உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 07

கைவர்கள் முழு வேகத்துடன் ஒருவரை நோக்கி ஒருவர் எதிரெதிராகப் பாய்ந்து வந்தார்கள்.

“லா-5″-ம் “போக்கே-வூல்ப்-190”-ம் விரைவு மிக்க விமானங்கள். ஒலியின் வேகத்தைவிட விரைவாக ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள் பகைவர்கள்.

அலெக்ஸேய் மெரேஸ்யெவும் புகழ்பெற்ற “ரிஹ்த்கோ பென்” டிவிஷனைச் சேர்ந்த எவனோ ஒரு தேர்ந்த ஜெர்மன் விமானியும் தலைமோதல் தாக்கு சில கணங்களே நீடிக்கும். அந்த நேரத்திற்குள் மிகத் துடியான ஆள் கூடச் சிகரெட் பொருத்தி விட முடியாது. ஆனால் இந்தச் சில கணங்களில் விமானிக்குத் தேவைப்படும் நரம்பு இறுக்கமும் உள ஆற்றல்கள் எல்லாவற்றின் சோதனையும் தரைப் போர் வீரனுக்கு ஒரு நாள் முழுவதும் சண்டையிடப் போதுமானவை.

முழு வேகத்துடன் ஒன்றன் மீது ஒன்று நேரே பாயும் இரு விரைவுமிக்க விமானங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பகை விமானம் கண்ணெதிரே பெரிதாக்கிக் கொண்டு போகிறது. இதோ அதன் எல்லாப் பகுதிகளுக்கும் சட்டென்று பார்வையில் படுகின்றன. அதன் இறக்கைகளும் உந்துவிசிறியின் பளிச்சிடும் வட்டமும், பீரங்கிகளின் கரும் புள்ளிகளும் புலனாகின்றன. இன்னும் ஒரு கணத்தில் விமானங்கள் மோதிக் கொண்டு, சிறு சிறு சிம்புகளாகச் சிதறிவிடும். விமானத்தையோ மனிதனையோ இந்தச் சிம்புகளைக் கொண்டு ஊகித்தறியவே முடியாது, அவ்வளவு சிறியவையாக இருக்கும் அவை. அந்த நேரத்தில் விமானியின் சித்த அறிவு மட்டுமே அல்ல, அவனது உள ஆற்றல் யாவுமே சோதனைக்கு உள்ளாகின்றன. மனோதிடம் குறைந்தவன், ராட்சத நரம்பு இறுக்கத்தை தாங்க முடியாதவன், வெற்றிக்காக உயிர் வழங்கச் சக்தி அற்றவன், இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டு விசைப் பிடியை தன் பக்கம் இழுப்பான் – தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் மரணச் சூறாவளியின் தாக்கிலிருந்து தப்பும் நோக்கத்துடன். அடுத்த கணமே அவனுடைய விமானம் கிழிந்த வயிறு அல்லது வெட்டுண்ட இறக்கையுடன் கீழே விழும். அவன் தப்பிப் பிழைக்க முடியாது. அனுபவமுள்ள விமானிகள் இதை நன்கு அறிவார்கள். அவர்களில் மிக மிக வீரம் உடையவர்களே தலைமோதல் தாக்கு நடத்தத் தீர்மானிப்பார்கள்.

கிழக்குப் போர்முனையில் ஏற்பட்ட பெருத்த இழப்புகளின் விளைவாக ஜெர்மன் விமானப்படையில் உண்டான பள்ளத்தை இட்டு நிரப்புவதற்காகக் குறுகிய திட்டப்படி விமானப் பறப்புக்கு விரைவில் பயிற்றுவிக்கப்பட்டு போர்முனைக்கு அனுப்பப்பட்ட ’கோயெரிங்க் அறைகூவல் வீரர்கள்’ எனப் பெயர் கொண்ட சிறுவர்களில் ஒருவனல்ல தனக்கெதிரே வருபவன் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். “ரிஹ்த்கோபென்” டிவிஷனைச் சேர்ந்த தேர்ந்த விமானி. எத்தனையோ விமானப் போர்களில் அடைந்த வெற்றிகள் அவனது விமானத்தின் மேல் விமான வரையுருக்களின் வடிவில் பொறிக்கப்பட்டிருக்கும். இவன் விலக மாட்டான். மோதலிலிருந்து நழுவ மாட்டான்.

