில் கூடி விவாதித்தபின் நடைமுறைப்படுத்தப்படும் என்றது. இது போராட்டத்தில் ஈடுபவோரின் கோரிக்கைகளுக்கு எதிரானது. கடந்த செவ்வாயன்று (12 நவம்பர்) கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்து  நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த பதினான்கு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்து, புதிய அரசியலமைப்பிற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

“மாற்றத்திற்கான தருணம் இது. குடிமக்கள், தங்களது குரல்கள் கேட்கப்படாமலும், மதிகப்படாமலும் இந்த அரசியல் பிரிவினரால் மிகவும் சோர்வடைந்து விட்டனர்” என்கிறார் பசாச்சே.

வடக்கு சிலியில் நடந்த ஒரு அணிவகுப்பில் ஒரு எதிர்ப்பாளர்  ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் ஒரு எலும்புக்கூட்டை எடுத்துச் செல்கிறார்.

கடந்த செவ்வாயன்று (12-11-2019) வேலைநிறுத்த நடவடிக்கை ஒரு சில தொழிற்சங்க கூட்டமைப்புகளால் முதலில் முன்னெடுக்கப்பட்டது. எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் செப்புத் துறை தொழிற்சங்கங்கள் தாங்களும் பங்கேற்பதாக அறிவித்தன. சாண்டியாகோ விமான நிலையத் தொழிலாளர்கள், வால்ப்பரிசோ மெட்ரோ தொழிலாளர்கள், வேளாண் தொழில் சங்கங்கள் மற்றும் பலரும் இதில் இணைந்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் போராட்டங்கள், தடுப்புகள் மற்றும் சாலை முற்றுகைகள் தொடங்கின. சிலியின் 4,270 கி.மீ (2,653 மைல்) நீளத்திற்கு பிற்பகல் வரை வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் முற்றுகைகள் நடந்து கொண்டிருந்தன.

“இது வெறுமனே ஒரு தொழிற்சங்க இயக்கமோ அல்லது ஒரு சமூக இயக்கமோ மட்டுமல்ல. சிலி மக்கள் ஒட்டுமொத்தமாக வீதிகளில் இறங்கியுள்ளனர். அதனால்தான் இது மிகப்பெரியது ” என்று அன்டோபகாஸ்டாவைச் சேர்ந்த கப்பல்துறை தொழிலாளர் சங்கத் தலைவரான எட்வர்டோ ரோஜாஸ் கூறினார். ஆயிரக்கணக்கான மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், நகரத்தின் திறந்த பகுதியில் இருந்து இதை அவர் கூறினார். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியை நோக்கி திரண்டு வந்து கொண்டிருந்தனர்.

(கோப்புப் படம்)

ஆரம்பத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்களின் கூட்டணி 500,000 சிலி பெசோக்களை (635 அமெரிக்க டாலர்கள்) மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் முன்மொழிந்தது, தற்போது இது வெறும் 301,000 பெசோக்களாக (386 அமெரிக்க டாலர்கள்) தான் உள்ளது. இந்த திட்டங்களுக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் பரவலாக ஆதரவு பெருகியுள்ளது.

கடந்த வாரம், பினெரா அரசாங்கம், 350,000 பெசோக்கள் (444 அமெரிக்க டாலர்கள்) மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை அறிவித்தது. ஆனால், இந்த தொகையானது  நாம் முன்வைத்த கோரிக்கையைவிட மிகக் குறைவு என்பதைத்தாண்டி, உண்மையில், அரசாங்கத்தின் இந்த மானியமானது, உண்மையான ஊதிய உயர்வு அல்ல, என்று தொழிற்சங்கங்கள் விரைவாக இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டின. மேலும், 301,000 முதல் 350,000 பெசோ வரை சம்பாதிக்கும் தொழிலாளர்களை அரசாங்கம் வேறுபடுத்தி அவர்களுக்கேற்ற தொகையை செலுத்தும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அமைதியின்மையைத் தொடர்ந்து, அரசாங்கம் இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளைக் குறைத்தது. 2.4 முதல் 2.9 சதவிகிதம் என்றிருந்த அதன் ஆரம்ப கட்ட கணிப்பு 1.8 முதல் 2.2 சதவிகிதம் வரை தற்போது குறைந்துள்ளது என்று சிலி நிதியமைச்சர் இக்னாசியோ பிரியோன்ஸ் கடந்த வாரம் டிவிட்டரில் அறிவித்தார்.

டாலருக்கு நிகரான சிலியின் பெசோ கடந்த செவ்வாயன்று, ஒரு டாலருக்கு 800 பெசோக்களின் என்று வரலாற்றில் இல்லாத அளவு குறைந்தது.

