ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !

கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.

0

ந்துத்துவ பயங்கரவாதியும், போபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரக்யாசிங்கை, அவர் செல்லும் இடமெல்லாம் ‘வைத்துச் செய்து’ அனுப்பி வைக்கிறார்கள் பொதுமக்களும் மாணவர்களும்.

காந்தியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று தேர்தல் பிரச்சாரத்திலும் நாடாளுமன்றத்திலும் பேசி இழிபுகழ் பெற்ற பிரக்யாசிங் தாக்கூரை தெரியாதவர்கள் அரசியல் வட்டாரங்களில் அநேகமாக யாரும் இருக்க முடியாது. ஏனெனில் அம்மையாரின் வரலாறு அப்படிப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிறை சென்று பின்னர் என்.ஐ.ஏ.-வின் தகிடுதத்தத்தால் வெளியே வந்து தேர்தலில் நின்று நாடாளுமன்றத்துக்குச் சென்ற முதல் பெண் பயங்கரவாதி தான் நமது பிரக்யா சிங்.

இத்தகைய பெருமை கொண்ட பிரக்யாசிங்கிற்கு சமீப காலமாக சென்ற இடமெல்லாம் ‘சிறப்பு’ செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் 21 அன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டில்லியிலிருந்து போபாலுக்கு பயணம் செய்ய முதல் வகுப்பு பயணச்சீட்டு பெற்று ஏறினார் பிரக்யாசிங்.

படிக்க :
♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !
♦ புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? பதக்கத்தை உதறிய பெண் !

அவசர கால பகுதியில் அமர்ந்து பயணம் செய்ய முதல் வரிசையில் பயணச்சீட்டு பதிவு செய்த பிரக்யாசிங், பயணத்தின் போது தனது சக்கர நாற்காலியோடு அங்கு வந்துள்ளார். சக்கர நாற்காலியோடு அவசர காலப் பகுதியில் பயணம் செய்வதற்கு விமான நெறிமுறைகளும், இட வசதியும் சாத்தியமில்லாததால், அவரை மாற்று சீட்டில் அமரக் கோரியிருக்கின்றனர் விமானப் பணியாளர்கள்.

அதற்கு நமது ‘லோக மாதா’ அவர்கள் மறுத்ததோடு, அங்கேயே விமானத்தை எடுக்க விடாமல், சுமார் 45 நிமிடங்கள் தகராறு செய்திருக்கிறார். சக பயணிகள், அவரிடம் முதலில் பண்பாக எடுத்துச் சொல்லியுள்ளனர். அவற்றை எல்லாம் காதில் வாங்காமல் தாம் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா என்ற ரீதியில் பேசியுள்ளார். இதனால் கடுப்பான பயணிகள், ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருந்து கொண்டு இப்படி அடுத்தவர்களைத் துன்புறுத்தாதீர்கள். உங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். மேலும் அவரை இறக்கிவிடுமாறும் விமானப் பணியாளர்களிடம் கோரியுள்ளனர்.

இந்த அசிங்கம் அனைத்தையும் துடைத்துக் கொண்டு அதே விமானத்தில் பயணித்து போபால் வந்த பயங்கரவாத சாமியாரினி பிரக்யாசிங், ஸ்பைஸ் ஜெட் விமானம் தமது பயணத்தில் இடர் விளைவித்ததாக தமது சமூக வலைத்தளக் கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்து கடுப்பான ஏதோ ஒரு விமானப் பயணி, விமானத்தின் உள்ளே நமது ‘முதல் பெண் நாடாளுமன்ற பயங்கரவாதி’ செய்த தகராறு மற்றும் அதற்கு பயணிகள் கொடுத்த பதிலடியின் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

வெளியிட்ட சிறிது நேரத்தில் சமுக வலைத்தளங்களில் அவரது வண்டவாளங்கள் உலகெங்கும் பரவின. சமூக வலைத்தளங்களில் அம்மையாரை வைத்துச் செய்திருக்கின்றனர் பகுத்தறிவுள்ள “தேச விரோதிகள்”. அதோடு விட்டார்களா?

போபால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக இரண்டு மாணவர்கள் உள்ளே போராட்டம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக வாலண்டியராக உள்ளே நுழைந்திருக்கிறார் பிரக்யாசிங். அங்கும் இந்திய தேசிய மாணவர் சங்கம் என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அம்மையாரைப் பார்த்து தீவிரவாதியே வெளியேறு என்று முழக்கமிட்டனர்.

“அவர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்து பயங்கரவாதி என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தைகள் அநாகரிகமானவை, சட்ட விரோதமானவை. அவர்கள் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரை இழிவுபடுத்டியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

படிக்க:
♦ பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !
♦ சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.

என்ன இருந்தாலும், ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல், பிரக்யாசிங்கை மனசாட்சியில்லாமல் கதறவிட்ட ‘தேச துரோகிகளை’ நாமும் வன்மையாகக் கண்டிப்போமாக !


நந்தன்.

செய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க