ஒரேயடியாக இறுக்கம் அடைந்திருந்த அலெக்ஸேய்க்கு, தனது விமானத்தினது உந்துவிசிறியின் பளிச்சிடும் அரை வட்டத்திற்கு அப்பால் பகை விமானி அறையின் ஒளிபுகும் முன் சுவரும் அதன் ஊடாகக் குத்திட்டு நோக்கும் இரு மனித விழிகளும் தென்படுவது போல் இருந்தது. அந்த விழிகளில் உக்கிரமான வெறுப்புக் கனல் வீசியது. இது நரம்பு இறுக்கத்தால் உண்டான மாயத் தோற்றமே. எனினும் அலெக்ஸேய் அந்த விழிகளைத் தெளிவாகக் கண்டான். தனது எல்லாத் தசைகளையும் மொத்தமான கட்டியாகும் படி இறுக்கிக் கொண்டு, “அவ்வளவு தான்! எல்லாம் முடிந்தது!” என்று எண்ணினான். நேரே நோக்கியவாறு அதிகரிக்கும் விரைவுடன் எதிரே சென்றான். இல்லை, ஜெர்மானியனும் விலகவில்லை. வாழ்வு தீர்ந்தது!

கணச் சாவுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான் அலெக்ஸேய். திடீரென எங்கோ – கைக்கெட்டும் தொலைவில் என்று அலெக்ஸேய்க்குத் தோன்றியது – ஜெர்மானியன் தாக்கு பிடிக்க மாட்டாமல் உயரே கிளம்பினான். அவனது விமானத்தின் நீலவயிறு வெயில் பட்டு மின் வெட்டுப் போல அலெக்ஸேயின் எதிரே பளிச்சிட்டது. அக்கணமே அலெக்ஸேய் எல்லாச் சுடுவிசைகளையும் அழுத்தி மூன்று நெருப்புத் தாரைகளால் அதைத் துளைத்துக் கிழித்துவிட்டான். மறு கணத்தில் அவன் தன் விமானத்தைக் குப்புறச் செலுத்திக் கரணம் அடித்தான். தரை அவன் தலைக்கு மேலே பாய்ந்து செல்கையில் அதன் பின்னணியில் மெதுவாக, தன் வசமின்றிப் பறந்த பகைவிமானத்தைக் கண்ணுற்றான். வெற்றி வெறிக்களிப்பு அவனுக்குள் ஊற்றெடுத்துப் பீறிட்டது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு “ஓல்கா!” என்று கத்தினான். வானில் திடீர் வட்டங்கள் இட்டு, களைப்பூண்டுகள் மண்டிச் சிவந்த தரை மீது ஜெர்மன் விமானம் மோதி வெடித்து அதிலிருந்து கரும் புகைத்தூண் எழும்பும் வரை அதைத் தொடர்ந்து சென்றான்.

அப்புறந்தான் அலெக்ஸேயின் நரம்பு இறுக்கம் தளர்ந்தது. கல்லாகிவிட்ட தசைகள் தொய்ந்தன. அவனுக்குப் பெருங்களைப்பு உண்டாயிற்று. உடனேயே அவன் பார்வை பெட்ரோல் மானியின் எண் வட்டத்தின் மேல் பட்டது. முள் சூனியத்தின் வெகு அருகே நடுங்கியது.

பெட்ரோல் மூன்று நிமிடங்களுக்கே, அதிகமாய்ப் போனால் நான்கு நிமிடங்களுக்கே போதுமாயிருந்தது. நிலையம் சேர்வதற்குக் குறைந்தது பத்து நிமிடங்களாவது பறந்தாக வேண்டும். அதுவும் உயரே கிளம்புவதில் இன்னும் நேரம் செலவிட்டால்…. அடிபட்ட பகை விமானத்தைத் தரைவரை தொடர்ந்ததுதான் தப்பு!…

“சின்னப்பயல், முட்டாள்!” என்று தன்னையே திட்டிக் கொண்டான் அலெக்ஸேய்.

துணிவும் பதற்றமின்மையும் உள்ளவர்களின் மூளை ஆபத்துக் காலத்தில் வேலை செய்வது போலவே அலெக்ஸேயின் மூளையும் கூர்மையாக, தெளிவாகச் சிந்தித்தது. முதன்மையாக முடிந்தவரை அதிக உயரத்திற்குப் போய்விட வேண்டும். ஆனால் வட்டங்கள் இடாமல், மேலே மேலே ஏறுகையிலே விமான நிலையத்தை நெருங்க வேண்டும். நல்லது.

விமானத்தைத் தேவையான செல்திசையில் திருப்பி, தரை விலகிப் போவதையும் படிப்படியாகத் தொடுவானத்தில் மூடுபனி சூல்வதையும் கவனித்தவாறு அவன் தனது கணக்கீட்டை இன்னும் நிதானமாகத் தொடர்ந்தான். எரிபொருள் பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை. பெட்ரோல்மானி சிறிது பிசகுவதாகவே வைத்துக் கொண்டாலும் பெட்ரோல் எப்படியும் போதாது. வழியில் இறங்குவதா? எங்கே? குறுகிய வழி முழுவதையும் அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். தழைமரக் காடுகள், சதுப்பு நிலச் சோலைகள், மேடும் பள்ளமுமான வயல்கள். நீண்டகால அரணைப்புக்கள் இருந்த வட்டாராத்தில் உள்ள இந்த வயல்கள் குறுக்கும் நெருக்கும் எங்கும் தோண்டப்பட்டு, குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட குழிகள் நிறைந்து முட்கம்பிகள் பின்னிக்கிடந்தன.