பிரியோன்ஸ் பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் பின்னடைவு குறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும், “இயல்புநிலை” என்ற உணர்வுக்கு நாடு திரும்ப உதவுமாறு சிலி மக்களை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

செவ்வாயன்று வேலைநிறுத்த நடவடிக்கைகளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் சிலி பொருளாதாரத்தின் மிக சக்திவாய்ந்த சில துறைகளான சுரங்கம், பொருளுற்பத்தி துறை  மற்றும் விவசாயத் துறையைச் சேர்ந்தவர்கள். நாட்டின் பொருளாதாரம் இயற்கை வளம் மற்றும் பிற ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளதால் துறைமுக செயல்பாட்டை பெரிதும் நம்பியுள்ளது என்று தொழிற்சங்கத் தலைவர் ரோஜாஸ் குறிப்பிட்டார்.

சாரை சாரையாய் திரண்ட சிலி மக்கள். (கோப்புப் படம்)

“போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து இது எங்கள் மூன்றாவது வேலை நிறுத்தமாகும். அரிக்காவிலிருந்து பண்டா அரெனா வரை அனைத்து துறைமுகங்களும் செயலற்று நிற்கின்றன. சிலி துறைமுகப் பணியாளர்கள் சங்கத்தைச் சாராத பிற துறைமுகங்களும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளன” என்று அவர் கூறினார்.

சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் கவுன்சில், தாம் ஒரு சர்வதேச அளவிலான ஆதரவு புறக்கணிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாக எச்சரித்தது. ஐந்து கண்டங்களில் 125,000-க்கும் மேற்பட்ட கப்பல்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை, கடந்த வாரம் சிலி போராட்டக்காரர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான போலீசின் வன்முறை குறித்து ஒரு அறிக்கையில் தனது அக்கறையை தெரிவித்தது.

“துறைமுகத் தொழிலாளர் குடும்பத்திற்கு எதிரான அடக்குமுறை தீவிரமடையுமேயானால், சிலி குடியரசின் கப்பல்களில் இருந்து வரும் சரக்குகளை சர்வதேச அளவில் புறக்கணிப்போம்” என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

போலீசு மற்றும் இராணுவத்தினர் ஐவர் உட்பட, நெருக்கடியின் முதல் மூன்று வாரங்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டும், காயமடைந்துமுள்ளனர். இதில் ரப்பர் மற்றும் உலோக ஆயுதங்களைக்கொண்டு போலீசு தாக்கியதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சுமார் 180-க்கும் மேற்பட்டோரும் இதில் அடக்கம்.

வடக்கு சிலியில் உள்ள அன்டோபகாஸ்டாவில் தொழிற்சங்கத் தலைமையிலான அணிவகுப்பில் லித்தியம் சுரங்கத் தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.

”சிலிக்கு தீவிர மாற்றம் தேவை, மக்கள் அந்த மாற்றத்தை செயல்படுத்த புதிய அரசியலமைப்பு கட்டமைப்பை உருவாக்க, அரசியலமைப்பு சட்டசபையில் மக்கள் பங்களிப்பைக் கோருகின்றனர்”, என்று அன்டோபகாஸ்டாவின் கலாச்சார தொழிலாளர்கள் சங்க அமைச்சகமான அன்ஃபுகல்ச்சுராவின் உள்ளூர் தலைவர் அலெஜான்ட்ரோ கார்சியா கூறினார்.

“அரசாங்கம் அறிவித்த நடவடிக்கைகளில் மக்களுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார் அவர்.

படிக்க:
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !

கடந்த செவ்வாயன்று, போராட்டக்காரர்களால், “புரட்சியின் பிளாசா” என மறுபெயரிடப்பட்ட அன்டோபகாஸ்டாவின் “சோட்டோமேயர் பிளாசா”, தொழிற்சங்கக் கொடி, சிலி நாட்டுக் கொடி, தொழிற்சங்கக் கொடி மற்றும் எல்ஜிபிடி கொடிகளால் கலவையாக நிரப்பப்பட்டது.  அந்தோபகாஸ்டா பிராந்தியத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலிருந்து பல மணிநேர அணிவகுப்பு நடந்துகொண்டிருந்தது. மைதானத்தில் கூட்டம் இரவில் இருமடங்காக அதிகரிக்கும் என்று ரோஜாஸ் எதிர்பார்க்கிறார்.

“இது இன்னும் பெருகும்…  ஒற்றுமையே வலிமை என்பதை நாங்கள் நிரூபிக்க விரும்புகிறோம்.” என்கிறார் ரோஜாஸ்


தமிழாக்கம் : மூர்த்தி
நன்றி : aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க