இல்லை, இறங்கினால் சாவு நிச்சயம்.

பாராஷூட்டின் உதவியால் குதிப்பதா? அது செய்யலாம் இப்போதே கூட! வளைமுகட்டைத் திறக்க வேண்டும், ஒரு வளையம் வர வேண்டும், இயக்கு விசைப் பிடியை முன்னே தள்ள வேண்டும், தாவிக் குதிக்க வேண்டும் – அவ்வளவு தான். ஆனால் விமானம்! லாவகமும் விசையும் உள்ள இந்த அற்புதமான கரும் பறவை! இதன் போர்ப் பண்புகள் இன்று மூன்று முறை அவன் உயிரைக் காப்பாற்றின. விமானம் நேர்த்தியான, வலிய, பெருந்தன்மையும் விசுவாசமும் வாய்ந்த உயிர்ப்பிராணியாக அலெக்ஸேய்க்கு அந்தக் கணத்தில் தோன்றியது. அதை விட்டுவிடுவது துரோகச் செயலாகப்பட்டது. தவிர, முதல் சண்டையிலேயே விமானத்தை கோட்டை விட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது விமானத்தை எதிர்பார்த்துச் சேமிப்பில் ஈயோட்டிக் கொண்டிருப்பது, போர்முனையில் நமது பெருவெற்றி உதயமாகியிருக்கும் இந்த மும்முரமான நேரத்தில் செயலற்றுச் சோம்பியிருப்பது, இப்பேர்பட்ட நாட்களில் வெட்டியாக வளையவருவது என்பதை நினைக்கவே அவன் கூசினான்.

“என்னவானாலும் சரி, இப்படி மட்டும் செய்யக் கூடாது” என்று யாரோ முன் வைத்த யோசனையை அருவருப்புடன் நிராகரிப்பவன் போல உரக்கச் சொன்னான் அலெக்ஸேய்.

எஞ்சின் நின்றுவிடும் வரை பறப்பது! அப்புறம்? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

அவன் மேலே பறந்தான். மூவாயிரம், பிறகு நாலாயிரம் மீட்டர் உயரத்திலிருந்து சுற்று முற்றும் கண்ணோட்டி எங்கேயானாலும் சிறு சம தரையாவது தென்படுகிறதா என்று பார்த்தான். தொடுவானத்தில் காடு மங்கிய நீலமாகத் தெரியலாயிற்று. அதன் மறுபுறம் இருந்தது விமான நிலையம். அதனை அடைய இன்னும் பதினைந்து கிலோ மீட்டர் பறக்க வேண்டும். பெட்ரோல்மானியின் முள்ளோ, நடுங்கக் காணோம். எல்லைக் குறி திருகாணி மீது அசைவின்றிக் கிடந்தது அது. ஆனாலும் எஞ்சின் இயங்குகின்றது. எதனால் இயங்குகின்றது? இன்னும், உயரே அப்படித் தான்!

உடல் நலமுள்ளவன் இதயத் துடிப்பைக் கவனிப்பதில்லை. அதே போல விமானியின் காது சரியாக இயங்கும் எஞ்சினின் ஒரு சீரான முழக்கத்தை கவனிப்பதில்லை. திடீரென அந்த முழக்கத்தின் தொனி மாறியது. அலெக்ஸேய் இதைச் சட்டென உணர்ந்து கொண்டான். காடு துலக்கமாகத் தென்பட்டது. அதுவரை ஒரு ஏழு கிலோ மீட்டர் பறக்க வேண்டியிருக்கும் இது அதிகமில்லை. ஆனால் எஞ்சினின் இயக்கப்பாங்கு மிக் கெடுதலாக மாறிவிட்டது. எஞ்சின் மட்டும் அல்ல, தனது மூச்சே நின்றுவிடுவது போன்று விமானி இந்த மாற்றத்தை உணர்ந்தான். திடீரென “ச்சிஹ், ச்சிஹ். ச்சிஹ்” என்ற பயங்கர ஓசை. சுரீரென்ற வலி போல அவன் உடல் முழுவதிலும் பரவியது அது.

இல்லை, மோசமில்லை. மறுபடி ஒரு சீராக இயங்குகின்றது. இயங்குகின்றது, இயங்குகின்றது, வெற்றி! இயங்குகின்றது!

படிக்க :
மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

காடோ, இதோ வந்துவிட்டது. பிர்ச் மர முடிகளின் மேல் சுருள் சுருளான பசிய நுரை வெயிலில் அசைந்தாடுவது தெரிகிறது. காடு, இனி விமான நிலையம் தவிர வேறு எங்குமே இறங்குவது முடியாது. மற்ற வழிகள் துணிக்கப்பட்டு விட்டன. முன்னே, முன்னே !

“ச்சிஹ், ச்சிஹ்,ச்சிஹ்!”

மறுபடி ஒரு சீரான இயக்கம். எவ்வளவு நேரத்துக்கு? கீழே காடு. மணல் மீது செல்கிறது பாதை, ரெஜிமென்ட் கமாண்டரின் தலை வகிடு போன்று நேராகவும் சமமாகவும். இப்போது விமான நிலையத்துக்கு ஒரு மூன்று கிலோ மீட்டர் தான் இருக்கிறது. கொத்தள சுவர் போன்ற காட்டோரம் அலெக்ஸேய்க்குத் தென்படத் தொடங்கிவிட்டது. அதற்கு அப்பால் இருக்கிறது விமான நிலையம்.

ச்சிஹ், ச்சிஹ், ச்சிஹ்,ச்சிஹ்! திடீரென ஒரே நிசப்தம். விமானப் புறக்கருவிகள் காற்றில் சீழ்கையடிக்கும் ஓசை கூடக் கேட்கும் படி அவ்வளவு அமைதி. இதுதான் முடிவா? தன் உடல் முழுவதும் சில்லிடுவதை அலெக்ஸேய் உணர்ந்தான். குதித்துவிடலாமா? வேண்டாம், இன்னும் கொஞ்சம் போகட்டும்…. விமானம் சாய்வாக கீழிறங்கும் படி வைத்து, காற்று மலை மேலிருந்து வழுகலானான். இந்த வழுகலைக் கூடியவரை அதிகச் சரிவாகச் செய்யவும் அதே சமயம் விமானம் புரண்டு சுழல இடங் கொடாமலிருக்கவும் முயன்றான்.

வானிலே இந்த முழு நிசப்தம் எவ்வளவு பயங்கரம்! சூடுஆறும் எஞ்சின் சடக்கென ஒலிப்பதும், விரைந்த இறக்கம் காரணமாகக் கன்னப்பொருத்துக்களில் இரத்தவோட்டம் விண்விண்ணென்று தெறிப்பதும் காதுகள் நொய்யென்று இரைவதும் கேட்கும் அளவுக்கு நிசப்தம். பிரம்மாண்டமான காந்தத்தால் விமானத்தை நோக்கி ஈர்க்கப்படுவது போல அதை எதிர் கொண்டு விரைந்து பாய்ந்தது தரை!

இதோ காட்டோரம். அதற்கு அப்பால் பளிச்சிடுகிறது மரகதப்பச்சைத் துணித்துண்டு போன்ற விமானத் திடல். நேரம் கடந்து விட்டதோ? அரைச் சுற்றில் நின்றுவிட்ட உந்துவிசிறி அலகு தொங்குகிறது. பறக்கையில் அதைப் பார்க்க எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! காடு நெருங்கிவிட்டது. இது தான் இறுதியோ?… அவனுக்கு என்ன நேர்ந்தது, இந்தப் பதினெட்டு மாதங்களாக அவன் மனிதசக்திக்கு மீறிய எத்தகைய கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறான், இவ்வளவுக்குப் பிறகும் அவன் தன் நோக்கத்தை ஈடேற்றுவதில் வெற்றி பெற்று விட்டான். உண்மையான….. ஆமாம், உண்மையான மனிதனாகி விட்டான் என்பதையெல்லாம் ஓல்கா அறியாமலே இருந்துவிடுவாளோ? இந்த நோக்கம் ஈடேறியதுமே இப்படி அசட்டுத்தனமாக நொறுங்கிச் சாக வேண்டியதுதானா?

குதிப்போமா? நேரம் கடந்துவிட்டது! காடு பாய்ந்து வருகிறது, அதன் மரமுடிகள் விரைந்த சூறைக்காற்றில் மொத்தமானப் பச்சைப் பட்டைகளாக ஒன்று கலக்கின்றன. இம்மாதிரி ஒரு காட்சியை அவன் எங்கோ கண்டிக்கிறான். எங்கே? ஆம், அந்த வசந்தத்தில், பயங்கரமான அந்த விபத்தின் போது. அப்போதும் பச்சைப் பட்டைகள் இதே மாதிரி விமான இறக்கைகளுக்கு அடியில் பாய்ந்து வந்தன. கடைசி முயற்சி. இயக்கு விசைப் பிடியைத் தன் பக்கம் இழுக்க வேண்டும்…

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க